மேக் ஐவர் மற்றும் லாஸ்கி ஆகியோர் கூற்றுப்படி, சுதந்திரம் பலவகைப்பட்டது.
• இயற்கை சுதந்திரம்
• சமூக சுதந்திரம்.
இயற்கை சுதந்திரம்
ஒரு மனிதன் தான் விரும்புபவற்றை செய்ய, நிலவும் குறுக்கீடுகளற்ற கட்டுப்பாடுகளற்ற சுதந்திரம் இயற்கை சுதந்திரமாகும். இயற்கை சுதந்திரம் என்பதை ஒர் அரசின் கீழ் மக்களுக்கு அளித்தல் இயலாது; ஏனெனில் இவ்வகை சுதந்திரம் முற்றிலும் கட்டுப்பாடற்றதாகும்; இவ்வகையில் அரசு அனுமதித்தால் நாட்டின் குழப்பமும், சட்டமின்மையும் தான் எஞ்சி நிற்கும். இயற்கை சுதந்திரம் எல்லைகளை கடந்து இருப்பதால் அது சுதந்திர நிலைக்கே எதிரானது.
சமூக சுதந்திரம்.
சமூக அமைப்பில் அங்கம் வகிக்கும் மனிதன் அவன் வாழ்க்கையில் பெறும் சுதந்திரம், சமூக சுதந்திரத்தைக் குறிக்கிறது. இது, பொதுநலன் கருதி விதிக்கப்பட்டுள்ள கட்டுப் பாடுகளுக்கு உட்பட்டு அவன் விரும்பியதை செய்யலாம் என்பதாகும். சமுதாயம் ஏற்றுக் கொண்டிருக்கும் கடமைகள், உரிமைகள் மற்றும் சலுகைகளை அரசும் ஏற்றுக் கொண்டு அவைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது. சமூக சுதந்திரம் பின்வருமாறு பிரிக்கப்பட்டிருக்கிறது.
• தனிமனித சுதந்திரம்
• அரசியல் சுதந்திரம்
• வீட்டு சுதந்திரம்
• தேசிய சுதந்திரம்
• சர்வதேச சுதந்திரம்
• பொருளாதார சுதந்திரம்
• தார்மீக சுதந்திரம்
அந்தவகையில் எமது இலங்கை 1948 ஆம் ஆண்டு முதல் சுயராஜ்யத்தை கடைப்பிடிக்கும் ஒரு இறையாண்மை கொண்ட நாடாகும்.
இலங்கை பெப்ரவரி 4 ஆம் திகதி 74 ஆவது வருடத்தை கொண்டாடுகிறது. எவ்வாறாயினும், நாடு எவ்வளவு உண்மையான 'சுதந்திரம்' மற்றும் 73 ஆண்டுகளுக்குப் பிறகு அது எவ்வாறு சுதந்திரமில்லாமல் 'சார்ந்துள்ளது' என்ற தீவிரமான கேள்விகள் எழுப்பப்பட வேண்டும். அதன் சார்பு சூழலில், இது ஒரு சுதந்திர அரசுக்கு எதிரான மாநிலம் என்று ஒருவர் வாதிடலாம் இல்லையா!
ஏனெனில் இன்று இலங்கை பாரிய அந்நியக் கடனில் உள்ளது, அதன் அரசாங்கக் கடன் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 101.5 வீதம் என்று கூறப்படுகிறது, இந்தநிலையில் வெளிநாட்டுக் கடன் கூறானது 62 வீதத்தினை விட அதிகமாக உள்ளது. கடந்த 1972 ஆம் ஆண்டு பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தில் நிதியமைச்சராக மறைந்த கலாநிதி என்.எம்.பெரேரா இருந்தபோதுதான் நாடு சமச்சீரான வரவு செலவுத் திட்டத்தைக் கொண்டிருந்தது. அன்றிலிருந்து, அதற்கு பின்னர் நாடு சம்பாதித்ததை விட அதிகமாக செலவழித்ததுதான் அதிகம், அதாவது வரவுக்கு மீறிய அல்லது அதன் சக்திக்கு மீறி மகிழ்ச்சியாக வாழ்கிறது என்று சொல்லவேண்டும்..
இந்த நிலையில் உண்மையில் நாடு தனது சுதந்திரத்தை கொண்டாட வேண்டுமா அல்லது தனது தேவைக்காக இன்னும் தங்கியிருக்கும் வெளிநாட்டு அரசாங்கங்கள், கடன் வழங்கும் முகவர்கள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு இறையாண்மை பத்திரங்களை வைத்திருப்பவர்கள் என்று புலம்ப வேண்டுமா மற்றும் திட்டமிடப்பட்ட, கட்டமைக்கப்பட்ட, பொருளாதார நோக்கம் இல்லாததைக் குறித்து கவலைப்பட வேண்டுமா என இன்று எண்ணவேண்டியுள்ளது.
இந்த பின்னடைவு நிலைமைக்கான பொறுப்பு 1948 முதல் சுதந்திர இலங்கையை ஆட்சி செய்த அனைவருக்கும் உள்ளது. இன்றைய நாட்டின் நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு பார்போமானால், இது உண்மையின் நாட்டின் அறிக்கையே தவிர, நாட்டை ஆட்சி செய்த ஒரு தரப்பினரின் அரசியல் விமர்சனம் கிடையாது.
73 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த தாமதமான காலகட்டத்திலாவது, சில பொறுப்புள்ள நபர்கள் விவேகமான பொருளாதாரத் திட்டத்தைக் கொண்டு வருவார்கள் என்பதில் சந்தேகமில்லை. முன்னணி வர்த்தகரான தம்மிக்க பெரேரா அண்மையில் அளித்த நேர்காணலில், நாட்டின் அந்நிய செலாவணி தேவைகளை ஈட்டுவதற்காக 7 அம்ச திட்டத்தை முன்மொழிந்துள்ளார். அவரைத் தவிர, மேலும் பலர் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல உடனடி, இடைக்கால மற்றும் நீண்ட கால தீர்வுகளை முன்மொழிந்துள்ளனர்.
அந்தவகையில் நாட்டை பிழையாக வழிநடாத்தும் தலைவர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கும், வர்த்தக சமூகம், கல்வியாளர்கள் மற்றும் பிற தொழில் வல்லுநர்கள் ஆகியோரை சந்தித்து பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தை உருவாக்குவதற்கும், குறைந்தபட்சம் 10 ஆண்டுத் திட்டத்தை உடனடி, இடைக் கால மற்றும் நீண்ட கால உத்திகளுடன் உருவாக்குவதற்கும் அனுமதிக்க வேண்டிய நேரம் இதுவாகும். இந்த திட்டத்தினை பிரத்தியேகமாக ஒரு குழு அமைத்து எந்தவித அரசியல் தலையீடும் இல்லாமல் அதனை அமுலாக்கவேண்டும்.
நம்பிக்கை இல்லாமல் எந்த ஒரு தனிநபரும், நாடும் முன்னேற முடியாது. மற்ற பல நாடுகளைப் போலவே, இலங்கையும் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் கோவிட் தனது வியாபகமாகப் பரவும் நடவடிக்கைகளை முடிக்காததால் இன்னும் நமது பொருளாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இலங்கை தனது வெளிநாட்டு வருவாயில் குறைந்தது 50 வீதத்தினை இழந்துள்ளது, மேலும் அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு நிதியளிப்பதற்காக வெளிநாட்டு நாணயத்தை தேடும் போது வெளிநாட்டு கடன்களை திருப்பிச் செலுத்துவதில் பெரும் சவாலை எதிர்கொண்டு வருகின்றது. இந்த ஆபத்தான சூழ்நிலை இருந்தபோதிலும், இலங்கை தனது எதிர்காலம் குறித்து கொள்ளவேண்டிய நம்பிக்கை மாத்திரமே முக்கியமானது.
கோவிட்டின் தாக்கம் பலரால் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது மற்றும் இந்த நேரத்தில் ஆட்சியில் எவர் இருந்தாலும் தொற்றுநோயிலிருந்து எழும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதை மறுக்க முடியாது. வெளிநாட்டுக் கடன்களின் அளவு;, இப்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 வீதத்தினையும் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது, மேலும் மொத்த வெளிநாட்டுக் கடனில் 45 வீதம் அளவுள்ள குறுகிய கால, அதிக வட்டி இறையாண்மைப் பத்திரக் கூறுகளால் அதிகரித்து, அது நாட்டை முடக்கியுள்ளது. இந்த கடன்கள் ஒட்டுமொத்தமாக இந்த அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டவையல்ல.. இவை பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்தவை.
நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிப்பவர்களினால் விடப்பட்ட தவறுகள் மற்றும் தவறான மதிப்பீடுகளில் இருந்து பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இக்கட்டுரையானது, நாடு எதிர்நோக்கும் முக்கிய அடிப்படைச் சவால்கள் மற்றும் பல சாமானிய மக்களால் உணரப்படும் அதன் விளைவுகளைப் பற்றியது ஆனால் இவை இன்னும்; பல அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளால் புரிந்து கொள்ளப்படவில்லை. இந்த சவால்களின் இன்றய நிலைக்கு காரணம்;, அடுத்தடுத்த அரசாங்கங்களின் ஒட்டுமொத்த நிர்வாகக் குறைபாடுகளின் விளைவாகும்.
இன்று நம் நாடு பொதுவாக சட்டம் ஒழுங்கின்மை மற்றும் ஊழல் ஆகியவைதான் நாடு எதிர்கொள்ளும் சவால்களின் பட்டியலில் முன்னணியில் உள்ளன, அதே நேரத்தில் தவறான நிர்வாகம் இவற்றுக்கு மிக அருகில் உள்ளது. எல்லாவற்றினையும் முழுங்கும் திமிங்கலங்கள் மற்றும் சுறாக்கள் தப்பித்துச் செல்ல அனுமதிக்கும் ஒரு ஓட்டை சட்டம் ஒழுங்கில் இருப்பதாகப் பலர் குறைகூறுகின்றனர் ஆனால் இது சிறிய மீன்களைப் பிடிக்க நன்கு வேலை செய்கிறது. மற்றும் சிறிய குற்றங்களுக்குக் கூட கடுமையான தண்டனைகளை விதிக்கிறது. நாட்டின் சுதந்திரத்திற்குப் பிந்தைய வரலாறு முழுவதும், உயர் அரசியல் மற்றும் நிர்வாகப் பதவிகளில் உள்ளவர்களைக் குற்றவாளிகளாகக் கண்டறிந்து தண்டிக்கவில்லை. சமீப காலங்களில், வொண்ட் ஊழல் மற்றும் ஈஸ்டர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு காரணமான திமிங்கலங்கள் மற்றும் சுறாக்கள் இன்னும் சுதந்திரமாக உலாவுகின்றன, அதே நேரத்தில் நாட்டின் செய்தித்தாள்களை பார்த்தால்;, சிறிய சிறிய குற்றங்களுக்கு தண்டனை பெற்றதாக ஏராளமான செய்திகள் உள்ளன. பல பெரிய மோசடிகள் மற்றும் குற்றங்களுடன் ஒப்பிடுகையில் இது முக்கியமற்றதாக உள்ளது.
ஊழல் என்ற புற்று நோய் இன்று ஊழல் செய்யாதவர்களை பற்றி அரிதாகவே கேள்விப்படும் நிலையை எட்டியுள்ளது. நாட்டின் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ள ஊழல்கள் பற்றிய வதந்திகள் மற்றும் செவிவழிச் செய்திகள், சமூகத்திற்குள் இவ்வளவு புகை வெளியேறுவதற்கு ஏதேனும் நெருப்பு இருக்க வேண்டும் என்ற கருத்தை பலர் எடுக்க வழிவகுத்தது.
ஊழல் அரசியல்வாதிகள் பற்றி பொதுவாக உணரப்படும் மற்றும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பார்வையைப் போக்க சில நடவடிக்கையாக, உயர் பதவியில் இருந்து கீழ்நோக்கிச் செல்லும் அனைத்து அரசியல்வாதிகளும் அரசியலமைப்பின்படி அவர்கள் சொத்துக்கள் மற்றும் கடன்கள் பற்றிய அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும்.
நாடு இப்போது அனுபவிக்கும் பொருளாதாரப் பேரழிவுக்கான தொழில்நுட்பக் காரணங்களைப் பற்றி நடக்கும் பெரும்பாலான விவாதங்கள்; மில்லியன் கணக்கான சாதாரண மக்களுக்கு ஆர்வத்தினை கொண்டிருக்கவில்லை. அவர்களின் இயல்பான கவலை உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு, அவை அதிக விலையில் கிடைப்பது போன்றவற்றைப் பற்றியது. நாடு ஏன் இத்தகைய ஆபத்தான நிலையில் உள்ளது என்பதை நாட்டின் அரசியல் தலைமை இன்னும் சாதாரண பாமர மக்களின் மொழியில் விளக்கவில்லை. நாட்டின் வருங்கால சந்ததியினரை இப்படிப்பட்ட அடிமைத்தனத்திலிருந்து எப்படி விடுவிக்கப் போகிறோம் என்று எந்தத் திட்டமும் இல்லாமல் அடகு வைத்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் உணரவில்லை.
விடயங்களை முற்றிலும் மோசமாக்கும் வகையில், நாட்டில் உள்ள அனைவரின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு பொருளான எரிவாயு விநியோகம் மிகவும் மோசமாகக் கையாளப்பட்டு மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது, அது மேலும் மோசமாக பலரின் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற தொடர்புடைய பிரச்சினை என்னவென்றால் உரத்தட்டுப்பாடு சரித்திரத்தின் தவறான முகாமைத்துவத்துக்கான எடுத்துக்காட்டு. விவசாயத்துறையில் பல சிறந்த நிபுணர்களின் ஆலோசனைகள் இருந்தபோதிலும், அரசியல் தலைமையானது நடைமுறைக்கு மாறான மற்றும் விளைச்சலுக்கு வில்லங்கம் விளைவிக்கும் கொள்கையை அறிமுகப்படுத்த முடிவு செய்தது, இது நாட்டின் உணவு பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு பொருந்தாமல் வருந்தும் நிலைக்கு கொண்டுவந்தது.
ஆகவே தவறுகளின் பட்டியல் நீணடடுகொண்டது. நம்பிக்கையின்மை, வெற்று வார்த்தைகள் மற்றும் உறுதிமொழிகளின் வெற்றுத்தனம், அப்பட்டமான பொய்கள் போன்ற சூழல்கள் இருந்ததால் நல்ல முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையினைக் கட்டியெழுப்ப முடியாமற் போனது. அது நல்ல முதலீட்டாளர்களை முன்னெப்போதுமில்லாமல் தூர துரத்தியது
நம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நம்பிக்கைக்கான தடைகள் கடக்க முடியாததாகத் தோன்றும்போது, நம்பிக்கை விரக்தியாக மாறுகிறது. சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகளுக்குப் பிறகு, நம்பிக்கையை விட விரக்திதான் அதிகம் நம்மத்தியில் காணப்படுகின்றது. நம்பிக்கையுடன் தங்கிவாழாத தனித்துவ உழைப்பை கையில் எடுப்பதே நாட்டின் சுதந்திரமான மீட்சிக்கு உதவும்.
0 comments:
Post a Comment