ADS 468x60

09 June 2019

புரட்சியை ஏற்படுத்துமா! புதிய தலைமைக்கான எதிர்பார்ப்பு. 02

தொடர்ச்சி.....

சுதந்திரத்துக்கு பின்னான சர்வாதிகார ஆட்சி

அநேகமாக சுதந்திரத்தின் பின் சுத்தமான ஐனநாயக ஆட்சி இடம்பெறாது சர்வாதிகாரம் கலந்த ஆட்சியே இடம்பெற்று வருவதாக விமர்சிக்கின்றனர். இதை ஒரு முழுமையான சர்வாதிகாரம் என்றுகூட அழைக்க முடியவில்லை. ஏனெனில் அது ஜனநாயகத்தின் பேரில் அதைப் பயன்படுத்தி செய்யப்படும் சர்வாதிகார ஆட்சியேயாகும்.

ஒரு சுதந்திர இலங்கையில் குடிமகனின் உரிமைப்படி பார்த்தால், அவருக்கு சுதந்திரமாகச் சிந்திப்பதற்கு, அதனை வெளிப்படுத்துவதற்கு, ஒன்று கூடுவதற்கு, சொத்துக்களைச் சேர்ப்பதற்கு மற்றும் தனக்கு பிடித்தமானவரை வாக்களித்து தெரிவு செய்வதற்கு அதுபோல் அனைவரையும் சமமாக நடாத்துவதற்கும் இலங்கைச் சட்டம் பரிந்துரைத்துள்ளது.

எவ்வாறு இருந்தும் 70 ஆண்டுகால சுதந்திர இலங்கையில் இங்கு வாழுகின்ற குடிமக்கள் செல்வந் செழிப்புடன் பிரச்சினைகள் இன்றி வாழும் வழிமுறைகள் இந்த சர்வாதிகாரம் கொண்டவர்களால் கொடுக்கப்பட்டுள்ளதா என்றால் அது கேள்விக் குறியாகவே இருக்கின்றது. இன்னும் அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்யாத தகுதிக்கு குறைந்த வேலையில் இருக்கும் ஒரு அபாக்கிய நிலை இங்கு காணப்படுகின்றது. இவற்றுக்கு யுத்தம் அனர்த்தம் காரணமாகச் சொல்லப்பட்டாலும் அவ்வாறான பல முன்னேறிய நாடுகள் எமக்கு உதாரணங்களாக இருக்கின்றன.

நமது வளமான மக்களை அவர்களது வருமான மட்டத்தினை வைத்து கணிப்பதுதான் நாட்டின் இயல்பு. அந்தவகையில் எமது நாட்டின் வருடார்ந்த தனிநபர் வருவாய் 1969 இல் 160 டொலராக இருந்து 50 ஆண்டுகளின் பின்னர் 2017 இல் இது கிட்டத்தட்ட 4000 டொலர்களாகவே காணப்பட்டது. இந்த வருமானத்தின் மூன்றுமடங்கு எமக்கு கிடைக்குமானால் மாத்திரம் நாம் வசதிபடைத்த நாடுகள் பட்டியலில் வர முடியும். ஆனால் நாங்கள் குறைவிருத்தி நாடு என்கின்ற பெயருடனேயே இன்னும் இருந்து வருகின்றோம்.

அதே நேரம் 1969 இல் தாய்லாந்து நாட்டின் த.ந.வருமானத்தினைப் பார்த்தால் அது 186 டொலராக இருந்து 2017 இல் 6500 டொலராக அதிகரித்திருந்தது. இது இலங்கையை விட வேகமாக வளர்ந்து வந்துள்ளமையினை புடம்போட்டுக் காட்டுகின்றது.

அதுபோல் சிங்கப்பூரின் 1960இலான தலாவருமானம் வெறும் 428 அ.டொலராக இருந்து அது படிப்படியாக வளர்ந்து இன்று நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு 54,500 அ.டொலராக அதிகரித்துள்ளமை ஒரு பலம் வாய்ந்த தலைவரினாலே சாதித்துக் காட்ட முடிந்துள்ளது.

எனவே இலங்கையில் அதிகாரம் மிக்க ஆட்சியாளர்கள் தங்களுடைய மக்களின் பொருளாதார முன்னேற்றத்தில் பல தோல்விகளையே கொடுத்து அவர்களால் அவர்களது பலத்தை சாதகமாகப் பயன்படுத்த முடியவில்லை.

இன்று எமக்கு தேவையான ஒரு தலைவர் தடைகளற்ற ஒரு பலம்வாய்ந்தவர் அல்ல, மாறாக உறுதியான தூரநோக்குடன், சட்டதிட்டங்களையும், சொத்துரிமையினை பாதுகாத்து முன்னெடுக்கக்கூடிய கடமை வீரன் அல்லாது தனது பதவியை கட்டியணைத்துக்கொண்டு அதில் இருந்து விலகிச்செல்லாது இருப்பவர் அல்ல.

அப்பாவித்தனமான வேட்பாளர்கள் எவ்வாறு அசுரத்தனமான அரசியல்வாதிகளாகின்றனர்;

நாம் நன்கறிந்த உண்மை தேர்தல் காலங்களில் தனது அப்பாவித்தனத்தினால் மக்களை வசீகரித்து வாக்குகளை பெற்றுக்கொண்டதன் பின்னர், பலர் பதவிக்கு வந்ததும் எதிர்பார்க்காத அளவுக்கு மற்றவரை ஆட்டிப்படைக்கின்ற அதிகாரமிக்கவராகப் பார்க்கின்றோம். 

அவர்கள் அவர்களுக்கு பொருத்தமான ஒரு வசதியான வலயத்துக்குள் வந்துவிட்டதும், அதனை சுவைத்து தங்களது சுயலாபத்துக்காகவே அந்த பலத்தினையும் பதவியினையும் பயன்படுத்துவதை நாம் கண்டுவந்துள்ளோம்.

கௌடில்யர் அர்த்த சாஸ்த்திரத்தில் குறிப்பிடுவதற்கு அமைய, 'ஒரு மன்னன் தனது சேவகனுக்கு அவனது நாக்கில் தேனை சுவைக்க ஒரு தடைவ கொடுத்தால், அவன் அதன் தூண்டுதலால் இன்னொரு தடைவ இரகசியமாக சுவைக்க முன்வரமாட்டான் எனச் சொல்ல முடியாது' என்றார். அதாவது அவன் அந்த பலத்தினைப் பயன்படுத்தி இதனைச் சுவைப்பதற்காக துஷ்பிரயோகம் செய்யமாட்டான் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. உதாரணமாக தண்ணீரில் இருக்கும் மீன் நீந்துகின்றதா அல்லது தண்ணீரினைக் குடிக்கின்றதா என்பதனை நாங்கள் ஊகிக்க முடிவதில்லை அல்லவா அதுபோன்றுதான்.

இவ்வாறுதான் மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றுவதற்காக வரும் ஆட்சியாளர்கள் தேனை சுவைத்த  சேவகனைப்போல அதனை முழுமையாக அடைய மக்களை  ஏமாற்றி சமுகத்தின் ஒட்டுமொத்த எதிரியாகிவிடுகின்றனர்.

ஊழலும் வசதிவாய்ப்புக்களும்.

மக்கள் தேர்வு செய்கின்ற ஒரு தலைவன் தான் எவ்வளவுக்கெவ்வளவு நீண்டகாலம் இருக்க முடியுமோ அதனை தக்கவைக்கவே அவன் முனைகின்றான். குறித்த தலைவனின் காலம் முடிவடைந்தாலும் அதனை அவனது பிள்ளைகளிடம், அல்லது உறவினர்களிடம் கையளிக்கும் வியூகத்தினையே உருவாக்குகின்றான்.

இதற்காக தனது காலத்தில் அதிக பொருளாதாரத்தினை, சொத்துக்களை, கட்டிடங்களை, வளவு வாய்க்கால்களை தன்னைச் சுற்றி கட்டியெழுப்புகின்றான். அரசியல்வாதிகள் மாத்திரமல்ல அவர்களைச் சுற்றி இருப்பவர்கள்கூட வெகு சீக்கிரமாக முன்னேற்றமடைந்துவிடுகின்றனர்.

இவர்கள் தமது சொத்துக்களை குறுக்குவழியில் ஈடுபடும் வியாபார உடன்படிக்கையின் மூலமே இந்த பலம்கொண்ட தலைவன் அல்லது அவனது சொந்த பந்தங்களுக்கு அவை செல்கின்றன. ஆனால் இந்த வியாபாரங்கள் மூலம் ஒரு நாள் எமது நாடு முன்னேற்றமடையும் என மக்களை ஏமாற்றி மூளைச் சலவை செய்கின்றான். 

பாடுபட்டு உழைக்காத சொத்துக்கள் இவ்வாறான மோசமான உடன்படிக்கைகளினால் இவர்களிடம் எவ்வாறு வந்து குவிந்தது என்பதற்கு இலங்கை மற்றும் ஏனைய நாடுகளில் உதாரணங்கள் நிறைந்து காணப்படுகின்றது.

நேபாள் நாட்டின் கோடீஸ்வரர் சௌத்திரி அவர்கள் அவரது சுயசரிதையில் குறிப்பிடும்போது, இந்நாட்டில் புதிதாக வியாபாரம் ஆரம்பிக்கின்றவர்கள் யாரும் 51 விகிதம் பங்கினை அரச குடும்பங்களுக்கு செலுத்தாமல் அவற்றை நடாத்த முடியாது என்கின்றார். 

அதேபோல வங்களாதேசின் ளகாட்டோ அவரது 32 வருட ஆட்சிக்காலத்தில் அரச நிதி 25 வில்லியன் டொலரை கையாண்டார் என்பதற்காக குற்றம் சுமத்தப்பட்டார்.

மலேசியாவின் முன்னால் பிரதமர் நஜீப் ரசாக் எம்.டி.வி கோப்பரேசன் ஊடாக தனது ஆட்சிக்காலத்தில் 4.5 வில்லியன் டொலர்களை கையாண்டார் என நீதிமன்றில் குற்றம்சாட்டப்பட்டார்.

இதுபோன்று நல்ல பெயருடன் ஆட்சிக்கு வந்த பல எமது தலைவர்கள் உழைக்காமல் மக்களை சுரண்டி ஏமாத்தி இந்த பலத்தினைப் பிரயோகித்து பணம் சேர்த்து கோடீஸ்வரர்களாகிய பல செய்திகளை நாம் படித்திருக்கின்றோம்.


மக்கள் எதைக் கூறுகின்றனர்

உண்மையில் ஒரு சிறந்த தலைவன் மக்களின் அபிப்பிராயத்தின் அடிப்படையிலேயே எல்லாவகையான சட்டங்களையும் அமுல்படுத்துகின்றான். ஆனால் பல தலைவர்கள் மக்களின் குரலை நசுக்குவதற்காகவே சட்டங்களை கையில் எடுக்கின்றனர். இதற்குப் பக்கத்துணையாக தேசிய மதவாதங்களை கையில் எடுக்கின்றான். இதனால் இந்த மக்கள் சொந்த நாட்டிற்குள்ளே சுதந்திரக் கைதிகளாக இருக்கும் வண்ணம் இவர்கள் ஆட்சியினை அமைத்துக்கொள்ளுகின்றனர்.

ஆக சாதாரண பொதுமக்களினால் நீதித்துறையில் மாற்றங்களை கொண்டுவரமுடிவதில்லை ஏனெனில் அவைகள் ஒரு பலமிக்க தலைவரினாலே தீர்மானிக்கப்படுவதனாலாகும். இன்னொரு பக்கத்தில் பார்த்தால் இந்த தேசிய வாத மதவாத உணர்வலைகள் மக்களை ஒரு சூழ்நிலைக் கைதியாக சொந்த நாட்டிற்குள் வைத்திருப்பது பலருக்குத் தெரிவதில்லை.

இவர்களுடைய பகுத்தறிவு சிந்தனை நசிக்கப்பட்டு, இவர்கள் கண்மூடித்தனமாக இந்தத் தலைவர்களிடம் எதுவித கேள்வியும் இல்லாமல் நம்பி வாழுகின்ற ஒரு குதெ;தொகையாகவே இவர்கள் ஆக்கப்பட்டிருப்பது இவ்வாறான நாட்டில் வாழும் மக்களின் துர்ப்பாக்கியம்.

ஏமாறக்கூடிய மக்களை களியினை வைத்து வேண்டியவற்றை செய்வதற்கு ஒப்பாக இந்தத்தலைவர்கள், தமக்கு ஏற்றாற்போல் மக்களை உருவாக்கிக் கொள்ளுகின்றனர். இதனால் இத்தலைவர்களுடன் சேர்ந்து அவர்களது உறவுகளும் மாறாமல் பதவியில் இருக்கின்றனர்.

ஆனால் வேகமாக நகரும் உலகில் இந்த மக்களின் மனச்சாட்சி இவர்களை மெதுவாக சாகடிக்கத் தொடங்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

இராணுவ பலமும் அதிகாரமும்.

ஒரு தலைவனுக்கு விசுவாசமான படை மிகக் கடுமையாக அந்த மக்களின் முன்னேற்றத்தினைக் கட்டுப்படுத்த முடியும். சில நாடுகளில் தண்டனை வழங்குவதற்கான பிரத்தியேகமான இடங்கள் மூலம் அவர்களை அடக்கி நலிவுற்றவர்களாக்கினர். இவ்வாறான நீதியற்ற கொலை தண்டனைகளுக்காக வேறு பல சதிகாரர்களுக்கு பணம் செலுத்தும் ஒரு விதி இருந்து வருகின்றது. இவ்வாறு நாட்டை அச்சமடையவைப்பதனாலும் அதன் மூலம் மக்கள் அச்சமடைவதனாலும் ஒரு புத்தாக்கமுள்ள, வினைத்திறனுடன் உற்பத்தி செய்யும் ஒரு சமுகத்தினைப் பிரசவிக்க முடியாது.

அயல்நாடுகள் வரம்புகடந்து முன்னேற்றமடையும் அதேவேளை இவ்வாறான நாட்டின் நடவடிக்கைகளினால் அதன் அவவிருத்தி மிகப் பலகீனமாகக் காணப்படும்.

மக்களுடைய பார்வையில், ஒரு அதிகாரம் மிக்க தலைவனின் ஆட்சி, தியாகம் அந்த நாட்டின் எதிர்கால நலனுக்கான ஒரு மதிநுட்பமாகும். முன்னே செல்ல நாட்டின் கடின உழைப்பு அவசியமாகும். ஆனால் இந்த கடின உழைப்பால் மாத்திரம் சமுகத்தினால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு ஆட்சியினை அமைத்துவிட முடிவதில்லை. ஏனெனில் ஜனநாயக ஆட்சியானது ஒன்றை நடைமுறைப்படுத்த முடியாத மிக பலம் குறைந்த ஒன்றாகும்.

உறுதியான தலைவரின் தேவை

இந்த ஜனநாயகத்துக்கு அப்பாற்பட்ட ஒரு ஆட்சியினை அமைதியாக சட்டத்தினைப் பின்பற்றும் குடிமக்கள் விரும்புவதில்லை மாறாக அதை மீறுபவர்கள் ஆதரித்தே வருகின்றனர். இந்த சட்டத்தினை மதியாத மீறுகின்றவர்கள் உழைப்பாளிகளின் உழைப்பில் தங்கி வாழுகின்றனர். இவற்றுக்கெல்லாம் ஒரு சிறந்த தலைவன் தோன்றி இவர்களுக்கு தண்டனை வழங்கி, சட்டங்களை மற்றும் ஒழுக்கத்தினைப் வலுவாக அமுல்ப்படுத்தி ஆட்சி அமைப்பார் எனில் இதுதவிர இன்று மக்களுக்கு என்னவேண்டியிருக்கின்றது.

ஒரு நாட்டை ஆளுகின்ற தலைவர் தனது நேரத்தை, சுற்றுப் பயணத்திற்கோ, மேடைப் பேச்சுக்கோ செலவிடாமல், ஆக்கப் பூர்வமாக பயன்படுத்த வேண்டும் அதுதான் நேர்மறையான பயனைக் கொண்டுவரும்.

குறிப்பாக தங்கள் நேரத்தை, நாடு எதிர்கொள்ளும் முக்கியமான, பிரச்சனைகளைப் பற்றி ஆராய்ந்து புரிந்து கொள்ள, தலைவர்கள் பயன்படுத்த வேண்டும். 

இது வரையிலும் அவர் அறிந்திராத, இன்றியமையாத விஷயங்களைப் பற்றி படித்து தெரிந்து கொள்ள வேண்டும். திட்டங்களை நிறைவேற்றக் கூடிய சரியான நபர்களை தேர்ந்தெடுப்பதற்கு, மிகவும் அரிதான நேரத்தை செலவிட வேண்டும். இந்த மூன்றும் இன்றைய தலைவர்களுக்கு அதிமுக்கியமானதாகும்.

இன்று உலகம் கிராமமாக சுருங்கிவிட்டது அத்துடன் உலகம் மிக வேகமாக மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த சூழலில் புதுப்புது பிரச்சனைகளும் வாய்ப்புகளும் ஒன்றாகவே சேர்ந்து வருகிறது. அதையெல்லாம் அறிந்து கொள்ளாமல் ஒரு தலைவர் நாட்டை நிர்வகிக்க முடியாது.

பொருளாதாரம், அறிவியல் சார்ந்த பத்திரிக்கைகள், இதழ்கள் ஆகியவற்றை கட்டாயம் தினம் தோறும் வாசிக்க வேண்டும். அன்றாடம் மாறிவரும் சூழல்கள் பற்றி அங்கு தான் தெரிந்து கொள்ள முடியும். தவிர குறிப்பிட்ட முக்கிய துறை சார்ந்த கட்டுரைகள், ஆராய்ச்சிகள் , புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றையும் தொடர்ந்து வாசித்துப் புரிந்து கொள்ள வேண்டும்.

அதற்குத் தான் அதிகாரிகள் இருக்கிறார்களே என்றால், பின்னர் தலைவருக்கு என்ன தான் வேலை? என்ற கேள்விகளுக்கு இடமே இல்லை. மற்றவர்கள் சொல்வதை, அப்படியே உத்தரவாக பிறப்பிப்பதற்கு ஒரு தலைவர் தேவையா? தனக்குத் தெரிந்து இருந்தால் தானே, அதிகாரிகளின் தகவல்களும் பரிந்துரைகளும் சரியானதா இல்லையா என்று புரிந்து கொள்ள முடியும். 

சரியான முடிவுகள் எடுக்கவும் முடியும். அதிகாரிகளின் அறிவுத்திறனை மட்டுமே நம்பியிருந்தால் தலைவரின் வீழ்ச்சி வெகு விரைவில் நிச்சயம். இது நாம் கண்டுகொண்டிருக்கும் நிஜமான உதாரணங்கள்.

சுயமாக விவரங்களைத் தெரிந்து கொண்டு, அதிகாரிகளின் ஆலோசனைகளைப் புரிந்து கொண்டு, விவாதித்து, பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வல்லமை இருந்தால் மட்டுமே அவர்கள் உண்மையான தலைவர்கள். இன்றைய நவீன உலகத்தில் அப்படிப் பட்ட தலைவர்களால் மட்டுமே நாட்டை சரியாக நிர்வகிக்க முடியும். 

மாறாக அலங்காரப் பேச்சுகளும், நாடு நாடாக, ஊர் ஊராகப் பயணம் மேற்கொள்வதும் தலைவர்களுக்கான பணி அல்ல. அதெற்கெல்லாம் மற்றவர்களை பிரதிநிதிகளாக அனுப்பலாம்.

நம்முடைய தலைவர்கள், எதையும் முழுமையாக உள்வாங்கி, புதியவைகளை விரைவில் கற்றுக் கொண்டு, செயல்திட்டம் உருவாக்கும் திறன் உடையவர்களா? அதற்காக தங்கள் நேரத்தை செலவிடுகிறார்களா? என்று பாருங்கள். அவர்களை ஆராதிக்கலாம்.

சீரிய தலைவர்களை, நாட்டின் மேம்பாட்டிற்காக அயராது உழைக்கும் நேர்மையான தலைவர்களை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். பிறிட்டிஸசில் தேர்தல் பிரச்சாரம் செய்த ஒரு பெண் இவ்வாறு சொன்னார்: 'ஒரு தலைவருக்காக மக்கள் ஓட்டுப் போடுகையில், தங்களுடைய வாழ்க்கையையும், எதிர்காலத்தையும், பிள்ளைகளையும் அவரிடம் நம்பிக்கையோடு ஒப்படைத்து ஓட்டுப் போடுகிறார்கள்.' இவர்களுடைய நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்துகொள்வது மிகப் பெரிய சவால். ஏன் அப்படி?

ஏனெனில் தீர்க்க முடியா பிரச்சினைகளுக்குள் சிக்கித் தவிக்கிறது நமது உலகம். உதாரணமாக, குற்றச்செயலையும் போரையும் ஒழிப்பதற்கு அறிவும் ஆற்றலும் படைத்த தலைவர் யாரேனும் இருந்திருக்கிறாரா? 

உணவு, சுத்தமான குடிநீர், சுகாதாரம் ஆகியவற்றை எல்லா மனிதருக்கும் அளிப்பதற்கு அக்கறையும் திறமையும் கொண்ட தலைவர் இன்று இருக்கிறாரா? 

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் புதுப்பிப்பதற்கும் மதிநுட்பமும் மனோதிடமும் படைத்த ஒருவர் இருக்கிறாரா? முழு மனிதகுலத்திற்கும் மகிழ்ச்சியான வாழ்க்கையை, நீடித்த வாழ்க்கையை உத்தரவாதம் அளிப்பதற்குத் தகுதியும் திறனும் பெற்றவர் இருக்கிறாரா? இப்படிப்பட்ட தலைவர் எமக்கு வேண்டும்.

ஆக இன்று எமக்கு தேவை, தடையில்லாத ஒரு தவைர் மாத்திரமல்ல இந்த நாட்டினுடைய சட்டம் ஒழுங்கினை நிலை நாட்டி எமது உரிமைகளை பாதுகாத்து எமது நாட்டினை எல்லோரும் விரும்பும் வண்ணம் முன்னே கொண்டுசெல்லக்கூடிய ஒரு உறுதியான தலைவர்தான் எமக்கு தேவை. அத்துடன் பதவி முடிந்த பின்னும் அவற்றை இழுத்து வைத்துக்கொள்ளும் ஒருவர் மக்கள் எப்போதும் விரும்புவதில்லை.

சி.தணிகசீலன்
S.T.Seelan

References



0 comments:

Post a Comment