ADS 468x60

15 March 2024

கிராமம் மகிழ்சிகளின் சொர்கவாசல்

எத்தனை தான் வசதிகள் நகரங்களில் இருந்தாலும், இன்னொருவரை பார்ப்பதற்கும், உறவாடவும் வசதியில்லாத நரகவாழ்க்கைதான் நகர வாழ்க்கை. கனகாலம் கண்டு தம்பிய இஞ்சால வாருங்கோ, மத்தியானம் சாப்பிட்டுத்துப்போங்கோ, இளணீர் ஒன்று குடிப்பமா, எருமைப்பால் இருக்கிறது போடவா, சோளத்த முறிச்செடுங்க தம்பி அப்பப்பா எத்தனை உபசரிப்பு, விருந்தோம்பல் வினாக்கள் எம் கிராமத்து மக்களின் வெள்ளை மனங்களின் வரவேற்பில்.

மரத்துக்கு கீழ பாயை தட்டி பணிய இருக்கச் சொல்லி, செம்பில தண்ணியக்கொண்டு செய்யும் சேமம் இருக்கே! அட 5 ஸ்டார்கொட்டலிலும் கிடையாது போங்க.

இத்தனைக்கும் அவர்கள் அன்றாடம் உழைத்தால் மாத்திரம் அடுப்பெரிக்கும் குடும்பங்கள்தான். வசதி சிறிதென்றாலும் வரவேற்ப்பு பெரிது பாருங்க.

இதனால்தான் பிறஸரும், கொலஸ்ரோலும் இல்லாத குடும்பஙகளை குடியிருப்புக்களிலெல்லாம் காணுகின்றேன்.

கண்ணுக்கெட்டாத தூரத்தில் சில்லறைக்கடையும், கடும் இருட்டில் அரிக்கன் லாம்பும் வேலிக்கு கிடுகுமட்டையும் வசதி குறைவாகத்தான் தெரியும் தூரத்தில் இருந்து வருபவர்க்கு.

ஆனால் இவர்கள்தான் அதிக வசதி கூடியவர்கள் மகிழ்ச்சியில். ஓவ்வொரு வீட்டிலும் பாருங்கள் நிழலுக்கு மா பலா, நிலத்தடியில் குடிநீர், நிமலனடிக்கு மல்லிகை, உணவுக்கு மரக்கறி, ஊரார் வந்தால் நாட்டுக்கோழி இதைவிட என்னவேண்டும் என இயற்கையை நேசித்து, அதனுடன் ஒன்றித்து உழைத்து ஓடாய்ப்போவதில் உவகையுள்ள மக்கள் எங்கள் மக்கள்.

இவையனைத்தும் மனசார மக்களை நேசித்து செய்த பயணங்களினால் கிடைத்த பயன்கள் எனச் சொல்ல விரும்புகின்றேன். பயணம் மேற்கொள்வதில் இருக்கும் மகிழ்ச்சியே அலாதிதான். பயணம் எல்லையை விரிவடையச் செய்யும். நமது எண்ணங்களுக்கு சவால்விடும். புதிய மனிதர்களை சந்திக்க வாய்ப்பளிக்கும்.

பயணத்தின் மீதான விருப்பம் சமூக நோக்கத்துடன் இணைந்தால் பயணமானது மெருகூட்டப்பட்டு பல அரிய அனுபவங்களை உருவாக்கும்.

அடிநிலை மக்களின் யதார்த்தமான வாழ்க்கையை அனைவரும் உணரவேண்டும் என்பதே எனது இவ்வாறான கட்டுரைகளின் நோக்கம். பயணம், பயிற்சிகள், கலாச்சார நிகழ்வுகள் ஆகியவை வாயிலாக ஊக்கமுள்ள பலரை நான் இணைத்திருக்கின்றேன்.

கிராமப்புற மக்களின் அன்றாட வாழ்க்கை முறை குறித்த புரிதலை வழங்குகிறது. தங்குமிட வசதி, உள்ளூர் திருவிழாக்கள், பாரம்பரியம், நடனம், இசை, உணவு ஆகியவை இந்த பயணத்தின் மூலம் பெற்றுக்கொண்டவை.

சமூகத்தில் இருக்கும் பிரச்சனைகளையும் யதார்த்தங்களையும் அனைவரும் அறியவேண்டும். இதை அனுபவப்பூர்வமாக வழங்குவதற்கு பயணம்தான் சிறந்த வழி என்று நான் நினைக்கின்றேன்;. எனவே ஊக்கமுள்ள இளைஞர்கள் அடிநிலை மக்களின் நிலை குறித்து தெரிந்துகொள்ளவதற்கான வாய்ப்பினை பெற்றுக்கொள்ள முடியும் என நினைக்கின்றேன்.

கிராமப்புறங்களின் அடிநிலை மக்களின் பிரச்சனைகளையும் வௌ;வேறு முயற்சிகளின் வளர்ச்சிக்கட்டங்களையும் குறித்து புரிந்துகொள்வதற்காக நான் கிராமப்புறங்களை அவ்வப்போது பார்வையிடுவது வழக்கம். 

கிராமப்புற வாழ்க்கையையும் அதன் கலாச்சாரத்தையும் முழுமையாக விவரிக்கும் வகையில் கல்வி அமைப்பு தொடங்கப்படாமையுடன் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அதை அனுபவ ரீதியாக தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புக்களும் கிடையாது இப்போது.

சமூக உணர்வுடன் காணப்படும் இளைய சமூகத்தினர் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றனர். கொள்கைகள் அமைப்பது, சிவில் சேவை, பொறியியல், வணிகங்கள், தயாரிப்புகளின் வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அவர்கள் எடுக்கும் தீர்மானம் மக்களிடம் பாதிப்பை ஏற்படுத்தும். ஆதனால் அவர்கள் மக்களின் நிலையை புரிந்துகொண்டு செயல்படுவது மிகவும் அவசியமானதாகும். இது அனைத்து அபிவிருத்தி மற்றும் அரசியல்வாதிகளுக்கும் பொதுவானது.

இன்று நான் அனைவரும் இயந்திரத்தனமான உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதில் அடுத்துவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளும் தன்மையே நம்மை மனிதனாக வேறுபடுத்திக்காட்டுகிறது. எனவே ஏனையவர்களது உணவுகளைப் புரிந்துகொள்ள உங்கள் உறவுகளிடம், சொந்தங்களிடம், அயலவர்களிடம், கிராமத்து மக்களிடம் சென்று அவர்களை தெரிந்துகொள்ளுங்கள்.

ஓடி வேலை செய்தால் கிராமத்தான்

இருந்து வேலை செய்தால் நகரத்தான்

கிழிந்த உடை உடுத்தால் கிராமம்

கிழித்து ஆடை அணிந்தால் நகரம்


எதிர்பார்த்து வாக்களித்தால் அது நகரம்

ஏமாற்றி வாக்குப் பெற்றால் அது கிராமம்


ஆடு கோழி வளத்தால் கிராமம்

அலிசேசன் நாய் வளர்த்தால் நகரம்


உதவிக்கு மிதிவண்டி இருந்தால் கிராமம் 

உடம்பைக் குறைக்க மிதிவண்டி இருந்தால் நகரம் 


களரியில் கலை வளர்த்தால் கிராமம்

காசு கொடுக்கும் தியட்டருக்கு நகரம்


மரத்தை கும்பிட்டால் கிராமம்

மரத்தை விற்றால் நகரம்


மண்ணில் கிடைத்த பன் பை என்றால் கிராமம்

மண்ணை மலடாக்கும் பொலித்தீன் என்றால் நகரம் 


தன் மனைவியை நண்பர்களுக்கு அறிமுகம் செய்தால் கிராமம் 

மனைவி அவள் நண்பர்களை அறிமுகம் செய்தால் நகரம் 


கொள்ளியில் அடுப்பெரித்தால் கிராமம்

காஷில் அடுப்பெரிந்தால் நகரம்


சாப்பாட்டைக் கொட்டினால் அது நகரம்

சாப்பாட்டை கட்டினால் அது கிராமம்


அடைத்த மீனை உண்டால் நகரம்

ஆத்து மீனை உண்டால் அது கிராமம்!

நான் நகரத்து வளர்ச்சியை நய்யாண்டி பண்ணவில்லை கெடுதல் தரும் நிலையற்ற வளர்ச்சியைத்தான் குறை கூறுகின்றேன். கிராமம் சொர்க்கம்தான் ஆனால் அதை தந்திரமாக சுரண்டி மக்களுக்கு தெரியாமலேயே மலடாக்கி விடுகின்றனர் நகரத்தார்.

0 comments:

Post a Comment