ADS 468x60

15 November 2018

இலங்கைக்கான புதிய ஆட்சி முறையின் தேவைப்பாடும், அணுகுமுறைகளும்.

இன்று இந்தச் சூழலில் நமது நாட்டிற்கு தேவையாக இருப்பது, எல்லா கட்சிகளும் ஒன்றிணைந்து பொது வெளியில் மீதமுள்ள காலத்தில் குறித்த உடன்பாடுகளுடன் சமமாக செய்யும் ஆட்சி முறை (bi-partisan) ஒன்றுதான். இந்த முறையில் நாட்டின் தலைவர் உட்பட எல்லா கட்சிகளின் தலைவர்களும் பங்குகொண்டு ஒரு தேசிய அமைச்சரவை கௌன்சிலை (The National Council of Ministers) ஸ்த்தாபித்து அதல் 25 கபினற் அமைச்சர்கள் மாத்திரம் நியமிக்கப்பட்டு, மீதமுள்ள 14 மாதங்களையும் நாட்டை நல்ல முறையில் நடாத்திச் செல்வது இன்று சாலப் பொருத்தமாக இருக்கும். இதில் பிரதி அமைச்சர்களோ, இராஜாங்க அமைச்சர்களோ இருக்க மாட்டார்கள். இந்தக் காலத்தில நீண்டகால எமது நாட்டின் மற்றும் எமது மக்களின் நன்மைகளுக்கு முன்னுரிமை கொடுத்து இவர்கள் செயற்படவேண்டும். 

இவ்வாறு இவர்கள் நாட்டை நடத்திவரும் நிலையில் 2020ம் ஆண்டு ஜனவரி மாதமளவில் ஜனாதிபதித் தேத்தல், மாகாணசபைத் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் ஆகிய மூன்றயும் ஒரே நாளில் வைக்கலாம் இதற்காக அமைக்கப்படும் இந்த அரசாங்கத்தில் பாராளுமன்றம் ஊடாக இதற்கான சட்டத்தினை நிறைவேற்ற வேண்டும்.

இந்த கௌன்சிலில் உள்ள அமைச்சர்கள் அனைவரும் குறித்த தனித்துவமான எந்தச் செயற்பாடுகளையும் கொண்டிருக்கமாட்டார்கள்.
நியமிக்கப்பட்ட் அமைச்சர்கள் அனைவரும் அந்தந்த அமைச்சின் செயலாளர்களின் வழிகாட்டலிலும், அமைச்சர்களின் கௌன்சிலில் உள்ளவர்களின் கொள்கை ரீதியான வழிப்படுத்தலிலும் செயற்படவேண்டும்.

கௌன்சிலில் உள்ளவர்களின் முன்னெடுக்க வேண்டிய அவசியமான நடவடிக்கைகள்.

சுறுசுறுப்பாக வினைத்திறனுடன் இயங்கும் அரசை மீள் கட்டியெழுப்புதலும் அவற்றின் ஸ்த்திரத்தன்மையைப் பேணுதலையும் உறுதிப்படுத்திக்கொள்ளுதல். அத்துடன் சமாதானத்தினையும் நல்லுறைவையும் சட்ட திட்டங்களுக்கு அமைவாக நாட்டு மக்களிடையே கட்டியெழுப்புவதற்காக நாட்டின் அரசியலமைப்பையும் சர்வதேச நடைமுறைகளையும் அதற்கான அர்ப்பணிப்புக்களையும் திறன்மிகு நல்லாட்சியினூடு உறுதிப்படுத்திக்கொள்ளுதல்.

நீண்ட காலமாக இருக்கின்ற தேசிய பிரச்சினைக்கான சரியான தீர்வினை அதிகாரப்பகிர்வொன்றை நிர்ணயித்துக்கொள்வதனூடாக சரிசெய்யவேண்டும், இவை நீதியை சமாதானத்தினை சிறுபான்மையானவர்களாக இருப்பவர்க்கும் சமமாகக் கிடைக்கும் வண்ணம் அமைத்துக்கொள்ளுதல் வேண்டும்.

இலங்கை ஒரு சீரமைக்கப்பட்ட இறையாண்மை மிக்க நாடு என்றவகையில் எமது நாட்டுடனான சர்வதேச பரிவர்த்தனைகள் மற்றும் உதவிகள் மீள்கட்டமைக்கப்பட வேண்டும்.

தேசிய ரீதியில் உள்ள வளங்களை சமமாகப் பங்கிடுதலை பாதீட்டின் மூலமாக உறுதிகொள்ளுதல், அதற்கு அமைவாக மக்களின் தேவைகளை அடிப்படையாக் கொண்டு, பொருளாதாரத்தினை அபிவிருத்தி செய்ய வேண்டும். அது நீண்டகாரத்தில் பொருளாதாரத்தில் மிக பின்தங்கி; இருக்கும் எமது மக்களின்  வறுமை மட்டத்தினைக் குறைவடையச் செய்வதுடன் நீண்டு நிலைத்திருக்கும் அபிவிருத்திக்கும் பங்களிக்கும் என்பதில் மாற்றமில்லை.

தேசிய அளவில் வினைத்திறனான கடன் இடர்தணிப்பு திட்டம் ஒன்றை உருவாக்குவதனூடாக நாட்டின் கடனை முகாமை செய்வதற்கும், அதனூடு சென்மதி நிலுவையை சமப்படுத்தி இவைகளினூடு நாணயமாற்று விகிதம் அதுபோல் பணவீக்கத்தினையும் கட்டுப்படுத்த வேண்டும்.

இங்கு உறுதியான, நீண்ட காலத்துக்கான, சமுக பொருளாதார கொள்கைகளை உருவாக்கி, அதனூடே நாங்கள் முதலீட்டாளர்களை கவர்வதுடன், தொழில்நுட்ப பரிவர்த்தனையை நாடுகளிடையே மேம்படுத்தி நாட்டின் பாரிய பிரச்சினையாக உள்ள தொழிலின்மையை குறைத்து இல்லாமல் செய்ய வேண்டும்.

வினைத்திறனான மற்றும் சுயாதீனமான முறையில் சட்ட அமுலாக்க அதிகார சபை மற்றும் நீதித்துறையானவை வலுவூட்டல் வேண்டும். இவற்றின் மூலம் சட்டத்தை மதியாமல் மீறுபவர்கள், லஞ்சம், ஊழல்களில் ஈடுபடுவோர், பண மோசடி செய்வோர் பாரபட்சம் மற்றும் பக்கச் சார்பில்லாமல் தண்டிக்கப்படுதலை உறுதி செய்யவேண்டும்.
சுதந்திரமான பொதுமக்களுக்கான நிறுவனங்கள், மற்றும் நாட்டின் ஒழுங்கமைப்புகள் நாட்டின் நல்லாட்சியை உறுதிப்படுத்த வலுவூட்டப்படவேண்டும்.

அத்துடன் வினைத்திறனான மற்றும் தரமான கல்வி, சுகாதாரம், உட்கட்டுமான சேவைகள் ஆகியவை எல்லோரும் பயன்பெறும் வகையில், ஏற்றுக்கொள்ளக்கூடிய குறைந்த செலவில்;. சந்தையின் மற்றும் மக்களின் கேள்வியை பூர்த்தி செய்யும் அளவில் வழங்கப்படுவதனை உறுதி செய்யவேண்டும். இவை நிச்சயம் நிறைவான தொழில் வாய்ப்பினையும் அதன் மூலம் நிலையான குடும்ப வருமானத்தினையும் ஏற்படுத்தி பின்தங்கிய நிலையில் இருக்கும் மக்களின் நலன்புரியையும் தூண்டிவிடும் திட்டம் உருவாக்கப்படனும்.

இந்த அரசாங்கத்தின் மூலமாக சுற்றுச் சூழல் மற்றும் இயற்கை வள பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும்.

இறுதியாக ஒருமைப்பாடு, சிறந்த கல்வி, சமுக அக்கறை, நிருவாகத்திறமை, அர்ப்பணிப்பு, முன்னிற்றல் ஆகிய ஆழுமைப் பண்களுடன் கூடிய புதிய தலைமைத்துவத்தினை கட்டியெழுப்பி அதன் மூலம், நல்ல அரசியல் தலைவர்களை ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும் அதுபோல் சிறந்த தலைமத்துவம் மிக்க அரச தனியார் துறைகளின் பணிபுரியும் முகாமைத்துவ உத்தியோகத்தர்களை எதிர்காலத்தில் உருவாக்க வேண்டும். இந்த கலாசாரத்தை எமது எதிர்கால இளம் தலைமுறைக்கு ஏற்படுத்தி அவர்கள் மூலம் சமுக நீதி, சம உரிமை, அபிவிருத்தி கொண்ட நற்பிரஜைகளை நாட்டில் ஊக்குவித்தல் ஆகியன இந்த ஆட்சி மூலம் கொண்டுவரலாம்.

சி.தணிகசீலன்.

0 comments:

Post a Comment