ADS 468x60

05 December 2021

நம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு எடுத்துக்காட்டானதாக இருக்கவேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் பிரதிநிதிகளாக மதிக்கப்படுகின்றனர். இவர்களை மக்கள் அதிகம் பின்பற்றுகின்றனர். இவர்கள் மக்களின் நிலையினை, கஸ்ட நஸ்டங்களை உணர்ந்து அவர்களின் தேவைகளை பூர்த்திசெய்ய குரல் எழுப்பினால் மாத்திரம் போதாது, அவற்றை செயலிலும் காட்டவேண்டும். 

இவர்கள் எல்லா விடயங்களில் அறிவு திறன் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பதுடன் மக்களுக்கு பாரபட்சமின்றி சேவை செய்ய தம்மை அர்பணிக்கும் ஒருவராக இருக்கவேண்டும். ஆனால் இப்போது இவர்களில் பலரைப்பற்றி மக்கள் மாறுபட்ட அபிப்பிராயத்தினைக் கொண்டுள்ளமையானது, அவர்கள் மக்கள் மீது வைத்திருக்கும் போலித்தனமான பற்றை, குணத்தினை காட்டுகின்றது. இவற்றில் சில விடயங்களை நான் இங்கு ஆராய்கின்றேன். இக்கட்டுரை எந்த ஒரு அரசியல் கட்சிக்கு எதிராகவும் எழுதப்பட்டது அல்ல. நமது சிந்தனைகளில் உள்ள பிழைகளை ஆராய்ந்து, புதிய மாறுபட்ட கருத்துக்களை விதைப்பதுதான் எனது எண்ணம்.

மக்களிடம் எது மாதிரியான தலைமை வேண்டுமென்று கேட்டால் நல்ல, அறிவுள்ள, துணிந்த, திறமை வாய்ந்த எனப்பல நற்பண்புகள் கொண்ட தலைமை வேண்டும் என்று தெளிவாகக் கூறுவார்கள். ஆனால் நிதர்சனத்தில் நடப்பது என்னவோ அது பெரும்பாலும் கனவாகவே அமைகிறது.

 பெரும்பாலும் அரசியல் தலைமைகள் அறிவிலும் அறத்திலும் நீதியிலும் சராசரி மனிதனைவிடக் குறைந்த பண்புகளே உள்ளவர்களாக இருந்துள்ளனர் என்கிறார் பாப்பர். வரலாற்று ரீதியாக பார்த்தால் அன்றிலிருந்து இன்றுவரை, அவ்வாறான புத்திசாலியான திறமையான தலைமைகள் தோன்றியது மிகக்குறைவே. மேலும் இன்றைய மக்களாட்சியிலும் நல்ல தலைமையை மக்களால் தேர்ந்தெடுக்க முடியவில்லை. நடைமுறையில் நல்ல தலைமை கிடைப்பது கடினம், மோசமான தலைமை கிடைப்பது எளிது என்ற நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

ஒரு ஆங்கிலப் வாராந்தப் பத்திரிகையின் செய்தியின் அடிப்படையில் எமது பாராளுமன்ற உறுப்பினர்களில் ஏறக்குறைய 70 வீதமானவர்கள் தங்களுடைய ஊழியர்களாக, நெருங்கிய குடும்ப உறுப்பினர்களாகப் பணியமர்த்தியுள்ளனர் எனச் சுட்டிக்காட்டீள்ளது. குறிப்பாக சாதாரண எம்.பி.க்கள் ஆறு பேரை தங்கள் தனிப்பட்ட ஊழியர்களாக அமர்த்திக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது, அதே நேரம் அமைச்சரவை அமைச்சர்களுக்கு இந்த எண்ணிக்கை 12 ஆகும்.

இவ்வாறு எம்.பி.க்கள் அல்லது அமைச்சர்களின் பணியாளர்களாகப்; பணியமர்த்தப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் அரசாங்கம் ரூ.35,000 முதல் 40,000 வரை வழங்க வேண்டும். எம்.பி.க்களின் ஊழியர்களில் ஒரு பிரத்தியேகச் செயலாளர், மேற்பார்வை அதிகாரி, இரண்டு டிரைவர்கள், டைபிஸ்ட் மற்றும் அலுவலக உதவியாளர் ஆகியோர் அடங்குவர். இந்த ஊழியர்களுக்காக அரசாங்கம் ரூ. 210,000 இலிருந்து ரூ.240,000 வரை ஒரு எம்பியின் ஊழியர்களின் பராமரிப்புக்காக செலவிடுகின்றது. இதுபோல் அவையிலுள்ள அனைத்து 225 உறுப்பினர்களின் விடயத்தில், அது ஒரு மாதத்திற்கு ரூ. 54 மில்லியனைச் செலவழிக்கிறது.

எம்.பி.க்கள் தங்கள் மனைவி, சந்ததியினர் மற்றும் உறவினர்களை ஊழியர்களாக அமர்த்துவது அண்மைக் காலமாக நடைபெறும் ஒன்றல்ல. எம்.பி.க்கள் வேலைப்பழுவிற்கு ஆளாகி பாதிக்கப்படாமல் இருக்க, அவர்கள் நன்றாக 'கவனிக்கப்பட வேண்டும்' என்ற எண்ணக்கருவைக் கொண்டிருந்த ஜே.ஆர்.ஜயவர்த்தன அவர்களின் காலத்திலிருந்தே இது தொடங்கப்பட்டுள்ளது. இது ஒரு பாரபட்சமான மோசடி இல்லையா? இந்த மோசடியை பாராளுமன்றத்திற்குள் அம்பலப்படுத்திய அப்போதைய எதிர்க்கட்சி, அதன் பின்னர் அதிகாரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோதும் அதே பாணியில் தொடர்ந்தது. அதுவே இப்போது நடைமுறையில் உள்ள ஒன்றாகிவிட்டது என்னதான் செய்வது! துலைவன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே! ஆனால் இது எல்லா பா.ம உறுப்பினர்களுக்கும் பொருந்தி வராது, சில நல்ல சேவகர்கள் இருப்பதனால்தான் இன்னும் இந்த நாட்டில் மழை பெய்கிறது. 

கல்வி மட்டத்தை கூர்மைப்படுத்தல்

இன்று நம் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களால் நியாயமான வாதங்களும், விவேகமான வார்த்தைகளும் அடிக்கடி பேசப்படுவதில்லை. ஆனால் கல்வி அமைச்சு மீதான குழுநிலை வாக்கெடுப்பு புதன்கிழமை எடுத்துக் கொள்ளப்பட்டபோது அத்தகைய அரிய நிகழ்வை நாம் பார்த்தோம். பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தரத்தை கூர்மைப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கும் பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்துள்ளார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உயர் கல்வியைத் தொடர சட்டக் கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் நுழைவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றார். 1970 களில் எம்.பி.க்கள் நுழைவுத் தேர்வுக்கு உட்படுத்தாமல் சட்டக் கல்லூரிக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டபோது அத்தகைய ஒழுங்கு இருந்தது. எனவே பொதுவாக எம்.பி.க்களின் கல்வித்தரம் குறைவாக இருப்பதாக பொதுமக்கள் மத்தியில் ஒருமித்த கருத்து உள்ளது.

ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு எமது மக்கள் பிரதிநிதிகள் க.பொ.த (சா.த) பரீட்சையில் சித்தியடைந்திருக்கவில்லை, அவர்களில் சிலர் அமைச்சரவை அமைச்சர்களாகவும் உள்ள அதேவேளை பாடசாலை இடைநிறுத்தப்பட்டவர்களும் உள்ளனர். அவர்கள் தங்கள் பாடசாலை வாழ்க்கையை இடைநிறுத்தியதாலோ அல்லது ஆரம்பக் கல்விக் கட்டத்தைத் தாண்டிச் செல்வதற்கான விடாமுயற்சி இல்லாமலோ இருந்தால், பல்கலைக்கழகங்கள் அல்லது சட்டத்தால் வழங்கப்படும் உயர்கல்வியின் அரிதான மேற்படிப்புக்குள் நுழைய அவர்களை எப்படி வற்புறுத்த முடியும் என்பதை புரிந்துகொள்வது கடினம். 

எமது மக்கள் பிரதிநிதிகள் தற்போது சொகுசு வாழ்க்கைக்கு பழகிவிட்டனர். அவர்கள் வேண்டிய விமானங்களில் ஏறி வெளிநாட்டுப் பயணங்களைச் செய்கிறார்கள் மற்றும் அனைத்து; சௌகரியங்களையும் அனுபவிக்கிறார்கள், இவை அனைத்தும் முறையான கல்வியின்றி, வியர்வை சிந்தாமல் தானாகக் கிடைக்கும்போது, சட்டக் கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் நுழைந்து, தேர்வில் தேர்ச்சி பெற தயங்குவது ஏன் என்பதுதான் கேள்வி.

அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கல்வி, தொழில் தகுதி உள்ளவர்கள் மற்றும் நல்ல சமூக அந்தஸ்து கொண்ட ஆண்களும் பெண்களும் தங்கள் நியமனப் பட்டியலில் இடம் பெற்றிருந்தால் விசேட் கல்வித் திட்டங்களுக்கு எம்.பி.க்களை அனுப்ப வேண்டிய அவசியமில்லை. வாக்குகளைப் பெற்றுக்கொள்ள கறுப்புப் பணத்தினை வாரி இறைக்க தயாராக இருக்கும் நிழலுலகப் பாத்திரங்கள், குண்டர்கள், திருடர்கள், போதைப்பொருள் வியாபாரிகள், தொழிலதிபர்கள் போன்றவர்களுக்கு எதிராக இவர்கள் களத்தில் இறங்கி தங்களது பேரைக் கெடுத்துக்கொள்ள தயங்குகிறார்கள். இவ்வாறான ஒரு தீய சுழற்சி நிலவும் வரை, போதுமான ஒழுக்கமான நபர்கள் பாராளுமன்றத்திற்குள் நுழைவார்கள் என்று நினைப்பது உண்மையில் முட்டாள்தனமானது, 

எனவே பொதுவாக, இவற்றையெல்லாம் மீறி நல்ல பண்பு, தொண்டாண்மை, கல்வித்தராதரம் கொண்ட ஒருவரை நாம் நியமித்து, ஒரு நல்ல  நல்ல தலைமை அனைத்து அதிகாரங்களுடனும் கிடைத்துவிட்டது என்று எடுத்துக் கொள்வோம். ஆனால் காலப்போக்கில் அத்தலைமை பதவிக்கு மயங்கி சுயநலத்துடன் செயல்பட்டால் என்ன ஆவது? அப்படி பல சம்பவங்களையும் நாம் பாhத்துள்ளோம்.

அப்படி ஆகாவிட்டாலும், அத்தலைமை தனக்கு பின்வரும் நல்ல தலைவர்களிடம் அதிகாரத்தை கையளிக்கவேண்டும். அப்படி இல்லாமல் தனக்கு விசுவாசமாக இருந்தவர்களுக்கு அல்லது வாரிசுகளுக்கு தலைமைப் பொறுப்பை அளித்தால் என்ன செய்வது? ஒருவர் பதவி கிடைத்தவுடன் என்ன செய்வார் என்று முன்கூட்டியே அறியும் திறன் யாருக்கும் இல்லை. பதவியைப் பெறுபவருக்கே அவர் எப்படி மாறுவார் என்று தெரியாது என்பதையும் மறுக்க முடியாது.

நல்ல உள்ளம் கொண்டு நன்மை செய்யவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் ஆண்டால் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணமும் உள்ளது. ஆனால் அது போதாது. சமூகம் என்பது சிக்கலான அமைப்பு. நல்ல எண்ணத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் எல்லாம் நன்மையில் முடியும் என்ற எந்த உறுதியும் இல்லை. அவை மோசமான பாதிப்புகளை காலப்போக்கில் ஏற்படுத்தவல்லது. இதற்கு அடிப்படைக் காரணம் எவ்வாறு செயல்படுத்துவது என்ற முழுமையான அறிவு (Knoledge) இல்லாமை. அதனால் நமக்கு அறிவுள்ள, தனக்கு எது தெரியும் எது தெரியாது என்று உணர்ந்து செயல்படும் தலைமை தேவைப்படுகிறது. 

இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களின் வாழ்விற்கு அடிப்படையானது அறிவு (knowledge) என்கிறார். ஓர் உயிர் தான் வாழும் சூழலுக்கு ஏற்ப அறிவைப் பெற்றுள்ளதா இல்லையா என்பதே அதன் வாழ்வை தீர்மானிக்கிறது. தாவரங்கள், விலங்குகள் அறிவை உணர்வதில்லை, ஆனால் இந்த அறிவு அதன் மரபணுக்களில் இருந்து அவற்றை இயக்குகிறது. நாம் அறிவை உணர்கிறோம் கற்கிறோம், அதுதான் வித்தியாசம். இந்த அறிவின் தேவை உயிர்களுக்கு மட்டுமல்ல, உயிரை ஒட்டிய அனைத்து அமைப்புகளுக்கும் பொருந்தும். 

ஒரு தனிமனிதனின் வெற்றி, வணிக நிறுவனத்தின் வெற்றி, ஒரு நாட்டின் வெற்றி உட்பட தீர்மானிப்பது அவ்வமைப்புகள் பெற்றுள்ள அறிவு. மனிதன் அடைப்படையில் நிலத்தில் வாழ்வதற்கென்று வடிவமைக்கப் பட்டாலும், அவனால் நீரிலும் வானிலும், விண்வெளியில் வாழ முடியும். 

இவ்வுலகம் உயிர்கள் வாழமுடியாதபடி வெப்பமடைந்தாலும், அந்தச் சூழலிலும் வாழ்வதற்கான அறிவை மனிதன் பெற்றுக் கொண்டால், அதிலும் செழிக்க முடியும். அடிப்படையில் மனிதனின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போவது அறிவு மட்டுமே. உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம்: அப்படியென்றால் ஏன் படிக்காத அரசியல்வாதிகள் எளிதாக வெற்றி பெறுகிறார்கள்? இதற்கு விடை என்னவென்றால், அவர்கள் அரசியலில் வெற்றி பெறுவதற்கான அறிவு அவர்களிடம் இருக்கிறது என்பதுதான். அந்த அறிவு பாடசாலைக் கல்வியில் கற்றத்தரப்படாதது.

Reference

https://www.dailynews.lk/2021/11/23/editorial/265348/towards-new-look-parliament

https://www.dailynews.lk/2021/12/03/editorial/266313/education-mps

https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/35393-2018-07-05-14-42-38

https://www.dailynews.lk/2017/03/15/political/110458/parliament-has-94-mps-without-ols

0 comments:

Post a Comment