ADS 468x60

14 January 2025

தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்

"தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்

தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்"

என் தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் உளம் கனிந்த, மகிழினிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்! தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

நம் நாட்டில் எந்த நல்ல செயலையும் தை மாதத்தில் துவங்குவது என்பது மரபு. தை மாதத்தின் தொடக்கத்தில் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் சங்க காலத்தில் இருந்து கொண்டாடப்படும், திருநாள் ஆகும். இது சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் முறையில் கொண்டாடப்படுகின்றது. அறுவடையால் பெற்ற பலனுக்காக கடவுளர்க்கு நன்றி தெரிவிக்கும் முறையில் இம்மாதத்தில் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகிறது.

மக்கள் விளைச்சலுக்கு உதவிய சூரிய கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக தை மாதத்தின் முதல் நாளை தைப்பொங்கலாகக் கொண்டாடுகின்றனர். இந்நாளில் புதுப்பானையில் புது நெல்-அரிசி, சர்க்கரை மற்றும் வெண் பொங்கல், தயார் செய்து பொங்கல், செங்கரும்பு, புதுமஞ்சள், பனங்கிழங்கு, காய்கறிகள், பருப்பு வகைகள், பழவகைகள் ஆகியவற்றை சூரிய தேவனுக்கு படையலிட்டு வழிபடுகிறோம். தை மாதம் அறுவடை மாதம் என்றே அழைக்கப்படுகிறது.

'தாளாற்றித் தந்த பொருளெல்லாம்இ தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு' என்று வள்ளுவன் வகுத்தவழி, உழவர்கள் தாம் உழைத்துப் பாடுபட்ட பொருளையெல்லாம், துன்பத்தில் உழலும் இயலாத வறியவற்குப் பகிர்ந்து கொடுப்பதால்இ இல்லாதவர்கள், இயலாதவர்கள் அனைவர்க்கும் வாழ்வாதாரம் தரும் வழி பிறப்பதால்தான் 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற பழமொழி பிறந்தது.

இக்காரணத்தால்தான், 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்! மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்' என்று உழவர்களைச் சிறப்பித்தார் வள்ளுவர்.

மகாகவி பாரதியார், 'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்கிறார்.

தமிழ் சமூகம் வேளாண் சமூகம். தமிழர்கள், 'வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்' என்ற வாழ்வியல் நெறியில் வாழ்பவர்கள்.

எனவே, உழவர் திருநாள், தமிழர் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு என்ற மூன்று சிறப்புகளும் கொண்ட 'தை பிறந்தால், வழி பிறக்கும்' என்பது முற்றிலும் உண்மைதானே!

'தை மகளை வரவேற்று, தமிழ்ப் புத்தாண்டை, உவகையுடன் கொண்டாடுவோம்'.

என் தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் உளம் கனிந்த, மகிழினிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்! தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!


 

0 comments:

Post a Comment