தொழில்கள் அமைச்சர் சுனில்
ஹந்துன்நெத்தி தெரிவித்தபடி, தனியார் தொழில்துறையில் நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள்
நிரப்பப்படாமல் உள்ளன [1][2]. நிர்மாணத் துறை, ஓடு மற்றும் பொருத்துக் கருவித் தயாரிப்பு, காலணித் தொழில்,
தோல் பொருட்கள், வாகனத் தொழில் ஆகிய முக்கிய துறைகள்
இதனால் பாதிக்கப்பட்டுள்ளன [1][2]. தனியாக நிர்மாணத் துறையில்
மட்டும் 2026ஆம் ஆண்டளவில் இருபதாயிரம் பணியிட வெற்றிடங்கள் காணப்படலாம்
என தொழில்துறை மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன; ஏற்கனவே சுமார் பத்தாயிரம்
வெற்றிடங்கள் இத்துறையில் நிலவுவதாகவும், நிர்மாணக் கம்பனிகள்
ஏழாயிரத்து ஐந்நூறு வெளிநாட்டு தொழிலாளர்களை இறக்குமதி செய்ய அனுமதி கோரியுள்ளதாகவும்
அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன [3]. இது ஒரு முரண்பாடான நிலைமையாகும்:
ஆண்டுதோறும் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் வெளிநாடுகளில்
வேலைவாய்ப்பு தேடி இடம்பெயர்கின்ற நிலையில் [4], உள்நாட்டு தொழில்துறைகளோ
இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து தொழிலாளர்களை பணியமர்த்த
வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன [1][2]. வெளிநாட்டு தொழிலாளர்களை
நம்பியிருப்பது, மதிப்புமிக்க வளங்களை வெளியேற்றுவதோடு,
சொந்த நாட்டுக் குடிமக்களுக்கு அதிகாரமளிக்கும் வாய்ப்பையும் இழக்கச்
செய்கின்றது.
இதே காலப்பகுதியில், மறுபுறம் ஒரு வேறுபட்ட புள்ளிவிபர
யதார்த்தம் நிலவுகின்றது. தேசிய ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டு
சபையின் (NDDCB) 2025ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை காட்டுவதுபோல்,
அந்த ஆண்டு மொத்தமாக ஆறாயிரத்து முப்பது (6,030) போதைப்பொருள் சார் சிகிச்சை சேர்க்கைகள் பதிவாகியுள்ளன [5]. இதில், அகவை இருபது முதல் முப்பத்து நான்கு வரையிலான
இளைஞர்கள் மொத்த சேர்க்கைகளில் ஏறத்தாழ எழுபது சதவீதத்தை (69.6%) பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர் - அதாவது, பொருளாதார ரீதியில் மிகவும் உற்பத்தித்திறன் மிக்க அகவைப் பிரிவினரே இதனால்
அதிகம் பாதிக்கப்படுகின்றனர் [5]. கல்வித் தராதரம் தொடர்பான தரவுகள்,
சேர்க்கைகளில் கால் பகுதிக்கும் அதிகமானோர் (48.5%) க.பொ.த. சாதாரண
தரம் வரையிலான கல்வியை மட்டுமே பெற்றுள்ளனர் என்பதைக் காட்டுகின்றன [5]; அதாவது, முறையான தொழிற்பயிற்சி வழங்கப்படுமாயின்,
இவர்கள் தொழில் சந்தையில் இணைவதற்கான அடிப்படைத் திறன்களை ஏற்கனவே கொண்டுள்ளனர்
எனலாம். (பின்வரும் படம் 1 மற்றும் படம்
2, சேர்க்கைகளின் சேவை வழங்கல் முகவர் வாரியான பங்கீட்டையும்,
அகவைப் பரம்பலையும் விளக்குகின்றன.)
இந்நிலையில், இம்முயற்சி தொடர்பாக எழக்கூடிய
எதிர்க்கருத்துகளையும் தரவுகளின் அடிப்படையில் நேர்மையாக ஆராய வேண்டியது அவசியமானதாகும்.
ஒரு தரப்பினர், மறுவாழ்வு பெற்ற தொழிலாளர்களை பணியமர்த்துவது
நிறுவனங்களுக்கு அபாயகரமானதாக அமையக்கூடும் என்றும், மீள் பழக்கவழக்கம்
(Relapse) ஏற்படும் பட்சத்தில் பணியிடத்தில் உற்பத்தித்திறன் பாதிக்கப்படக்கூடும்
என்றும் அச்சம் தெரிவிக்கின்றனர். NDDCB தரவுகளின்படி,
சேர்க்கைகளில் மிக அதிகமான பிரதான போதைப்பொருளாக ஹெரோயின்
(30.3%) பதிவாகியுள்ளது, தொடர்ந்து ஐஸ் எனப்படும்
மெதம்பெட்டமைன் (17.2%), காஞ்சா (5.7%) ஆகியன உள்ளன [5]. இந்த வகைப்பாடு, மறுவாழ்வுத் திட்டமிடலில் போதைப்பொருள் வகைக்கேற்ப வேறுபட்ட தீவிர சிகிச்சை
அணுகுமுறைகள் தேவை என்பதைக் காட்டுகின்றது; அதேவேளை, தொண்ணூற்றாறு சதவீதத்திற்கும் மேலான சேர்க்கைகள் உறைவிட/நிறுவன ரீதியான பராமரிப்பு அல்லது அவுட்ரீச் தலையீடுகள் மூலம் கட்டமைப்பான
சிகிச்சையைப் பெற்றுள்ளன [5] என்பது, பல்திணைக்கள
மேற்பார்வையுடன் கூடிய முறையான பயிற்சி, இத்தகைய அபாயத்தை கணிசமாகக்
குறைக்கும் என்பதற்கான தரவு ஆதாரத்தை வழங்குகின்றது. மற்றொரு
தரப்பினர், உள்நாட்டு தொழிலாளர் பற்றாக்குறையை நிரப்புவதற்கு
இது போதுமான அளவிலான தீர்வாக அமையாது என வாதிடலாம்; ஏனெனில் தற்போதைய
நான்கு இலட்சம் வெற்றிடங்களுடன் ஒப்பிடுகையில், வவுனியா,
சேனாபுர, கந்தக்காடு ஆகிய நிலையங்கள் மூலம் ஆண்டுக்கு
எண்ணூறு பேர் மட்டுமே மறுவாழ்வு பெற்று வருகின்றனர் [1]. இக்கருத்தும்
எண்ணிக்கை அடிப்படையில் நியாயமானதே; எனினும், ஏற்கனவே பதினாயிரம் மறுவாழ்வு பெற்ற இளையோர் பல்வேறு துறைகளில் தொழிற்பயிற்சி
பெற்றுள்ளனர் [1] என்ற குவிந்த எண்ணிக்கையையும், இத்திட்டம் ஒரு மாதிரி முகாமைத்துவமாக (Model Framework) அமைந்து எதிர்காலத்தில் விரிவுபடுத்தப்படக்கூடிய ஒரு அடித்தளத்தை உருவாக்குகின்றது
என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
தேசிய அளவிலான தொழிலாளர் சந்தை
தரவுகளும் இந்த விவாதத்திற்கு முக்கிய பின்னணியை வழங்குகின்றன. மக்கள்தொகை புள்ளிவிபரத் திணைக்களத்தின்
(Department of Census and Statistics) கணக்கெடுப்பின்படி,
2025ஆம் ஆண்டு நான்காம் காலாண்டில் தேசிய வேலையின்மை வீதம்
3.8 சதவீதமாக பதிவாகியுள்ளது [6][7]; எனினும்,
இளைஞர் வேலையின்மை வீதம் (20-24 அகவை) அதே காலப்பகுதியில் 18.3 சதவீதமாகவே நிலவுகின்றது
[7] - அதாவது, தேசிய சராசரியை விட ஏறத்தாழ நான்கு
மடங்கு அதிகமானது. இந்த இளைஞர் வேலையின்மையும், தொழில்துறையின் நான்கு இலட்சம் வெற்றிடங்களும் ஒன்றாக பரிசீலிக்கப்படும்போது,
இலங்கையின் தொழிலாளர் சந்தையில் ஒரு கட்டமைப்பு ரீதியான திறன் பொருத்தமின்மை
(Skills Mismatch) நிலவுகின்றது என்பது தெளிவாகின்றது - தேவை உள்ள இடத்தில் திறன் இல்லை, திறனுக்கான ஆற்றல் உள்ள
இடத்தில் அமைப்பு ரீதியான இணைப்பு இல்லை.
இக்கட்டான நிலைமையை எதிர்கொள்வதற்கு, தரவு அடிப்படையிலான கட்டமைப்பு
ரீதியான தீர்வுகளை முன்மொழிவது பொறுப்பான அணுகுமுறையாக அமையும். முதலாவதாக, மறுவாழ்வு பெற்ற தொழிலாளர்களை பணியமர்த்தும்
நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் (Tax Incentives) வழங்குவது,
தனியார் துறையின் பங்களிப்பை மேலும் ஊக்குவிக்கும். இரண்டாவதாக, NDDCB தரவுகள் காட்டும் போதைப்பொருள் வகைவாரியான
வேறுபாட்டிற்கு ஏற்ப, பணியமர்த்தலுக்குப் பின்னரும் குறைந்தபட்சம்
ஓராண்டு காலத்திற்கு தொடர் ஆலோசனை மற்றும் மேற்பார்வை முகாமைத்துவத்தை கட்டாயமாக்குவது
பொருத்தமானதாகும். மூன்றாவதாக, வவுனியா,
சேனாபுர, கந்தக்காடு நிலையங்களின் ஆண்டுக்கு எண்ணூறு
எனும் தற்போதைய திறனை, குறைந்தபட்சம் இரட்டிப்பாக்குவதற்கான வளமூட்டலை
அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும்; ஏனெனில் தற்போதைய வீதத்தில்,
பதினாயிரம் எனும் குவிந்த எண்ணிக்கையை எட்டவே பல வருடங்கள் தேவைப்பட்டுள்ளன.
நான்காவதாக, நிர்மாணம், தோல்
பொருட்கள், வாகனத் தொழில் ஆகிய குறிப்பிட்ட துறைகளுக்கேற்ப தனித்தனியான
தொழிற்பயிற்சி பாடத்திட்டங்களை தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழு வடிவமைப்பது,
திறன் பொருத்தமின்மையை நேரடியாக குறைக்கும். ஐந்தாவதாக,
பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் மறுவாழ்வு பெற்றோர் மீதான சமூக
இழிவாக்கத்தைக் குறைப்பதற்கான தொடர்ச்சியான முகாமைத்துவ முயற்சிகளும் இணைந்து மேற்கொள்ளப்பட
வேண்டும்.
நீண்ட காலமாக, போதைப்பழக்க மறுவாழ்விலிருந்து
மீண்டு வரும் இளையோர், விடுவிக்கப்பட்ட பின்னரும் கடுமையான போராட்டத்தையே
எதிர்கொண்டு வந்துள்ளனர். இந்த முயற்சி அந்த கதையை மறுவரையறை
செய்கின்றது. ஒரு தனியார் நிறுவனம் மறுவாழ்வு பெற்ற ஒரு இளைஞரை
பணியமர்த்தும்போது, அது வெறுமனே ஒரு தொழிற்சாலை அல்லது நிர்மாணத்
தளத்தில் ஒரு வெற்றிடத்தை நிரப்புவதைத் தாண்டியது; தேசிய கட்டமைப்பிற்கு
அர்த்தமுள்ள வகையில் பங்களிக்கும் ஆற்றல் அவனிடம் உள்ளது என்றும் நாடு நம்புகின்றது
என்பதைத் தெரிவிப்பதாகும்.
புள்ளிவிபரங்கள் தெளிவாக
உரைப்பது, பொருளாதார
முன்னேற்றமும், சமூக இரக்கமும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல என்பதேயாகும். நான்கு இலட்சம் வெற்றிடங்களும்,
பதினாயிரம் பயிற்சி பெற்ற இளையோரும், 6,030 சிகிச்சை
சேர்க்கைகளில் எழுபது சதவீதம் உற்பத்தித்திறன் மிக்க அகவைப் பிரிவினருமான இந்த மூன்று
தரவுத் தொகுப்புகளும் ஒன்றாக இணைக்கப்படுமாயின், தேசிய அளவில்
ஒரு பொருளாதார-சமூக மறுசீரமைப்பு சாத்தியமாகும். போராட்டத்தின் முதல் அறிகுறியிலேயே நமது இளையோரை புறக்கணித்துவிட்டு,
செழிப்பான இலங்கையை கட்டியெழுப்ப முடியாது. தரவுகள் இதனை உறுதிப்படுத்தும் ஒரு தேசிய வாய்ப்பாக முன்வைக்கின்றன;
அந்த வாய்ப்பை கட்டமைப்பு ரீதியாக, தொடர்ச்சியான
கண்காணிப்புடன் செயற்படுத்துவதே இனிவரும் காலத்தின் கடமையாகும்.
ஆதாரங்கள்
[1] Xinhua (2026), "Sri Lanka to place rehabilitated youth
in private sector jobs", July 1, 2026.
[2] Daily Mirror (2026), "Labour shortage compels Sri
Lankan firms to recruit foreign workers - Minister", July 2026.
[3] EconomyNext (2026), "Sri Lanka eyeing foreign labour
as construction recovery triggers 20,000 shortfall", January 2026.
[4] The Diplomat (2026), "Sri Lanka's Labor Paradox:
Exporting Workers, Importing Builders", January 20, 2026.
[5] National Dangerous Drugs Control Board (2026), "Annual
Statistical Report on Treatment Admissions for Drug Use Disorders - Sri Lanka,
2025".
[6] Department of Census and Statistics, Quarterly Labour Force
Survey Report, 2025.
[7] The Morning (2025), "Unemployment hits record low in
1Q25", August 2025.



0 comments:
Post a Comment