ADS 468x60

08 April 2020

கண்ணுக்குத் தெரியாத கொரோணாவும் கண்ணுக்குப் புலனாகும் தலைமைத்துவமும்

இன்று உலகத்திலேயே தீயாய் பரவி வருகின்றது கொரோணா என்று அழைக்கப்படும் கொடிய தொற்றுநோய். இந்த கொடிய நோயினைத் பரவாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்த உலக நாடுகளின் வரிசையில் இலங்கை முதன்மையாக இருக்கின்றது. ஆகவே நாம் வேகமாகப் பரவி உயிர்களைக் கொள்ளை கொள்ளும் இந்த கொடிய நோயினை தடுப்பதற்கு ஆரம்பத்தில் பல நடவடிக்கைகளை எடுத்ததன் மூலம் ஏனைய நாடுகளுடனான இழப்புகளை ஒப்பிடும் பொழுது அது எமது நாட்டுமக்களை பாரிய அளவில் பாதிக்காத சாதகமான ஒன்றாகவே இருக்கின்றது.

இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது எங்களுடைய அரசாங்கம் எடுத்த நடவடிக்கை காரணமாக பல உயிர்களை இக்கொடியநோயில் இருந்து முடிந்தளவு காப்பாற்றி இருக்கின்றது.

இதன் காரணமாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் உடைய தலைவர் வைத்தியர் ரெட்ரொஸ் அவர்களின் பாராட்டு எங்களுடைய நாட்டுக்கு பிரத்தியேகமாக கிடைத்திருக்கின்றது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் எங்களுடைய நாட்டின் ஜனாதிபதி கோட்டாபாய அவர்களுக்கு டெலிபோன் மூலமாக இந்த கொவிட் 19; நோய் பரவாமல் இருப்பதற்கு முன்னெச்செரிக்கையாக எடுத்த அத்தனை நடவடிக்கைகளையும் பாராட்டி இருக்கின்றார். அதனை அவர் அவரது சொந்த ருவிட்டில் குறிப்பிட்டிருக்கின்றார். எங்கள் நாட்டினுடைய ஜனாதிபதி உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவருடன் இந்த கொடிய நோய் பரவ விடாமல் செய்வதற்கான நடவடிக்கைகள் மீதான முன்னேற்றம் பற்றி விரிவாகப் பேசியுள்ளார்.

'இந்த கொடிய நோயினை இல்லாதொழிப்பதற்காக பாடுபடுகின்ற அத்தனை அரச அதிகாரிகளையும், திணைக்களங்களையும் பற்றி அவர் பாராட்டி நன்றி தெரிவித்ததோடு, இந்த கொடிய நோய் எவ்வாறு இலங்கைப் பொருளாதாரத்தில் பாதிப்பினை ஏற்படுத்தி இருக்கின்றது என்பது பற்றியும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி உள்ளேன்' என்று அவர் தனது தனிப்பட்ட டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆகவே இன்றைய நிலையில் தனிப்பட்ட ஒரு பிரதேசமும் தனிப்பட்ட ஒரு நாடு என்று இந்த தொற்றுக்கு எதிராகப் போராடாமல் உலகம் பூராகவும் ஒன்றிணைந்து இந்தக் கொடிய நோய்களுக்கு எதிராக போராட வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தில் அல்லது புரிதலில் நாங்கள் இருப்பது இன்று உணரப்பட்டிருக்கிறது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளபடி, உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இது ஒரு 'உலகலாவிய தொற்றுநோயாக' அறிவிக்கப்படுவதற்கு முன்பே, கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க அதற்கு எதிராக அத்தனை செயற்பாட்டு நடவடிக்கைகளையும் எடுத்த முதல் நாடுகளின் பட்டியலில் இலங்கை ஒன்றாக இருக்கின்றது. அந்தவகையில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க இலங்கை அரசு தனது சக்திவாய்ந்த தனிமைப்படுத்தலுக்கான சட்டங்களை உருவாக்கி, நன்கு நிறுவப்பட்ட இலவச சுகாதார முறையையும் முப்படையினரையும் வினைத்திறனாகப் பயன்படுத்தியுள்ளது.

நேற்று வரைக்கும் இலங்கையில் கொடிய நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 185 ஆக உயர்ந்துள்ளது அத்துடன் இதுவரைக்கும் 6 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளார்கள். அந்த வகையில் மேல் உள்ள நாடுகளுடன் ஒப்பிடும்போது எமது நாட்டுக்கு இது சாதகமானதாகவே இருக்கின்றது ஆனால் உலகளாவிய ரீதியில் 1.4 மில்லியன் பேர் இந்த தொற்றுக்கு உள்ளாகி இருக்கின்றனர் அத்துடன் 82000 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் (07.04.2020 வரைக்கும்) என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏதிர்பார்க்கமுடியாத இந்த தொற்றுநோய் பரவலை தடுக்க இந்த நெருக்கடி நிலையில் இலங்கை கையாண்ட நடவடிக்கைகளுக்கான சர்வதேச அங்கீகாரத்தின் மேலும் ஒரு அடையாளமாக, உலக வங்கியும் இலங்கைக்கு 128.6 மில்லியன் அமெரிக்க டாலர்களை (தோராயமாக ரூபா .25,000 மில்லியன்) உறுதியளித்துள்ளது.

முழு இலங்கை மக்களுக்கும் பயனளிக்கும் அரசின் மத்தியவங்கியுடனான ஒரு எண்ணக்கருவாக வைரஸ் பரவுவதை நிறுத்த அல்லது குறைக்க முன்னுரிமை அளிக்கும், பாதிக்கப்பட்டவர்களின் எண்களைக் குறைக்கும் மற்றும் மக்களிடையே தொற்றுப்பரவுவதனை; தடுக்கும் நடவடிக்கை ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உதவியானது அவசரகால அனர்தங்களுக்கு எதிரான பதிலளிப்பு வழிமுறைகளை அளவிடுகிறது, ஆய்வகங்கள் மற்றும் மருத்துவமனைகளின் திறனை வலுப்படுத்துகிறது, பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கிறது, மருத்துவ ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கும், மற்றும் கை கழுவுதல், சுகாதாரம் மற்றும் சமூக இடைவெளி; பற்றிய பொது விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கிடைத்திருக்கின்றது.

இந்த வகையான சர்வதேச ஒத்துழைப்பு முழு உலகமும் ஒன்றிணைந்து போராட வேண்டிய ஒரு போர் என்பதற்கு எடுத்துக்காட்டுகின்றது. ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ சார்க் தலைவர்களுடனான தொலைதொடர்பு மாநாட்டில் இந்த விஷயத்தை தெளிவுபடுத்தினார், அங்கு அவர் 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்த நோய்தொற்று தணிக்கும் முயற்சிகளுக்கு கொடுக்க உறுதியளித்தார்.

இந்த நேரத்தில் கடன் நிலைமைகளை எளிதாக்க பன்னாட்டு கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் ஓ.இ.சி.டி நாடுகளை அவர் சரியாக வலியுறுத்தியுள்ளார். ஒரு வெற்றிகரமான தடுப்பூசி எந்த நாட்டினாலும் அல்லது தயாரிக்கும் நிறுவனத்தினாலும் குறைந்த செலவில் முழு உலகிற்கும் கிடைக்க வேண்டும் என்பதையும் அங்கு எடுத்துரைத்தார். நமது விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களும் பயங்கரமான நோய்க்கான மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளைக் கண்டுபிடிக்கும் ஒரு செயற்பாட்டில் போட்டிபோட்டு ஈடுபட வேண்டும் என்பதனையும் கூறினார்.

ஜனாதிபதியின் தூரநோக்குக்கு ஏற்ப, இலங்கையின் கோவிட் -19 தணிக்கும் முயற்சிகளுக்கு அந்நிய செலாவணியில் பங்களிப்பு செய்யுமாறு வெளிநாட்டிலுள்ள நன்கொடையாளர்களையும் மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது. மேலும், ஜனாதிபதியின் ஒரு கருத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட கொவிட்-19 சுகாதார நிதியம், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்தும், இலங்கைக்குடிமக்கள் என்ற எண்ணம் கொண்ட தனிப்பட்ட குடிமக்களிடமிருந்தும் நன்கொடைகள் கிடைக்கப்பெறுவதை இங்கு குறிப்பிடவேண்டும். இந்த வகையான நெருக்கடியைக் கையாள்வதில் இச்செயற்பாடு மிகவும் பெறுமதிவாய்ந்ததாக இருக்கும்.

இந்த கட்டத்தில் கொரோணா தொற்றுக்கு எதிரான ஒரு போரில் ஈடுபட்டுள்ளோம் என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் - இது ஒரு வழக்கமான ஆயுதப்போர் அல்ல, இது; கண்ணுக்குத் தெரியாத எதிரிக்கு எதிரான ஒரு போர், இது ஒரு பெரிய அளவில் நிர்கதியை ஏற்படுத்தும். எந்தவொரு அறியப்பட்ட உரிய சிகிச்சை முறையும் இல்லாத இந்த கடுமையான தொற்றுநோயிலிருந்து குடிமக்களைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க, அரசு, சுகாதார அமைச்சு மற்றும் பாதுகாப்புப் படைகள் ஆகியோருக்கு முழுமையாக ஆதரவளிப்பது நமது கடமையாகும்.

எனவே அரசாங்கம் விதித்த ஊரடங்கு உத்தரவை மதிக்க வேண்டியது அவசியம். இதன் ஊடாக மக்களிடையே சமுக இடைவெளியை செயல்படுத்துவதன் மூலம் சமூக அளவில் நோய் பரவுவதைத் தடுக்க முடியும்.

எல்லோரும் வீட்டில் இருக்கும்போது, வைரஸ் ஊடுருவ எந்த மார்கத்தினையும் அதனால் கண்டுபிடிக்க முடியாது என்பது இதன் கருத்து. ஒரு வைரஸ் நோயிலிருந்து வெளியேறுவதை விஞ்ஞானிகள் விவரிக்கையில் இதன் பரவலுக்கான 'வளைவைத் சமாந்தரமாக்கல்' மட்டும்தான் ஒரே வழி. ஆனாலும் எமது நாட்டில் ஆங்காங்கே துரதிர்ஷ்டவசமாக, 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் ஊரடங்கு உத்தரவை மீறியுள்ளனர், இது தங்களையும் மற்றவர்களையும் ஆபத்தில் கொண்டுவிட்டுள்ளது. இந்த அரசின் நடவடிக்கைகள் பின்பற்றப்படாவிட்டால் நாங்கள் எங்கு செல்வோம் என்பதற்கு மேலதிக ஆதாரம் தேவைப்பட்டால், அமெரிக்கா, இத்தாலி மற்றும் ஸ்பெயினைப் பாருங்கள்.

உண்மையில் மக்களை அடைத்து வைப்பது கடினம் மற்றும் சிரமமானது இதனால் நிறைய வாழ்வாதாரங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இருந்தபோதும்; அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலத்தை உறுதிப்படுத்த நாம் அனைவரும் இந்த கட்டத்தில் ஒரு தியாகத்தை செய்ய வேண்டும். இதை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டால், 30 ஆண்டுகால யுத்தம் மற்றும் எங்களை கொண்டழித்த சுனாமி நாள் இவற்றினால் ஏற்பட்ட இறப்புக்கள் கூட இதன்முன் தொகையளவில் மிகச்சிறியதாக இருக்கும். அரசாங்கம் எமது நாடு பாதுகாப்பான ஒரு நிலைக்கு திரும்பியுள்ளது என்று ஊர்ஜிதமாக அறிவிக்கும் வரை நாங்கள் அனைவரும் அரசு, சுகாதார பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

0 comments:

Post a Comment