ADS 468x60

20 November 2018

பிட்டும் தேங்காப்பூவுமாய் = களுதாவளை + தேத்தாத்தீவு


களுதாவளைச் சுயம்புலிங்கப் பிள்ளையார் சந்நிதானம் சென்றுபாருங்கள். பல வண்ண நிறங்களில் பூத்துக் குலுங்கும் ஓர் அழகான பூஞ்சோலை. அதன் பக்கத்தில் மதுரை மரக்கீற்று மண்ணைத் துடைக்கும், தாமரை பூத்து இருமருங்கும் சாமரம் வீசும், பசுமாட்டுப் பட்டி அழகுசேர்க்க, மாங்காய்களும், தேங்காய்களும் தொங்கிக் கொண்டு ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்கும் மாந்தோப்பும், தென்னந்தோப்பும். 

இமைகளைத் திறந்து, மேல்நோக்கும்போது பறவைக் கூட்டங்கள் பாடிக்கொண்டிருக்கும் இசைக் கச்சேரி. இதற்கு ஜதி கூட்டுவதுபோல, வாவியின் ஓரத்தில் சலசலவென  வயலின் ஓசை. குளிர்ந்த காற்றை அணைக்க, சூரியன் தன் கிரணக்கைகளை நீட்டுகிறான். அடடா! அடடா! பார்ப்பதற்கும், கேட்பதற்கும் என்ன ஒரு ரம்மியமான நிகழ்வு. அத்தனையும் கூட்டாக இருப்பதால்தான், மனதிற்கு ஒரு புத்துணர்வைத் தருகிறது. இவை தனித்தனியாக இருந்திருந்தால் கற்பனை பண்ணி இரசிப்பதற்கு முடியாமல் இருந்திருக்கும். அது போல்தான் இன்று ஒரு பெரிய நிகழ்வில் களுதாவளை கிராமத்தவர் எமது தேத்தாத்தீவு கிராமத்தினையும் இணைத்துக்கொண்டு இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருப்பது ஒரு அழகு, பெருமை, மகிழ்ச்சி. 

சரியாக ஞாபகம் இல்லை, அது ஒரு பகல் பொழுது அப்போது என் அம்மம்மா விராந்தைக்குள், வெத்திலை இடித்துக்கொண்டிருந்தார். இப்பவும் ஞாபகம் இருக்கிறது, அவர் சொன்னார் ' வா புள்ள இரு' என்று, நான் அவர் பக்கத்தில் உட்காந்து சொன்னேன் 'அம்மம்மா நம்மட பெரிய வாழைக்குலை மேல் சீப்பு பழுத்து, அதில் ஒன்றை அணில் சாப்பிட்டுப் போட்டு' என்றேன். 

அதுக்கு அவர் சொன்னார் 'அப்படியா அதை வெட்டி மேல் சீப்பு ரெண்டையும், வேறயா வையுங்க களுதாவளைக் கிழவனுக்கு கொண்டுபோக வேணும்' என்ற அந்த ஞாபகம் இப்பவும் வருகின்றது. அன்று வெள்ளிக்கிழமை புதுப் பனவோலை பெட்டிக்குள், பக்குவமாய் அந்த பழங்களையும் அதனோடு சேர்த்து அபிசேகப் பொருட்களையும் வைத்து வெள்ளை வேட்டியை வெளியில் சுத்தி வெயிலுக்குள்ளால வில்லுக்குளத்தைக் கடந்து விறுவிறென்று நடந்தது, நேற்றுப்போல இருக்கு நினைக்கையில.

'என்ற களுதாவளைப் பிள்ளையாரே' என்றுதான் எங்கட குடும்பத்தில இருக்கிற எல்லோரும் அதுபோல் ஊரில் உள்ள பலர் ஏதும் நல்லது தீயதுக்கு அழைப்பதுண்டு. அது எனக்கும் அப்படியேதான். திருவிழா வந்துவிட்டால் ஞாபகம் இருக்கிறது, எமது வீட்டுக்கு வெளியே வந்து 'புள்ளயாரப்பா' என்று அரோகராப் போடுவதை இன்றும் என் அம்மம்மா போல் அம்மா நாங்கள் எல்லோரும் வழக்கமாகக் கொண்டிருக்கின்றோம். இந்தத்திருவிழாக் காலம் வந்தால் செட்டிபழையம் கண்ணகி அம்மன் கோயில் காலத்தில் என்ன மகிழ்ச்சி இருக்குமோ அதே போல்தான் இதுவும் எங்களுக்கு. மச்சம் மாமிசம் கிடையாது பட்டினிதான்.

ஊர் பெயரில் மாத்திரமே வித்தியாசம் ஆனால் கல்யாண பந்தத்திலும் சரி, தொழில், கல்வி, கலாசாரம், சமய சம்பிரதாயம் எல்லா வகையிலும்; எமக்கும் களுதாவளை மக்களுக்கும் இடையில் உள்ள உறவை 'பிட்டும் தேங்காய்ப்பூவும்' என்று ஒரு நாள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகசபை அவர்கள் கூறியது முற்றிலும் உண்மை என நினைக்கத் தோணுது. ஆனால் நாங்கள் அதற்கும் ஒருபடி மேலாய் அண்ணன் தம்பிகளாகவே வாழ்ந்து வருகின்றோம். இந்த உணர்வின் நிமித்தம்தான் எமது ஊரில் உள்ள களுதாவளைக் கிராமத்தவருக்கென்றே "களுதாவளைக் குடி" என்றொன்று உருவாக்கப்பட்டு அவர்களுக்கு சகல சம அந்தஸ்த்தும் கொடுக்கப்பட்டுள்ளதை பெருந்தன்மையுடன் நினைவுகூர விரும்புகின்றேன்.

விளையாட்டுப் போட்டிகள் என்றால் விரைந்து நிற்போம் நாங்கள். ஏனென்றால் அவர்கள் அந்த ஜீனுடன் பிறந்தவர்கள் அதுபோல் கலை நிகழ்வென்றால் விடிய விடிய களுதாவளை கிராமத்தவர் எமது ஊரில் நிகழ்வினைப் பார்ப்பதுடன், களுதாவளை ஆலயங்களிலும் எமது கிராமத்து கலை நிகழ்வுகளை அழைத்து அரங்கேற்றுவர். அப்படி ஒரு ஒற்றுமை எமது ஊர்களுக்கிடையில்.

அந்த வளர்ச்சியின் ஒரு அங்கமாகத்தான் "ஏகாதச ருத்ர வேள்வியின்" முதல் நாள் பூசைப் பொருட்கள் எமது தேத்தாத்தீவு கொம்புச்சந்தி விநாயகர் ஆலயத்தில் எடுத்துச் செல்வதற்கு அந்த ஆலய நிருவாகத்தினர் ஊர்மக்கள் ஒன்றுகூடி தீர்மானித்திருந்தனர். உண்மையில் அந்த உறவின் தேவை இன்று எமக்கு பலமாக இருக்கின்றது. அதை பாராட்டாமல், அந்த முடிவினை எடுத்தவர்களை உற்சாகப்படுத்தாமல் இருக்க முடியவில்லை. இதனால் எமது நட்புறவு மிக மேம்பட்டுள்ளது. இவ்வாறான நிகழ்வுகள் எதிர்காலத்திலும் ஏற்றத்துடன் எடுத்துச் செல்ல தீர்மானங்களை எடுக்கவேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.

எமது ஊர் மக்கள் இந்த நிகழ்வில் முழு ஒத்துழைப்பினையும் நல்கி அதற்கான எல்லா ஏற்பாட்டையும் தம் வீட்டு நிகழ்வாக செய்துள்ளமை உளம் நெகிழச் செய்துள்ளது. 

அகத்தியர் பெருமான் திருவானைப்படி சித்தர்களின் ஏற்பாட்டில் உல கநன்மைக்காகவும், உலகில் மாபெரும் சித்தர்களின் அருளாட்சி மலரவும், ஈழவழநாடு மாபெரும் சிவபூமியாகவும், ஸ்வர்ண பூமியாகவும், குபேர பூமியாகவும், திகழவும் களுதாவளை சுயம்புலிங்க தேவஸ்த்தானத்தில் இந்த வேள்வி மிகப் பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து வருகைதந்துள்ள மகா சித்தர்களினால் நடாத்தப்படும் இந்த வேள்வியில் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த வேள்வியின் முதல் நாளே எமது ஊரே சேர்ந்து சென்றது.

இங்கு சதுர்வேத பண்டிதர்களான சிவாச்சாரியார்கள், தில்லைவாழ் அந்தணர் பரம்பரையில் வந்த பல தீக்ஷிதர்களும்ஈ சித்த மரபில் வந்த பல சித்த குருமார்களும் ருத்ர உபாஷகர்களும் சிவனடியார்களும் என பலர் கலந்து சிறப்பித்து வருகின்றனர்.

இந்த உதாரணம் ஏனைய எமது மாவட்டத்தில் உள்ள ஏனைய கிராமங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு. ஒற்றுமையின் ஒப்பில்லா பலனை உணர்ந்தே மீசைக் கவிஞன் பாரதியும், 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே, நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே' என்றார். ஒற்றுமை இல்லையெனில் கிடைத்திருக்குமா சுதந்திரம்? நம் முன்னோர்களும் கூடியிருத்தலின் நலம் கருதியே 'தனிமரம் தோப்பாகாது, ஒற்றுமையே பலம், ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' போன்ற பழமொழிகளைத் தந்துவிட்டு சென்றனர். இதைக் எமது மக்களிடையே கட்டியெழுப்ப வேண்டும்.

0 comments:

Post a Comment