நன்றாக விடிந்து விட்டது, பரபரப்பாக தொலைபேசி உரையாடல்கள், ஒழுங்குபடுத்தல்கள், இதனிடையே பொருட்களெல்லாம் இரவிரவாய் பக் பண்ணி காலையில் கடகட என ஏத்தி எடுத்தாச்சி. பூலாக்காடு நோக்கி புறப்படலானோம் . அது ஒரு நிவாரண யாத்திரை, நீண்ட யாத்திரை. வல்லவனின் வாகனம் வளைந்து நெழிந்து ஒரு மாதிரி கிரான் சந்தியை கிட்ட நெருங்கியது, அதன் பின்னர் புலிபாய்ந்தகல்லை நோக்கி போகத்துவங்கியது. ஆனால் அந்தப்பாதையை குறுக்கறுத்துக் குழிதோண்டி பீறிட்டுக்கொண்டிருந்தது வெள்ளம். அச்சத்தில் அசைந்து அசைந்து பெரிய லோட்டோடு ஒரு மாதிரியாய் பூலாக்காடு போகும் பாதையை அண்மித்தோம்.
பூலாக்காடு என்பது பக்கத்தில் உள்ள கிராமம் அல்ல, அது மிகத் தொலைவில் தனித்தீவுகளாக அமைந்துள்ள, 280 குடும்பங்களைக் கொண்ட பல சிறிய சிறிய குக்கிராமங்களைக்கொண்ட கிராம சேவகர் பிரிவாகும். இது கிட்டத்தட்ட கிரான் பிரதான வீதியில் இருந்து 20 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது. இங்கு வயல், காடு, குளம், ஆறு மற்றும் காட்டுவிலங்குகளின் அச்சுறுத்தல் என அனைத்தையும் கடந்தே செல்லவேண்டும்.
இந்த இடங்களுக்கு முதல் முதலாக பலர் எம்முடன் இணைந்து அந்தக்கிராமத்துக்கு இப்பணிக்காக வருகின்றார்கள். குறிப்பாக பேராசிரியரும் பன்நெடுங்காலமாக சமுக சேவையில் எம்முடன் இணைந்து பணியாற்றும் பேராசிரியர் ஜெயப்பிரபா, விரிவுரையாளர் ஜெசாந்தினி, மற்றும பெண்கள் லயன்ஸ்கிளப் தலைவர் உட்பட இன்னும் பலர் ஒன்றிணைந்து சென்றோம்.
நான் ஒருதடவை ஏற்கனவே சென்றிருந்தேன். ஆனாலும் பாதையை பார்க்க பார்க்க பயம் தொற்றியது. பரவாயில்லை. எங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் 280 குடும்பங்களை நினைத்துக்கொண்டு சிரமத்தை தூக்கி சீலையில் முடிந்துகொண்டோம். ஆனால் அந்தச் சிறிய பாதையில் பெரிய மாட்டுப்பட்டி விலகாமல் சென்றுகொண்டிருந்தது. மெதுவாக நாம் செல்ல முற்பட்டதும் ஒரு மாடு வசமாய் வானை முட்டி வளைத்துவிட்டது. உயிர்தப்பினோம்.
இருந்தும் எம்மினத்தின் இதயத்தை ஈரமாக்க அந்தப்பயணம் ஆத்மார்தமாக இருந்தது. ஒரு மாதிரியாயாக முதலில் அம்புஸ்குடாவை அண்மித்து நிவாரணப்பணியை ஆரம்பித்தோம். ஊருக்குள் வாகனம் செலுத்த முடியாத நிலை, வாகனத்தை நோக்கி 'கோழிக் குஞ்சுகள் தாயை நோக்கி பறந்து வருவதுபோல' எம்மைக் கண்ட ஆனந்தத்தில் அந்த மக்கள் விரைந்தோடி வந்தனர். எமக்கும் அது அகமகிழ்வைத் தந்தது.
உண்மையில் இத்திட்டத்திற்கான நிதியினை கனடாவை வசிப்பிடமாகக் கொண்ட தேற்றாத்தீவினைப் பிறப்பிடமாகக்கொண்ட இரா மகேந்திரன் அண்ணா அவர்கள் நாம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, மறுப்புத் தெரிவிக்கவி;லை வேலையைப்பாருங்கள் என அன்புக்கட்டளையிட, நாங்கள் வெள்ள அனர்த்த முகாமைதத்துக்குப் பொறுப்பான திருமதி நவரூபரஞ்சனி அவர்களின் வழிகாட்டலில் இத்திட்டம் உதவி சென்றடையாத மக்களுக்கு உலருணவாகச் சேர்க்கப்பட்டது. இதில் மட்டக்களப்பு பெண்களின் லயன் அமைப்பினருடைய உதவியும் சேர்ந்து பெரிய அளவில் இதனை கொண்டு கையளித்தோம்.
இத்தி-ட்டத்தில் மிக அத்தியாவசியமான ஒவ்வொருவருக்கும் தேவையான அரிசி, பருப்பு, பால்மா, டின்மீன், சமபோசா, உப்பு, தேயிலை, இன்னோரன்ன அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பொதி அவர்களிடம் சேர்க்கப்பட்டது.
'உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும் ஐயா, நீங்கள் பாத்திருப்பீர்கள் இந்தப்பாதையில் ஒரு வருத்தம் வாத வந்த ஆனக்காட்டுக்குள்ள, ஒடஞ்ச றோட்டில இருட்டு மண்டிக்கிடக்கும் பயங்கரமான ஒரு பாதையில எப்படி ஒரு பிரயாணம் வைக்கிற, இதுக்குள்ள திடீர் என வெள்ளம் ராவோட ராவா வந்தால், என்ன பண்ணலாம் என்று சொல்லுங்களன்? கதிரையிலயும் மேசயிலயும், மரத்திலயும், கூரையிலயும் குந்திட்டு இருந்ததான். அதுக்குள்ள எங்கட குஞ்சு குரானுகளையும், வருத்தக்கார பொண்டுகளையும் நாங்க காப்பாத்தப்பட்ட பாடு ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் மெனே! பொறகு விடியத்தான் வோட்டக்கொண்டுவந்து கொஞ்சம் கொஞ்சமா வெட்டக்கிறப்பினாங்க' என்று அங்கு வந்த ஒரு ஐயா நிலைமையை வபரித்தார்.
அங்கு இலகுவில் சென்று எந்த உதவியும் செய்வதற்கு முடியாத உட்கட்டமைப்பு வசதிக்குறைவான ஒரு பிரதேசம். அதபோல அங்குள்ளவர்கள் அன்றாடம் செய்யும் கூலித்தொழிலினை இழந்துள்ளனர். வருமானத்துக்கு வழியில்லாமல் உதவ வருவோரை பார்த்த மக்கள் எம்மிடம் இருந்தே முதல் உதவியினைப் பெற்றுக்கொண்டனராம். பிரம்படித்தீவு, அம்புஸ்மேடு, பூலாக்காடு கிராமங்களில் மாத்திரட் 40 தற்காலிகக் கூடாரம் தேவைப்படுகின்றது என அங்குள்ள ஆர்டிஎஸ் தலைவர் தெரிவித்தார்.
அம்புஸ்குடா நிவாரணப்பயணத்தினை முடித்துக்கொண்டு எமது யாத்திரை பிரம்படித்தீவு நோக்கிக் கிழம்பியது. அங்கு ஒரு தொகை மக்கள் கூட்டம் எம்மை வரவேற்றனர். இதுதான் இங்குள்ள கிராமங்களுள் மேட்டுப்பகுதி. இருந்தாலும் இக்கிராமமும் முற்றாக நீரில் மூழ்கி, அவர்களது வாழ்வாதாரங்களான முறையே, ஆடு, மாடு, கோழி, பயிர்ச்செய்கை என்ற எல்லாவற்றினையும் அழித்துவிட்து என்றும் பலர் இன்னும் நோய்வாய்ப்பட்டு மனரீதியான உழசை;சலுக்குள் உள்ளாகி உள்ளனர் எனவும் இவர்கள் கூறினர்.
'எம்மிடம் ஒரே ஒரு இயந்திரப்படகு உள்ளது. அதன் மூலம்தான் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன. சிறிய வெள்ளத்துக்கும் நாம் கிண்ணயடிக்குச் செல்லும் பாதை வெள்ளத்தால் தாழ்வதனால் எமக்கு அது அடிக்கடி தேவைப்படும். அதுபோல இன்னும் ஒரு இயந்திரப்படகு மேலதிகமாக இருக்குமாயின் எமக்கு அது போதுமானது. அதுபோல எமது களி, மற்றும் கிடுகுமட்டைகளால் கட்டப்பட்ட வீடுகள் முற்றாகச் சேதமாகியுள்ளன அவர்களுக்காக எமக்கு 40 ரென்ட் இருக்குமாயின் தற்காலிகமாக அவர்களை ஓரளவு சரி செய்யலாம்' என்றும் இழப்புக்களை முன்னுரிமைப்படுத்திக் கூறினார் தலைவர் அவர்கள்.
இங்குள்ள மக்களை ஆற்றுப்படுத்தும் தைரியத்தை வரவைக்க என்னால் இயன்றதனை அவர்களுக்கு கூறிவிட்டு மகிழ்சியாக கொண்டு சென்ற பொதிகளை கையளித்து, எமது மக்களின் கவலைக்கிடமான நிலையைக் கண்டு கண்கலங்கித் திரும்பினோம்.
நீங்கள் உதவி செய்ய வேண்டுமென நினைத்தால் இவ்வாறான எல்லைக்கிராமத்து எம்மக்களுக்கு உதவுங்கள். அது எம்மை எக்காலமுல் ஆசிர்வதிக்கும். அந்த ஆசிர்வாதத்தினை கண்ணீர்ப் பூக்களால் நன்றியுணர்வுடன் காணிக்கையாக்க அது எமது மகேந்திரன் அண்ணன் மற்றும் இதில் பங்குபற்றிய அனைவருக்கும் தெரிவித்தமையில் உளமகிழ்ந்து திரும்பினோம்.
இங்கு பிரதேச செயலாளர், கிராமசேவகர், வெள்ள ஒருங்கிணைப்பு அதிகாரி, லயன்கிளப் மற்றும் பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் இப்பெறுமதிமிக்க பணியை சீராகச் செய்ய உதவியமைக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றோம்.
நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்,
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்,
அதுவுமற்றோர் வாய்ச் சொல் அருளீர்,
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்.
மகாகவி பாரதியின் சொற்கள் உணர்த்துவதை போல, அவரவரால் இயன்ற ஆற்றலை சமூகத்திற்கு நல்கிட வேண்டும் உறவுகளே.
0 comments:
Post a Comment