ADS 468x60

19 March 2022

நெருக்கடியால் நிலைதடுமாறி நிற்கும் இலங்கை: மீளுமா!

இந்துசமுத்திரத்தின் முத்து, அன்று இராமாயணம் தொட்டு அல்ல இன்று வரை அழகைக் கொட்டி உருவாக்கப்பட்ட குட்டி தேசம் என்றெல்லாம் போற்றப்படும் இலங்கை. நாலா பக்கம் கடல்கள், மலையகத் தோட்டங்கள், பசுங்காடுகள் எனச் செழுமையான நாடு நம்ம நாடு. ஆனால், உள்நாட்டுக் குழப்பம், போர் என பாதிக்காலம் போன நிலையில், இன்று பொருளாதாரப் பிரச்சினையில் சிக்கித் தவித்து, ஏனைய நாடுகளிடம் அடகுவைக்கும் நிலைக்கு இலங்கை சென்றுவிட்டது.

இன்று என்னதான் பிரச்சினை இலங்கையில்?

டொலர் கிடையாது, கையிருப்பு தீர்ந்துவிட்டது, பணவீக்கம் ஏறிவிட்டது, நுகர்வோர் விலைச்சுட்டெண் அதிகரித்துவிட்டது அத்தியாவசியப்பொருட்கள் சந்தையில் தட்டுப்பாடாக உள்ளது அத்தோடு விலையும் உயர்ந்துவிட்டது என அடுக்கிக்கொண்டுபோகலாம். குறிப்பாக இலங்கையின் பொருளாதாரத்தில் 10 சதவீதம் ஜிடிபி சுற்றுலாத்துறையின் மூலம் கிடைக்கிறது, அதன்பின் தேயிலை, ஆடைகள் ஏற்றுமதி மூலம் அந்நியச் செலாவணி கிடைக்கிறது. ஆடைகள் உற்பத்தி, தேயிலை ஏற்றுமதி, சுற்றுலாவின் மூலம் கிடைக்கும் வருவாய் ஆகியவற்றைச் சார்ந்துதான் இலங்கைப் பொருளாதாரமே இயங்கிக் கொண்டிருக்கிறது. மொத்த ஏற்றுமதியில் ஏற்றுமதி ஆடைகளின் பங்கு 52 சதவீதமாகவும், தேயிலை ஏற்றுமதி 17 சதவீதமாகவும் இருக்கிறது.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தம் இலங்கையையும் விட்டு வைக்கவில்லை. இலங்கையின் ஏற்றுமதியில் மிகப்பெரிய அளவில் வீழ்சியை ஏற்படுத்தியது, சுற்றுலாத்துறையை முடக்கி பொருளாதாரத்தைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டது. இதனால் இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

பொருளாதாரச் சரிவு

2019ஆம் ஆண்டின் 2-ம் காலாண்டில் இலங்கையின் ஜிடிபி மதிப்பு 1.1 சதவீதமாக இருந்த நிலையில் 2020-ம் ஆண்டில் கரோனா பெருந்தொற்று காரணமாகப் பொருளாதாரம் பாதாளத்துக்குச் சென்று மைனஸ் 16.3 சதவிதம் என வரலாறு காணாத கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது.

சுற்றுலாத்துறை முடக்கம் மற்றும் தேயிலை, ஆடைகள் ஏற்றுமதி சரிவால் அந்நியச் செலாவணி கையிருப்பும் இல்லாமற்போனது. இலங்கையின் பொருளாதார பின்னடைவைப் பார்த்த பன்னாட்டு நிறுவனங்களும் தங்கள் மூலதனத்தைச் சுருட்டிக் கொண்டு வெளியேறத் தொடங்கின.

தமிழில் ஒரு பழமொழி கூறுவார்கள் 'குன்று தங்கம் இருந்தாலும் குந்தித் தின்றால் தாங்காது' என்பதுபோல வளர்ச்சிக்கு வழிதேடாமல் இலங்கை அரசு கைவசம் இருந்த அந்நியச் செலாவணி முழுவதையும் கரைத்துவிட்டது.

பின்னடைவு நிலை?

2022, நிலவரப்படி இலங்கை அரசிடம் உள்ள அந்நியச் செலாவணி கையிருப்பு 2.6 பில்லியன் அமெரிக்க டொலரால் குறைவடைந்துள்ளது. ஆனால், வெளிநாட்டுக் கடன் மற்றும் உள்நாட்டுக் கடனாக இலங்கை அரசும், தனியார் துறையும் 730 கோடி டாலர் செலுத்த வேண்டும், இதில் 500 கோடி டாலர் சர்வதேசக் கடன் பத்திரங்களாக இருக்கின்றன. இந்தக் கடனை 2022, ஜனவரிக்குள் செலுத்த வேண்டும் என்று அறிக்கை கூறுகிறது.

இலங்கை அரசு இப்போது சந்திக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள் திடீரென கொரோனா மூலம் வந்தவை என்று கூறி மக்களை திசைதிருப்புவதாக பலர் விமர்சிக்கின்றனர்..

பல ஆண்டுகளாகத் தொடரும் அவலம்

வர்தமானியில்; சுஹைல் கப்தில் என்ற பொருளாதார வல்லுநர் ஆய்வறிக்கையின்படி, கடந்த 10 ஆண்டுகளாக இலங்கை அரசு இருவிதமான பற்றாக்குறையைச் சந்தித்து வருகிறது. ஒன்று வர்த்தக நிலுவைப் பற்றாக்குறை, 2-வதாக நிதிப் பற்றாக்குறை.

கடந்த 2014-ம் ஆண்டிலிருந்தே இலங்கை அரசின் சர்வதேசக் கடன் அதிகரித்து வருகிறது, 2019-ம் ஆண்டில் சர்வதேசக் கடன் 42.6 சதவீதமாக ஜிடிபியில் அதிகரித்துவிட்டது. டாலரின் மதிப்பில் கூறினால் 2019-ம் ஆண்டில் இலங்கையின் சர்வதேசக் கடன் 3,300 கோடி டொலராகும்.

இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் மேலும் மேலும் கடனை வாங்கியும், உள்நாட்டில் அதிகமான பணத்தை அச்சடித்து வெளியிட்டதாலும் மிகப்பெரிய பொருளாதாரப் பேரழிவை இலங்கை சந்தித்து வருகிறது.

இதன் காரணமாகவே சர்வதேச ரேட்டிங் நிறுவனங்களான ஸ்டாண்டர்ட் அண்ட் பூர்ஸ், மூடிஸ், பிட்ச் ஆகியவை இலங்கையின் சர்வதேசக் கடன் தரத்தை பியிலிருந்து சீக்கு இறக்கிவிட்டனர். இதனால் சர்வதேச அளவில் கடன் பத்திரங்கள் மூலம் கடன் பெறுவது இலங்கைக்குக் கடினமாகி நெருக்கடி நிலைக்குச் செல்லும்.

 விலைவாசி, பணவீக்கம் உயர்வு

2019-ம் ஆண்டு 750 கோடி அந்நியச் செலாவணி கையிருப்பு வைத்திருந்த இலங்கை 2021 ஜூலை மாதம் 280 கோடியாகக் குறைந்தது. அந்நியச் செலாவணி கையிருப்பு கரைந்தது, இறக்குமதிக்காகவும் அந்நியச் செலாவணி அதிகமாக செலவிடப்பட்டது. அந்நியச் செலாவணி குறைந்ததால், இலங்கை பணத்தின் மதிப்பும் குறைந்தது, அது கடந்த ஆண்டில் மட்டும் 8 சதவீதம் சரிந்துள்ளது.

பணத்தின் மதிப்பு குறைந்ததால், ஒரு கிலோ பருப்பின் விலை ரூ.350, சீனி கிலோ ரூ.170, உருளைக் கிழங்கு கிலோ ரூ.300, பெரிய வெங்காயம் கிலோ ரூ.200 உளுந்து கிலோ ரூ.1,500 ஆகவும் வரையிலும் விற்கப்படுகிறது.

இதனால், அடிப்படை உணவு விநியோகத்தினைக்;கூட வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து நிறைவு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் உணவுப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்குச் சென்றுவிட்டன. நாட்டில் பணவீக்கத்தின் அளவு இதுவரை கண்டிராத அளவு 16.8 சதவீதமாக அதிகரித்துவிட்டது.

உணவுப்பொருள் விலை ஏற்றத்துக்கு யார் காரணம்?

இலங்கையில் அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை, வெங்காயம் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு விலை உயர்ந்து வருகிறது. கேஸ் அடுப்பில் சமைத்தவர்கள் மண்ணெண்ணெய் அடுப்புக்கும், மண்ணெண்ணெய் அடுப்பில் சமைத்த மக்கள் விறகு அடுப்புக்கும் மாறிவிட்டார்கள். 3 வேளை சாப்பிட்ட மக்கள் 2 வேளைக்கும், 2 வேளை சாப்பிட்ட மக்கள் ஒருவேளைக்கும் மாறிவருகிறார்கள்.

இலங்கையில் மிகப்பெரிய அளவுக்கு உணவுப்பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட அரசின் அறிவிப்புதான் காரணம். எமது நாட்டில் செயற்கை உரத்தைத் தடை செய்து, இயற்கை விவசாயத்துக்கு 100 சதவீதம் மாற வேண்டும் என்ற அறிவிப்பு மோசமான விளைவைப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தியது.

இங்குள்ள கடைகளில் உணவுப் பொருட்களை வாங்கவும், மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகளில் பொருட்களை வாங்கவும் மக்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள் அதுபோல் எரிபொருள் நிரப்பு நிலையங்கள், எரிவாயு நிரப்பு நிலையங்கள் இன்னும் பல இடங்களில் அந்த வரிசையைக் காணக்கிடைக்கின்றது. உலகிலேயே இயற்கை வழி, பாரம்பரிய விவசாயத்துக்குத் திரும்பும் நாடு இலங்கை என்று திடீரென அறிவித்து ரசாயன உரங்களுக்கும், பூச்சி மருந்துகளுக்கும் திடீரென தடைவிதிக்கப்பட்டமை விமர்சிக்கப்படுகின்றது.

திட்டமிடாத பாரம்பரிய விவசாயம்

பாரம்பரிய விவசாய முறையைப் பற்றி அதிகம் தெரியாத விவசாயிகள், அதற்கு முழுமையாகத் தயாராகாமல் மிகவும் சிரமப்பட்டனர். இதனால், இயல்பாக வர வேண்டிய உணவு உற்பத்தி கூட வராமல் பற்றாக்குறையாக இருந்தது.

இந்தப் பற்றாக்குறை உணவு உற்பத்தியை சமாளிக்க வெளிநாடுகளில் இருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் நிலைக்கு இலங்கை சென்றுவிட்டது. இலங்கையில் உணவுப் பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு, விலைவாசி அதிகமாக எகிறிவிட்டது.

5 லட்சம் பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ்

இலங்கை ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னர் டபிள்யுஏ விஜேவர்த்தனா எச்சரிக்கையில், 'பொருளாதாரச் சிக்கலில் இருக்கும் மக்களின் நிலைமை இன்னும் மோசமாகும். கொரோனா பெருந்தொற்றிலிருந்து இலங்கையில் 5 லட்சம் மக்கள் வறுமைக்கோட்டுக்கும் கீழ் சென்றிருக்கிறார்கள் என உலக வங்கி எச்சரித்துள்ளதை நினைவில் கொள்ளுங்கள்.

ஆனால், இந்த நாடு நீண்ட காலத்துக்குத் தீர்வு காணாமல் தற்காலிகமாகத் தீர்வை நோக்கியே நகர்கிறது. நிவாரணப் பொருட்களை இந்தியாவிடம் பெறுகிறது. கரன்ஸி ஸ்வாப்பிங் மூலம் இந்தியா, வங்கதேசம், சீனாவிடம் இருந்து பொருட்களை வாங்குகிறது, ஓமனிலிருந்து பெட்ரோலை வாங்குகிறது. கடந்த காலத்தில் பெற்ற கச்சா எண்ணெய் கடனை அடைக்க, ஈரான் நாட்டுக்கு மாதந்தோறும் 50 லட்சம் டாலர் மதிப்புள்ள தேயிலையை ஏற்றுமதி செய்து கடனை அடைக்கும் நிலைதான் நிலவுகிறது' எனத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பதில் என்ன?

இலங்கையில் உணவுப் பொருட்கள் விலை ஏற்றத்துக்கு முக்கியக் காரணம் பதுக்கல்தான், விலை உயரும் என்ற எண்ணத்துடன் பதுக்கி வருகிறார்கள் என்று பழியைப் போடுகின்ற அரசு தங்களின் தவறை ஒப்புக்கொள்ள மறுக்கிறது.

தற்போதுள்ள சூழலில் இயற்கை முறை விவசாயம் சரிபட்டு வராது என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தபோதிலும் இலங்கை அரசு பிடிவாதமாகக் கைவிட மறுக்கிறது. குறைந்த காலத்துக்கு சிரமமாக இருக்கும், நீண்டகாலத்தில் பலன் அளிக்கும் என்று இயற்கை விவசாயத்தைக் கைவிட மறுக்கிறது.

விவசாயிகளுக்கு இயற்கை உரங்களை மானிய விலையில் வழங்க அரசு தயாராக இருக்கிறது என்று அரசாஙடகத் தரப்பில் கூறப்படுகிறது. ஆகவே பிரச்சினையின் ஒட்டுமொத்த உருவத்தையும் பார்க்கவும், தீர்க்கவும் இலங்கை அரசு தயாராக இல்லை

அதில் உச்சகட்டமாக, 'மக்கள் அனைவருக்கும் உணவுப் பொருட்களை அரசாங்கமே ஏற்பாடு செய்ய இயலாது; ஆகையால், வீட்டுத் தோட்ட முறைக்கு மக்கள் மாற வேண்டும்; முடிந்த அளவிற்கு வெளியிலிருந்து பொருட்கள் வாங்குவதைக் கைவிட்டு, உணவுத் தேவையை தாமாகவே நிறைவு செய்துகொள்ள வேண்டும்'' என்று இலங்கையில் பலரும் மக்களுக்கு அறிவுரையும் கூறியுள்ளனர்.

மக்களின் அவலம்

இலங்கையின் பொருளதாரா நிலைமை மோசமாகி வருவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். முன்பு ரூ.10 ஆயிரம் கொண்டு சென்றால் 15 நாட்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிவருவேன். இன்று 5 நாட்களுக்குகூடப் பொருட்களை வாங்க முடியவில்லை. வருமானம் உயரவில்லை, ஆனால், விலைவாசி உயர்ந்துவிட்டது.

ஒரு மஞ்சள் பொடி பாக்கெட் விலை ரூ.300 விற்கிறது, தேங்காய் ஒன்று 100 ரூபாய் விற்கிறது, தக்காளி விலை 300 ரூபாய்க்கு விற்கிறது. எந்தப் பொருள் எடுத்தாலும் விலை உயர்ந்துவிட்டது. சமையல் கேஸில் கலப்படம் செய்து சிலிண்டர்கள் வெடிப்பதாக வந்த செய்தியால் சிலிண்டர் நிறுத்தப்பட்டது.

இதனால் மண்ணெண்ணெய் அடுப்பில்தான் சமைக்கிறோம். மண்ணெண்ணெய்க்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் காலை 5 மணிக்கு வரிசையில் நின்றால்தான் வாங்க முடிகிறது. இப்படியே சென்றால் இலங்கையின் நிலைமை பஞ்சம் ஏற்படும் நாடாக மாறிவிடும் போல் இருக்கிறது. கூலி வேலைக்குச் செல்பவர்கள் நிலைமை மிக மோசமாக இருக்கிறது. குழந்தைகளுக்குச் சரிவர உணவு கொடுக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள்.

அனைத்து வளங்களும் எங்கள் நாட்டில் இருந்தபோதிலும் ஏன் இந்த சிரமம் எனத் தெரியவில்லை' என பலர் அங்கலாய்க்கின்றனர்;.


0 comments:

Post a Comment