ADS 468x60

12 November 2020

இப்படியும் ஒரு கல்வியை நாம் நினைக்கவில்லை!

கோவிட்-19 தொற்றுநோய் உலகளவில் கல்வி முறைகளை பாதித்துள்ளது, இது பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்விக் கல்லூரிகளை மூடுவதற்கு வழிவகுத்தது. கோவிட்-19 இன் பரவலைக் குறைக்கும் முயற்சியில் உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான அரசாங்கங்கள் கல்வி நிறுவனங்களை தற்காலிகமாக மூட முடிவு செய்தன என்பது நாம் அறிந்ததே.

அந்தவகையில், மிகமுக்கியமாக இந்த வளர்ந்து வருகின்ற நாடுகளில் அதிலும் எம்போன்ற யுத்தத்தினால் மற்றும் வேறுபல அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள பிராந்தியங்களுக்குள் ஏற்கனவே கல்வி பின்னடைந்துள்ள இந்தச் சூழலில், இது நமக்கு விழுந்த பேரிடியாகவே பார்க்கப்படுகின்றது.

இவற்றையெல்லாம் வெற்றிகொள்ளும் மனப்பாங்கை நாம் அனைவரும் சிந்தித்து வளர்த்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் நாம் உண்மையான வெற்றியாளர்களாக கருதப்படுவோம். இதற்கு அனைத்து வகையான சுகாதார பாதுகாப்பு முறைகளையும் நாம் நிச்சயம் கடைப்பிடித்து வாழப்பழகவேண்டும்.

பொதுவாக எமது பார்வையில், கல்வி என்பது புத்தகங்கள், கற்பித்தல் முறைகள் இவற்றைத் தாண்டி ஆசிரியர் மாணவர் உறவின் மூலமாகவே அவை உறுதியுறுகின்றது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. எனவே, கொரொனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மற்றும் நீண்ட ஊரடங்குகால, தடைகளால்; மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட மாறுபட்டச் சூழலை கவனமுடன் சமாளிக்க வேண்டிய கடமை கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தின் சார்பில் கல்விச் சுமையைக் குறைக்க, புதிய பல அணுகுமுறைகளையும் மற்றும் பாடத்திட்டத்தில் சில மாற்றங்களையும் கொண்டுவந்தாலும், பாடசாலையில் அதிபர்கள் மற்றும் சக ஆசிரியர்கள் தங்களது மாணவர்களை அணுகும் முறையை அவர்களின் மனச்சூழலுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்வது இன்றியமையாதது.

ஊரடங்குகாலமும் மாணவர்கள் கல்வியும்

ஆகNவு எல்லோரும்போல நாம் எண்ணுவது, கொரோணா தடை அல்லது ஊரடங்குசட்ட காலத்தில் மாணவர்கள், நன்றாக ஓய்வெடுத்திருப்பார்கள், எனவே, அவர்கள் மீண்டும் பாடசாலைகளுக்கு புத்துணர்வுடன் வருவார்கள் என்பதேயாகும். ஆனால், நாம் புரிந்துகொள்ள வேண்டிய இன்னொருபக்கம் ஒன்று உள்ளது. அதாவது, அனைத்து மாணவர்களுக்கும் ஓய்வுச்சூழல் எல்லோருக்கும் ஒன்றுபோல் அமைந்திருக்க வாய்ப்பில்லை. 

நாம் அன்றாடம் பார்க்கலாம், ஒரு பகுதியினர் உண்மையாகவே நல்ல உணவும் ஓய்வும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும் கிடைக்கப்பெற்று நல்ல மனநிலையில் இருக்கலாம். ஆனால், மருத்துவர், தாதியர்கள்;, பாதுகாவலர், சுகாதாரப் பணியாளர் இவர்களுடன் நாளாந்த உணவினை உற்பத்தியாக்கும் விவசாயிகள்; உள்ளிட்ட முன் வரிசைப் போராளிகளின் குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்களின் மனச்சூழல் நிச்சயம் வேறுபடும். மேலும், நாளாந்த வருவாயை நம்பியிருப்பவர்கள் மற்றும் கொரோனா பாதிப்பு அல்லது உயிரிழப்பு ஏற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியிருக்கலாம். இக்குடும்பங்களிலிருந்து வரும் பிள்ளைகளின் மனநிலையும் உடல்நிலையும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்க சந்தர்ப்பங்கள் அதிகம்.

ஆகவே நாம் எப்பொழுது இயல்பு நிலை திரும்பி பாடசாலைகள்; வழக்கம்போல் முழுமையாகத் திறக்கப்படும் என்ற முடிவு தெரியாத இந்தச் சூழ்நிலை இது 'ஒரு உண்மையான சமூகச் சீர்குலைவாகவே' கருதப்படுகின்றது. கற்றுக்கொடுப்பதையே நமது கடமையாக எண்ணிக்கொண்டிருக்கும் மூத்தோர் மற்றும் ஆசிரியர்கள், பாதிக்கப்பட்ட குழந்தைகளிடமிருந்து நிச்சயம் கற்றுக்கொள்ள ஏராளம் உள்ளன. பாடசாலைகளும் ஆசிரியர்களும் கல்விக்கும் மேல் கருணையை ஊட்ட வேண்டியுள்ளதை உணர வேண்டிய சிக்கலான தருணமிது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

இயற்கையனர்த்தங்களுடனான கல்வி

நாம் எமது நாட்டில் ஒவ்வொரு தடவையும் இயற்கைப் அனர்த்தங்களை அல்லது பேராபத்துக்களை எல்லாம் சந்திக்கும்போதும், அதன் பின்விளைவுகள் வளரும் தலைமுறையினரை அதிகம் பாதித்துள்ளதை வரலாறு நமக்கு உரைக்கிறது. உதாரணமாக, இலங்கை சந்தித்த மாபெரும் பேரிடரான 2004 ஆம் ஆண்டின் சுனாமி தாக்குதலை எடுத்துக் கொள்வோம். அதன் பின்விளைவுகள் கணிசமாக எண்ணிக்கையில் குழந்தைகளை குடும்பமற்றவர்களாகவும் மனப்பிறழ்வுக்கும் ஆளாக்கியது. அப்போது, அரசாங்கம் பல்வேறு தொண்டு நிறுவனங்களும் மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்பு நடவடிக்கைகளைப் பாதிக்கப்பட்ட இடங்களில் மேற்கொண்டன. அவற்றுள் பொருளாதர மீட்பை விட மிகவும் சவால் நிறைந்ததாக விளங்கியது எதுவென்றால், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மனநிலையைச் சமநிலைப்படுத்தி அவர்களுக்கு மறுவாழ்வும் கல்வியும் அளிப்பதாக இருந்தது. என்றாலும், அம்முயற்சிகளின் பலனாக பாதிப்புக்குள்ளான பல குழந்தைகள் இன்று நல்ல நிலையில் உள்ளனர் என்பது உண்மை.

எமக்கு தெரிந்தவகையில் சுனாமி, புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேராபத்துக்கள் அனர்த்தங்கள் ஒரு சில குறிப்பிட்ட அளவிலான பகுதிகளை மட்டுமே பாதிக்கும். அவற்றிலிருந்து மீண்டுவர மற்ற அனைவரும் சேர்ந்து பாடுபடலாம். ஆனால், இந்தக் கொரோனா தொற்று நம் அனைவரையுமே ஏதோ ஒரு விதத்தில் மிகப்பெரிய பாதிப்பிற்குள்ளாக்கிவிட்டது. 

எனவே இவ்வாறான பல்வேறு பாதிப்புகளின் காரணங்களால் பாடசாலைக்குச் செல்லும் வயதுக் குழந்தைகள் கற்றல் பற்றிய பதற்றம், இழப்புகள் மற்றும் வறுமையால் ஏற்பட்ட அதிர்ச்சி, நேர விரயத்தால் உருவான மனச்சிக்கல் போன்றவை அவர்களின் மனநலத்தைப் பாதிக்க வாய்ப்புள்ளது என்பதை உணரவேண்டும்.

அது தவிர இன்று மாணவர்கள் மத்தியில் தொடர்புகள் இல்லாத நிலையில் அவற்றை ஏற்படுத்த பல பிரயத்தனங்களை கல்விப் புல அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். நம் நாடு பல வகையிலும் வளர்ந்துவரும் நாடு அதனால் நாம் அனைத்துத் துறைகளிலும் மேலோங்கிவிட்டோம் என கருதமுடியாது. ஆதனால் இந்த இணையவழிக்கல்வி எந்தளவுக்கு அனைத்துக் குழந்தைகளுக்கும் சாத்தியம், அல்லது பெற்றோர்களின் கற்பித்தல் எவ்வாறு சாத்தியம் என்கின்ற கேள்வி பெரிதாக இருக்கின்றது.

முடக்கத்துக்கு பின்னரான கல்வியின் அவசியம்

இலங்கையைப் பொறுத்தவரை ஊரடங்கு காலத்துக்கு பின்னர்;, 'பாடசாலைகளில்; இயல்பு வாழ்க்கைக்குக் தொடர்பற்றவையாக குழந்தைகள் மத்தியில் தோன்றும்' என்று கல்வியில் மனநலத்திற்கான பேராசிரியர் பெர்ரி கார்பெண்டர் கூறுகிறார். பாடங்கள், தேர்வுகள், மதிப்பெண்கள் என்ற முறைக்குப் பல்லாண்டுகளாகப் பழக்கப்பட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைகள்; மீண்டும் திறக்கப்படும்பொழுது குழந்தைகள் பொரோனா முடக்கம் அல்லது ஊரடங்கிற்கு முன்பு எந்த நிலையில் இருந்தார்களோ, அதே நிலையில் தங்களைக் கற்றல் செயல்பாடுகளில் ஈடுபடுத்திக் கொள்வார்கள் என நம்புகிறார்கள், மேலும் அதையே எதிர்பார்க்கிறார்கள் என்பதே நிதர்சனம். ஆனால், அனைத்துக் குழந்தைகளின் குடும்ப சூழல் ஒரே மாதிரியாகவும், சாதகமாகவும் இருப்பதில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய விடயமல்லவா.

பெர்ரியின் இச்சூழலுக்கான பரிந்துரைகள்

உறவுகளைப் பலப்படுத்துதல்: கற்பித்தல் என்பது உறவை மையப்படுத்திய செயலாகும். மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும்போது மாணவர்கள் மகிழ்ச்சியாக வருவார்கள் என்பது நிச்சயமற்றது. எனவே, பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்களை இன்முகத்துடன் வரவேற்று அரவணைப்பது அவசியம். ஆசிரியர்-மாணவர் உறவை மீட்டெடுக்க இது உதவும்.

சமூகத்தின் தன்மை: ஒரு சமூகத்தின் தேவைகளின் அடிப்படையிலேயே கல்வி அமைகிறது என்பதால், ஒவ்வொரு பாடசாலையும் தனது சமூகத்தின் தற்போதைய சூழலைப் புரிந்துகொண்டு மாணவர்களை மீண்டும் கல்வி கற்கும் மனநிலைக்குக் கொண்டுவர முயல வேண்டும்.

வெளிப்படையான பாடத்திட்டம்: கல்வியில் ஏற்பட்ட கால விரயம் மற்றும் இடைவெளியை எண்ணி மாணவர்கள் வருந்துவார்கள். அவர்களின் இந்த எண்ணத்தைப் போக்க ஆசிரியர்கள் அவர்களோடு பயணித்து இழந்த காலத்தை ஆக்கபூர்வமான கல்விச் செயல்பாடுகள் மற்றும் வெளிப்படையான பாடத்திட்டங்களாலும் ஈடு செய்ய வேண்டும்.

மேனிலை அறிதிறன்: இந்த நீண்ட இடைவெளி மற்றும் இணைய வழிக் கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் மாணவர்களின் கற்றல் பாணியை மாற்றியிருக்கலாம். அதனால், அவர்கள் மீண்டும் தனது இயல்பு நிலைக்குத் திரும்ப, அவர்களை ஊக்கப்படுத்தி தனது திறன்களைச் சுயபரிசோதனை செய்து மீள்கட்டமைப்பு செய்ய உதவ வேண்டும்.

இடமளித்தல்: நாம் அனைவருமே இச்சூழலை வெல்ல திறத்துடன் துரிதமாகச் செயல்படுகிறோம். இவ்வேளையில், சற்றே மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான தகுந்த இடத்தை அளித்து அவர்களுக்கான வாய்ப்புகளை உறுதிசெய்து அவர்களையும் நம்மோடும் சக மாணவர்களோடும் சேர்ந்து பயணிக்க வைக்கவேண்டியது நமது பொறுப்பாகும்.

மத்தியவங்கியின் கல்விக்கான உதவி

விவசாயத் துறையில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாப்பதற்கும், பொதுப் போக்குவரத்தில் கொவிட் -19 பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும், பாடசாலை மாணவர்களுக்கான தொலைக்  கல்வியை எளிதாக்குவதற்கும், அரசாங்க சேவைகளின் விநியோகத்தை மேம்படுத்த டிஜிட்டல் தீர்வுகளை வழங்குவதற்கும் இலங்கையில் நடைபெற்று வரும் திட்டங்களுக்கு உலக வங்கி 56 மில்லியன் டொலர்களை மறு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த புதிய நிதியுதவி 128.6 மில்லியன் டொலர்களானது  ஏப்ரல் 2 ஆம் தேதி  அங்கீகரிக்கப்பட்ட இலங்கை கொவிட் -19 அவசரகால பதிலளிப்பு மற்றும் சுகாதார அமைப்பு தயார்நிலைத் திட்டம் (COVID-19 Emergency Response and Health System Preparedness Project) இற்கு நிதியளிக்கின்றது. இவ்வாறான உதவிகள் அனைவருக்கும் சமமாக கிடைக்கப்பெறுவதனை நாம் நிச்சயப்படுத்திக்கொள்ளும்போதுதான் இந்த இழப்பில் இருந்தான சமமீட்சியை உறுதிப்படுத்தலாம்.

முடிவுரை

ஆகவே இவற்றினால், பாடசாலை பாடத்திட்டத்தைக் கடந்த, மனித உறவுகளை மீட்டெடுக்கும், மற்றும் ஒருவருக்கான உரிமையைப் பாதுகாக்கும், இந்த எழுதப்படாத கலைத்திட்டம் கொரோனா முடக்கம் அல்லது ஊரடங்கிற்குப் பிந்தைய காலத்திற்கான 'மீட்புக் கலைத்திட்டமாக' இருப்பதை நாம் உறுதி செய்யவேண்டும். எமது அரசாங்கமும் இதில் கவனம் செலுத்தி மாணவர்கள் நலனைக் காக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்கிய பின்னர் பள்ளிகளைத் திறப்பதே ஏற்புடையதாக இருக்கும். இதுவே, நமது குழந்தைகளின் மனநலத்தையும் மனவளத்தையும் மீட்டெடுக்க நாம் செய்யும் பேருதவியாக இருக்க முடியும் என்பதுடன் இன்றய பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் முன்னணிப்போராளிகளின் குழந்தைகள் எந்தவித வசதிகளும் இல்லாத பின்தங்கிய குழந்தைகளை விஷேடாக சமுக ஆர்வலர்கள், தொண்டுள்ளம் கொண்டவர்கள், கழகங்கள் சங்கங்கள் முன்வந்து பாதுகாப்புடன் இவர்களையும் சமமாக கொண்டுசெல்ல முன்வந்துதவவேண்டும் என்பதே எமது ஆதங்கமாகும்.

References:

https://en.wikipedia.org/wiki/Impact_of_the_COVID-19_pandemic_on_education

https://www.hindutamil.in/news/opinion

https://www.worldbank.org/ta/news/press-release/2020/09/11/world-bank-supports-sri-lanka-with-usd56-million-mitigate-covid-19-impacts



0 comments:

Post a Comment