ADS 468x60

04 February 2022

பெண் சமத்துவம் சார்ந்திருக்கும் நிலையில் இருந்து விடுபடுதலில் துவங்குகின்றது.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான நுட்பமான அல்லது வெளிப்படையான பாகுபாடு இலங்கையின் சமூக பின்னடைவில்; ஒன்றாகும். இந்த நிலை பெரும்பாலும் வீட்டில் தொடங்குகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கணவர் வீட்டை நடத்துவதற்கு பணம் சம்பாதிப்பதால் ஒரு மேலாதிக்க அல்லது அதிகாரபூர்வமான பாத்திரத்தை வகிக்கிறார் மற்றும் முக்கிய முடிவுகளைத் தானே எடுக்கிறார். முடிவெடுப்பதிலும் மற்ற விடயங்களிலும் கணவனும் மனைவியும் சம பங்கு வகிக்க வேண்டும் என்று பொதுவாக ஆன்மிகம் சொல்கிறது. ஆகையால், எம்மிடையே ஆன்மீகத்தின் பற்றாக்குறை வீட்டில் தொடங்குகிறது, மேலும் அது வளர்ந்து லஞ்சம் மற்றும் ஊழலுக்கு வழிவகுக்கிறது. 


சுகாதாரம், கல்வி மற்றும் அரசியலில் கூட பெண்கள் பாகுபாடுகளை அனுபவிக்கின்றனர். பாராளுமன்றம், மாகாணசபைகள் மற்றும் ஏனைய உள்ளூராட்சி சபைகளில் 25 வீதம் உறுப்பினர்கள் பெண்களாக இருக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும் அது நடக்கவில்லை. திருமணங்களிலும் பல ஏற்றத்தாழ்வுகள் இலங்கையில் இருக்கின்றது. உதாரணமாக, உலகின் தலைசிறந்த தத்துவஞானிகளில் ஒருவரான ரவீந்திரநாத் தாகூர், இந்தியாவில் திருமணம் என்பது பெண்களை விற்கும் சந்தை போன்றது என்று கூறியிருக்கின்றார். டொக்டருக்கு ரூ. 10 மில்லியன் மற்றும் பொறியாளர்கள், கணக்காளர்கள், கட்டிடக் கலைஞர்கள் மற்றும் பிற தொழில் வல்லுநர்களுக்கு கொஞ்சம் குறைவு என அது இருந்துவருகின்றது.

இந்தவகையில் இலங்கையின் 74வது சுதந்திர தின விழாவை கொண்டாடினோம். ஆகவே இந்த நிலையில், யார் சுதந்திரமானவர், யார் யாரைச் சார்ந்து இருக்கிறார்கள் என்ற தீவிரமான கேள்விகள் இருக்கும்போது, உலகின் தலைசிறந்த அரசியல்வாதிகளில் ஒருவரான மகாத்மா காந்தி சுதந்திரம் பற்றி என்ன சொன்னார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒரு பெண்ணோ அல்லது சிறுமியோ இரவில் தனியாக வெகுநேரம் துஸ்பிரயோகம் அல்லது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகாமல் தெருவில் நடமாடும் நாளே சுதந்திரம் என்று அவர் கூறினார். அந்தச் சுதந்திரத்தினை இவர்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளரா என்றால் அது கேள்வியே!

அடுத்த வாரம், ஐ.நா., அறிவியலில் பெண்கள் மற்றும் பெண்குழந்தைகளுக்கான சர்வதேச தினத்தைக் குறிக்கிறது. ஒரு அறிக்கையில், ஐ.நா பெண்கள் இயக்கம் உலகிற்கு அறிவியல் தேவை என்றும், அறிவியலுக்கு பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் தேவை என்றும் கூறுகிறது. பெண்கள் பொது சுகாதாரம், தடுப்பூசிகள், சிகிச்சைகள் மற்றும் புதுமையான தொழில்நுட்பம் ஆகியவற்றில் சிறந்த ஆராய்ச்சியை வழிநடத்தியுள்ளனர், மேலும் விஞ்ஞானிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பலராக கொவிட்-19 முன் வரிசையில் உள்ளனர்.

ஆயினும்கூட, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பாலின இடைவெளி பெண்களைத் இன்னும் தடுக்கிறது. சமீபத்திய ஐ.நா அறிவியல் அறிக்கையின்படி, 33வீத ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே பெண்கள், இருப்பினும் அவர்கள் முறையே இளங்கலை மற்றும் முதுகலை நிலைகளில் 45 வீதம் மற்றும் 55 வீதம் மாணவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர், மேலும் 44 வீதம் பேர் கலாநிதித் திட்டங்களில் சேர்ந்துள்ளனர். 70 வீதம் சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்புப் பணியாளர்கள் பெண்கள் என்றாலும், அவர்கள் ஆண்களை விட 11 வீதம் குறைவான ஊதியம் பெறுகிறார்கள்.

இவ்வாறான ஏற்ற இறக்கம் நிச்சயம் களையப்படவேண்டும். எமது நாட்டில் அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கான வகிபாகம' அதிகரிக்கப்படவேண்டும். அதுதான் பொருளாதார முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்கும். 


0 comments:

Post a Comment