சாதாரண அரச உத்தியோகத்தர் ஒருவர் அரசாங்கத்தில் வெறும் 30 ஆயிரம் தொடங்கி 50 ஆயிரம் வரை சம்பளம் எடுக்ப்பதற்கு வாராந்த, மாதாந்த, காலாண்டு மற்றும் வருடாந்த என்ற வகையில் முன்னேற்ற அறிக்கைகளை முறையாக சமர்ப்பிக்க வேண்டும். அரசில் மக்களின் வரிப்பணத்தில் அவர்களுக்கு சேவை செய்பவர்கள் பொறுப்புள்ள முறையில் வகைகூற என AR மற்றும் FR என பல சட்டதிட்டங்கள் இருக்கின்றன.
ஆனால்; அரசியல்வாதிகளில் அதிகமானோர் மக்கள் இவற்றை அறியாதவாறு மூளைச் சலவை செய்யப்பட்டுவருகின்றனர். நான் ஒரு சவாலை விடுகின்றேன் அது முடியுமானால் ஐந்து வருடத்தில் அல்லது கடந்த தசாப்தத்திலாவது தமிழர்களால் தெரிவுசெய்யப்பட்ட, குறிப்பாக கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் அவர்களுடய முன்னேற்ற அறிக்கையினை எமது மக்களுக்கு காட்ட முடியுமா?
ஆண்டாண்டு காலம் நாம் ஆண்ட நாடு
அன்னை தந்தை மக்கள் சுற்றம் வாழ்ந்த நாடு
தோன்றாமல் தோன்றும் வீரர் கொண்ட நாடு
தூங்கித் தூங்கி சோர்ந்து விட்டதிந்த நாடு!
இந்தப்பாடல் எம்மால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளின் தூக்கத்தினாலும் சோரத்தினாலும் ஏற்பட்டுள்ள நிலைக்கு எடத்துக்காட்டு.
ஆக இந்த மக்களின் நம்பிக்கை, வேட்பாளர்கள்; வழங்கிய விஞ்ஞாபன அறிக்கை ஆகியவற்றில் இடம்பெற்ற செயற்பாடுகளில் ஒன்றையாவது செயற்படுத்தி இருக்கின்றார்களா? என அந்த முன்னேற்ற அறிக்கையில் மக்களுக்கு விளக்கிக் கூறமுடியுமா?
இவர்களை மக்கள் தட்டிக் கேட்பதில்லை, அவர்களுக்கு அந்த அறிவினை கொடுக்காமல் தாங்கள் காலாகாலமாக எதை எதையோ எல்லாம் சொல்லி மக்களை ஏமாற்றி வருகின்றார்கள். அதனால் இவர்கள் அவரவர் இஸ்ட்டத்துக்கு நடந்துகொண்டு போகின்றார்கள்.
இதனால் சிறையில் வாடுவோர், வறுமையில் தவிப்போர், கல்வியில் இடைவிலகுபவர்கள், தரமற்ற அபிவிருத்தி, தொழிலின்மை, இளைஞர்களின் மோசமான ஈடுபாடுகள், குன்றிய உற்பத்தித் திறன், கொள்ளை, கொலை, ஒழுக்கமற்ற சமுகம், தங்கிவாழுவோர் தொகை அதிகரிப்பு என மோசமான விளைவுகள் எமது உறவுகள் மத்தியில் அதிகரித்து எமது கிழக்குவாழ் தமிழ்ச் சமுகம் மிகப் பின்தங்கிப் போய்கொண்டு இருக்கின்றது. அதற்கு ஆண்டாண்டு வரும் ஆதார அறிக்கை சான்று பகரும்.
இவர்கள் ஏனைய சமுகத்தின் பிரதிநிதிகளை விடவும் 100 மடங்கு அதிக வேகமுடையவர்களாகவும், மக்கள் அக்கறை கொண்டவர்களாகவும் இருக்க வேண்டு. ஏனெனில் எமது மக்கள் பல மடங்கு பின்னடைந்துள்ளமை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. அதற்கு ஒரு எடுத்துக்காட்டு 80,000 பேருக்கு மேல் விதவைகள் எம்மத்தியில் போரின் பேரில் கிடைத்த விளைவில் ஒன்றாக உள்ளது.
இதனால் மக்கள் மத்தியில் அரசியல் வெறுப்பு தோன்றி எமது கிழக்கில் குறைந்துகொண்டு போகும் வாக்களிப்பு மற்றும் நிராகரிப்பு வீதம் இன்னும் இன்னும் மோசமடைந்து தமிழர் அடையாளம் மாற்றானின் அடையாளங்களை மண்டையில் கிரீடம் இடும் நாட்கள் மிகத்தொலைவில் இல்லை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
ஏற்கனவே [30,000] 30 ஆயிரம் தமிழர்கள் இஸ்லாத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்கள் என ஞானாசாரத் தேரர் கூறிவரும் நிலையில் இன்னும் எத்தனை வருடம் தேவைப்படும் ஒட்டுமொத்த மக்களையும் தமிழர் இல்லாமல் ஆக்குவதற்கு! நினைக்கவே வெட்கமாகவும் துக்கமாகவும் இருக்கின்றது.
காரணம் இஸ்லாமியர்கள் அல்ல எமது அரசியல் தலைமைகளின் மக்கள் மீதுள்ள அக்கறையின்மையே. இலங்கையின் அரசியலமைப்பில் மூன்றாவது அத்தியாயத்தில் உறுப்புரை 10 இல் உள்ளடக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளிற்கு இணங்க, ஆள் ஒவ்வொருவருக்கும் தான் விரும்பும் மதத்தை அல்லது நம்பிக்கையை உடையவராயிருந்ததற்கான அல்லது மேற்கொள்ளுவதற்கான சுதந்திரமுட்பட, சிந்தனை செய்யும் சுதந்திரம், மனச்சாட்சியை பின்பற்றும் சுதந்திரம், மத சுதந்திரம் என்பவற்றுக்கு உரித்துடையவராதல் வேண்டும் எனச் சொல்லப்படுகின்றது.
ஆனால் இவர்கள் விருப்பத்தின்படி மதம்மாற்றப்படுகின்றனரா? என்றால் இல்லை என்றே பதில் வரும். இந்த மக்கள் அரசியல் பாதுகாப்பு இல்லாமல் நாதியற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் அதிகமானேர் விவசாயிகளாகவும், மீனவர்களாகவும் இருந்து நடுத்தர மற்றும் கீழ்நிலைக் குடும்பங்களாக வாழ்ந்துவரும் நிலையில், சட்டவிரோத காடழிப்பு, மண்ணகழ்வு, சட்டவிரோத கட்டிடங்கள் போன்ற இன்னோரன்ன காரணங்களால் எமது பிரதேசங்களில் காலநிலைப் பொய்த்துப்போய் உள்ளது.
இதனால் இந்த தொழில்களில் பல பின்னடைவுகளை மக்கள் சந்தித்து நலிவுற்று வருகின்றமைக்கு எதிராக ஒரு மரக்கன்றைத்தானும் நாட்டாத பொறுப்பற்ற எமது பிரதிநிதிகள் எப்படி 50 ஆண்டுகளுக்கு ஏனைய சமுகத்துடன் ஒப்பிடும்போது பின்னடைந்துள்ள எமது சமுகத்துக்கு பொறுப்புள்ளவர்களாக முண்டுகொடுக்க முடியும்?. இவைதான் காரணம் மக்கள் இலகுவாக அடிமைகளாகி அடையாளங்களை இழந்து ஏனையவர்களிடம் சரணாகதியடைய.
அடிமை வாழ்வுப் பாடம் இன்னும் படிக்கலாமா –
நல்ல அமுதம் என்று நஞ்சை அள்ளிக் குடிக்கலாமா
தன்னலத்தில் இன்பம் காண நினைக்கலாமா -
பெற்றதாயிடத்தில் அன்பில்லாமல் இருக்கலாமா!
நான் இவற்றையெல்லாம் எழுதி எம்மவரை தரக்குறைவாக பேசக்கூடாதென பல தடவைகள் நினைத்ததுண்டு ஆனால் ஒரு சராசரி மனிதனாக இவற்றைப் பார்த்துக்கொண்டு இருக்கமுடியாமல் இவற்றை எழுதுகின்றேன்.
எமக்கென சரியான சீரிய தலைமை இல்லாது போய் உள்ளது. அதனால் 2009 இன் பின் எடுப்பார் கைப்பிள்ளையாக எமது சமுகம் இருந்து வருவது இவர்களுக்கு வருத்தத்தினை தரவில்லை. உண்மையை சொல்லப்போனால் மக்களை அவரவர் குடும்ப உறுப்பினர்களே ஆழுகின்றனர். அவர்களுக்கு அவர்களே ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர் எல்லாமே!.
ஆனால் இது எமக்கு பலகீனம் அல்ல பெரிய பலம். ஆமாம் ஒரு தலைவன் இல்லாமல் சவால்களுடன் வாழுகின்ற சமுகம் நாம். நாம் சொந்தக்காலில் எழுந்து நிற்க்கவேண்டும். இளைஞர்கள் ஒன்றுபடவேண்டும். நாம் நலிவுற்ற நிலையில் இருந்து விடுபட துடிப்புள்ள உழைப்பாளர்களாகவும், எமது சமுகத்தில் அக்கறையுள்ளவர்களாகவும், கல்வியில் முன்னேறுபவர்களாகவும் இருந்து சொந்தக்காலில் நின்று மாற்றங்களை காட்ட வேண்டும். யாரையும் நம்பி வாழாமல் பிறர் நம்ம வாழ்ந்தால் நாம் என்றோ ஒரு நாள் ஒரு நல்ல பிரதிநிதிகளை பிரசவித்து எமது சமுகத்துக்கு காப்பறனாக அடையாளங்களை அழியவிடாமல் அபிவிருத்தியடையலாம் என்பது எனது நம்பிக்கை.
பகுத்தறிந்து வாழ்பவரை சரித்திரம் பேசும் -
அவர்பரம்பரையின் கால்கள் மீதும் மலர்களை வீசும்
பயந்து வாழும் அடிமைகளைப் பூனையும் ஏசும்
அவர் பால் குடித்த தாயைக் கூட பேய் எனப் பேசும்
0 comments:
Post a Comment