ADS 468x60

11 November 2020

நாடு கொரோணாவால் எதிர்நோக்கும் சவால்களுக்குள் நலிவுறும் வாழ்வாதாரம்: ஒரு பொருளியல் ஆய்வு.

கொரோனா ஊரடங்கு மார்ச் இல் ஆரம்பித்து பின்னர் சுமூக நிலை தோன்றி பின்னர் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பொருளாதாரத்தில் வளர்ந்த பெரிய நாடுகள்கூட கட்டுப்படுத்த முடியாத இந்த கொரோனா வைரஸ் பாதிப்பை (கோவிட்-19), நமது அரசாங்கங்கள் ஊரடங்கை அமுல்படுத்தி கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதை பல நாடுகளும், உலக சுகாதார அமைப்பும் பாராட்டியுள்ளன. ஆனால், இதன் மறுபக்கம், மோசமான பொருளாதார வாழ்வாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதைக் கண்கூடாக உணர முடிகிறது. 

சென்ற மாதத்திலிருந்து கொவிட்-19 இன் புதிய அலை வாழ்வாதாரங்களுக்கும் பொருளாதாரத்திற்கும் கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளது. வறுமை, பட்டினி மற்றும் உயிர் இழப்பிற்கு வழிவகுப்பதுடன், அண்மைக்காலமாக மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தை மேலும் இழக்க நேரிடும் என்பதால் பசியும் பட்டினியும் தாண்டவமாடத்துவங்கியுள்ளது. 

கடந்த இரண்டாவது அலை தொடங்கியதில் இருந்து தொழில் ஏதும் செயல்படாமல், வேலைக்குச் செல்லாமல் பல இலட்சம் மக்கள் நாட்டில் இருந்துள்ளனர். அவர்களது தொழில்களுக்கு எவ்வித வருமானமும் இல்லாத நிலையில் அதற்கு மாறாக வாடகை, கடன், ஊழியர்களின் ஊதியம், மின்சாரம், டெலிபோன், இண்டெர்நெட் மற்றும் இதர செலவுகளை சமாளித்தாக வேண்டும். இத்தகைய சூழலில் பல தொழில்கள் நலிவடைந்துள்ளன.

ஊரடங்கு உத்தரவு மற்றும் நாட்டைப் முடக்குதல் காரணமாக ஏற்றுமதி செயற்பாடுகளும் மோசமாக பாதிக்கப்பட்டு சென்மதிநிலுவையில் ஏற்பட இருக்கும் சரிவு மற்றும் அதன் விளைவாக நாட்டின் வெளிப்புற நிதி பாதிப்பை அதிகரிக்கும் என அஞ்சப்படுகின்றது.

தேசிய அளவிலான முடக்கநிலை அமுல் காரணமாக மக்களின் நடமாட்டம் முடக்கப்பட்டு, மனிதத் தொடர்புகள் முடக்கப்பட்டன. இதனால் வறிய மற்றும் நடுத்தர, கிராம மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அடிமட்ட அளவில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய பிரத்யேகமான சவால் ஏற்படும் அளவுக்கு சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளன. சுகாதாரம், சமரசம் செய்து கொண்ட உணவுப் பழக்கங்கள், கொள்வனவு; சக்தி குறைந்தது, குறைவான கல்வி நிலை தொடர்பான ஏற்கெனவே இருந்த சவால்களுடன், சுகாதாரம் மற்றும் சமூக சேவைகள் குறித்த தகவல்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், இந்தச் வகுதி மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு உதவிகள் சென்று சேருவதில் தடைகள் ஏற்பட்டன.

முன்னுரிமை கொடுக்கப்படவேண்டியவை

    உணவு வழங்கல்

கொடுமையான பசியின் துன்பத்தை மனிதர்களுக்கு வாராமல் தடுத்து அவற்றில் இருந்து அவர்களை மீட்டெடுத்தலே முதன்மையானதாக இருக்கின்றது.  வைரஸின் புதிய அலை மற்றும் அதைக் கட்டுப்படுத்துவதற்கான நாட்டை மூடுதல் ஆகியவை தொழிற்சாலைகளில் உற்பத்தியை தொடர்ந்தும் சீர்குலைத்து நாட்டின் ஏற்றுமதி திறனைக் குறைக்கும். பரவும் வைரஸின் மத்தியில் பொருளாதாரத்தின் செயல்பாட்டை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் வெற்றிபெறும் என்று நம்புகிறோம்.

    மனநலத்தில் கோவிட்-19 இன் தாக்கம்

கோவிட்-19 மனநலத்தின் மீது செலுத்தும் தாக்கம் இரண்டு கட்டங்களைக் கொண்டது. பெருந்தொற்றைத் தடுப்பதற்கான ஊரடங்கு காலகட்டத்தில் நிகழும் முதல் கட்டம் கடுமையானது. தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுப் பெருந்தொற்று விளைவித்த பொருளாதாரப் பிரச்சினைகள் இன்னும் ஆழமாக உணரப் படும்போது இரண்டாம் கட்டம் தொடங்கும்.

தற்போது கடுமையான முதல் கட்டத்தில் வைரஸ், அதனால் ஏற்படும் மரணம், அன்புக்குரியவர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவது ஆகியவை குறித்த அச்சத்தால் மக்கள் பீடிக்கப்பட்டுள்ளனர். தனிமைக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுதல், தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடித்தல், தனிமைப்படுத்தப்படுதல். ஆகியவை தொடர்பாகவும் மக்கள் அச்சத்துடனே வாழ்கிறார்கள். ஏற்கெனவே வாழ்வாதாரம் சார்ந்த கவலைகளில் ஆழ்ந்திருக்கும் பல லட்சக்கணக்கானவர்களுக்கு இந்த அச்சங்கள் கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. இந்தக் காரணிகளுடன் அதிகரிக்கும் குடும்ப வன்முறை, பொதுப் போக்குவரத்துத் தடை, வழக்கமான மருத்துவ சிகிச்சைகள், மருந்துகள் கிடைக்காமல் இருப்பது ஆகியவையும் மன அழுத்தத்தை மோசமாக்குவதில் பங்களிக்கின்றன. சமூகத்தில் பல்வேறு தரப்பினரை இந்தப் பெருந்தொற்று தனிப்பட்ட வழிகளில் பாதித்துள்ளது.

வேலையின்மை வறுமை மற்றும் பட்டினி

தோடர்ச்சியாகப் பரவுகின்ற கொரோனா வைரஸ், ஊரடங்கு உத்தரவு மற்றும் நாட்டை முடக்குதல் ஆகியவற்றின் உடனடி மற்றும் பாதகமான விளைவுகள் ஏராளமான மக்களுக்கு வருமான இழப்பினை ஏற்படுத்தி வருகின்றது. முறைசாரா பொருளாதார நடவடிக்கைகளில் இருப்பவர்களுக்கு இது குறிப்பாக, மூன்றில் இரண்டு பங்கு தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துவிட்டார்கள். ஹோட்டல், ரெஸ்டாரன்ட்கள் மற்றும் பிற வணிக நிறுவனங்கள் போன்ற நிறுவன வேலைவாய்ப்புகளில் பலர் வேலையினை இழந்துள்ளதுடன் அவற்றில் பல மூடப்பட்டிருக்கின்றது.

பாரிய பிரச்சினை

லட்சக்கணக்கில் சிறு வர்த்தகர்கள் பெரும் பிரச்சினைக்கு உள்ளாவார்கள், பெரிய நிறுவனங்கள் பல மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மனிதனின் உயிர் விலை மதிக்க முடியாதது; அதே சமயத்தில் இந்த ஊரடங்கு தொடர்ந்து நீடிக்குமானால் பல இலட்சம் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் என்னவாகும்? இனி நோய்த் தடுப்போடு சேர்த்து பொருளாதார நெருக்கடிக்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்தாக வேண்டும். நோய் பரவுவதைத் தடுப்பதற்காக முழுவதுமாக மாவட்டங்களை நாட்டை லாக்-டவுனில் நீண்ட நாட்களுக்கு வைத்திருக்க முடியாது.

தொழிற்துறை

தொழில்துறையின் சக்கரங்களை நகர்த்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த அரசாங்கம், ஊரடங்கு உத்தரவு இருந்தபோதிலும் தொழிற்சாலை உற்பத்தியை செயல்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இது ஒரு ஆபத்தான அணுகுமுறையாகும், ஏனெனில் பல நாடுகள் இந்த சந்தர்பத்தில் அதன் ஆபத்தினை உணர்ந்து வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மீண்டும் தடைகளை விதித்தன. தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு பொருளாதாரத்தை முன்நகர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று தோன்றுகிறது. வைரஸைக் ஓரளவாயினும் கட்டுப்படுத்திக்கொண்டு; பொருளாதாரத்தின் செயல்திறனை சீராகப் பேணிவருதல் வறுமை மற்றும் உணவுப் பற்றாக்குறையின் அளவை தீர்மானித்து மக்களின் வாழ்வை இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் என்பதே உண்மை.

கட்டுரையின் சுருக்கமும் விதந்துரைகளும்

அரசாங்கம் பொருளாதாரத்தினையும் மக்களது வாழ்வாதாரத்தினையும் சமநிலையில் பேண பல முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. இதன் மூலம் மக்களின் சுகாதாரம், கல்வி, நாளாந்த தொழில், உணவு வழங்கள் போன்ற நல்ல காரியங்களை முன்னெடுத்தாலும், பல நிறைவேற்ற முடியாத சவால்களுக்குள் சிக்கி இருப்பதனையும் அவதானிக்கலாம். இதன்காரணமாக நாட்டின் வருமான மட்டம் கணிசமாகக் குறைவடைந்து அதன் கடன் சுமை பாரியளவில் உயர்ந்துள்ளமை அரசை இக்கட்டான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. இதில் தொழில் செய்ய முடியாமல் வீட்டில் முடங்கி இருக்கின்ற பலருக்கு அவர்கள் தமது உணவினைப் பெற்று உயிர்வாழ முன்னுரிமை கொடுப்பது முக்கியம்.

நமது அரசாங்கம் ஏற்கனவே லாக்-டவுனில் சில தளர்வுகளை செய்துள்ளது. ஆபத்து ஏற்படாமல் நிர்வகிப்பது (Risk management) என்பது ஒன்று; ஆபத்தை தவிர்ப்பது (Risk Avoidance என்பது மற்றொன்று. தற்பொழுது பல மாவட்டங்களில் ரிஸ்க்கை தவிர்க்கத்தான் பார்க்கின்றன. தொழில்களை அவற்றின் தன்மைகளுக்கு ஏற்ப வௌ;வேறு பிரிவுகளாகப் பிரித்து, தகுந்த பாதுகாப்புடன் நடத்த ஊக்குவிக்க வேண்டும். குறைந்தபட்சம் நோய் தொற்று பாதிப்பு இல்லாத இடங்களிலாவது தொழில்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொழில்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசாங்கம் உதவி செய்ய வேண்டும். இதுவரை நமது அரசு; பெரிதளவில் தொழில்களுக்கு சலுகைகளை அறிவிக்கவில்லை. வளர்ந்த பொருளாதார நாடுகளில் பெரிய அளவில் தொழில்களுக்கு சலுகைகளையும், மானியங்களையும் அரசாங்கங்கள் அறிவித்துள்ளன. அமெரிக்காவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் 1,200 டொலரை அரசாங்கம் கொடுத்துள்ளது. மேலும் தொழில்களுக்கு/ நகரங்களுக்கு கடன் கொடுப்பதற்கு 500 பில்லியன் டொலர் சிறு தொழில்களுக்காக 367 பில்லியன் டொலர்கள், மருத்துவத்திற்கு 130 பில்லியன் டாலர்கள் என மொத்தமாக இதுவரை 3,000 பில்லியன் டொலர்களை கெரோனா நிவாரணமாக அமெரிக்க அரசாங்கம் அறிவித்துள்ளது. அந்த அளவிற்கு நமது அரசாங்கம் செலவிடமுடியாது என்றாலும், ஓரளவேனும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்

இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதாயின் தளராத நம்பிக்கையும், சுயதொழில் துவங்குவதும், உணவுப்பொருள் உற்பத்தியும் எமக்கு கைகொடுக்கும் தந்திரோபாயங்களாக இருக்கப்போகின்றன.


0 comments:

Post a Comment