களுதாவளைச் சுயம்புலிங்கப் பிள்ளையார் சந்நிதானம் சென்றுபாருங்கள். பல வண்ண நிறங்களில் பூத்துக் குலுங்கும் ஓர் அழகான பூஞ்சோலை. அதன் பக்கத்தில் மதுரை மரக்கீற்று மண்ணைத் துடைக்கும், தாமரை பூத்து இருமருங்கும் சாமரம் வீசும், பசுமாட்டுப் பட்டி அழகுசேர்க்க, மாங்காய்களும், தேங்காய்களும் தொங்கிக் கொண்டு ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்கும் மாந்தோப்பும், தென்னந்தோப்பும்.
இமைகளைத் திறந்து, மேல்நோக்கும்போது பறவைக் கூட்டங்கள் பாடிக்கொண்டிருக்கும் இசைக் கச்சேரி. இதற்கு ஜதி கூட்டுவதுபோல, வாவியின் ஓரத்தில் சலசலவென வயலின் ஓசை. குளிர்ந்த காற்றை அணைக்க, சூரியன் தன் கிரணக்கைகளை நீட்டுகிறான். அடடா! அடடா! பார்ப்பதற்கும், கேட்பதற்கும் என்ன ஒரு ரம்மியமான நிகழ்வு. அத்தனையும் கூட்டாக இருப்பதால்தான், மனதிற்கு ஒரு புத்துணர்வைத் தருகிறது. இவை தனித்தனியாக இருந்திருந்தால் கற்பனை பண்ணி இரசிப்பதற்கு முடியாமல் இருந்திருக்கும். அது போல்தான் இன்று ஒரு பெரிய நிகழ்வில் களுதாவளை கிராமத்தவர் எமது தேத்தாத்தீவு கிராமத்தினையும் இணைத்துக்கொண்டு இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருப்பது ஒரு அழகு, பெருமை, மகிழ்ச்சி.