ADS 468x60

20 November 2018

எல்லாராலும் இதைப் பண்ண முடியாது- அமரர் ஊர்தி சேவை.

பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்

எல்லாராலும் இதைப் பண்ண முடியாது அதுக்கு ஒரு மனசும் சேவை செய்யும் இதயமும் தேவை. அதனால் திருப்தியடைகின்ற ஒரு சேவகரைப்பற்றி எழுதியே ஆகணும். இன்றய நவீன பரபரப்பான உலகில் யாரையும் யாரும் கவனிக்காத அல்லது கண்டுகொள்ளாத நிலையிலேயே வாழ்க்கையைப் பழக்கிக் கொள்ளுகின்றனர். ஒருத்தருக்கொருவர் ஒத்தாசையாய் தமது நேரத்தினை பணத்தினை செலவு செய்த காலம் இன்று இல்லாமல் போயுள்ளது. அதுபோக இன்னொருவர் செய்யும் நல்லவற்றை முகப்புத்தகத்தில் கூடியிருந்து குறைகூறும் மக்களிடையே இவற்றை மனத்தயிரியத்துடன் முன்னெடுப்பதென்பது பாராடடுதற்குரியது.

சீறிப்பாயும் வசன கர்த்தாக்களிடையே சேவை செய்யும் கோ.கருனாகரன் (ஜனா) என்னைப் பொறுத்தளவில் பாராடடுதற்குரியவர். இன்று கண்ணுக்கு தெரியும் பல நல்ல விடயங்களை கச்சிதமாய் செய்யும் இவர் போன்றவர்கள் அரசியலில் மிக மிக அரிதே காண்பதற்கு. 

எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் கிட்டத்தட்ட 500 க்கு மேல் கிராமங்கள் உள்ளன. அவற்றில் பல பின்தங்கிய கிராமங்கள், வயல் காட்டிலும் மலையடிவாரங்களிலும் போக்குவரத்து வசதிகள் இல்லாத இடங்களில் மட்டக்களப்பு வைத்தியசாலை அமைந்துள்ள இடத்தில் இருந்து கிட்டத்தட்ட 30 தொடக்கம் 50 கி.மீ வரையான தூரப்பிரதேசங்களில் அமைந்துள்ளமை யாமறியாததல்ல.

இவர்களில் பல குடும்பங்கள் நம் அனைவருக்கும் தெரிந்த வகையில் மிகப்பின்தங்கிய நிலையில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு பிறப்பு இறப்பு நிகழ்ந்தால் அது மிகப்பெரும் சவாலாக இருந்து வருகின்றது. அதிலும் ஆஸ்பத்திரியில் இறந்துவிட்டால் அநாதரவான பிரேதமாகும் பரிதாபத்தினை சொன்னால் புரியாது அனுபவித்தால் மாத்திரம் விளங்கும். அந்த வலிக்கு யாரும் பெரிசாக உதவியதை நாம் அறிந்ததில்லை. இது எம்மக்களிடையே பெரிய தேவையாக இருந்து வந்தது. 

No automatic alt text available.
நாள் தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் இந்த கிராமப்புறங்களில் இருந்து நகர்ப் புறங்களில் அமைந்துள்ள வைத்தியசாலைகளுக்கு வருகின்றனர். பலர் ஆஸ்பத்திரியிலேயே மேலதிக சிகிச்சைக்காக தங்க வைக்கப்பட,  சிலர் சிகிச்சை பலனின்றி இறந்து விடுகின்றனர்.

அவர்களில் பலர் தனியார் அமரர் ஊர்தி மூலம் தமது உறவினர்களின் பிரேதங்களைக் கொண்டு சென்றுவிட, ஏனையவர்கள் இவற்றை செய்ய முடியாத நிலையில் தினம் தினம் அல்லல்படுவதனை பார்த்துள்ளோம். தனியார் வாகனத்தில் இவற்றை கொண்டு செல்ல பல ஆயிரம் ரூபாய்க்கள் தேவைப்படுகின்றன. அவற்றை ஏழை எழிய மக்களால் திடீர் என பெற்றுக்கொள்ள முடிவதில்லை. ஏனெனில் அன்றாடம் தொழில் செய்யும் குறைந்த வருமானமுடைய குடும்பங்களே அநேகர் கிராமப்புறங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், இவ்வாறான இந்த சேவையை ஓரிருவருக்கு செய்யலாம் வருடம் பூராவும் தேவைப்படும் ஏனைய அனைவருக்கும் செய்வதென்பது முடியாத காரியம்தான்? ஏனெனில் அவை சவால் மிகுந்தவை, பதிலிறுக்கும் பல பிரச்சினைகளுக்கு உரியவை, அது ஒரு உயிரின் இறப்புடன் சம்மந்தப்பட்டது. இப்படியான இடர்பாடுடைய மிக அத்தியாவசியமான சேவையை கோ.கருனாகரன் அவர்கள் ஜி.கே அறக்கட்டளை ஊடாக எடுத்திருப்பது பல பல புண்ணியத்துக்குரியதாகவே மக்களாலும் என்னாலும் பார்க்கப்படுகின்றது. 

இவர் பல மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிறைய சேவைகள் செய்வதனை அறிவேன் இருந்தும் அதற்கெல்லாம் மேலாக இவர் முன்னெடுக்கும் இந்த சேவை என்னால் முதன்மையாகப் பார்க்கப்படுகின்றது.

ஒவ்வொரு தடவையும் நான் இவர் இடுகின்ற போஸ்டர்களை பார்க்கும் போது மனம் நெகிழ்ந்து உள்ழூர வாழ்துவேன். அதை பொதுவெளியில் இடுக்கை பண்ணவேண்டும் என்பதற்காகவே இதை நான் எழுத வேண்டும் எனத் தோணியது. இங்கு எந்த அரசியல் நோக்கமும் கிடையாது, அதுபோல் அவருடனான தனிப்பட்ட நட்பும் கிடையாது.

நல்ல சேவையை நம்மால் செய்ய முடியவில்லையா, குறைந்தது அவ்வாறு செய்கின்றவர்களை பாராட்டும் மனதையாவது நாம் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் அந்தச் சேவை செய்பவர்கு இன்னும் ஏதாவது செய்யவேண்டும் என்னும் ஆர்வம் தோன்றும். இந்த மகத்தான சேவையை நீங்கள் எந்தச் சந்தர்பத்திலும் கைவிடாதீர்கள் என நான் எமது மக்களின் குரலாக உங்களிடம் வேண்டுகின்றேன். அத்துடன் இந்தச் சேவையில் உங்களுடன் கைகோர்துள்ள சக ஊழியர்களையும் நான் நெஞ்சாரப் பாராட்டுகின்றேன்.

எனது விருப்பம் இந்தச் சேவையை இன்னும் விஸ்த்தீரணம் பண்ண ஆவண செய்ய வேண்டும். மிகக் கஸ்ட்டத்தில் இறக்கின்றவர்களின் இறுதிக் கிரியையும் தேவைப்பட்டால் செய்து உதவும் ஒரு திட்டத்தினையும் நாம் இதில் சேர்த்துக்கொண்டால் மிக பெரிய உதவியாக இருக்கும் அந்த அந்தக் குடும்பங்களுக்கு. அத்துடன் முறையாக பலர் இறப்புச் சான்றுதல், மருத்துவச் சான்றுதல் பெறுவதிலும் சிரமப்படுகின்றமையை அவதானித்திருக்கின்றேன், அவ்வாறான விடயங்களிலும் அதை பெற வழிதெரியாதவர்களுக்கு உதவ முன்வந்தால் அதைவிட வேறொன்றுமில்லை பாராட்ட.

அத்துடன் தனியார் அமரர் ஊர்திகள் தமக்கு இருக்கும் மொனோபோலியை பயன்படுத்திக்கொண்டு இந்த மக்கள் சிகிச்சைக்காகப் பயன்படுத்தும் தொகையினை விட பன்மடங்கு அவர்களுக்காக செலவிட வேண்டியுள்ளது. அரசு இவற்றை ஒரு கட்டுபாட்டு விலை நிர்ணயித்து ஏனைய நடுத்தர மக்களும் பயன்பெறும் வழியினையும் கிலோ மீற்றருக்கு இவ்வளவு என பரிந்துரைக்க வேண்டும். 

காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே 

0 comments:

Post a Comment