ADS 468x60

11 June 2022

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் ஒரு கிலோ அரிசியின் விலை 1000 ரூபாவாக அதிகரிக்குமென எச்சரிக்கை!

இலங்கை ஏற்கனவே முன்னெப்போதுமில்லாத பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதுடன், உணவு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்து வருவதால் மக்கள் மேலும் சுமைக்கு ஆளாகியுள்ளனர். நாட்டில் உணவு தானியத்தின் விலை 'தாங்க முடியாத அளவிற்கு' உயர்ந்துள்ளதால், இலங்கையில்; அரிசி வாங்குவது இன்று சவாலாக மாறியுள்ளது.

நாம் அறிந்தவை பார்தவைதான் அரிசி, சீனி, கோதுமை மாவு, வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதால் நாட்டின் பலபாகங்களில் கடைகளின் முன்பு மக்கள் நீண்ட வரிசையில் நின்று பொருட்களை வாங்கும்  சூழலும் உருவாகியுள்ளது. மேலும் பால் பவுடர், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாலும், நாட்டில் கொரோனா ஏற்படுத்திய வேலைவாய்ப்பின்மை காரணமாகவும் மக்கள் மிகப்பெரிய வாழ்வியல் சிக்கல்களுக்கும் ஆட்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இலங்கையில் தற்போது காணப்படுகின்ற  டொலர் பற்றாக்குறை மற்றும்  அதனால் ஏற்பட்டிருக்கின்ற  அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு, அவற்றின் விலை உயர்வுகள்,  எரிபொருள் தட்டுப்பாடு, எரிவாயு தட்டுப்பாடு,  எரிபொருள் எரிவாயுவை  பெற்றுக்கொள்வதற்கான நீண்ட வரிசைகள்,  நீண்டநேர மின்வெட்டு,  மக்களின் விரக்தி நிலை,  போன்றவற்றுக்கு மத்தியில் மற்றும் ஒரு அபாயகரமான நிலை குறித்தும் தொடர்ச்சியாக பல்வேறு தரப்புகளினாலும்  நிபுணர்களினாலும் எதிர்வு கூறப்பட்டு வருவதை காணமுடிகிறது.  

ஐக்கிய நாடுகளின் உணவுத் திட்டம் உலகளாவிய உணவு நெருக்கடி குறித்து எச்சரித்துள்ளது. பல நீர் நில வளங்களையும் கால்நடைகளையும் வைத்திருக்கும் தேசமாக இலங்கையர்கள் கருதப்படுகிறார்கள். ஆனால் வரவிருக்கும் உணவு நெருக்கடிக்கு இன்னும் எந்த உற்பத்தியும் கிடையாது. இந்த நிலையில் இன்று உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ள உலகின் பல நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இதற்காக அமெரிக்கா தனது அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரித்து வருகிறது, சீனா பிற நாடுகளில் உரம் இறக்குமதி செய்வதை முற்றிலுமாக நிறுத்திவிட்டது. கோதுமை மாவு ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளது. இந்த நிலையில் உலகளாவிய தொற்றுநோயை எதிர்கொண்டு உற்பத்தி மீண்டும் கட்டமைக்கப்பட்ட நிலையில், திடீர் என ஏற்பட்ட இரசியய-உக்ரேனிய போரினால் உலக உணவுச் சங்கிலி வெகுவாகச் சிதைந்துள்ளது.

இலங்கை நாட்டில் அரிசியின் வருடாந்த நுகர்வு 2.4 மில்லியன் மெட்ரிக் டொன் ஆகும். இம்முறை அதில் பாதியைக் கூட உற்பத்தி செய்து விநியோகிக்க இலங்கை தவறியுள்ளது. இதனால் இலங்கையில் அரிசி உற்பத்தி 50 வீதம் குறைந்துள்ளது. கடுமையான காயங்களுடன் உள்ள ஒரு நோயாளியாக உலக உணவு நெருக்கடியை இலங்கை எதிர்கொள்கிறது. இந்த துரதிஸ்டமான சூழலை நாம் எதிர்கொண்டது உலகளாவிய தொற்றுநோய் அல்லது வேறு ஏதேனும் இயற்கை அனர்த்தம் காரணமாக அல்ல, மாறாக அரசாங்கத்தின் இயற்கை விவசாயம் குறித்த பொருத்தமற்ற முடிவினால்.

அப்போது அரசாங்கத்தில் விவசாய அமைச்சராக இருந்த மஹிந்தானந்த அளுத்கமகே, பொரும்போகப் பருவத்திற்கு தேவையான இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை விவசாயிகளுக்கு வழங்கியதாக தொடர்ந்து பொய் கூறி வந்தார். உரம் கோரி நாடு முழுவதும் விவசாயிகள் நடத்திய போராட்டத்தை அரசு புறக்கணித்தது. இந்த விடயத்தை அரசாங்கம் அலட்சியப்படுத்தியதன் காரணமாக கடந்த மகா பெரும்போக பருவத்தில் உற்பத்தி வீழ்ச்சியடைந்தது.

உலகளாவிய உணவு நெருக்கடிக்கு முன்னரே ஒரு கிலோ அரிசியின் விலை 115 ரூபாவிலிருந்து 230 ரூபாவாக உயர்ந்துள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் ஒரு கிலோ அரிசியின் விலை 1000 ரூபாவாக அதிகரிக்குமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யூரியா உர உற்பத்தியில் உலகின் முன்னணி நாடான ரசியா, யுத்த காலத்தில் உர உற்பத்தியை குறைத்துள்ளதுடன், யூரியா உர மூட்டையின் விலை 29,000 இருந்து 40000 ரூபா வரை உயர்ந்துள்ளது. வரலாற்றில் முதன்முறையாக விதை, உரம், பூச்சிக்கொல்லி, எரிபொருள் என அனைத்து பிரச்சனைகளையும் உள்ளூர் விவசாயி எதிர்கொண்டு வருகின்றார்கள்.

உலகிலேயே இலங்கை ஒரு வங்குரோத்தான நாடாகும் என பலர் விவரிக்கின்றனர். விரைவில் உலக உணவு நெருக்கடியில் அதிக பேரிடர் உள்ள நாடாக நாம் மாறுவோம். நாடு எதிர்நோக்கும் பாரிய ஆபத்து குறித்து அரசாங்கத்திடம் சரியான மதிப்பீடு கிடையாது. அரசாங்க அமைச்சரவை பலதடவை ராஜினாமா செய்து மீண்டும் நியமிக்கப்பட்டு வருகிறது.

உணவு உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ள சூழ்நிலையில் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் இறக்குமதியே ஒரே வழி. அதற்குப் போதிய அன்னியச் செலாவணி கையிருப்பு இல்லை.

இப்போது செய்ய வேண்டியது என்னவென்றால், கடனுக்கு பிச்சை எடுப்பதை விட நாட்டில் ஒவ்வொரு அங்குல விவசாய நிலத்திலும் விவசாயம் செய்யும் அரசியல் தலைமையை குடிமக்களுக்கு வழங்க வேண்டும். அவ்வாறானதொன்று நடப்பதாகத் தெரியவில்லை. அரசாங்கம் தனது அரசியல் அதிகாரத்தை ஒருங்கிணைக்க தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி வருகின்றது.


0 comments:

Post a Comment