
இவ்வாறு பல உயிர்கள் பாதுகாப்பு இன்றி அழிகின்ற நிலையினை முன்னெப்பொழுதும் இல்லாத நிலையில் எமது நாட்டில் காணக்கூடியதாக இருக்கின்றது. ஒரு சம்பவத்தினை உங்களுக்கு எடுத்துக்கூறலாம் என நினைக்கின்றேன். நான் கொழும்பு இருந்து எனது ஊர் (தேத்தாத்தீவு) நோக்கி சென்று அதிகாலை 3.30 மணியளவில் இறங்கினேன். அப்பொழுது அந்த பேருந்து தரிப்பிடத்தில் ஒரு கணம் மூச்செடுக்க முடியாமல் திணறிவிட்டேன்.
அப்படி ஒரு கெட்ட நாற்றம். அது ஏதோ ஒன்று இறந்து கிடப்பதை எனக்கு உணர்த்தியது. சுதாகரித்துக்கொண்டு அந்த இருள் வேளையில் வீடு சென்று தூங்கி, காலையில் சற்று தாமதமாக எழும்பி அந்த பேருந்து பக்கத்தில் மீன் விற்பதுண்டு, அங்கு சென்று பார்க்கலாம் ஏதும் மீன் இருக்கிறதா என உடுத்த சாறத்துடன் சென்றேன்.
சிலர் மூக்கை பொத்தியபடி பேருந்துக்காக காத்திருந்தனர், சிலர் மீனுக்காகக் பாத்திருந்தனர் மற்றும் சிலர் அந்தப் பாதையினால் போகின்றார்கள் வருகின்றார்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. அப்போது ஒரு இறந்த ஊனைச்சுற்றி ஈக்கள் சத்தமாக சுத்தி மொய்த்துக்கொண்டிருந்தது.
சுற்றி நின்றவர்கள் அவரவர் வேலை, காரியம் பற்றி கதைத்துக்கொண்டிருந்தனர். பக்கத்து வீட்டுக்காரரும் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. எனக்கு இந்த நிலமையைப் பார்க்கும்போது மிகவும் அவஸ்த்தையாக இருப்பதை உணர்ந்து. நாற்றம் மூக்கைத் துழைக்க மீனும் வேணாம் ஒண்ணும் வேணாம் என வீடு சென்றுவிட்டேன்.
அம்மா ஏதோ கேட்டுக்கொண்டிருந்தா! 'என்ன மீன் கிடக்கு மகன்' என. நான் நடந்தபடியே 'வாறன் அம்மா' என சொல்லிக்கொண்டு, வாசலுக்கு குறுக்கே கொல்லப்பக்கமாக மறைத்து வைத்த மம்பட்டியினை எடுத்துக்கொண்டு செல்ல ஆயத்தமானபோது, அம்மா கேட்டார் 'எங்கே மம்பட்டியோடு போகின்றாய்' என.
நான் 'வாறன் அம்மா' என பதில் ஏதும் சொல்லாமல் வீதிக்கு சென்றபோது எல்லோரும் என்னை புதினமாகப் பார்த்தனர்! அவர்கள் பார்வையின் அர்;தத்தினை புரிந்துகொண்டேன். மூக்கை எனது சேட்டினால் சுற்றிக்கொண்டு மடு ஒன்றை இறந்துகிடந்த பூனையின் அருகே வெட்டத் துவங்கினேன். அப்போது பக்கத்தில் நின்ற ஒருவர் ஓடிவந்து இங்ச 'கொண்டுவாம்பி மம்பட்டிய' என வெட்டி உதவினார்.
அதன் பின் இறந்த அந்தப் பூனையை அடக்கம் செய்தோம். இன்னும் அத்தனைபேரும் பார்த்துக்கொண்டே நின்றனர்.
இந்த மக்களின் பொதுவான எண்ணம் இந்த வேலை செய்வதற்கு என சிலர் உள்ளனர். அவர்கள் விரும்பினால் செய்யட்டும். நம்ம இதைச் செய்தால் மற்றவன் என்னத்த நினைப்பான் என்கின்ற வரட்டு எண்ணம் கொண்டவர்கள்தான் நான் அதனைச் செய்யும் போது வித்தியாசமாகப் பார்த்தனர். மற்றவர்களுக்கு எவ்வளவு உபத்திரமாக உள்ளது.
அதனை கொஞ்சம் புதைத்துவிட்டால் அது மற்றவர்க்கு நன்மை பயக்குமே என்ற எண்ணம் இன்று மனிதர்களிடையே காண அரிதாக உள்ளது. இதனால் நமக்கு என்ன பயன் கிடைக்கும்? எதற்காக நாம் நமது நேரத்தினை வீணடிக்கவேண்டும்? என்கின்ற குறுகிய சுயநலநோக்கம் கொண்டவர்கள் உள்ளவரை நாட்டில் மழை பெய்தால் அது வெள்ளமாகவே மாறும்.
0 comments:
Post a Comment