அந்தப்
பாடசாலையின் அதிபர் திரு சந்திரகுமார் அவர்கள் எனக்கு நன்கு அறிமுகமானவர். பல
நாட்களாக சமூக முன்னேற்றப் பணிகளில் என்னோடு இணைந்து பணியாற்றியவர். மாணவர்கள்
மீது அவர் கொண்டிருந்த அன்பு எல்லை கடந்தது. ஒவ்வொரு மாணவனையும் அறிவின் ஒவ்வொரு
படிநிலையிலும் ஏற்றி விட வேண்டும் என்ற தணியாத வேட்கை அவரிடம் எப்போதும்
தெறித்தது. அத்தகைய ஒரு அர்ப்பணிப்புள்ள கல்விமானைச் சந்திப்பதற்காகவே அன்று காலை
நான் அங்கு சென்றிருந்தேன்.
நான்
சென்றதும், வணக்கம்
பரிமாறிக் கொள்வதற்கு முன்பே, அதிபர் அவர்கள் திடீரென
என்னிடம் ஒரு வேண்டுகோளை வைத்தார். "மாணவர்களுக்கு நீங்கள் ஏதாவது சொல்ல
வேண்டும்" என்று சொல்லி, என்னை ஆலோசனை கேட்பதற்குக் கூட
நேரமளிக்காமல், அன்றைய காலை அசெம்பிளியில் மாணவர்கள்
முன்னிலையில் பேசும்படி ஏற்பாடு செய்து விட்டார். அந்தக் கணத்தில் எனக்கு எதுவும்
புரியவில்லை. மனது சட்டென்று குழம்பியது, என்ன சொல்வது,
எப்படித் தொடங்குவது என்ற எண்ணங்கள் தலையில் சுழன்றன. ஆயினும்,
அந்தத் தருணமே ஒரு வாய்ப்பாகவும் அமைந்தது.
மாணவர்கள்
முன் நின்றபோது, ஒரு
எண்ணம் மட்டும் மனதில் தெளிவாக இருந்தது — மாணவர்கள் என்பவர்கள் எதிர்காலத்தின்
மகத்தான சொத்து என்பதே. அவர்களது அறிவுத் திறன் வளர்ச்சியே ஒரு தேசத்தின்
பொருளாதார முன்னேற்றத்திற்கும், சமூக அமைதிக்கும்
என்றென்றும் திறவுகோலாக அமையும் என்பதை உணர்ந்தேன். அதை அவர்களுக்கு எடுத்துச்
சொன்னேன். ஒழுக்கத்தோடு கல்வியைக் கற்றுக் கொள்வதே அவர்கள் செய்யவேண்டிய
முதன்மையான கடமை என்பதை வலியுறுத்தினேன்.
அந்தத் தருணத்தில் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கைக் கதை என் நினைவுக்கு வந்தது. வறுமையின் நடுவிலும் அவர் அறிவைத் தேடி ஓடிய, துணிச்சலோடு வாழ்வை எதிர்கொண்ட அந்தக் கதையை மாணவர்களுக்குச் சொன்னேன். வறுமை வட்டமிடும் பொழுதிலும் கல்வியை மட்டும் ஒரு போதும் கைவிடக்கூடாது என்பதை அவர்களது இளம் மனங்களில் பதிய வைக்க முயற்சித்தேன். ஒரு மனிதனின் வெளித்தோற்றமான வசதிக் குறைவு அவனது அறிவுத் தேடலை ஒரு போதும் தடுக்க முடியாது என்பதற்கு விவேகானந்தரின் வாழ்வே ஒரு வலிமையான சான்று.
பேசி முடித்தபோது, என் மனம் ஒரு விதமான நிறைவைப் பெற்றிருந்தது. ஒரு எதிர்பாராத தருணம், ஒரு தயாரிப்பற்ற பேச்சு, ஆனாலும் அது மாணவர்கள் இடையே சில விதைகளையேனும் விதைத்திருக்கும் என்ற நம்பிக்கை மனதில் எழுந்தது.
இந்த அரிய, மறக்க முடியாத சந்தர்ப்பத்தை எனக்கு வழங்கிய செங்கலடி விவேகானந்தா வித்தியாலயத்தின் அதிபருக்கு இந்த இடத்தில் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மாணவர்கள் மீதான அவரது அளவற்ற அன்பும், சமூக முன்னேற்றத்திற்கான அவரது தணியாத ஈடுபாடும் என்றென்றும் பாராட்டுக்குரியவை. அத்தகைய கல்விமான்கள் இருக்கும் வரை, எமது எதிர்காலச் சந்ததியினரின் அறிவுத் தேடலுக்குக் குறைவு ஏற்படாது என்பதே என் உறுதியான நம்பிக்கை.
இந்த நிகழ்வுக்கு ஒத்துழைப்பும் ஒத்தாசையும் வழங்கிய மாணவச் செல்வங்கள் ஆசிரிய பெருந்தகைகள் ஆகிய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்







0 comments:
Post a Comment