ADS 468x60

11 November 2018

வடகிழக்கில் பெண்களின் அரசியல் நுழைவு- காலத்தின் தேவை

Image result for woman in politics north east sri lankaபெண்கள் உயர் பதவிகளிலும், அரசியல் பீடத்திலும், தீர்மானமெடுக்கும் குலாமிலும் இருப்பது ஒப்பீட்டளவில் குறைவாகக் காணப்படுவதனால் அவர்கள் பல இழப்புக்களை சந்தித்து வருகின்றனர். ஆனால் உலகம் கற்பிக்கும் சில விடயங்கள் எம்மை, பெண்களின் சமமான அரசியல் பிரயோகம் பற்றி சிந்திக்க வைக்கின்றது. அது குறிப்பாக உடல் உழ ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள, பாதிக்கப்படும் வடக்கு கிழக்கில் கருத்தில் எடுக்கப்பட வேண்டிய ஒன்றாக பரவலாகப் பேசப்படுகின்றது. 


அதிக பெண்கள் தொழில் படையில் இருப்பது பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும். வேலைத்தளத்தில் உள்ள ஆண் பெண்களுக்கு இடையிலான இடைவெளியினை குறைத்தல் வேகமான வளர்ச்சியை நாட்டிற்கு கொண்டு வரும். குடும்பத்தில் தலைமைதாங்கும் பெண்களினால் பரிபாலிக்கப்படும் வருமானம் குடும்பத்தின் நலனை அதிகரித்துள்ளது. இவை தரவுகள் சொல்லும் சில உண்மைகள்.

ஆனால் உலகில் வேலை செய்வோரின் சனத்தொகையில் 72.2 விகிதமானோர் ஆண்களாகவும் வெறும் 47.1 விகிதமானோரே பெண்கள் எனவும் தரவு சொல்லுகின்றது. உலகலாவிய ரீதியில் பெண்களுக்கு ஆண்களை விடவும் குறைவாகவே சம்பளம் வழங்கப்படுகின்றது. அதாவது ஆண்கள் பெறும் மொத்த ஊழியத்தில் 60 தொடக்கம் 70 விகிதமான ஊதியத்தினையே பெறுகின்றனர். ஆண்களை விட பெண்கள் 1 தொடக்கம் 3 மணித்தியாலங்கள் ஊதியம் பெறாத வீட்டு வேலையில ஈடுபடுகின்றனர், 2 தொடக்கம் 10 தடவைகள் பிள்ளைகள் வயோதிபர்கள் மற்றும் பெற்றோரை கவனிப்பதில் செலவிடுகின்றனர்.

1 தொடக்கம் 4 மணித்தியாலங்கள் சந்தை செயற்பாடுகளில் செலவிடுகின்றனர். அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளில் ஆண்களை விடவும் அதிக நேரம் பெண்களே வேலை செய்து வருகின்றனர். முறைசாரத் தொழில் துறையில் அதிகம் ஆண்களுக்கு நிகராக பெண்கள் வேலை செய்கின்றனர், தெற்காசியாவில் 80 விகிதத்துக்கு மேல் பெண்கள் விவசாயம் இல்லாத முறைசார தொழில் துறையிலேயே பங்குபற்றி வருகின்றனர். ஆக அதிகம் பெண்கள் எமது பிரதேசத்தில்கூட ஆண்களை விடவும் குறைந்த வருமானத்துடன், வேலைத்தளத்தில் நலிவுறும் நிலையில், தகுதிக்கு குறைந்த வேலையில் ஈடுபட்டு வருவதனைக் காணலாம்.

இவை உலகளவில் சொல்லப்படுகின்ற பெண்களின் நிலை. ஆனால் நாம் ஒரு உதாரணத்தினை எடுத்துக்கொள்ளுவோம், மட்டக்களப்பில் அல்லது அம்பாரை மாவட்டத்தில் இருந்து கொழும்புக்கு வரும் பேருந்துக்கள் நிறுத்தப்படும் இடங்களில் பெண்கள் சுதந்திரமாக, பாதுகாப்பாக, சுத்தமாக மலசலகூடம் செல்ல முடியுமா? அவர்கள் அதிகம் உண்ணாமல் நீர் அருந்தாமலேயே பிரயாணம் செய்வதனை அவதானித்திருக்கின்றேன்.

ஆனால் ஆண்களுக்கு அப்படியில்லை தானே! அதே வேளை பெண்கள் நிச்சயமாக கணவன் உழகை;கிறானோ இல்லையே அவள் நிச்சயம் எப்படியோ உணவு தயார்படுத்தி பரிமாறும் வேலையினை செய்யவேண்டும் என்கின்ற வழமை தொன்றுதொட்டு வருவதனால் ஆண்களைப் போன்று மேலதிகமாக நேரத்தினை எடுத்துக்கொண்டு அவர்களை வளர்த்துக்கொள்ள முடிவதில்லை. அத்துடன் நீ பெண் தானே, ஆண்தான் படித்தால் நாலு காசு சம்பாதிப்பான், பெண்கள் குடும்பத்துடன் வீட்டில் இருக்க வேண்டியவர்கள் என்று போதிக்கும் எத்தனையோ குடும்பங்கள் இன்னும் எம்மத்தியில் இருக்கின்றனர்.

பாருங்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அதிகம் கூலிவேலைக்காகவே பெண்கள் குடும்பக் கஸ்ட்டம் தாழாமல் செல்லுகின்றர், அவர்களுக்கு ஒழுங்கான ஊதியம் கொடுக்கின்றார்களா? கொடுப்பதெல்லாம் அவமானம், தலையில் கையில் ஆணி அடித்து சித்திரவதை என பல கெடுதல்கள் ஆண்களை விட பெண்களுக்கே நடக்கின்றது. தவிரவும் தேயிலைத் தோட்டத்தில் ஆடைத்தொழிற்சாலையில் அதிகம் கீழ் நிலை ஊழியத்தினிலேயே பணிபுரியும் நிலை பெண்களே அதிகம் எதிர்கொண்டு வருகின்றனர்.

உண்மையில், பெண்கள் குடும்ப பணிகளை நிர்வகிப்பதோடு நின்று விடாமல் பொருளாதாரத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்திக் கொள்ளும் ஆற்றலை பெண்கள் கொண்டுள்ளனர். பல திறன் பெற்ற மகளிர் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் மதிப்பு கூட்டுபவர்களாகவும் திகழ்கின்றனர். இருப்பினும் சின்ன சின்ன விடயங்களில் பெண்களை மேம்படுத்தும் கருசனை தேவைப்படுகின்றது.


பொதுவாக எதனையும் ஆராய்ந்து பொறுமையாக சிந்தித்து யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாமல் முடியெடுப்பவர்கள் தான் பெண். தனக்கென்று எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னை சுற்றி இருப்பவர்களின் மகிழ்ச்சியையே பெரிதாக எண்ணுபவன் பெண். பிறந்த பொழுது தாய் தந்தையரை விட்டு கொடுக்க மாட்டாள். திருமணம் ஆன பிறகு கணவனை விட்டு கொடுக்க மாட்டாள். குழந்தையான பிறகு பிள்ளைகளை விட்டு கொடுக்க மாட்டாள். இப்படியாக தியாக உணர்வுடன் வாழ்வதையே மகிழ்ச்சியான வாழ்க்கையென்று வாழ்பவள். இந்த மனநிலை வீட்டைக்காக்க மாத்திரமல்ல இந்த ஒட்டுமொத்த சமுகத்தினைக் காக்கவும் தேவைப்படுகின்றது.

இருப்பினும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளே அவர்களின் அரசியல் பங்களிப்பை தடுக்கும் முக்கிய காரணியாக இருக்கின்றது.

துன்புறுத்தல், பாலியல் லஞ்சம் , மிரட்டுதல் , உடல் ரீதியாக தாக்கப்படுதல் , எச்சரிக்கைகள், நிதி ரீதியான அழுத்தங்கள், எச்சரிக்கைகள், பண்பற்ற முறையிலான ஊடக தகவல்கள் மற்றும் சமூக வலைத் தளங்களில் சேறு பூசப்படுதல் போன்றவை நம்மத்தியில் நாளாந்தம் காணுகின்ற செய்திகள்.

பெண்கள் என்ற காரணத்திற்காக அவர்களை சிறுமைப்படுத்தும் விதமான வதந்திகள், எதிர்மறை பிரசார உத்திகளான பதிவுகள் , காட்டூன்கள், மின்னஞ்சல்கள், பிரசுரங்கள் ஆகியவற்றை பரப்பி வருவதனை நாளாந்தம் காணுகின்றோம்.

இலங்கையில் மொத்த மக்கள்தொகையில் 52 சதவீதம் பெண்களாகவுள்ள போதிலும் நாடாளுமன்றத்தில் 5.3 சதவீதமும், மாகாண சபைகளில் 4 சதவீதமும், உள்ளூராட்சி சபைகளில் 1.9 சதவீதமும்தான் பெண்களின் பிரதிநிதித்துவம் காணப்படுகின்றது. 

உள்ளூராட்சி சபைகள் தேர்தல் சட்டத்திலும், மாகாண சபைகள் தேர்தல் சட்டத்திலும் சில மாதங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் காரணமாக சபைகளில் பெண்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு சட்ட ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திலும் இந்த வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கான முனைப்பினை நாம் எந்தளவு எடுத்துள்ளோம் அல்லது எடுக்கவுள்ளோம் என்பது கேள்விக்குறியே!.

நிச்சயமாக நாட்டினுடைய சட்டவாக்கம், கொள்கை தயாரிப்பு அவற்றுக்கான தீர்மானங்களை நிர்ணயித்தல் ஆகியவற்றில் பெண்களின் பங்களிப்பு இருக்கின்ற பட்சத்தில்தான் அவர்களின் பிரச்சினைகளை அவர்களே தீர்த்துக்கொள்ள முடியும். அதுபோக ஆண் பெண்களுக்கான சமத்துவமின்மையை கணிசமான அளவு குறைத்துக்கொள்ள முடியும். குறிப்பாக யுத்தம் சுனாமி என்பனவற்றாலும் மேற்கூறிய இன்னோரன்ன பிரச்சினைகளினாலும் ஆண்களை விடவும் உடலளவிலும் உளவளவிலும் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்படுகின்றவர்கள் பெண்கள்தான்.

அவர்களது பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாத சந்தர்ப்பத்தில் அதற்கான தீர்வினை அவர்கள் மூலம் தீர்த்துக்கொள்வதே சிறந்த முடிவாக இருக்கும். ஆகவே இம்முறை நடக்கவிருக்கும் தேர்தலில் நிச்சயம் குறிப்பாக வடகிழக்கில் பெண்களின் பங்களிப்பினை அதிகரிக்க வேண்டும் என நான் வேண்டிக் கொள்ளுகின்றேன். பெண்கள் இதன் மூலம் ஜனநாயகத்தில் நம்பிக்கையை திடமாக்குவதுடன், சுகாதாரம், கல்வி, ஏனைய அபிவிருத்திச் சுட்டிகளிலும் முன்னேற்றம் கொண்டவர்களாகும் நிலை தோன்றும்.

இங்கு பெண்கள் அரசியலில் வருவதற்கு மேலாக அதனூடாக அவர்கள் அபிவிருத்திச் செயற்பாடுகளில் உள்வாங்கப்படுதல், பொறுப்புக்கூறல் செயல்பாடுகள், தீர்மானம் எடுத்தல் ஆகியவற்றிற்கு அவர்களின் அரசியல் நுழைவு முக்கியமானதொன்றாகும். ஆகவே ஜனநாயக செயல் முறையில் சமமான பங்காளர்களாக பெண்கள் அரசியலில் பங்குபற்றுவதை ஆதரிப்போம், உக்குவிப்போம்.

0 comments:

Post a Comment