ADS 468x60

15 December 2018

சுட்டிக்காட்டாமல் விடப்படும் பெரிய குறையொன்று

தேத்தாத்தீவு கிராமத்தின் கிழக்கே இருக்கும் வங்கப் பெருங்கடல் அதுபோல் மேற்கே இருக்கும் மட்டக்களப்பு வாவி ஆகிய இரண்டும் முக்கியமான பகுதிகளாகக் கொள்ளப்படுகின்றன. இதில் கிழக்கே இருக்கும் கடற்கரைவரை செல்லும் பிரதான பாதை "சுனாமிக்குப் பின்னர் மிக மிக மோசமடைந்து தூர்ந்து போயுள்ளது".


அயலூரில் உள்ள வீதிகளையும் இன்னும் பல கட்டுமான அபிவிருத்திகளையும் எமது ஊருடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது "நேற்றய சிங்கப்பூரைப் பார்" என்பதுபோல் உள்ளது. இந்தப் பாதையை ஏன் இவ்வளவு கருசணை கொண்டு எழுதுகின்றேன் எனக் கேட்டால். அதற்கு காரணங்களாக இந்தப் பாதையினை பயன்படுத்தியே,

1) இங்குள்ள தொழிலாழிகள் மீன்பிடிக்கச் செல்லவேண்டும்,
2) அங்கு அமைந்துள்ள பத்திரகாளி ஆலயத்துக்கு செல்ல வேண்டும்.
3) விவசாயிகள் தங்களது தொழிலுக்காக பயன்படுத்தவேண்டும்,
4) பொது விளையாட்டு மைதானத்துக்கு செல்ல வேண்டும்
5) விடுமுறைகளில் வீச்சுக்கு செல்லவேண்டும்
6) அங்குள்ள குடிமனைகளில் வாழுபவர்கள் நாளாந்தம் பாவிக்கவேண்டும்
7) பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் பாவிக்கவேண்டும்
8) களுதாவளை மாங்காடு போன்ற அயலில் உள்ள ஊருக்கு செல்வதற்கான உள் மார்க்கம்.

என எல்லாவகையிலும் பிரதானமான ஒரு பாதையாகக் காணப்படும் இந்த பாதை இரு மருங்கும் காடு மண்டி, போட்டிக்கு போட்டிபோட்டு பாதையை பிடித்து ஒடுக்கியதுடன் இந்தப்பாதை செப்பனிடப்படாமல் குன்றும் குழியுமாக இருப்பது பலவிதமான அசௌகரியங்களை பாதசாரிகளுக்கு ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்த வீதியில் மின்விளக்குகள் பொருத்தப்படவில்லை, மழை காலம் தொடங்கிவிட்டால் அவை பாதையை கிறவல் நீரால் நிறைத்து போக்குவரத்தினை முடக்கிவிடுகின்றமையையும் அவதானிக்கலாம். 

உண்மையில் இந்த பாதை; பிரதான வீதியில் இருந்து ஒழுங்காக போடப்படவில்லை. அவை மீற்றர்கணக்கில் மிட்டாய் கடைபோல் விதவிதமான வகையில் போடப்பட்டிருப்பது நகைப்பாகவும் பொருத்தமற்றதாகவும் இருக்கின்றது.

இந்த நிலைக்கு யார் காரணம்?

1) இந்த பாதையை இவ்வாறு அரை குறையாக அமைப்பதற்க அனுமதி வழங்கிய மக்கள், அமைப்பினர் மற்றும் அபிவிருத்திச் சங்கத்தினர்.
2) இவற்றை கண்டும் காணாமல் இருக்கும் பயணாளர்கள்
3) எமது ஊரின் பொறுப்பற்ற படித்த அதிகாரிகள்
4) இந்தப் பாதையினைப் பயன்படுத்தி தொழில் புரிகின்றவர்கள்
5) மக்களால் பிரதேச சபைக்கு தெரிவுசெய்யப்பட்ட அரசியல் பிரதிநிதிகள்
6) எமது ஊரை நிருவகிக்கும் அதிகாரிகள்
7) ஆலய நிருவாகிகள்

என எல்லாவகையிலும் பொறுப்பற்று இருப்பவர்கள், கண்டும் காணாமல் இருப்பவர்கள், அவரவர் அவர்களுடைய வேலையைப் பார்த்தால் போதும் என சுயநலமுடைய எண்ணங்கொண்டோர் இந்த நிலைமைக்கு பொறுப்பானவர்கள். இவர்களுக்குள் சிலர் இவ்வாறான நிலையை தெழிவுபடுத்த பல முயற்சிகளையும் எடுத்திருக்கலாம் அவர்களைப் பாராட்டியாகவேண்டும்.

இவற்றை சீர்செய்து ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட பாதையை இட என்ன நடவடிக்கையினை செய்யலாம்?

1) விவசாய அமைப்புக்கள் ஒன்றுகூடி ஒரு மனுவினை அல்லது முறைப்பாட்டினை எழுதி அதை பிரதேச செயலகம், பிரதேச சபை, மின்சார சபை மற்றும் மாவட்டச் செயலகத்துக்கு அனுப்ப வேண்டும்
2) மீனவர் சங்கம் அதே போன்று ஒன்றை அனுப்பவேண்டும்
3) மாணவர்கள் சார்பில் கிராம அபிவிருத்திச் சங்கத்தினரும்
4) ஆலயம் சார்பில் ஆலய நிருவாகத்தினரும்
5) பொது மைதானம் சார்பில் விளையாட்டுக் கழகத்தினரும்
6) பொதுமக்கள் சார்பில் ஒரு மனுவினை எழுதித அதில் கையெழுத்தினை பெற்று அவற்றையும் மேற்கூறிய அரச நிறுவகங்களுக்கு அனுப்பி வைக்கலாம்.

இவை போக இரு மருங்கும் உள்ள பற்றைகளை அடிக்கடி சுத்தமாக்குவதை நிச்சயம் எமது ஊரின் அமைப்புகள், சங்கங்கள், விவசாயிகள் என அனைவரும் கருசணை கொண்டு அவற்றை அடிக்கடி சுத்தப்படுத்தவேண்டும்.

இதற்கு நீ என்னத்த புடுங்கின? என நிச்சயம் இவற்றைப் படிக்கும்போது ஒரு குழு கிளம்பி வரும், அப்பா நான் இதில் எல்லாவற்றிலும் பங்குகொண்டு உதவ தயாராக உள்ளேன். 2019இல் புதிய அகன்ற ஒழுங்கமைக்கப்பட்ட பாதை அமைக்கப்படுவதனை உறுதிகொண்டு எமது மேற்கூறிய எந்த அதிகாரி இவற்றை செய்ய முன்வருகின்றாரோ அதை செய்து முடிக்கின்றாரோ அவர் நிச்சயம் பொதுமக்கள் மத்தியில் பெரிய அளவில் பாராட்டி கௌரவிக்கப்படுவார்.

0 comments:

Post a Comment