ADS 468x60

10 November 2020

கொரோணாவும் நாட்டின் பொருளாதார மாற்றமும்: ஒரு ஆய்வு.

உலக மக்கள்தொகையில் கால் பகுதியினர் தற்போது கொரோனாவினால் ஒரு இறுக்கமான கட்டுப்பாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். சமீபத்திய மனித வரலாற்றில் முதல்முறையாக, கொரோனா வைரஸானது பொருளாதாரம் இந்த உலகில் முதலில் வர வேண்டும் என்ற கட்டுக்கதையை சிதைத்துவிட்டது. கொவிட்-19 தொற்றுநோயைக் கையாளும் போது பொது சுகாதார சவால்கள் சந்தேகத்திற்கு இடமின்றி மற்ற எல்லா விடயங்களுக்குள்ளும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றாலும், தற்போதைய சூழ்நிலையின் பொருளாதார செலவுகளை புறக்கணிப்பது விவேகமற்றது என்னே எண்ணத் தோணுது.

உலகத்தில் ஏற்பட்டுள்ள ஆபத்தான கொரோணா தொற்றால் பல எதிர்மறை மாற்றங்களை உண்டுபண்ணி இழப்புகளை தோற்றுவித்தவண்ணம் உள்ளன. சுகாதார, சமுக மற்றும் பொருளாதார சவால்களை இதனால் எதிர்கொண்டுள்ள நாடுகள் பட்டியலில் இலங்கையும் உள்ளடங்கும். இவ்வாறான பாதிப்பு எந்தவகையில் நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது, அது எவ்வாறான அரசின் கொள்கை மாற்றத்துக்கு தூண்டுகோலாக இருந்துள்ளது? அதன் எதிர்கால பொருளாதார அரசியல் தன்மை எவ்வாறு அமையப்போகின்றது என்பன பற்றி இந்தக் கட்டுரையில் ஆய்வுசெய்யப்பட்டுள்ளது.

எமது நாட்டில் ஒக்டோபர் மாத இறுதிக்குள் பல கொரோணா பரவல் கொத்தணிகள் மீண்டும் எழுந்ததன் மூலம் நாடு பலவகையிலும் முடக்கப்பட்டதால், கோவிட் -19 தொற்றுநோய்க்கு பதிலளிக்கும் வகையில் எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகளின் விளைவாக, பல வருடங்களுக்கு இலங்கை அதன் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருக்கும்.

மத்தியவங்கி அறிக்கையில் பொருளாதாரம்

மத்திய வங்கியின் சமீபத்திய பொருளாதார முன்னேற்ற அறிக்கையின்படி, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2020 ஆம் ஆண்டில் 1.7% ஆகக் குறைந்து.  2021 ஆம் ஆண்டில் அது 5% வளர்ச்சியை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த வீழ்ச்சிக்கு நேரடிக்காரணமாக 2020 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில், தொற்றுநோயால் ஏற்படுத்தப்பட்ட தாக்கமே பிரதிபலிப்பாக இருக்கின்றது.

நாட்டின் பாதீட்டுப்; பற்றாக்குறை 2020 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.3% ஆக அதிகரிக்கும் என்றும், இது 2019 இல் 6.8% ஆக இருந்தது எனவும் அறிக்கை காட்டுகின்றது.

பொருளாதார நடவடிக்கைகள் இயல்பு நிலைக்கு திரும்பினாலும், தற்போது கொரோணாவினால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பாதிப்புகள் அடுத்த சில ஆண்டுகளுக்கு தொடரும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். ஆயினும்கூட, இந்த தொற்றுநோயில் இருந்துவிடுபட அரசு விரைவாக பல நடவடிக்கைகளை எடுக்கும் என்று நம்பப்படுகின்றது.

இந்த தொற்றுநோயில் இருந்து பாதுகாக்க மார்ச் 2020 முதல் செயல்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் பொருளாதாரத்தின் சில துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. சில்லறை விற்பனை, சுற்றுலாத்துறை, கட்டுமானத்துறை மற்றும் உணவகங்கள் மற்றும் போக்குவரத்து போன்ற தொழில்த்துறை உற்பத்தியில் குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டன, ஏனெனில் இவையெல்லாம் பெரும்பாலும் சர்வதேச பயணத் தடை மற்றும் நாடு தழுவிய தடைகள் ஆகியவற்றால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் வளமைக்கு மாறான செலவுகளும் பொருளாதாரமும்

 எமது அவதானத்தில் சுகாதார பிரச்சினை காரணமாக கடன் சேவைகளுக்கான செலவு மற்றும் ஏனைய செலவுகள் அதிகரித்துள்ளதால், இலங்கையின் தற்போதைய நிதி நிலைமை இறுக்கமாக இருந்துவருகின்றது.

இது வரும் ஒருசில வருடங்களுக்கு அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் இருக்கின்றது. இன்று எமது வருமானம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு தடுப்பூசி இருந்தால், அதற்கும் அவர்கள் பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். அதற்கு அப்பால் கோவிட் -19 காரணமாக, மக்களால் அதிகம் தொழிலில் ஈடுபட்டு சம்பாதிக்க முடியாததால் அவர்கள் அரசுக்கு குறைந்த வரியினையே செலுத்துகிறார்கள். கோவிட் -19 க்கு முன்பே, பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக அரசாங்கம் பாரிய வரி சலுகைகளை மக்களுக்கு வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நாட்டில் நாங்கள் வருவாயை கணிசமாக இழந்துவிட்டோம். பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்று எதிர்பார்த்து வரி சலுகைகளை அரசாங்கம் வர்த்தகர்களுக்கு வழங்கியது. இறக்குமதிக் கட்டுப்பாடுகளைப் பொறுத்தவரை, நமது அரசாங்க வருமானத்தில் 50% வீதம் இறக்குமதியிலிருந்து கிடைத்து வந்தது, கொரோணா தொற்றில் இருந்து பாதுகாக்க இறக்குமதியை அரசு கட்டுப்படுத்தியதால் கணிசமான அளவு வருவாய் குறைந்தது உதாரணமாக, மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்யும் போது அரசாங்கம் ஈட்டிய வருவாயை கொவிட்டுக்கு பின்னர் இழந்தது.

துறை ரீதியான பின்னடைவுகளும் வெரிட் ஆய்வறிக்கையும்.

இலங்கையின் டொலர் வருவாய் தொடர்பான பிரச்சினைகளை பார்ப்போமானால், டொலர்($) சம்பாதிக்கும் முக்கிய தொழில்களில் ஒன்று சுற்றுலா துறையாகும், இது கோவிட் -19 ஆல் முழுதாகப் பாதிக்கப்பட்டது. இருப்பினும், வெளிநாடுகளில் இருந்து தொழிலாளர்களின் பணம் அனுப்புவது சற்று உயர்ந்தது, இது ஒரு நல்ல அறிகுறியைக் காட்டுகிறது. 

இந்த நிலையில் அண்மையில்; மேற்கொள்ளப்பட்ட வெரிட் ஆய்வின் ((Verité Research) படி 2021 ஆம் ஆண்டில் அதன் மொத்தச் செலவு மொத்த வருமானத்தினையும் விட அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அதனால் பாதீட்டில் பாரிய பற்றாக்குறை ஏற்படும் எனச் சொல்லப்படுகின்றது. அந்தவகையில் நிதி அமைச்சின் கூற்றுப்படி, அரசாங்க வருவாய் 2019 இல் ரூ. Rs.1,891 பில்லியனாக இருந்து 2020 இல் Rs.1,450 பில்லியன் ரூபாக்களாக குறைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இது எமது நாட்டின்; மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% வீதத்துக்கும் குறைவாக இருக்கும் எனவும் சொல்லப்படுகின்றது, இது உலகின் மிகக் குறைவான ஒரு வருமான பங்களிப்பாகக் கருதப்படுகின்றது. இதற்கு காரணம் 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் செயல்படுத்தப்பட்ட வரிக் குறைப்புக்கள் மற்றும் கோவிட் -19 க்கான தணிப்பு மூலோபாயத்தின் பொருளாதார தாக்கங்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

அரசின் சலுகைகளும் பொருளாதார நெருக்குதலும்.

அதாவது அரசாங்க செலவினங்களில் பெரும் பங்கு கட்டாயம் செய்யவேண்டி உள்ளதனால்; வருவாய் குறைப்பு ஒரு குறிப்பிடத்தக்க நிதி சவாலாக உள்ளது. உதாரணமாக, 2020 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் வருவாயானது வளமையாக செலுத்தப்படுகின்ற சம்பளம் மற்றும் வட்டி செலவினங்கள் ஆகியவை நாட்டின் மொத்த வருவாயின் 127 வீதத்துக்கு சமமாக இருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது

அரசியல் பொருளாதார சவால்களைக் கருத்தில் கொண்டு, வெரிட்டாவின் கூற்றுப்படி ஒரு விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதாவது அரசாங்க செலவினங்களில் பெரும் பங்கு, சமுர்தி போன்ற நலத்திட்டங்கள் மற்றும் உர மானியங்கள் உள்ளிட்ட பிற தொடர்ச்சியான செலவினங்கள உள்ளடங்குவதனாலும் பல வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டதனாலும் அவை பாரிய செலவினங்களுக்கான காரணங்களாக அமையப்பெற்றிருந்தன. 

அதிகரித்த கடன்களைப் பெற்று தொடர்ச்சியான செலவினங்களுக்கு நிதியளிப்பது என்பது ஒரு நிலையற்ற மூலோபாயமாகும், இது இலங்கையின் தற்போதைய நிலையான கடன்களைப் பேணுவதில் சவால்களை தோற்றுவித்துள்ளது. ஆகவே இவ்வாறான வட்டிக்கு கடன் பெற்று செலவிடும் செலவினங்களினை குறைத்து பலமான பொருளாதாரத்தினைப் பேண வருமானமட்டத்தினை அரசு உயர்த்தும் மூலங்களை கண்டறிதல் அவசியமாகும். நடைமுறையில் உள்ள பலவீனமான பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, இத்தகைய வருவாய் மேம்பாட்டு நடவடிக்கைகள் பொருளாதார உற்பத்தியைத் தடுக்காதவையாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

கோவிட் -19 தொற்றுநோய் பரவுவதால், இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளும் பொருளாதார நடவடிக்கைகளில் ஒரு பின்னடைவு, அந்நிய செலாவணி வருவாயில் தேக்கம்;, ஏனைய வருமான வசூல் குறைதல் மற்றும் சுகாதாரம் மற்றும் நலன்புரி தொடர்பான செலவினங்களின் அதிகரிப்பு ஆகியவற்றைக் எதிர்கொண்டுள்ளன. எவ்வாறாயினும், அரசாங்கமும் மத்திய வங்கியும் வழங்கிய உடனடி மற்றும் தேவையான கொள்கை அமுலாக்கம் காரணமாக இலங்கைக்கு கோவிட் -19 இன் சாதகமற்ற விளைவுகளை பெருமளவில் கட்டுப்படுத்த உதவியது, அதனால் மேலும் 2020 மே நடுப்பகுதியில் பொருளாதாரத்தை இயல்பு நிலைக்குத் திருப்பியது என்பது நாம் அனுபவித்தறிந்தவை.

உதாரணமாக, தொற்றுநோயால் குறைந்த அந்நிய செலாவணி இருப்பினை பேணுதல் மற்றும் வெளிநாட்டு கடன் சேவைக் கடமைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய அவசியம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மார்ச் 2020 முதல் அந்நிய செலாவணியைப் பாதுகாப்பது அவசியம் என்று அரசாங்கத்தின் கருத்தில் இருந்தபோது, இலங்கை அரசாங்கமானது அத்தியாவசியமற்ற இறக்குமதிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்தனர்;.

இத்தகைய தீர்க்கமான மற்றும் தைரியமான நடவடிக்கை காரணமாக, உலகளாவிய பெட்ரோலிய விலைகள் குறைந்த நிலையில்;, முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது, ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் வர்த்தக இறக்குமதிக்கான செலவினங்களின் அடிப்படையில் கிட்டத்தட்ட 3 பில்லியன் டாலர்களை மிச்சப்படுத்தியது. 

இந்த சேமிப்பானது எதிர்பாக்கப்பட்ட வர்த்தக ஏற்றுமதி, சுற்றுலா தவிர மற்ற சேவை ஏற்றுமதிகள் மற்றும் தொழிலாளர்களின் பணம் அனுப்புதல் ஆகியவற்றின் அடிப்படையில் எதிர்பார்த்ததை விட சிறந்த விளைவுகளாக இருந்தது., 2020 ஆம் ஆண்டில் வெளிச்செல்லும் நடைமுறைக் கணக்கு பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5வீதத்துக்கும் குறைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

2020 மே மாதத்தில் நாடு முடக்கப்பட்டு தளர்த்தப்பட்டதிலிருந்து விரைவாக மீட்கப்பட்டதற்கு சான்றாக, இலங்கை பொருளாதாரம் 2021 ஆம் ஆண்டில் மீண்டும் முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும் கோவிட் -19 தொற்றுக்கள் ஒக்டோபரில் மீண்டும் எழுச்சி பெற்றமையானது எதிர்பார்த்த வேகத்தை ஓரளவிற்கு பாதிக்கும் என்பது எனது கருத்தாகும்.

மத்திய வங்கி வர்த்தக பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.5 சதவீதத்திலிருந்து 6.6 சதவீதமாகக் குறைக்கும் என்று கணித்துள்ளது, தற்பொழுது பொருளாதாரம் மந்தமடைகிறது மற்றும் அரசாங்கத்தின் வெளிநாட்டு கடன்கள் எதிர்மறையாக மாறும் நிலை தோன்றியுள்ளது, இது சேமிப்பு முதலீட்டு இடைவெளியைக் குறைத்து நடைமுறைக் கணக்கு பற்றாக்குறையை தூண்டிவிட்டுள்ளது.

தேசிய சேமிப்பு 25.3 வீதத்தில் இருந்து 25.4 வீதமாக உயரும்போது, மொத்த முதலீடு 2020 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 26.9 வீதமாகவும், 2019 ல் 27.4 வுதமாகவும் குறைவடையும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

முடிவுரை

முக்கியமாக, இந்த நிலைமையை ஒரு பொது சுகாதார நெருக்கடியாக நிர்வகிக்க வேண்டும். வைரஸ் மீண்டும் பரவுவதற்கான சாத்தியக்கூறுகளை இல்லாது முகாமை செய்து, பொருளாதாரத்தை மீழ் தொடக்கம் செய்வதற்கான சமூக தொலைதூர நடவடிக்கைகளுக்கான கட்டுப்பாடுகளை எளிதாக்க முயற்சிப்பதில் நாம் மிக வேகமாக செல்லக்கூடாது. சீனா தற்போது இந்த நுட்பமான சமநிலையை அணுக முயற்சிக்கிறது, ஆனால் இலங்கை இன்னும் அந்த இடத்திற்கு அருகில் இல்லை.

கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு முன் சமூகம் பரவுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கட்டுப்படுத்தத் தவறியது தேசிய சுகாதார அமைப்பில் பேரழிவு எல்லாவகையான சுமைக்கும் வழிவகுக்கும், இவை தவிர்க்க முடியாமல் அதிக பொருளாதார இழப்புகளுக்கு வழிவகுக்கும். மேலும் தொற்றுநோய் மற்றும் உலகளாவிய மற்றும் உள்நாட்டு பொருளாதார விளைவுகள் குறித்த நிச்சயமற்ற தன்மை குறைந்தது அடுத்த ஆறு மாதங்களில் எல்லா துறைகளிலும் கொள்கை மாற்றங்களைக் கொண்டுவரலாம். எவ்வாறாயினும், எதிர்காலத்திற்காகத் உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவித்து தன்னியைவான பொருளாதார சாத்தியம் நோக்கி பொருளாதாரத்தினை முன்னகர்த்துவது இலங்கைக்கு சிறந்த நன்மைகளைக் கொண்டுவரும். 



0 comments:

Post a Comment