ஒரு தேர்தலில் போட்டியிடும் தம்பி ஒருத்தர் என்னிடம் சொன்னார் 'அண்ணன் நம்மட்ட பணம் ஒன்றும் கிடையாது குணம் மட்டும்தான் உள்ளது, கிடைத்தால் தரமான சேவை செய்வேன்' ஆனால் இன்று ஒவ்வொரு வேட்பாளரும் பணத்தை வீசி செலவு செய்வதால், பத்து பதினைந்து கோடி இல்லாமல், மாவட்டத்தில் வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பே இல்லாமல் போய்விடுகிறது போல.
இந்த வகையில் ஜனநாயகம் என்பது வாக்கு மூலம் உருவாக்கப்படுவதில்லை. முதலீட்டு ஊக்குவிப்பாளர்களினாலே தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 5 வருடமும் அவர்களின் தலையாட்டி பொம்மைகளாக மாறுகின்றனர்.
இதை முடிவுக்குக்கொண்டுவர, 2023 ஆம் ஆண்டின் தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டம் எண். 3 இயற்றப்பட்டது. இது பிரச்சார நடவடிக்கைகளுக்கு நிதி வரம்புகளை விதித்துள்ளது. அரசாங்க நிறுவனங்கள், வெளிநாட்டு அரசாங்கங்கள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள், இலங்கைக்கு வெளியில் இணைக்கப்பட்ட அல்லது பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள், மற்றும் அடையாளம் காணப்படாத எந்தவொரு நபரின் பண அல்லது நன்கொடைகள் போன்ற் பங்களிப்புகளை சட்டம் தடை செய்கிறது. ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு வேட்பாளருக்கு செய்யக்கூடிய செலவு தேர்தலுக்கு தேர்தல் தீர்மானிக்கப்படுகிறது. இந்த தேர்தலுக்கான செலவு வரம்பை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இருப்பினும், பல வேட்பாளர்கள் சட்ட ஓட்டை வழியாக நழுவுகிறார்கள். இங்கு ஜனநாயக உரிமையை வாக்காளர்களே எடுக்க வேண்டும். மறுபுறம், அத்தகைய கட்டுப்பாடுகளைப் பின்பற்றாத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்பதனையும் நினைவில் கொள்ளுங்கள்.
தேர்தல் சுதந்திரமாக இருக்கவேண்டும். அதன் நோக்கம் ஜனநாயகத்தை உருவகப்படுத்துவதே தவிர, பணம் அல்லது அதிகாரத்தின் திறனை அபகரிப்பது அல்ல. தற்போது சட்டக் கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அதற்கேற்ப செயலில் ஈடுபடுவது வேட்பாளர்களின் பொறுப்பாகும்.
0 comments:
Post a Comment