ADS 468x60

19 October 2024

எதுடா தேசியம்? மக்களை ஏமாற்றுவதா!

இன்று எமது மக்களுக்கு என்ன நடந்துள்ளது? ஒன்றும் நடக்கவில்லை! ஐந்தைந்து வருடத்துக்கு ஒருதடவை வந்து வந்து அஞ்சி சதத்துக்கும் பெறுமதி இல்லாத வேலைகளைளே மக்களுக்கு செய்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு நன்மை பயக்கும் எல்லாவற்றினையும் செய்துள்ளனர்.

மண்னைக் கொள்ளையடித்தனர், மரத்தைக் கொள்ளையடித்தனர், வார் மற்றும் வாகனப் பேமிற்றுக்களை பெற்றுக்கொண்ளைடர். அபிவிருத்தி என்றுசொல்லி அளந்தளந்து கொமிசன் பெற்றனர், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கோடி கோடியாய் வியாபாரம் ஆரம்பித்தனர். அவர்கள் நல்லாத்தான் இருக்கின்றனர்.
அதுமாத்திரமா, சிலர் வெறும் கோசமும், வேசமும், ஆர்பாட்டங்களும், ஆக்கிரோசங்களும் செய்வது மக்களை எப்படி வளர்துவிடும்? இது தேசியத்தின் சொத்தான மக்களை எப்படி வலுவூட்டும்?
அடேயப்பா, நம்மட ஆசிரியர்களும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் வாராந்த மாதாந்த ஏன் வருடாந்த திட்ட அறிக்கைகளை சமர்பிக்கவேண்டும், அதன் பின்னர் அதன் முன்னேற்ற அறிக்கை தயாரித்துக் கொடுக்கவேண்டும். அப்படியெல்லாம் செய்தால்தான் அவர்களுக்கு சம்பளமும் புரமோசனும் கிடைக்கும் இல்லையா?
ஆனால் இந்தப்பெரிய மக்கள் பிரதிநிதிகளாக நியமிக்கின்ற நீங்கள் இதில் எதையாவது கேட்டதுண்டா? இல்லை. பிறகு எப்படி உங்களுக்கு பயன்கிடைக்கும்.
அதுசரி நமக்கு அரப்போத்தல் சாராயமும், அரிசி பருப்பும் தந்தால் கோடி ரூபாப் பெறுமதியான வாக்கை கேடி என்றாலும் கொடுக்கும் நம்மளப்போல ஆக்கள் இருந்தா அவனவன் 2, 3 ஏன் நாலு கோடியும் செலவளிப்பான்.
கஸ்டத்தின் மத்தியில் பணிப்பெண்களாக திறனற்ற ஊழியர்களாக அதிகம் செல்லும் மாவட்டம் நம்ம மாவட்டம். அதனால் பல சமுக பொருளாதார சீர்கேடுகள் தலை தூக்கியுள்ளது!, மனித உரிமை மீறல்கள், வதைகள், அகௌரவமாக நடாத்தல் போன்ற கொடுமைகளையும், பாடசாலை இடைவிலகள், இளவயதுத் திருமணங்கள், சிறுவர்களின் பிறழ்வான நடத்தைகள் என்பன இதன் விளைவுகளாகக் கிடைத்துள்ளன.
சொல்ல முடியுமா எத்தனை பெண் மற்றும் இளைஞர்கள் கௌரவமாக வெளிநாடுகளில் திறனுடன் கௌரவமாகப் பணிபுரிய திறன் அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுத்தனர்? எந்தப் பயிற்சிகளை யாருடன் சேர்ந்து வழங்கியுள்ளனர்? எவ்வளவு வீதமான திறனுள்ள தொழிலாளர்களை இவர்கள் இதுவரை அனுப்பியுள்ளனர்?
இன்று வறுமை அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனால் கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் என்பனவற்றில் பின்னடைந்து காணப்படுகின்றர். யாராவது சொல்ல முடியுமாஎத்தனை வீத வறுமையை இவர்கள் மட்டக்களப்பு மக்களிடையே குறைவடையச் செய்துள்ளனர் என?
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, கொமன் வெல்த் நாடுகள், பன்நாட்டு தூதுவராலயங்கள், பல்கலைக்கழகங்கள் கலாநிதி, முதுமானிப் பட்டப்படிப்புக்களை எம்போன்ற அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளுக்கு வழங்குகின்றன.
ஆனால் எத்தனை பேருக்கு இவற்றைப் பெற்றுக்கொடுக்க உதவினர். நாம் இன்னும் மீன்பிடி மற்றும் விவசாயம் என்பனவற்றில் பாரம்பரிய ரீதியாக உற்பத்திகளை தொடர, அவற்றை ஏன் முன்னேற்ற இவர்களை உருவாக்க முடியவில்லை? நீங்கள் படிக்காததினாலா? இல்லை அது எதற்கு என்பதனாலா?
இன்னும் அரிசி, மீன், முட்டை, இறைச்சி என்பன அதிகம் விளையும் எமது மாவட்டத்துக்கே உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து டொன் கணக்கில் இறக்கி இறக்கி மில்லியன் கணக்கான பணத்தினை பிறருக்கு உழைத்துக்கொடுக்கின்றோமே, இதுவரை அவற்றை நிறுத்தி அவற்றை நாமே உற்பத்தி செய்து பிற மாவட்டங்களுக்கும் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய நீங்கள் முன்னெடுத்த நடவடிக்கைகள் என்ன?
உங்களுடைய சொந்தக்காரரையும், தெரிந்தவரையும், தராதரம் குறைந்தவர்களையும், கல்வி, நிர்வாக, விவசாய துறைகளில் கொண்டுவந்து கொண்டுவந்து உண்மையான சேவகர்களை புறக்கணித்து மக்களுக்கு அன்றி உங்களுக்கான சேவையினைப் பெற்றுக்கொண்டு அவர்களும் நல்லா கொள்ளையடித்ததைத் தவிர மக்கள் நலனுக்கான உத்தியோகத்தர்களை நீங்கள் நேர்மையாக எப்போதாவது நிறுத்தியதுண்டா?
வெ.நாட்டு முதலீடுகள், தொழில் நுட்பங்களை ஈர்க்க நீங்கள் எந்த மாநாட்டினை, சர்வதேச பேரங்களை ஏற்பாடு செய்து ஏதாவது பக்றிகளைக் கொண்டுவர முயற்சியாவது செய்ததுண்டா?
தமிழ் மொழிக்கான இலக்கிய ஊக்குவிப்புக்களை, பிராந்திய தமிழ்ச் சங்கங்களை, தமிழ் நூதனசாலைகளை, ஆவணப்படுத்தல்களை எப்போவாவது செய்யவேண்டிச் சிந்ததுண்டா?
இல்லை இல்லை என்றே எல்லாத்துக்கும் பதில் வரும். இல்லாவிட்டால் என்ன மண்ணாங்கட்டிக்குத் தேசியம் கதைக்கிறீங்க! வேறேதாவது பேசி வாக்குச் சேகரிங்க!
இன்னும் 5 வருடம் கொடுங்கள் மக்களும் இல்லை மண்ணும் இல்லை என்ற நிலைதான் நமக்கு. சிந்தித்து நல்ல முடிவை எடுங்கள். கட்சி பார்க்க வேண்டாம் நல்ல மனிதர்களைப் பாருங்கள். உங்களை ஏமாற்ற எதை வேண்டுமானாலும் செய்வர் உஷார்

0 comments:

Post a Comment