ADS 468x60

01 March 2022

சிவராத்திரி என்ன மகிமையை உடையது?

சிவராத்திரி மகிமை நமக்குச் சொல்லும் பாடம். இந்த உலகில் நன்மை தீமைகளைத் தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் ஒரே பலன்தான். தெரியாமல் செய்ததனால் நமக்கு வரவேண்டிய நன்மை தீமைகள் வராமல் போகாது. 

சரி, சிவராத்திரி என்றதும் நம் நினைவுக்கு வருவது இரவு கண் விழித்தலும், லிங்கங்களுக்கு செய்யப்படும் பலவகையான அபசேகங்களும், நான்கு கால பூஜைகளும்தான்.

அதையும் தாண்டி நாம் பலவற்றினை அறியவேண்டியுள்ளது. பாருங்கள், யுகம் யுகமாக நடந்து வரும் சிவராத்திரி வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதிலும் வருடத்திற்கு ஒரு முறை வரும் மஹா சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவனை ஆராதித்தால் மங்களங்கள் சேரும், மனை சிறக்கும், அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் நீங்கி மோட்சம் சித்திக்கும் என்கிறது சிவ புராணம்.

ஒரு கதை, குரங்கு ஒன்று வில்வ மரத்தின் மீதமர்ந்து இரவு முழுவதும் இலைகளைப் பிய்த்து கீழே போட்டுக்கொண்டே இருந்தது. இலைகள் விழுந்த இடத்தில் இறைவனின் லிங்கத் திருமேனி. அன்றைய இரவு மகாசிவராத்திரி. விடியும் வேளையில் அறியாமல் செய்த வில்வார்ச்சனைக்கு இறைவன், குரங்கை மறுபிறவியில் சக்கரவர்த்தியாகப் பிறக்க அருள் செய்தார். சக்கரவர்த்தியாய் பிறந்தவரே முசுகுந்த சக்கரவர்த்தி.

தனக்கு வாய்த்த வரத்தை அறிந்ததும் முசுகுந்தர் வேண்டிக்கொண்டது என்ன தெரியுமா... அறியாமல் சிவபூஜை செய்த குரங்குக்கே இறைவன் இவ்வளவு பெரிய பதவியை அருள்வார் என்றால், அறிந்தே சிவபூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் எவ்வளவு இருக்கும் என்று இந்த உலகம் அறிந்துகொள்ள, 'சக்கரவர்த்தியாய் பிறந்தாலும் தன் குரங்குமுகம் மாறக்கூடாது' என்று வேண்டிக்கொண்டார்.

அதனால்தான், நன்மைகளை அறியாமல் செய்தால்கூட நன்மையே உண்டாகும் என்கின்றனர் பெரியோர்கள். சிவராத்திரி நாளை அறியாமல், உயிருக்குப் பயந்து மரத்திலேறிய வேடன், கீழே விழுந்துவிடக்கூடாது என்று இரவெல்லாம் விழித்திருந்து இலைகளைப் பறித்துப் போடுகிறான். அதுவே சிவார்ச்சனை ஆனது. அதன் பலனாக, அவன் மறுபிறவியில் ராமனையே தோழனாகக்கொள்ளும் குகப் பதவியை அடைந்தான் என பல பராண உதாரணங்கள் எம்மையெல்லாம் சிவ அருளைப் பற்றி அறிய உதவுவன அல்லவா!

சிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன்?

வள்ளலார் ஒரு மனிதன் உயர்வுபெற தனித்திரு, விழித்திரு, பசித்திரு என மூன்று தாரக மந்திரங்களைக் கூறுகின்றார். இதனை நம்மில பலர் பிழையாக அர்த்தம் கொள்ளுகின்றனர். அதாவது தனித்திரு என்றால் பிறரைப்போல் அல்லாது நீ நீயாகவே உன்னில் உள்ள தனித்துவத்துடன் வேறு பலரில் இருநது தனித்திரு என்பதாகும். இது தனிமையில் எங்கோ போய் இருப்பதல்ல அதற்கு பொருள். அடுத்து பசித்திரு ம்ம் நாளாந்தம் இந்த உலகில் ஏற்படும் நல்ல மாற்றங்களையெல்லாம் அறிந்து கொள்வதற்கான அறிவுப்பசியுடன் இரு அப்போது அந்த தனித்துவம் உனக்கு தானாகவே கிடைத்துவிடும். அடுத்து விழித்திரு நாம் எப்போதும் விழிப்போடு இருக்கவேண்டும். தூங்கும்போதும் வழிப்பு நிலை அவசியம் எனச் சொல்லுகின்றார்கள். ஆந்த விழிப்பு நிலை இல்லாமல் தான் பலர் எல்லாவற்றையும் கோட்டை விடுகின்றோம். ஆக நித்திரை விழித்திருப்பதை இது குறிப்பதல்ல. இந்த நிலை கடவுளை தரிசனம் பண்ணவும் அவரை சதா நேசிக்கவும் உதவும் என்பதில் ஐயமில்லை. 

சிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும்போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். தியானம் நிலைக்கும். நினைத்த காரியம் நடக்கும். விரதம் கடைப்பிடிப்போர் முதல்நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி விரத்தை நிறைவு செய்தல் வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.

ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை

நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்

வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்

கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே


reference: 

https://tamil.samayam.com/religion/history-and-glory-of-maha-sivarathiri/articleshow/57318155.cms


0 comments:

Post a Comment