‘வீட்டுப்பாடம் செய்யாததற்காக ஆசிரியை அடித்ததில் ஆறு வயதுச் சிறுவன்
உயிரிழப்பு’ என்ற செய்தியும், அதனுடன் வெளியான
காணொளியும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவின. ஆசிரியரின் செயற்பாடு
குறித்துப் பல்வேறு விமர்சனங்களும் விவாதங்களும் எழுந்தன. சிலர்
ஆசிரியருக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்தாலும், பெரும்பாலானோர்
அவரது நடத்தையைக் கடுமையாகக் கண்டித்தனர். சம்பவம் தொடர்பான விசாரணைகள்
சட்டத்தின் வழியில் நடைபெற வேண்டியவை; அவற்றின் முடிவை முன்கூட்டியே
தீர்மானிப்பது பொருத்தமற்றது. ஆயினும், ஒரு குழந்தையின் உயிரிழப்புக்கு இட்டுச்சென்ற சம்பவத்தின் தீவிரத்தை எவ்வகையிலும்
குறைத்து மதிப்பிட முடியாது. பிள்ளையை இழந்த பெற்றோரின் துயரம்
வார்த்தைகளால் விபரிக்க முடியாதது. அதேவேளை, இத்தகைய சம்பவத்தில் தொடர்புடைய ஆசிரியர் எதிர்கொள்ளும் மனவேதனையும் குற்றவுணர்வும்கூடக்
கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையே.
இத்தகைய சம்பவங்களை ஆராயும்போது உணர்ச்சிவசப்படுவதைவிட நிதானமாகச்
சிந்திப்பதே அவசியம். மாணவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டி அவர்களை
நல்வழிப்படுத்துவது ஆசிரியர்களின் பொறுப்பு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
ஆனால் அந்தக் கண்டிப்பு மாணவரின் வயதையும் மனநிலையையும் கருத்திற்கொண்டதாக
இருக்க வேண்டும். ஆசிரியர் – மாணவர் உறவில்
கண்டிப்புக்கும் கருணைக்கும் இடையிலான சமநிலை எவ்வளவு முக்கியமானது என்பதை இச்சம்பவம்
வெளிப்படுத்துகிறது. உடல்ரீதியான தண்டனையோ அச்சுறுத்தலோ நல்வழிப்படுத்தும்
வழிமுறையாக அமையாது; அன்புடனும் பொறுமையுடனும் வழிகாட்டுவதே மாணவர்களின்
நம்பிக்கையைப் பெறுவதற்கான அடிப்படையாகும். வகுப்பறையில் ஆசிரியருக்கு
வழங்கப்படும் அதிகாரம் மாணவர்களின் நலனுக்காகவே வழங்கப்படுகிறது என்பதை இங்கு நினைவில்
கொள்ள வேண்டும். அதிகாரம் பொறுப்புடன் இணையாதபோது, அது வழிகாட்டலாக அன்றி அச்சுறுத்தலாக மாறிவிடும் ஆபத்து உள்ளது.
கல்வி என்பது பாடப்புத்தகங்களிலிருந்து தகவல்களைப் பெறுவதோ,
பரீட்சைகளில் உயர் பெறுபேறுகளைப் பெறுவதோ மட்டுமல்ல. அது மனிதனின் உடல், அறிவு, உணர்வு,
ஒழுக்கம், ஆன்மிகம் ஆகிய அனைத்துத் துறைகளிலும்
வளர்ச்சியை ஏற்படுத்தும் வாழ்நாள் செயல்முறையாகும் (Lifelong Learning). சிற்பி கல்லைச் செதுக்கி அழகிய சிற்பமாக உருவாக்குவதுபோல, ஆசிரியர்கள் மாணவர்களின் ஆளுமையைச் செதுக்குகின்றனர்; மறைந்திருக்கும் திறமைகளைக் கண்டறிந்து வெளிக்கொணர்ந்து, எதிர்காலத்துக்கான பாதையை அமைத்துக் கொடுப்பவர்களும் அவர்களே. அறிவாற்றல் என்பது பகுத்தறிவுடன் மட்டுமன்றி மனிதனின் உணர்வுகளுடனும் தொடர்புடையது
என்று தத்துவஞானி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஆகவே, உணர்வுசார் சமநிலையையும் ஒழுக்கத்தையும் மனிதநேயத்தையும் வளர்க்காத கல்வி முழுமையானதாகாது.
கற்பித்தல் முறைகளும் காலத்துக்கேற்ப மாறியுள்ளன. முன்னைய காலங்களில் ஆசிரியர் அறிவைப் புகட்டுபவராகவும் மாணவர் அதனை மனப்பாடம்
செய்பவராகவும் கருதப்பட்டனர்; ஆசிரியரிடம் கேள்வி கேட்பதுகூட
மரியாதைக் குறைவாகக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பங்கள் இருந்தன. நவீன
கல்விமுறை மாணவர்களை மையமாகக் கொண்டது (Student-Centred Education). இங்கு ஆசிரியர் மாணவர்களுடன் இணைந்து கற்றலில் பங்கேற்கும் வழிகாட்டியாகத்
திகழ்கிறார். கேள்வி கேட்கும் ஆர்வத்தையும் சுயமாகச் சிந்திக்கும்
ஆற்றலையும் வளர்க்க வேண்டிய ஆசிரியர், அச்சத்தை விதைக்கும் முறைகளைப்
பின்பற்றினால், தாம் வளர்க்க முயலும் பண்புகளையே தமது செயலால்
பலவீனப்படுத்துகிறார். நவீன கல்விச் சிந்தனைக்கும் உடல்ரீதியான
தண்டனைக்கும் இடையிலான அடிப்படை முரண்பாடு இதுவே.
இச்சம்பவம் இந்தியாவுக்கு மட்டுமே உரிய தனித்த நிகழ்வாகக் கருதப்படக்
கூடாது. பாடசாலைகளில் உடல்ரீதியான தண்டனையை (Corporal
Punishment) ஒழுக்கத்தை நிலைநாட்டும் வழமையான முறையாக ஏற்கும் மனப்பாங்கு
பல சமூகங்களில், இலங்கைச் சமூகம் உட்பட, இன்றும் முற்றாக மறையவில்லை. இலங்கையில் கல்வி அமைச்சின்
சுற்றறிக்கைகளின் மூலம் பாடசாலைகளில் உடல்ரீதியான தண்டனை தடைசெய்யப்பட்டுள்ளது;
சிறுவர்களுக்குக் கொடுமை இழைத்தல் தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் குற்றமாகவும்
கருதப்படுகிறது. சிறுவர் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சமவாயத்தையும்
(Convention on the Rights of the Child) இலங்கை ஏற்றுக்கொண்டுள்ளது.
எனவே, சட்டங்களும் சுற்றறிக்கைகளும் உள்ளனவா
என்பதல்ல, அவை வகுப்பறை நடைமுறையில் எவ்வளவு தூரம் அமுல்படுத்தப்படுகின்றன
என்பதே உண்மையான கேள்வியாகும்.
ஆறு வயதுக் குழந்தை தனது உணர்வுகளையும் அச்சத்தையும் வார்த்தைகளால்
வெளிப்படுத்தும் ஆற்றல் குறைந்தவர்; தனது உடல் தாங்கக்கூடிய எல்லையையும்
அறியாதவர். அத்தகைய குழந்தை தன்னைவிட வலிமையும் அதிகாரமும் கொண்ட
வளர்ந்தவரை நம்பியே பாடசாலைக்கு வருகிறது. மேலும், அனைத்து மாணவர்களும் ஒரே குடும்பச் சூழலிலிருந்து வருவதில்லை. சிலர் அன்பும் அரவணைப்பும் நிறைந்த குடும்பங்களில் வளர்கின்றனர்; வேறு சிலர் குடும்பப் பிரச்சினைகள், பொருளாதார நெருக்கடி,
பெற்றோரின் பிரிவு போன்றவற்றுக்கு மத்தியில் வாழ்கின்றனர். போதிய உணவின்றியும் பாதுகாப்பான வசிப்பிடமின்றியும் பாடசாலைக்கு வரும் பிள்ளைகளும்
உள்ளனர். இப்பின்னணிகளைப் புரிந்துகொள்ளாத கண்டிப்பு அவர்களுக்குக்
கூடுதல் சுமையையே ஏற்படுத்தும். எனவே இவ்விடயம் பெற்றோர்,
அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கங்கள்,
கல்வி நிர்வாகத் துறையினர் உட்பட அனைவருக்கும் பொதுவான கரிசனைக்குரியது.
இக்கருத்தை ஏற்காதவர்கள் முன்வைக்கும் முதலாவது வாதம்,
கண்டிப்பு இல்லாவிடில் மாணவர்களிடையே ஒழுக்கம் சீர்குலையும் என்பதாகும்.
‘அடியாத மாடு படியாது’ (Spare the rod and spoil the child) என்ற பழமொழியை மேற்கோள் காட்டி, முன்னைய தலைமுறையினர்
கண்டிப்பின் மூலமே நல்வழிப்படுத்தப்பட்டனர் என்றும் இவர்கள் குறிப்பிடுகின்றனர்.
வகுப்பறைக் கட்டுப்பாட்டைப் பேணுவது இன்று கடினமாகியுள்ளது என்ற அவர்களது
கவலை புரிந்துகொள்ளக்கூடியதே. ஆயினும் இவ்வாதம் ஒழுக்கத்தையும்
அச்சத்தையும் ஒன்றாகக் கருதும் தவறை உள்ளடக்கியுள்ளது. அச்சத்தால்
கிடைக்கும் கீழ்ப்படிதல் தற்காலிகமானது; அது நடத்தையில் நிலையான
மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. சிறுவர் உரிமைகள் தொடர்பான ஐ.நா. குழு (UN Committee on the Rights of the
Child), உடல்ரீதியான தண்டனை எவ்வளவு இலேசானதாக இருந்தாலும் அது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல
என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. உளவியல் ஆய்வுகள் பலவும்
இத்தகைய தண்டனை ஆக்கிரோஷ நடத்தையையும் கற்றலில் ஆர்வமின்மையையும் அதிகரிக்கக்கூடும்
எனச் சுட்டிக்காட்டுகின்றன. கல்வியின் நோக்கம் தன்னம்பிக்கையும்
மனிதநேயமும் மிக்க குடிமக்களை உருவாக்குவதாயின், அச்சத்தை அடிப்படையாகக்
கொண்ட வழிமுறை அந்நோக்கத்துக்கே முரணானது.
இரண்டாவது வாதம், ஒரு தனிச் சம்பவத்தை அடிப்படையாகக்
கொண்டு ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்தையும் குற்றம்சாட்டுவது நியாயமற்றது என்பதாகும்.
பெரும்பாலான ஆசிரியர்கள் வளப்பற்றாக்குறை, அதிக
மாணவர் எண்ணிக்கை, நிர்வாகப் பணிச்சுமை ஆகியவற்றுக்கு மத்தியிலும்
அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றனர் என்பதும், மாணவர்கள் வழிதவறும்போது
ஆசிரியர்களைக் குறைகூறும் சமூகம், அவர்கள் கண்டிக்கும்போதும்
விமர்சிக்கிறது என்பதும் இவ்வாதத்தில் சுட்டிக்காட்டப்படுகின்றன. இதில் உண்மையின் கூறு உள்ளது; அதனை ஏற்றுக்கொள்வதே பொருத்தமானது.
எந்தவொரு தனிச் சம்பவமும் முழு ஆசிரியர் சமூகத்தின் அடையாளமாக முன்னிறுத்தப்படக்
கூடாது. ஆனால் பணிச்சுமையும் அழுத்தமும் உடல்ரீதியான வன்முறைக்கான
நியாயமாக அமைய முடியாது. மாறாக, அவை முகாமைத்துவ
மட்டத்தில் தீர்க்கப்பட வேண்டிய கட்டமைப்புக் குறைபாடுகளையே சுட்டிக்காட்டுகின்றன.
மூன்றாவதாக, வீட்டுப்பாடம் கற்றலின் இன்றியமையாத
பகுதி என்றும், அதனைச் செய்யத் தவறுவது பொறுப்பின்மையின் வெளிப்பாடு
என்றும் வாதிடப்படுகிறது. வீட்டுப்பாடம் பயிற்சிக்கான பயனுள்ள
கருவி என்பதில் ஐயமில்லை. ஆனால், ஆறு வயதுக்
குழந்தை ஒன்று அதனைச் செய்யாமைக்கு அலட்சியம் மட்டுமே காரணம் எனக் கொள்ள முடியாது.
குடும்பச் சூழல், பெற்றோரின் வழிகாட்டல் இன்மை,
பொருளாதார நெருக்கடி, போதிய உணவின்மை அல்லது பாதுகாப்பான
கற்றல் இடம் இல்லாமை போன்றன அதன் பின்னணியில் இருக்கக்கூடும். காரணத்தை அறியாமல் வழங்கப்படும் தண்டனை, பிரச்சினையின்
மூலத்தைத் தீர்ப்பதில்லை; மாறாக, குழந்தையைக்
கல்வியிலிருந்தே அந்நியப்படுத்துகிறது.
நான்காவதாக ஒரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது: சிறுவர் பாதுகாப்பு தொடர்பான கடுமையான விதிமுறைகள் ஆசிரியர்களிடம் அச்சத்தை
ஏற்படுத்துவதால், அவர்கள் மாணவர்களை நெறிப்படுத்தும் பணியிலிருந்து
விலகிவிடுகின்றனர் என்பதே அது. இதற்கான தீர்வு விதிமுறைகளைத்
தளர்த்துவதல்ல, அவற்றைத் தெளிவுபடுத்துவதாகும். எவை ஏற்றுக்கொள்ளத்தக்க ஒழுங்குப்படுத்தும் நடவடிக்கைகள், எவை தடைசெய்யப்பட்டவை என்பது எழுத்துமூலம் தெளிவாக வரையறுக்கப்படும்போது,
ஆசிரியர்கள் நம்பிக்கையுடன் செயற்பட முடியும். தெளிவற்ற சூழலே தவறுகளுக்கும் தேவையற்ற அச்சத்துக்கும் வழிவகுக்கிறது.
வகுப்பறையில் வரம்புகளை நிர்ணயிப்பதும், விளைவுகளைக்
குழந்தைக்கு விளக்குவதும், பொறுப்புணர்வை வளர்ப்பதும் தண்டனையின்றியே
சாத்தியமான ஒழுங்குப்படுத்தும் வழிமுறைகள் என்பதை நேர்மறை ஒழுக்க அணுகுமுறைகள் நிரூபித்துள்ளன.
இவ்விவகாரத்தில் ஆராய்ந்து எட்டக்கூடிய நிலைப்பாடு தெளிவானது.
மாணவர்களின் பாதுகாப்பும் ஆசிரியர்களின் கௌரவமும் ஒன்றுக்கொன்று எதிரானவை
அல்ல; இரண்டையும் ஒருங்கே உறுதிப்படுத்தும் கட்டமைப்பே பொறுப்புள்ள
கல்வி முறைமையின் அடையாளமாகும். ஆசிரியரின் கண்டிப்பு,
மாணவரின் வயது, மனநிலை, குடும்பப்
பின்னணி ஆகியவற்றைக் கருத்திற்கொண்ட வழிகாட்டலாக அமைய வேண்டுமேயன்றி, தண்டனையாக அமையக் கூடாது. ஒரு சம்பவம் நிகழ்ந்தபின்
தனிநபரைக் குற்றம்சாட்டுவதுடன் நின்றுவிடாமல், அத்தகைய சம்பவங்கள்
மீண்டும் நிகழாதிருப்பதற்கான நடைமுறைகளை உருவாக்குவதே காலத்தின் தேவை. அந்த வகையில் பின்வரும் மாற்று வழிமுறைகள் பரிசீலிக்கத்தக்கவை.
இன்றைய உலகில் கல்வித் தகைமைகளையும் பட்டங்களையும் பெற்றவர்கள்
பலர் உள்ளனர். எனினும், கல்வி வளர்க்க வேண்டிய
நற்பண்புகளையும் அறநெறிகளையும் வாழ்வில் கடைப்பிடிக்கத் தவறுபவர்களும் உள்ளனர்.
இந்நிலையில் அன்பு, பணிவு, இரக்கம், சகிப்புத்தன்மை, பிறரை
மதித்தல் போன்ற பண்புகளை மாணவர்களிடம் வளர்ப்பதில் ஆசிரியர்களே முன்னுதாரணமாகத் திகழ
வேண்டும். நல்லொழுக்கத்தைப் போதிப்பதுடன் தமது நடத்தையின் மூலமும்
அதனை வெளிப்படுத்துவதே ஆசிரியரின் உண்மையான செல்வாக்கு. மாணவர்களிடம்
அன்பாகப் பேசுதல், அவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்தல்,
தவறைச் சுட்டிக்காட்டும்போது மனம் புண்படாதவாறு நடந்துகொள்ளுதல் போன்ற
எளிய செயல்களே ஆளுமை வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். குழந்தைகள் தமது பிரச்சினைகளை நம்பிக்கையுடன் பகிர்ந்துகொள்ளக்கூடிய ஆசிரியர்களும்,
தவறு செய்தாலும் தண்டனை குறித்த அச்சமின்றி அதனை ஒப்புக்கொள்ளக்கூடிய
சூழலும் மாணவர்களின் மனநலத்துக்கு அடித்தளமாகும்.
முதலாவதாக, ஆசிரியர் பயிற்சிப் பாடத்திட்டத்தில்
நேர்மறை ஒழுக்க முகாமைத்துவம் (Positive Discipline) கட்டாயப்
பகுதியாக்கப்பட வேண்டும். சிறுவர் உளவியல், உணர்வுசார் நுண்ணறிவு (Emotional Intelligence), முரண்பாட்டுத்
தீர்வு, தண்டனையற்ற நடத்தை முகாமைத்துவ உத்திகள் ஆகியவை கல்வியியற்
கல்லூரிகளிலும் பணியிடைப் பயிற்சிகளிலும் (In-service Training) வகுப்பறைச் சூழலை ஒத்த பாத்திரமேற்பு நடிப்புப் பயிற்சிகளுடன்
(Role Play) கற்பிக்கப்பட வேண்டும். புதிதாகப்
பணியில் இணையும் ஆசிரியர்களுக்கு அனுபவம் மிக்க ஆசிரியர்களின் வழிகாட்டல்
(Mentoring) வழங்கப்படுவதும் இன்றியமையாதது; ஏனெனில்
வகுப்பறைச் சவால்களைக் கையாளும் திறன் பெரும்பாலும் நடைமுறை அனுபவத்தின் வழியே வளர்கிறது.
இரண்டாவதாக, ஒவ்வொரு பாடசாலையும் சிறுவர்
பாதுகாப்புக் கொள்கையை (Child Protection Policy) எழுத்துமூலம்
வகுத்து, அதனை மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் தெரியப்படுத்த
வேண்டும். பாடசாலை மட்டத்தில் ஆலோசனை (Counselling) வசதியும் நடத்தைச் சிக்கல்களைக் கையாளும் குழுவும் அமைக்கப்பட வேண்டும்.
மாணவர்கள் அச்சமின்றி முறைப்பாடு செய்யக்கூடிய, இரகசியம் பேணும் பொறிமுறையும், அம்முறைப்பாடுகளை உரிய
காலத்தில் விசாரிக்கும் மாகாணக் கல்வித் திணைக்களங்களின் தெளிவான நடைமுறையும் இதனுடன்
இணைக்கப்பட வேண்டும்.
மூன்றாவதாக, ஆசிரியர்களின் பணிச்சுமை முகாமைத்துவம்
(Workload Management) மீளாய்வு செய்யப்பட வேண்டும். வகுப்பு மாணவர் எண்ணிக்கை, நிர்வாகப் பணிகள்,
மேலதிகக் கடமைகள் ஆகியவற்றின் தாக்கம் ஆராயப்பட்டு, ஆசிரியர்களின் உளநலனுக்கான ஆதரவுச் சேவைகள் (Teacher Wellbeing
Support) ஏற்படுத்தப்படலாம். சக ஆசிரியர்கள் வகுப்பறைச்
சவால்களையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளும் சகாக் கற்றல் வட்டங்கள்
(Peer Learning Circles) இந்த முயற்சிக்குத் துணைபுரியும்.
நான்காவதாக, வீட்டுப்பாடக் கொள்கை மறுசீரமைக்கப்பட
வேண்டும். ஆரம்ப வகுப்புகளில் வீட்டுப்பாடத்தின் அளவும் தன்மையும்
மாணவர்களின் வயது மற்றும் குடும்பச் சூழலுக்கு ஏற்ப வரையறுக்கப்பட வேண்டும்.
வீட்டுப்பாடம் செய்யாத மாணவர்களைத் தண்டிப்பதற்குப் பதிலாக, பாடசாலை நேரத்துக்குள் துணைக் கற்றல் ஆதரவை (Remedial Support) வழங்குவதும், அதற்கான காரணத்தைப் பெற்றோருடன் கலந்துரையாடுவதும்
பயனளிக்கும். ஆசிரியர்–பெற்றோர் சந்திப்புகள்
குற்றம்சாட்டும் தளமாக அன்றி, பிள்ளையின் வளர்ச்சிக்கான கூட்டுப்
பொறுப்பை வெளிப்படுத்தும் தளமாக மாற வேண்டும்.
ஐந்தாவதாக, ஆசிரியர்களின் தொழில்சார் வளர்ச்சிக்கும்
அங்கீகாரத்துக்கும் தொடர்ச்சியான பொறிமுறை அவசியம். புதிய கற்பித்தல்
முறைகள், நவீன தொழில்நுட்பப் பயன்பாடு, வகுப்பறை ஆய்வு (Action Research) ஆகியவற்றில் பயிற்சி
வழங்குவதுடன், மாணவர் நலனை முன்னிறுத்திச் செயற்படும் ஆசிரியர்களை
அங்கீகரிக்கும் வகையில் பாடசாலை, வலய, மாகாண
மட்டங்களில் பகிர்வு மன்றங்களை ஏற்படுத்தலாம். மாணவர்களின் கருத்துகளை
அறியும் கற்றல் சூழல் கணிப்பீடுகள் (School Climate Survey) மூலம்
பாடசாலைகளின் பாதுகாப்புநிலையை முகாமைத்துவ மட்டத்தில் தொடர்ந்து கண்காணிக்கவும் முடியும்.
ஆறாவதாக, நியாயமான விசாரணைக்கும் விரைவான
பாதுகாப்புக்கும் இடையிலான சமநிலை பேணப்பட வேண்டும். முறைப்பாடு
கிடைத்ததும் பாதிக்கப்பட்ட பிள்ளையின் பாதுகாப்பும் உளநல ஆதரவும் உடனடியாக உறுதிப்படுத்தப்படுவதுடன்,
குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியருக்குத் தமது தரப்பை முன்வைக்கும் வாய்ப்பும்
உறுதியான நடைமுறையொன்றின் மூலம் வழங்கப்பட வேண்டும். இத்தகைய
வெளிப்படையான நடைமுறை சிறுவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒருசேர நம்பிக்கையை அளிக்கும்.
ஊடகங்களுக்கும் சமூக வலைத்தளப் பயனாளர்களுக்கும் இதில் பொறுப்பு
உண்டு. இத்தகைய சம்பவங்களின் காணொளிகளைப் பகிர்ந்து தனிநபர்களை
நிந்திப்பதைவிட, கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் குறித்த உரையாடலை
முன்னெடுப்பதே சமூகத்துக்குப் பயனளிக்கும். உறுதிப்படுத்தப்பட்ட
தகவல்களை மட்டுமே பகிர்வதும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின்
தனியுரிமையை மதிப்பதும் இதன் அடிப்படைகளாகும்.
ஒரு நாட்டின் எதிர்காலம் அதன் இளைய தலைமுறையின் கைகளில் தங்கியுள்ளது;
அத்தலைமுறையை அறிவிலும் பண்பிலும் சிறந்தவர்களாக உருவாக்கும் பொறுப்பு
ஆசிரியர்களிடம் உள்ளது. அவர்களது பணியை மதிப்பதும், தேவையான வசதிகளையும் பயிற்சிகளையும் ஆதரவையும் வழங்குவதும் சமூகத்தின் கூட்டுப்
பொறுப்பாகும். ஆசிரியர் தினம் என்பது வாழ்த்துச் செய்திகளைப்
பரிமாறும் நாளாக மட்டுமன்றி, ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப்
புரிந்துகொண்டு அவற்றுக்குத் தீர்வு காணும் உறுதிமொழியின் நாளாகவும் அமைய வேண்டும்.
கண்டிப்பு அவசியம்; ஆனால் அது கருணையுடன்
இணைந்த வழிகாட்டலாக இருக்க வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பாக
உணரும் வகுப்பறையே ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பான பணியிடமாக அமையும். பிள்ளைகளின் பாதுகாப்பையும் ஆசிரியர்களின் மதிப்பையும் ஒருசேர உறுதிப்படுத்துவதன்
மூலமே கல்வி தனது உண்மையான நோக்கத்தை எட்டும். இளம் மனங்களில்
அச்சத்தை விதைக்கும் கல்வி, அறிவை வளர்ப்பதற்குப் பதிலாக அறிவின்மீதான
வெறுப்பையே வளர்க்கக்கூடும். கல்வித்துறையினரும் பெற்றோரும் சமூகமும்
இணைந்து இக்கருத்தை நடைமுறையில் உறுதிப்படுத்துவதே இழந்த உயிருக்கு வழங்கக்கூடிய உண்மையான
மரியாதையாகும்.


0 comments:
Post a Comment