இவ்வாண்டு நிகழ்வு, முதலாவது தேசிய செயற்கை நுண்ணறிவுக் கண்காட்சி மற்றும் மாநாட்டிலிருந்து ஒரு பாய்ச்சலாக அமைந்தது. டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, SLT-MOBITEL நிறுவனத்துடன் இணைந்து இதனை ஏற்பாடு செய்தது. கொள்கை வகுப்பாளர்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், வணிகங்கள், ஆய்வாளர்கள், புத்தாக்க நிறுவனங்கள் (startups), பல்கலைக்கழகங்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பல தரப்பினர் பங்கேற்றனர். கொள்கை, வணிகம், தொழில்நுட்பம், ஆய்வு, உட்கட்டமைப்பு, சமூக மற்றும் பொதுத்துறை ஆகிய அனைத்திலும் முறைமை சார்ந்த மாற்றங்களை ஏற்படுத்தும் புதிய சிந்தனைகள் இலங்கைக்குத் தேவை. பொருளாதாரத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் புதிய தொழில்துறை மாற்றங்களும் ஒருங்கிணைப்புகளும் நிகழ்ந்தால்தான் AI-யை ஏற்றுக்கொள்ளும் அமைப்பாக நாடு தன்னை மீள்நிலைப்படுத்த முடியும்.
படம் 2: AI சூழலமைப்பு – எவர் என்ன செய்ய வேண்டும்?
கண்காட்சியில் பங்கேற்ற சர்வதேச நிறுவனங்களால் பிற சந்தைகளில்
ஏற்கனவே கிடைக்கும் தீர்வுகளை அறிய முடிந்தது.
ஹுவாவே (Huawei), இசட்டிஈ (ZTE) ஆகிய நிறுவனங்கள் சீனச் சந்தை உள்ளிட்ட பிற சந்தைகளின் அனுபவத்தின் அடிப்படையில்
தொலைத்தொடர்பு, ஸ்மார்ட் நகரங்களில் AI பயன்பாடுகளைக் காட்சிப்படுத்தின. செயற்கை நுண்ணறிவில்
இலங்கை சக்கரத்தை மீண்டும் கண்டுபிடிக்கத் தேவையில்லை என்பதை இவை உணர்த்துகின்றன.
AI, கிளவுட் (Cloud), விளிம்புக் கணினி
(Edge computing) ஆகியவற்றில் உலகத் தொழில்துறை பெருமளவு முதலீடு செய்துள்ளது.
உலகளாவிய தொழில்நுட்பம், இலங்கையின் திறமையாளர்கள்,
சர்வதேசச் சந்தைகள் ஆகிய மூன்றும் நாட்டின் சாதகமான அம்சங்களாகும்.
ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட தொழில்நுட்பங்களை அறிந்து, அவற்றை உள்ளூர்த் தேவைகளுக்கேற்ப மாற்றியமைப்பது காலத்தையும் செலவையும் சேமிக்கும்.
இங்கு முதலாவது எதிர்க் கருத்து, இறைமையைக் காக்க நாடு சொந்தமாகப் பெரிய
AI மாதிரியை உருவாக்க வேண்டும் என்பதாகும். ஜனாதிபதியின்
டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான பிரதம ஆலோசகரும் கவர்மெந்ட்டெக் இலங்கையின்
(GovTech Sri Lanka) தலைவருமான கலாநிதி ஹன்ஸ் விஜயசூரிய முன்வைத்த கேள்வி
இதற்கு நடைமுறைச் சார்ந்த பதிலைத் தருகிறது: இலங்கை எதை உருவாக்க
வேண்டும், வாங்க வேண்டும், வாடகைக்குப்
பெற வேண்டும், பகிர வேண்டும், பாதுகாக்க
வேண்டும்? இறைமை என்பது அனைத்துத் தொழில்நுட்பங்களையும் எல்லைக்குள்
உருவாக்குவதல்ல; எவற்றைச் சார்ந்திருப்பது, எந்தத் திறன்களைத் தாமே வளர்ப்பது, எந்தத் தரவைப் பாதுகாப்பது,
எந்தத் தேசிய நலன்களை வெளியாருக்கு விட முடியாது என்பதைத் தீர்மானிக்கும்
மூலோபாயத் தெரிவாகும். உலகின் மிகப்பெரிய நிறுவனங்களுடன் பொது
நோக்க மாபெரும் மாதிரியில் போட்டியிடுவது, வளங்கள் குறைந்த நாடொன்றுக்கு
விவேகமான செலவாகாது. நாட்டின் நிபுணர்கள் நன்கறிந்த குறிப்பிட்ட
துறைகளில் AI முறைமைகளை உருவாக்குவதே பொருத்தமானது.
இரண்டாவது கருத்து, வெளிநாட்டு நிறுவனங்களின் தொழில்நுட்பத்தைச் சார்வது தேசிய நலனுக்கு ஆபத்து
என்பதாகும். சார்புநிலை குறித்த அக்கறை நியாயமானதே. ஆனால் எவ்வகைத் தொழில்நுட்பத்தைச் சார்வது, எதைத் தாமே
வளர்ப்பது, எத்தரவு நாட்டுக்குள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பவற்றைத்
தெளிவாக வரையறுப்பதன் மூலமே அந்த ஆபத்தை முகாமை செய்ய முடியும். உலகளாவிய உட்கட்டமைப்பை உள்நாட்டுப் பயன்பாடுகளுக்கான துணைக்கருவியாகப் பயன்படுத்தும்
அணுகுமுறை, ஒவ்வொரு கூறையும் தனியாக உருவாக்கும் முயற்சியைவிடச்
செலவுத் திறன் மிக்கது; அதேவேளை தரவுப் பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பு (cybersecurity) ஆகியன நாட்டின் கட்டுப்பாட்டில்
இருக்க வேண்டும். தரவு ஆளுகைக் கட்டமைப்பு, ஒப்பந்தங்களில் தரவு உரிமை தொடர்பான தெளிவான நிபந்தனைகள், மாற்று வழங்குநர்களுக்கு மாறும் வாய்ப்பு ஆகியன சார்புநிலையின் அபாயத்தைக்
குறைக்கும் நடைமுறை வழிகளாகும்.
மூன்றாவது கருத்து, AI என்பது நகர்ப்புற, ஆங்கிலம் பேசும் உயர்தட்டினருக்கான
ஆடம்பரம் என்பதாகும். ஆங்கிலம் பேசும் மக்களுக்காக மட்டும் வடிவமைக்கப்பட்ட
முறைமை நாட்டின் ஏற்றத்தாழ்வை மேலும் அதிகரிக்கக்கூடும் என்பது உண்மையே. ஆகவே இலக்கு சமத்துவமாக இருக்க வேண்டும். சிங்களம்,
தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் இயங்கும்
தீர்வுகள் வடக்கு, கிழக்கு உட்பட அனைத்துப் பிரதேசங்களின் விவசாயிகளுக்கும்
மாணவர்களுக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் நேரடிப் பயனளிக்க வேண்டும். நான்காவது கருத்து, அரச தொலைத்தொடர்பு நிறுவனம் இத்தகைய
முயற்சிகளுக்குத் தலைமை தாங்குவது பொருத்தமா என்பதாகும். திறன்,
வெளிப்படைத்தன்மை குறித்த இக்கேள்விகள் முறையானவை. ஆயினும் கொள்கைத் திசை அரசிடமும், அறிவும் திறமையாளர்களும்
பல்கலைக்கழகங்களிடமும், உட்கட்டமைப்பும் நிபுணத்துவமும் உலகளாவிய
நிறுவனங்களிடமும், உண்மையான பிரச்சினைகளும் முதலீடும் வணிகங்களிடமும்,
புத்தாக்கம் புத்தாக்க நிறுவனங்களிடமும் இருக்கவேண்டியிருப்பதால்,
தேசிய உட்கட்டமைப்புக்குரிய பங்கு இவற்றை இணைப்பதே; அது வெளிப்படையான முகாமைத்துவத்தின் கீழ் இயங்குவதை உறுதிசெய்வதே பொருத்தம்.
இந்த விவாதங்களின் அடிப்படையில், செயற்கை நுண்ணறிவில் இலங்கையின் இலக்கு மிகப்பெரிய மாதிரியை உருவாக்குவதல்ல; அதனைப் பயன்படுத்தி உள்ளூர் வணிகங்களையும் பொருளாதார
மதிப்பையும் உருவாக்கும் சூழலமைப்பை (ecosystem) கட்டியெழுப்புவதே. விவசாயத்தில், விவசாயி
தமிழிலோ சிங்களத்திலோ குரல் மூலம் பயிர்ப் பிரச்சினையை விவரித்து, நோயுற்ற தாவரத்தின் படத்தைப் பதிவேற்றினால், வானிலை,
மண் நிலை, விவசாய நடைமுறைகள், சந்தை விலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தீர்வு வழங்கும் உதவியாளரை உருவாக்க
முடியும்; அது விவசாயிகளை வங்கிச் சேவைகளுடனும் இணைக்கலாம்.
கல்வியில், நாட்டின் கல்வி முறைக்கேற்ப மாணவர்
அடுத்து கற்க வேண்டியதைப் பரிந்துரைக்கும், பயிற்சி வினாக்களை
உருவாக்கும், ஆசிரியர்களுக்கு உதவும் AI ஆசிரியரை மும்மொழிகளிலும் வழங்க முடியும்.
சுகாதாரத்தில், மருத்துவர்களுக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் சில பணிகளில் உதவவும்,
நோயறிதல் ஆதரவு வழங்கவும், அடுத்த படிநிலைகளைப்
பரிந்துரைக்கவும் AI துணைபுரியும். சுற்றுலாத்துறையில்
ஹோட்டல் முன்பதிவு, போக்குவரத்து போன்ற சேவைகளை மக்களுடன் இணைக்க
முடியும். அரச சேவைகளில் வணிக உரிமங்கள் தொடர்பான தகவல்களை மக்கள்
எளிதில் பெறுவது போன்ற மேம்பாடுகள் சாத்தியம். குறுங்காலத்தில்
ஏற்றுமதிப் பொருளாதாரத்துக்கு உற்பத்தித்துறையே மிகுந்த வாய்ப்புகளை வழங்குகிறது.
ஆடை, இறப்பர், உணவு,
தேயிலை போன்ற ஏற்றுமதித் தொழில்களில் செயற்பாட்டுத் தரவையும்
AI-யையும் இணைத்தால் தரம், பராமரிப்பு,
செயற்றிறன் சவால்களைக் கையாளலாம்; செலவும் விரயமும்
குறையும். நாடு முழுவதும் உள்ளூர்த் தொழில்துறைக்குச் சேவை வழங்கும்
தேசிய தொலைத்தொடர்பு வழங்குநர், டிஜிட்டல் ஒருங்கிணைந்த முறைமைகளின்
அடிப்படையில் AI சேவைகளைத் தமது உற்பத்திகளில் இணைக்கும் வாய்ப்பைக்
கொண்டுள்ளார்.
பயன்பாட்டுடன் நின்றுவிடாமல் ஏற்றுமதியை நோக்கிச் செல்ல முடிவதே
இலங்கையின் சூழலில் மிகவும் கவர்ச்சிகரமான அம்சம்.
நாட்டில் பொறியாளர்கள், பல்கலைக்கழகங்கள்,
ஏற்றுமதித் தொழில்கள், டிஜிட்டல் தொழில் முனைவோர்
உள்ளனர். உலகளாவிய AI தளங்களை இலங்கையின்
பொறியியல் திறனுடனும் தொடர்புடைய தொழில்களுடனும் இணைத்தால், இலங்கையில்
வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகளை உலகெங்கும் விற்க முடியும். ஆடை,
சுற்றுலா, சுகாதாரம், கல்வி,
விவசாயம், நிதிச் சேவைகள், வணிகச் செயல்முறை வெளிக்கொடுப்பு (BPO) போன்ற துறைகளுக்கான
தீர்வுகள் இதில் அடங்கும். வருங்காலத்தில் இலங்கை நிறுவனங்கள்
உழைப்பையும் மென்பொருள் சேவைகளையும் மட்டுமன்றி, தமது அறிவுசார்
சொத்தையும் (intellectual property) உலகுக்கு விற்கும் நிலை உருவாகலாம்.
உள்ளூர்ச் சூழலமைப்பு தொழில்துறைச் சூழலையும் பொருத்தப்பாட்டையும் வழங்க,
உலகளாவிய தளங்கள் தொழில்நுட்பத்தையும் நிபுணத்துவத்தையும் வழங்கும்.
இதனை அடைவதற்கு, கிளவுட் கணினி, தரவு ஆளுகை (data
governance), இணைப்புத்திறன், திறன்கள்,
ஆய்வு, இணையப் பாதுகாப்பு, முதலீடு ஆகிய அடிப்படைக் கூறுகள் வலுப்பெற வேண்டும். வடக்கு, கிழக்கு உட்பட ஒவ்வொரு மாகாணத்திலும் பல்கலைக்கழகங்களை
மையமாகக் கொண்ட பிராந்திய புத்தாக்க மையங்கள் அமைக்கப்பட்டு, உள்ளூர் விவசாயம், மீன்பிடி, சிறு
வணிகம் போன்றவற்றின் உண்மையான பிரச்சினைகளுக்கான AI முன்னோடித்
திட்டங்கள் (pilot projects) முன்னெடுக்கப்படலாம். இத்திட்டங்கள் அளவிடக்கூடிய பயன் குறிகாட்டிகளுடன் அமுல்படுத்தல் செய்யப்பட்டு,
வெற்றி பெற்றவை தேசிய மட்டத்துக்கு விரிவாக்கப்பட வேண்டும். இவ்வாறு ஒரே தரப்பால் இதனைச் சாதிக்க முடியாது என்பதால், கொள்கைத் திசையை அரசும், அறிவையும் திறமையாளர்களையும்
பல்கலைக்கழகங்களும், நிபுணத்துவத்தையும் உட்கட்டமைப்பையும் உலகளாவிய
நிறுவனங்களும், உண்மையான பிரச்சினைகளையும் முதலீட்டையும் வணிகங்களும்,
புதிய தீர்வுகளைப் புத்தாக்க நிறுவனங்களும் வழங்க, தேசிய டிஜிட்டல் உட்கட்டமைப்பு அனைவரையும் இணைக்க வேண்டும். இவற்றின் அடித்தளம் திறன் மேம்பாடாகும். பாடசாலை மட்டத்திலிருந்தே
AI அறிமுகம் விரிவாக்கப்பட்டு, பல்கலைக்கழகங்களும்
தொழிற்பயிற்சி நிறுவனங்களும் தொழில்துறைத் தேவைகளுக்கேற்ற பாடநெறிகளை வடிவமைக்க வேண்டும்.
இவ்வாறு உருவாகும் திறமையாளர்களுக்கு உள்நாட்டிலேயே மதிப்புமிக்க தொழில்வாய்ப்புகளை
உருவாக்குவதும் முக்கியம். முன்னோடித் திட்டங்களின் முடிவுகள்
வெளிப்படையாகப் பகிரப்படுவது முதலீட்டாளர்களினதும் பொதுமக்களினதும் நம்பிக்கையை வலுப்படுத்தும்.
கண்காட்சியில் பாடசாலை மாணவர்கள் காட்டிய ஆர்வம் இதனையே வலியுறுத்துகிறது. அவர்கள் AI இறைமை,
கிளவுட் கட்டமைப்பு, பெரிய மொழி மாதிரிகள் பற்றி
விவாதிக்க வரவில்லை; எதிர்காலத்தை அறியும் ஆர்வத்துடன் வந்தனர்.
அந்த எதிர்காலம் இப்போதே உருவாகிறது. சிறந்த
AI ஏற்கனவே உலகின் பிற இடங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கை அவற்றிலிருந்து கற்று, தனக்குரிய பயன்பாடுகளையும் அறிவுசார் சொத்துகளையும்
வணிகங்களையும் கட்டியெழுப்ப வேண்டும்.
எதை உருவாக்குவது, எதை ஏற்றுக்கொள்வது,
எதைப் பாதுகாப்பது என்ற தெரிவுகளை இன்று தெளிவுடன் செய்யும் நாடே நாளைய
AI பொருளாதாரத்தில் பயனாளியாக மட்டுமன்றிப் படைப்பாளியாகவும் நிற்கும்.



0 comments:
Post a Comment