ADS 468x60

05 November 2021

இரசாயன உரங்கள் தேவைதானா?

இப்பொழுது எமது நாட்டில் நூறுவீத உரம் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படவுள்ளது. இரசாயன உரங்களின் பாவனையை படிப்படியாகக் குறைத்து, இயற்கை உரங்களை நோக்கிச் செல்வதன் முக்கியத்துவத்தை அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் ஜனாதிபதி எடுத்துரைத்தார். அது பல அபிவிருத்தியடைந்த நாட்டுத் தலைவர்களாலும், புத்திஜீவிகளாலும் வரவேற்க்கப்பட்டது. தேசிய உர செயலகத்தின் கூற்றுப்படி, 2020 ஆம் ஆண்டில், நாங்கள் ரூ.36 பில்லியன பெறுமதியான 580,000 MT மெட்ரிக் டொன் இரசாயன உரங்களை இறக்குமதி செய்தோம். இந்த உரத்தின் மொத்தத் தொகையில் சுமார் 50 வீதம் நெல்லுக்கும், மீதி தோட்ட பயிர்கள் மற்றும் ஏனைய பயிர்களுக்கும் பயன்படுத்தப்பட்டது தரவுகள் சொல்லும் செய்தி.

அதேநேரம் மறுபுறத்தில் 2019 இல் சுமார் 300 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள உணவு வகை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களில் பச்சைப்பயறு, சிவப்பு வெங்காயம், பெரிய வெங்காயம், சோளம் போன்றவை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யக்கூடியவையாக இருக்கின்றன என்பன விவசாயிகளுக்கும் தொடர்புடைய அரச நிறுவனங்களுக்கும் நன்கு தெரியும். உணவு இறக்குமதிக்கான நமது செலவைக் குறைக்க வேண்டுமானால், உள்ளூர் உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அவசியம். இந்த சிக்கலை திறம்பட தீர்க்க பல தேவையான உள்ளீடுகள் அவசியம் தேவை. இவற்றில் நல்ல தரமான விதைகள் அதற்கான நடுகைக்கான ஏனைய உள்ளீடுகள்; மற்றும் பொருத்தமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும். இவ்வாறான நிலையில், உரங்களின் நியாயமான பயன்பாடு அவற்றுக்கு முக்கியமானது. 

இரசாயன உரங்களில் அதிகமாக, அம்மோனியம் சல்பேட், யூரியா, பொஸ்பேட் மற்றும் பொட்டாசியம் ஆகிய போன்ற இரசாயன  உரங்கள் முறையே நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. மற்றும் அவை அனைத்து ஊட்டமும் நிறைந்தவை என்று அழைக்கப்படுகின்றன. இவை தாவரங்கள் செழிப்பாக வளர மற்றும் உற்பத்தி செய்ய மிகத் தேவையானவை. இலங்கையிலும் பிற இடங்களிலும் நடத்தப்பட்ட பல ஆராய்ச்சி ஆய்வுகள், அசேதன உரங்களின் பயன்பாடு பயிர்களின் வளர்ச்சி மற்றும் விளைச்சலை அதிகரிக்க முனைகிறது என்பதைக் காட்டுகிறது.

மறுபுறத்தில் சேதன உரம் விலங்கு எச்சங்கள், ஏனைய இயற்கைக் கழிவுகளில் இருந்தே உண்டுபண்ணப்படுகின்றன. இந்த இயற்கை உரங்களில்; மிகக் குறைந்த அளவு ஊட்டமே அடங்கியுள்ளன. அதே நேரம் குறிப்பாக இரும்பு, மக்கனீசு, செம்பு; போன்ற சில அத்தியாவசிய தாவர ஊட்டச்சத்துக்கள், இரசாயன உரங்களில் இல்லாத சேதன உரங்களில் செறிவாக உள்ள ஊட்டங்களாகும்.

இரசாயன உரங்களை தடை செய்வதால் ஏற்படும் விளைவுகள்

எப்பாவெல அபாடைட் இரசாயன உர தயாரிப்பு கம்பனியைத் தவிர  இரசாயன உரங்கள் உள்நாட்டில் வேறெங்கும் உற்பத்தி செய்யப்படுவதில்லை. இரசாயன உர இறக்குமதியை தடை செய்து, அதற்கு பதிலாக சேதன உரங்களை  பயன்படுத்தினால், அனைத்து பயிர்களின் விளைச்சலும் குறைய வாய்ப்புள்ளது. இலங்கையிலும் பிற இடங்களிலும் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி ஆய்வுகள் சுட்டிக்காட்டியபடி, இரசாயன உரத்தின்; பயன்பாடு பயிர்களின் வளர்ச்சி மற்றும் விளைச்சலை அதிகரிக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

 தற்போது, இலங்கையில் சராசரியாக நெல் உற்பத்தி ஹெக்டருக்கு 4 டொன்கள் கிடைக்கின்றன. ஆனால் இரசாயன உரங்களைப் பயன்படுத்தாவிட்டால் இது விளைச்சலில் குறைய வாய்ப்புள்ளது. நாட்டின் பொருளாதாரத்தில் சாதகமான விளைவைக் கொண்ட தேயிலை உள்ளிட்ட பிற பயிர்களுக்கும் இது பொருந்தும். ஏற்கனவே சில பகுதிகளில் உள்ள நெல் விவசாயிகள் பெரும்போகப் பயிருக்கு அடிக்கட்டு உரங்கள் கிடைக்கவில்லை என எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இரசாயன உரம் கிடைக்காவிட்டால், உள்ளூர் பயிர் உற்பத்தி கணிசமான அளவு குறையும், இதனால் அரிசி, பருப்பு வகைகள் போன்ற உணவு இறக்குமதிகள் அதிகரித்து, எமது தோட்டப் பயிர்களின் ஏற்றுமதியைக் குறைத்து, தற்போதைய பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சனைகளை அதிகப்படுத்தும் வாய்ப்புள்ளது. இதனால் உர இறக்குமதியை தடை செய்வதன் இறுதி விளைவு ஏற்கனவே மோசமான நிலையில் உள்ள நாட்டின் பொருளாதாரத்தில் இன்னும் மோசமான இடியாக விழ வாய்ப்புள்ளது.

இந்த இரசாயன உரங்களின் இறக்குமதி தடை செய்யப்படுமானால், தாவரங்கள் வளர மற்றும் உற்பத்தி செய்ய அதற்கான நிறை ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுவதால், அதற்கான மாற்று வழிகள் இருப்பது அவசியம். இரசாயன உரங்களுக்கு மாற்றாகக் கருதப்படும் சேதன உரம் போன்ற கரிம உரங்கள் அதிக அளவு பயன்படுத்தப்படாவிட்டால், போதுமான அளவு இந்த ஊட்டங்களை பயிர்களுக்கு வழங்காது. எடுத்துக்காட்டாக, 100 கிலோ யூரியாவில் (யூரியாவில் 46% N) நைட்ரஜன் அடங்கியுள்ளது. இந்த அளவு நைட்ரஜன் வழங்க ஒரு விவசாயி சுமார் 2 டொன் இயற்கை (சேதன) உரம் (2%  N மட்டுமே) இட வேண்டியிருக்கும். எனவே இயற்கை உரம் என்பது உண்மையில் இரசாயனப் பசளைகளுக்கான மாற்று அல்ல ஆனால் அதற்கு உறுதுணையாக இருக்கும் ஒன்றாகவே பார்க்கப்படவேண்டும்.

மத்திய வங்கி அறிக்கைகளின் அடிப்படையில், 2019 ஆம் ஆண்டில் உணவு மற்றும் குடி பானங்களுக்கான செலவு சுமார் 300 பில்லியன் ரூபாவாக இருந்துள்ளது. இது 2021 இல் உணவு இறக்குமதிக்கான செலவினம் இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியின் காரணமாக இன்னும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகின்றது. இரசாயன உரங்களை தடைசெய்வது அதன் மூலம் மூலம் இறக்குமதி செய்வதற்கான நமது செலவைக் ரூ. 36 பில்லியனால் குறைக்கலாம். ஆனால் அதே நேரத்தில் அது உள்ளூர் உணவு உற்பத்தியை கணிசமாகக் குறைத்துவிடும் அபாயமும' கூட இருக்கின்றது. அதே நேரம் உணவு இறக்குமதிக்கான நமது வருடாந்த  செலவினத்தை அதிகப்படியாக அதிகரிக்கும், எனவே இதன் தாக்கம் இன்னும் எமது உணவுப் பாதுகாப்பிலும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.

இரசாயன உரத்தின் மூலமான பாதிப்புக்கள்

சில விவசாயிகள், பொஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களை தேவைக்கு அதிகமாக இடுவதாக தரவுகளும் தகவலும் வெளியாகியுள்ளது. எனவே, மண் பரிசோதனையின் அடிப்படையில் உரங்களை அளவுக்கு இடுவது விரும்பத்தக்கது. இரசாயன மற்றும் கரிம உரங்களை இணைத்து, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து முகாமைத்துவ அணுகுமுறையைப் பயன்படுத்தி விவசாய நிலத்தில் ஊட்டச்சத்து முகாமைத்துவத்தினை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. 

இரசாயன உரமுடன் நிர்வகிக்கப்படும் பெரும்பாலான விவசாய முறைகளில்;, இயற்கை உரத்தை ஒரு துணைப் பொருளாகப் பயன்படுத்துவது அவசியம். ஆதனால் மண்ணில் போதுமான கரிமப் பொருட்களின் அளவுகள் மண்ணில் சேர்க்கப்படும், அத்துடன் இரசாயன உரங்களின் கசிவுக்கும் அது வழிவகுக்கும். மண்ணில் பயன்படுத்தப்படும் யூரியாவில் சுமார் 40 வீத நைறிஜன் ஆவியாகும் தன்மை மற்றும் கசிவு காரணமாக இழக்கப்படுகிறது. ஆகவே இயற்கை உரத்தினைப் பயன்படுத்துவதன் மூலம் மண்ணில் போதுமான கரிமப் பொருட்களின் அளவைக் கொண்டிருக்கின்றபோது மட்டுமே இரசாயன உரங்களின் மொத்த நன்மைகளை உணர முடியும் என்பதனையும் நாம் உணரவேண்டும்.

நாம் அணுக வேண்டிய மாற்று வழிகள்

ஆகவே இந்தத்தருணத்தில் இரசாயன உரங்களின் இறக்குமதியைத் தடை செய்ய வேண்டுமானால், தாவரங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்கான மாற்று முறைகளை நாட வேண்டியது அவசியம். ஏனைய நாடுகளைப் போல இரசாயன நைட்றிஜனுக்கு பதிலாக உயிரியல் நைட்ரஜன் பயன்படுத்தினால், நமது அசேதன உர இறக்குமதியை ஓரளவு குறைக்கலாம். 

உயிரியல் நைட்ரஜன என்பது நுண்ணுயிரிகளின் பல்வேறு குழுக்களால் மேற்கொள்ளப்படும் ஒரு செயல்முறையாகும். உயிரியல் நைட்ரஜன பற்றிய ஆய்வுகள் இலங்கையில் சுமார் மூன்று தசாப்தங்களாக பேராசிரியர் எஸ்.ஏ.குலசூரிய போன்ற விஞ்ஞானிகளால் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வுகளின் முடிவுகள், அசோலா, நீல-பச்சை பாசி மற்றும் ரைசோபியா போன்ற உயிரினங்களால் நைட்ரஜனை உருவாக்கி நிலைநிறுத்துவது இரசாயன நைட்ரஜன் உரங்களை நிரப்ப பயன்படுத்தப்படலாம் என்பதைக் காட்டுகிறது. இந்தியா, சீனா, வியட்நாம் போன்ற பல நாடுகளில் உள்ள விவசாயிகளால் உயிரியல் நைட்ரஜன லாபகரமாகப் பயன்படுத்தப்படுவதும் குறிப்பிடத்தக்கது. 

இரசாயன உரங்களில் இல்லாத நுண்ணூட்டச் சத்துகளை வழங்குவதற்கு, கரிம உரங்களைப் பயன்படுத்தலாம். இருந்தாலும் நமக்குக் கிடைக்கும் எல்லா வகையான கரிமப் பொருட்களையும் பயிர்களுக்குப் பயன்படுத்த ஏற்றதல்ல. உதாரணமாக, நகரக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் உலோகங்கள் போன்ற நச்சு கூறுகள் அடங்கிய கழிவுகள் பயிர்களுக்கும், சூழலுக்கும் ஆபத்தானவை. 

எனவே இந்த நிலையில் இயற்கை உரங்களுடன் இரசாயன உரங்களைப் பயன்படுத்தினால் அதிக விளைச்சல் நாம் எதிர்பார்க்கலாம். எனவே, இயற்கை உரங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க ஒரு ஒருங்கிணைந்த நீண்டகாலத் திட்டத்தை செயல்படுத்துவது அவசியம். ஆதற்கும் மேலாக இரசாயன உரங்களை தடைசெய்வதன் மூலமான நன்மைகள் மற்றும் தீமைகள் ஆகியவற்றினை இந்த உரங்களை தடைசெய்வதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் கவனமாக பரிசீலிக்கப்பட்டிருக்கலாம். அவ்வாறிருந்திருந்தால்; அது இன்று விஸ்வரூபம் எடுத்திருக்கும் பிரச்சினையினை இல்லாமல் செய்திருக்கும்.

0 comments:

Post a Comment