ADS 468x60

04 December 2021

அந்நியவருமானம் ஈட்ட பெண் தொழிலாளர்களின் தேவை- சுற்றுலாத்துறை ஒரு எதிர்காலக் கணிப்பு!

இலங்கையில் இன்று நெருக்கடிகள் ஒன்றின் மேல் ஒன்றாக வருவதற்குக் காரணம் அதன் அந்நியவருமான மூலங்கள் கொவிட் மூலம் ஆடிப்போயிருப்பதாகும். நாட்டின் ஏற்றுமதி இறக்குமதியில் இது பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக வேலையின்மை, வருமானமின்மை என்பனவாறான பிரதிகூலங்களை இவை தோற்றுவித்துள்ளது. இந்த நிலை குறிப்பாக பெண்களை வெகுவாகப் பாதித்துள்ளது. அத்துடன் அந்நிய வருவாயினை கொட்டித்தந்த சுற்றுலாத்துறை கொவிட் காரணமாக ஏனைய அனைத்துத் துறைகளுக்குள்ளும் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதனை மீளக்கட்டியமைக்க பெண்களின் பங்கேற்ப்பு அதிகமாக வேண்டப்படுகின்றது. எனவே இந்த ஆய்வுக்கட்டுரையில் பெண்கள் இத்துறையில் பங்களிப்பதற்கு இருக்கும் தடைகள் மற்றும் அவற்றை மீட்டெடுக்க முன்மொழியவேண்டிய விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. 

இந்த வகையில், ஏனைய துறைகளுள் சுற்றுலாத்துறையானது இலங்கையின் அந்நியவருமானத்தினை ஈட்டித்தரும் ஒரு பிரதான துறையாகும். இது தற்போது வெளிநாட்டு வேலைவாய்ப்பு, ஆடைத்தொழில்சாலைகள் ஆகியனவற்றுக்கு பிறகு மூன்றாவது பெரிய ஏற்றுமதி வருவாய் ஈட்டித்தருகின்றது. குறிப்பிடத்தகும் வகையில், 2018 இல் மட்டும் இத்துறையானது, 4.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியுள்ளது, இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.9% வீதத்துக்கும் சமமானதாகும். 

கடந்த தசாப்தத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை சுமார் 2.8 மடங்கு அதிகரித்து, 2009 இல் இலங்கையில் நடைபெற்றுவந்த யுத்தம் நிறைவுற்றதன் பின்னர் சுற்றுலாத்துறை முன்னெப்போதுமில்லாத  வளர்ச்சியைப் பதிவு செய்தது. அந்தவகையில் இது 2018 இல் (2,333,796) அதிகமாக வருடாந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளது. 

அதன் பின்னர் ஏப்ரல் 2019 இல் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தத் துறையில் மந்தநிலை ஏற்பட்ட போதிலும், இலங்கையின் சுற்றுலாத் துறை விரைவான மீள்திருப்பம் மற்றும் மீட்சிக்கான அறிகுறிகளைக் காட்டியுள்ளது. 

அதன் பின்னர் 2019 இன் இறுதியில் துரதிர்ஷ்டவசமாக, சீனாவில் கணிசமான எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் மத்தியில் தோன்றிய கொரோனா வைரஸ் மற்றும் சீன சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வரும்போது விசாக்கள் இடைநிறுத்தப்பட்டது, சீன அரசாங்கத்தால் வெளிச்செல்லும் சுற்றுலாப்; பயணிகளை கட்டுப்படுத்தியது போன்றவை எமது நாட்டிற்கான மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஏற்கனவே எதிர்மறையாக பாதித்துள்ளது.

எவ்வாறாயினும், இலங்கையின் சுற்றுலாத் துறையானது மீண்டெழும் தன்மை வாய்ந்ததாக நிரூபணமாகியுள்ளதுடன், வருடாந்த சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஏழு மில்லியனாகவும் வெளிநாட்டுச் செலாவணியை 10 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட ஜனாதிபதியின் நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கிய திட்டத்தினை உள்ளடக்கிய முக்கிய தேசிய கொள்கை ஆவணங்களில் இது இன்றியமையாத ஒரு துறையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. 

அதில் 2025 க்குள். நாட்டில் பெண்களுகளை பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் வலுவூட்ட வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. மேலும், பெண்களின் வேலைவாய்ப்பை அதிகரிப்பதானது வறுமையைக் குறைப்பதிலும், பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதிலும் முக்கிய பங்காற்ற முடியும் என்பதை சுட்டிக்காட்டுகிறது. 

சுற்றுலாத் துறையில் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை உருவாக்குதல் மற்றும் அதில் பெண்களின் பங்களிப்பைத் தடுக்கும் முக்கிய சவால்களை எதிர்கொள்ளல் மற்றும் இந்த இலட்சிய இலக்குகளை அடைவதற்கு அவர்களின் பங்களிப்பை எவ்வாறு அதிகரிப்பது என்பதையும் மிகவும் நுணுக்கமாக ஆராய்கிறது.

சுற்றுலா பணியாளர்களில் பெண்களின் பங்களிப்பு குறைவாக உள்ளது

இத்துறை இலங்கையைப் பொறுத்தவரை வளர்ந்து வரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தபோதிலும்,   இவை பல தடைகளை எதிர்கொள்கின்றன, அவற்றில் திறன் அது சார்ந்த அறிவு உள்ள மனித வளங்களின் பற்றாக்குறை முக்கியமானது. எடுத்துக்காட்டாக, நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் 25,000-30,000 மேலதிகப் பணியாளர்கள் தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 

ஆனால் ஹோட்டல் துறையில் எல்லா மட்டங்களிலும் பயிற்சி பெற்ற 10,000 பேர்; மட்டுமே ஆண்டுதோறும் உருவாக்கப்படுகிறார்கள். ஆகவே இவற்றை நிவர்த்திசெய்ய, முக்கிய சுற்றுலா நகரங்களில் சுற்றுலாப் பயிற்சிப் நிறுவனங்களை நிறுவி, கவர்ச்சிகரமான திறன் மேம்பாட்டுப் கற்கைகளை அறிமுகப்படுத்தும் அதே வேளையில், தொழிலாளர்களின் எண்ணிக்கையை 388,487ல் இருந்து ஒரு மில்லியனாக உயர்த்துவதை நோக்கமாகவும் கொண்டு இக்கொள்கைப் பரப்புரை அமைந்துள்ளமை கவனத்தில் கொள்ளவேண்டும்.

உலகளவில் சுற்றுலாத்துறையில் பெண்களின் உயர் மட்ட பங்கேற்புடன் அல்லது பங்களிப்புடன் ஒப்பிடுகையில், சில பிராந்திய வேறுபாடுகள் இருந்தாலும், இலங்கையில் பெண்களின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாகவே உள்ளது, உலகளவில் பெண்களின் இத்துறைக்கான பங்களிப்பு 54 வீதத்துடன் ஒப்பிடும் போது இலங்கையில் பெண்களின் பங்களிப்பு 10 வீதத்துக்கும் குறைவாகவே உள்ளது வருந்தத்தக்கது. 

உண்மையில், மெக்சிகோ, தென் கொரியா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற சில நாடுகளில் பொருளாதாரத்தின் மற்ற துறைகளைவிட இத்தொழில் துறையில் வேலைவாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. மேலும், இலங்கையில் உள்ள ஹோட்டல் கல்வி நிறுவனங்களில்; பெண் மாணவர்களின் கற்கும் அளவு கவலையளிக்கும் வகையில் குறைவாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

இது நாட்டில் வளர்ந்து வரும் ஒரு துறை மற்றும் நாட்டில் ஏற்கனவே குறைந்த பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (ஆண்களுக்கு 73 விகிதம் உடன் ஒப்பிடும்போது 33.6 விகிதம்) ஆகியவற்றின் பின்னணியில் இந்த புள்ளிவிவரங்கள் திருப்தியாக இல்லை. இலங்கையின் சுற்றுலாத்; துறைக்குள், அனைத்துத் தர அலுவலக ஊழியர்கள் மற்றும் சந்தைப்படுத்தல் செயல்பாடுகள் தவிர, அனைத்து தொழில் வகைகளிலும் பெண்களை விட ஆண்கள் அதிகமாக உள்ளனர். எனவே, இத்துறையில் அதிகமான பெண்களை ஈர்ப்பது, வளர்ந்து வரும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உதவும், அத்துடன் இது தொழில்துறையின் வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான தடையாக இருக்கும்.

பெண்கள் ஏன் விலகி நிற்கிறார்கள்?

இத்துறையில் முறைசார் கல்வி மற்றும் பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை மாறாக தனித்துவ ஆளுமை மற்றும் மற்றவர்களை கவரும் தொடர்பாடல் திறன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. மற்றும் இங்கு அதிகம் பகுதி நேர வேலை கிடைப்பது போன்ற பல காரணிகள் - உலகளாவிய சுற்றுலாவில் அதிக பெண் தொழிலாளர் ஈடுபாட்டுக்கு பங்களித்து வருகின்றன. எவ்வாறாயினும், பாரம்பரிய இலங்கையைப் பொறுத்தவரை, சமூக விதிமுறைகள், கலாசாரம், விழுமியங்கள் மற்றும் சமுக நோக்குகள் மற்றும் கருத்துக்கள் பெண்களை தொழில்துறையிலிருந்து விலக்கி வைக்கின்றன. இத்துறையில் ஆண்களை விட பெண்களை சிறந்த வேலையாட்களாக கருதுவதால், ஹோட்டல்கள் அதிக பெண் ஊழியர்களை நாடுகின்றன என்ற உண்மை இருந்தபோதிலும் இதுதான் இங்கு யதார்த்தம்.

இத்தொழில்துறையில் உள்ள வேலைகள் பெண்களுக்கு, குறிப்பாக திருமணமாகாத பெண்களுக்கு சமூக ரீதியாகப் பொருத்தமற்றதாகக் கருதப்படுகின்றன, காரணம்; அவை பெரும்பாலும் குற்றச் செயல்கள் (விபச்சாரம், போதைப்பொருள்), பாதுகாப்புச் சிக்கல்கள் (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் சுகாதாரப் பழக்கவழக்கங்கள் (பாலியல் பரவும் நோய்கள்) ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன என்பதாக ஊடகங்கள் மூலமான பரப்புரை இத்துறை மீது அவநம்பிக்கையினை தோற்றுவித்து வருகின்றது. இதன் விளைவாக, பெற்றோர்கள் மற்றும் இவர்களுடைய கணவர்கள் குறிப்பாக பெண் குழந்தைகள் - மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்கள், சுற்றுலாத் துறையில் தொழிலைத் தொடர்வதை அவ்வளவாக ஊக்கப்படுத்தவதில்லை. 

இலங்கை தொழில்ப் படையில் பெண்களின் பங்கேற்பு பற்றிய உலக வங்கியின் ஆய்வின்படி, பதிலளித்தவர்களில் 85 வீதம் பெண்கள் திருமணத்திற்குப் பிறகு சுற்றுலாத் துறையில் தங்கள் வேலையை விட்டுவிடுவார்கள் என்று கூறியுள்ளனர். மேலும், இலங்கையில் உள்ள ஹோட்டல்களில் வேலை வாய்ப்புகளைத் தேடுவதில் இருந்து பெண்கள் மற்றும் இளைஞர்களைத் தடுத்துள்ள பிற காரணங்களை ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. 

வெளியே சிறிய வருமானம் குறைந்த வேலையானாலும், கவர்சியான வேலைக்கான டைட்டில் அல்லது அதிக மரியாதையான தொழிற்பெயர்; மற்றும் வேலை வகைகளுடன் ஒப்பிடும்போது, 'ரூம் வோhய்' போன்ற வேலைத்தலைப்புக்கள் தரம் தாழ்ந்த வேலைக்கான பெயராகக் கருதப்படுகின்றது.  அத்துடன் வெளிநாட்டு வேலையில் உள்ள மோகம் மற்றும் நாட்டில் சுய வேலை வாய்ப்புகள்; மோசமான ஆங்கில அறிவு, இத்துறையில் உள்ள குறைந்த ஊதியம், மற்றும் பதவி உயர்வுகளுக்கான குறைவான வாய்ப்புகள்; வேலைப் பாதுகாப்பு இல்லாமை, மற்றும் அரசதுறையில் உள்ள ஓய்வூதிய பலன்கள்; கிடைக்காமை, நீண்ட வேலை நேரம், மற்றும் தரமற்ற பணிச்சூழல்கள் மற்றும் இங்குள்ள வசதிகள் ஆகியனவும் இத்துறையில் வேலைசெய்யும் எண்ணப்பாங்கை இவர்களிடையே தூண்டவில்லை. இவை தவிர நாட்டில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களின் சீரற்ற அமைவிடமானது பெண்களின் பங்கேற்பையும் பாதிக்கிறது, ஏனெனில் ஆண்களை விட அவர்கள் கற்றுக்கொள்ள வீட்டிலிருந்து வெகு தொலைவில் உள்ள நிலையங்களுக்கு செல்வது குறைவாகவே உள்ளது. இந்த வகையில், நாடு முழுவதும் சுற்றுலாப் பயிற்சிப் நிலையங்களை அதிக அளவில் அமைக்க வேண்டியதன் அவசியத்தை அரசு கண்டறிந்துள்ளமையானது எமக்கு ஊக்கமளிக்கிறது.

இலங்கையில் ஹோட்டல் துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்தல்

இத்துறையில் விரிவடைந்து வரும் தொழிலாளர் பற்றாக்குறையை ஈடுசெய்ய அதிக பெண்களை தொழிலாளர் படையில்; ஈர்ப்பதற்கு ஹோட்டல் துறையின் நேர்மறையான விம்பத்தை உருவாக்க வேண்டும். சுற்றுலாத் துறையில் இந்த எதிர்மறை மனப்பாங்கை சமுகத்தில் இருந்து நீக்கி நம்பிக்கையினைக் கட்டியெழுப்ப இத்துறையில் பணி புரிகின்றவர்கள், வேலை வழங்குபவர்கள், சுற்றுலாத் துறைச் சங்கங்கள்; மற்றும் தொடர்புடைய அரச அதிகாரிகள் இந்த மாறுபட்ட நிலைமையை நிவர்த்திசெய்ய தேசிய ரீதியில் விழிப்புணர்வு உருவாக்கம் மற்றும் ஆட்சேர்ப்பு பிரச்சாரங்களை கிராமப்புறங்களில் இருந்து சமுக ஈடுபாட்டுடன் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், இந்த தொழில்துறையின் முக்கியத்துவத்தையும் பொருளாதாரத்தில் அதன் பங்களிப்புகளையும் எடுத்துரைக்கும் அதே வேளையில், கிடைக்கும் வேலைகள் மற்றும் வேலை செய்யுமிடத்தில் உள்ள பாதுகாப்பு தொடர்பான தவறான கருத்துகளை நிவர்த்தி செய்ய, அரசாங்கத்துடனும் மற்றும் ஊடகங்களுடனும் இணைந்து தெழிவுபடுத்தவேண்டும். 

அதே நேரத்தில், ஹோட்டல்கள் மற்றும் ஹோட்டல் பயிற்சி நிலையங்களில் அங்குள்ள பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளை வழங்க வேண்டும், அத்துடன் பாடசாலை மட்டத்தில் அவர்களுடன்; இணைந்து பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் என்பனவற்றை தெழிவுபடுத்துவதன் மூலம் ; இளைஞர்களை ஈர்க்க வேண்டும். 

தொழில்துறையில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருந்தாலும், தகவல் தொழில் நுட்பம், தேயிலை மற்றும் வணிக விவசாயம் போன்ற பொருளாதாரத்தில் உள்ள மற்ற துறைகளுடன் ஒப்பிடும்போது, சுற்றுலாத்துறையில் முகாமைத்துவ மட்டத்தில் அதிகமான பெண்கள் உள்ளனர். இச்சூழலில், அதிக பெண்களை தொழிலில் ஈர்ப்பதற்கும், பாலின நிலைப்பாடுகளுக்கு சவால் விடுவதற்கும் அவர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும். 

தொடர்ச்சியான பயிற்சி, வழிகாட்டுதல் மற்றும் பதவி உயர்வுகளை வழங்குவதன் மூலம் தொழிலாளர்களின் தொழில் வளர்ச்சியை ஆதரிப்பதும், தங்குமிடம், போக்குவரத்து, குழந்தை காப்பகம் போன்ற உதவி சேவைகளுடன், வேலைகளைச் சுற்றியுள்ள தடைகளை தீர்த்து பெண்களைத் தக்கவைத்துக்கொள்ளவும் உதவவும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஹோட்டல் துறையில் மனித வள மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்துவது பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதில் நீண்ட தூரம் கொண்டு செல்லும், அதே நேரத்தில் நமது நாட்டின் ஒட்டுமொத்த தொழில்துறையின் வளர்ச்சி திறனை இது ஆதரிக்கிறது.

0 comments:

Post a Comment