ADS 468x60

18 September 2022

'யார் இந்த பூராடனார்' மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் நினைவுப் பேருரை!

அறிமுகம்

சிந்தனைகளை யாராலும் பசிவந்தால் சாப்பிட முடிவதில்லை ஆனால் அதுவே பலர் ஒழுக்கமுள்ள மற்றும் வளர்சியடைந்த சமுகமாக மாற வழிவகக்கின்றது என்றால் அது பொய்யில்லை. உலகத் தமிழ் வளர்சிக்கு ஊன்றுகோலாக பல ஈழத்தமிழர்கள் இருந்துள்ளனர், இருக்கின்றனர் இன்னும் இருந்துகொண்டே இருப்பபார்கள். 

தமிழ்மொழி தொன்மையான செம்மொழி என்பதை ஆய்வுலகும் அறிஞர் உலகும் ஏற்றுக்கொண்டுள்ளன. அம்மொழியின் வளங்கள் பன்முகம் கொண்டவை. சங்க நூல்கள் (இலக்கியம், இலக்கணம்), அறநூல்கள், பக்தி நூல்கள், காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், உரையாளர்களின் உரைகள், அகராதி நூல்கள், நாட்டுப்புறவியல் நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், கலைக்களஞ்சிய நூல்கள், படைப்பு நூல்கள், கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் என்று பல துறையாகப் பல்கிக் கிடக்கும் தமிழ்ப் பரப்பு முழுமைக்கும் பங்களிப்பு செய்தவர்கள் ஒரு சிலராகவே இருப்பார்கள்.  

 சிலர் சொல்லாராய்ச்சித் துறையில் மட்டும் ஈடுபட்டுத் தம் பேரறிவு கொண்டு உண்மையை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளனர். சிலர் இலக்கண நூல்களை மட்டும் நுண்ணிதின் ஆய்ந்து அறிஞர்களாக விளங்குவார்கள். சிலர் பக்திப் பனுவல்களில் ஈடுபட்டு மெய்யுணர்ந்து மேன்மை பெறுவது உண்டு. சிலர் மொழிபெயர்ப்பு நூல்கள் வழியாகத் தமிழுக்கு ஆக்கம் தேடியிருப்பார்கள். சிலர் நாட்டுப்புற மக்களின் பண்பாட்டை அறிவதில் தம் வாழ்நாள் ஆய்வைச் செலவிட்டிருப்பார்கள். சுருங்கச்சொன்னால் சிலர் இயலிலும், சிலர் இசையிலும், சிலர் நாடகத்திலும். இன்னும் சிலர் இப்பகுப்பில் அடங்காத பிற துறைகளிலும் தம் கால் பதித்து அறிஞர்களால் பாராட்டப்படுவது உண்டு. மேற்குறித்த பல துறைகளிலும் சிறப்பாகப் பணிபுரிந்து இன்னும் முற்றாகத் தமிழகத்தாரால் அறியப்படாமல் இருக்கும் அறிஞர்களுள் ஈழத்தில் பிறந்து கனடாவில் வாழ்ந்த அறிஞர் ஈழத்துப்பூராடனார்.

ஈழத்துப் பூராடனார் பின்னணி 
செப்டெம்பர் மாதம் 17ம் திகதி சிந்தனையாளர், படைப்பாளர், கண்டுபிடிப்பாளர், ஆய்வாளர், அரங்கக் கலைஞ்ஞர், எழுத்தாளர், கவிஞ்ஞர் என பன்முகத் திறமை கொண்டு மறைந்தும் இன்னும் அவர் சேவைகளை உயிர்வாழ வைத்த ஒரு மாமனிதர், இலக்கியமணி, ஈழத்துப் பூராடனார் கலாநிதி க.தா.செல்வராஜகோபால் அவர்களின் நினைவுப் பேருரை நடாத்தப்பட்டது. 

இவர் மட்டக்களப்பில் செட்டிபாளையத்தில் பிறந்து, தேத்தாத்தீவில் வாழ்ந்து வந்து பின்னர், யுத்த சூழல் காரணமாக கனடாவுக்கு இடம்பெயர்ந்து தனது சேவைகளை தொடர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் செட்டிப்பாளையம் என்னும் ஊரில் வாழ்ந்த சாமுவேல் கதிர்காமத்தம்பிக்கும் வள்ளியம்மை அம்மாவுக்கும் மகனாகப் பிறந்த ஈழத்துப்பூராடனாரின் இயற்பெயர் க.தா.செல்வராசகோபால் என்பதாகும். தமிழ், ஆங்கிலம்,சிங்கள மொழிகளில் நல்ல புலமை பெற்றவர்.இவரும் இவர் துணைவியார் வியற்றிசு பசுபதி அம்மாவும் ஆசிரியர்களாக இலங்கையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள். இலங்கைக் கலவரத்திற்குப் பிறகு (1983 அளவில்) இவர்கள் கனடாவில் குடியேறியுள்ளனர்.

இவ்வாறான பெருந்தகைக்கு மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கம் தமிழ் பேசும் நல்லுலகிற்கு அர்ப்ணிப்புமிகு சேவையாற்றிய அறிஞர் பெருமக்களின் சேவையை நினைவு கூர்ந்து அவற்றை பயன்படுத்தும் முகமாக இம்மாநிலத்தின் தமிழ்பேசும் மக்களுக்கு அவசியமான ஆய்வு ரீதியான கருத்துரைகளையும், கருத்தாடல்களையும் நடாத்தி வருகின்றது.

ஈழத்துப் பூராடனார் பெருமைகள்
சில வருடங்களுக்கு முன்னர் இலங்கையின் கிழக்குப் பல்கலைக் கழகம் இவரை அங்கு அழைத்து கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கியமை அவரது அறிவாற்றலையும் வாண்மையினையும் பறைசாற்றுகின்றது.

இது மட்டக்களப்பு தமிழ்ச் சங்க ஒன்றுகூடல் மண்டபத்தில் புத்தி ஜீவிகள், புரவலர்கள், எழுத்தாளர்கள், பெரு வர்த்தகர்கள், மாணவர்கள், சமுக ஆர்வலர்கள் ஒன்று சேர நடைபெற்றது. இந்த நிகழ்வு பலராலும் பாராட்டவும் வரவேற்கவும் பட்டது. 

ஒரு சிறந்த மனிதர், ஆற்றலுள்ளவர் மற்றும் சேவையாளர் பாராட்டப்படும் பொழுது அது ஏனையோருக்கு எடுத்துக்காட்டாகவும் தூண்டுதலாகவும் இருக்கும் என்ற நோக்கத்தில் இது செவ்வனே மட்டக்களப்புத் தமிழ் சங்க உறுப்பினர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. 

இவர்தம் பணியைப் பாராட்டிப் பல்வேறு அமைப்பினரும், நிறுவனங்களும் பாராட்டிச் சிறப்புச் செய்துள்ளன. இவற்றுள் இந்து பண்பாட்டு அமைச்சின் நாடக சேவை விருது(1982), மட்டக்களப்பு கலை பண்பாட்டு அவை வழங்கிய இலக்கிய மணி விருது, கனடாவில் வழங்கப்பட்ட பாராட்டுப் பதக்கம் (1994), தொரன்றோ சேக்கம் நிறுவனத்தின் கேடயமும் (1987), மொரீசியசில் வழங்கப்பட்ட தமிழ்நெறிப் புலவர் விருதும், கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகம் இவர்தம் தமிழ் இலக்கியப் பணியைப் பாராட்டி வழங்கிய கலாநிதிப் பட்டமும் (னுழஉவழச ழுக டுநவவநசள)(2000), தமிழர் தகவல் விருது (1992), தாமோதரம் பிள்ளை விருது(1998) முதலியன குறிப்பிடத் தக்கன.

ஈழத்துப் பூராடனார் தமிழ் இயக்கச் செயற்பாடுகள்
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கனடாக் கிளையை 1995ம் ஆண்டு ஆரம்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது அதற்கு அச்சாணிகளாய்த் திகழ்ந்தவர்களுள் அறிஞர் ஈழத்துப் பூராடனாரும் முக்கியமானவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாக பல ஆண்டுகள் உலகத் தமிழ் பண்பாட்டு இயகத்தி;ன் காப்பாளராக பணியாற்றி பல சேவைகளைச் செய்தவர் இவர் என்பதும் முக்கியமாக கருதப்பட வேண்டியதாகும்.

தமிழ் மக்கள் பயன்பெறும்வண்ணம் பல்வேறு நிறுவனங்களை ஏற்படுத்திப் பல பணிகளையும் செய்தார். அவற்றுள் ரிப்ளக்சு அச்சகம், சீவா பதிப்பகம், நிழல் என்னும் பெயரில் இதழ் நடத்தியது, தமிழ் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டமை, உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்-கிளை ஏற்படுத்தியமை, இவர்தம் மகன் ஜார்ஜ் இதயராஜ் வழியாகத் தமிழ்மகன் என்னும் திரைப்படம் உருவாக்கியமை, தம் மக்களுடன் இணைந்து தமிழ்க் கணிப்பொறி எழுத்துகளைப் பயன்படுத்தி முதன்முதல் தமிழ்நூல் வெளியிட்டமை (பெத்லேகம் கலம்பகம்)(1986) முதலியன இவர்தம் பணிகளுள் குறிப்பிடத்தக்கன.

ஈழத்துப் பூராடனார் எழுத்துப் பணி
ஈழத்துப்பூராடனார் இளம் அகவையிலே எழுதத் தொடங்கிவிட்டார். தம் பெயரிலும், கதிர், கதிர்வள்ளிச் செல்வன், பூராடனார், ஈழத்துப் பூராடனார் என்னும் பெயர்களிலும் பல்வேறு கதை, கட்டுரை, திறனாய்வு, கவிதை, மொழிபெயர்ப்புகள் எனப் படைத்துள்ளார். இவர்தம் எழுத்தாளுமை, பதிப்பு, படைப்பு, மொழிபெயர்ப்பு, திறனாய்வு, தொகுப்பு என்று பன்முகத்தன்மை கொண்டது. ஈழத்துப்பூராடனாரின் நூல்கள் பலவும் பலவகையில் தொகுத்தும் வகுத்தும் ஆராயத்தக்க பெருமைக்கு உரியன. ஒவ்வொரு படைப்புகளும் துறைவாரியாகவும் ஒட்டுமொத்தமாகவும் ஆய்வு செய்வதற்குரியன. 

இவர் தமிழழகி காப்பியம் என்னும் பெயரில் தமிழ்நூல்களின் வரலாற்றைப் பன்னிரண்டாயிரம் செய்யுள்களாக ஒன்பது காண்டங்களாக (2070 பக்கங்களில்) உருவாக்கியுள்ளார்.

வேறு நூல்கள் பலவற்றையும் எழுதியுள்ளார் அவற்றுள், இலங்கை வரலாறு கூறும் பல நூல்களும், உலகளவில் தமிழ்ப்பணிகள் பற்றிய நூலும் வரைந்துள்ளார். தமிழ்த் திரைப்படக்களஞ்சியம் அறுபது தொகுதிகளாக உருவாக்கியுள்ளார்.

ஈழத்துப் பூராடனார் செய்யுள் நடையில் நீரரர் நிகண்டு என்ற நிகண்டு நூலை எழுதியிருக்கிறார். அவர் மனைவியார் விளக்கவுரை தந்துள்ளார். ஈழத்துப்பூராடனார் அவர்கள் 35 ஆண்டுகள் தேடித் திரட்டிய சொற்களை,
உயர்திணைப் பெயர் மஞ்சரி (11 செய்யுள்)
அஃறிணைப் பெயர் மஞ்சரி (12 செய்யுள்கள்)
தொழிற்பெயர் மஞ்சரி (26 செய்யுள்கள்)
இடப்பெயர் மஞ்சரி (9 செய்யுள்கள்)
கலாசாரச் சொல் மஞ்சரி (23 செய்யுள்)

என ஐந்து வகையாகப் பகுத்து இந்நூலை எழுதியிருக்கிறார். மட்டக்களப்பு மக்கள் நாளும் பயன்படுத்தும் சொற்கள் இந்த நூலில் உள்ளன. 1984 இல் முதல்பதிப்பும் (48 பக்கம்), இரண்டாம் பதிப்பு 1987 இலும் வெளிவந்தது.

மட்டக்களப்புச் சொல்வெட்டு என்னும் நூலில் அறிஞர் ஈழத்துப்பூராடனார் மட்டக்களப்பில் வழங்கும் சொற்கள் சில சங்க நூல்களில் வழங்குவதைச் சிறப்பாக ஆய்ந்து வெளிப்படுத்தியுள்ளார்.

இலங்கை மட்டக்களப்புப் பிரதேச வழக்குச் சொற்கள்-சொற்றொடர்களின் அகராதி என்னும் நூலில் மட்டக்களப்பு மக்களின் பேச்சு வழக்கில் இருந்த அரிய சொற்களைத் தொகுத்து வழங்கியுள்ளார். 1984 இல் 60 பக்க நூலாக இது வெளிவந்தது.

இலங்கை மட்டக்களப்பு மக்களின் நாட்டுப்புறக் கலைகள், பழக்க வழக்கம் பண்பாடு உணர்த்தும் வகையில் பல நூல்களை ஈழத்துப்பூராடனார் வழங்கியுள்ளார்.

மட்டக்களப்பின் மகிழ்வுப்புதையல்கள்,
கிழக்கிலங்கை மக்களின் எழுதா இலக்கியங்கள்,
வயல் இலக்கியம்,
ஊஞ்சல் இலக்கியம்,
வசந்தன்கூத்து ஒரு நோக்கு,
மட்டக்களப்பு மாநில உபகதைகள்

ஈழத்துப் பூராடனார் நாடகப் பணி
முத்தமிழில் ஒன்றான நாடகத்துறை சார்ந்த பல ஆக்கங்களை ஈழத்துப் பூராடனார் எமக்காக ஆவணப்படுத்திவிட்டுச் சென்றுள்ளார். நாடகத் துறையில் அவருக்கிருந்த அளவில்லா ஆர்வமே இதற்குக் காரணமாகும். முற்காலத்தில் கூத்துக்கள் எல்லாம் செய்யுள் வடிவிலேயே அமைந்திருந்தன. சங்க இலக்கியங்களில் கூத்து என்ற சொல் பாவனையில் இருந்திருக்கிறது.

சங்க இலக்கியமான சிலப்பதிகாரத்தில் பதினொரு வகை ஆடல்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழர்களின் பாரம்பரியத்தை அடையாளப் படுத்தும் மேடைக்கூத்து, தெருக்கூத்து என்று வெள்வேறு வடிவங்களில் இவை இருந்தன. கூத்துக் கலை என்பது நாட்டியம், நாடகம் ஆகிய இரு கலைகளுக்கும் பொதுவானது. வழிபாட்டுத் தலங்களிலும், பொது இடங்களிலும் கூத்துக்கள் இடம் பெற்றன. குரவைக்கூத்து, ஆரியக்கூத்து, பாவைக்கூத்து, வள்ளிக்கூத்து, துணங்கைக்கூத்து என்று ஆடலும் பாடலுமாகப் பலவகையான கூத்துக்களும் சங்ககாலத்தில் இருந்தே இடம் பெற்று வருகின்றன. 

இளங்கேவடிகள் நாடகம் என்ற சொல்லை சங்க இலக்கியத்தில் குறிப்பிட்டிருந்தாலும், சுப்ரமணியபாரதியின் காலத்தின் பின்தான் அவை மெல்லமெல்ல வசனநடைக்கு மாறிவந்தன. நாடகத் துறையைப் பொறுத்த வரையில் ஈழத்துப் பூராடனார் கூத்தர் வெண்பா, கூத்தர் விருத்தம், கூத்தர் குறள், கூத்தர் அகவல், கூத்துக் கலை திரவியம், வடமோடி, தென்மோடிக் கூத்து, கனடாவில் இருபாங்கு மரபுக் கூத்துக்கலை, போன்ற விளக்கமான நூல்களை எழுதி ஆவணப்படுத்தியிருக்கின்றார். இதைவிட கூத்துக்கலையில் சிறந்து விளங்கிய சில கலைஞர்களைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கின்றார். பழந்தமிழர் பண்பாட்டுக் கோலங்களை இத்தகைய கூத்துக்கள் புலம் பெயர்ந்த மண்ணிலும் இனங்காட்டி நின்றதால், தமிழர்கள் சென்ற இடமெல்லாம் கூத்துக் கலையும் வாழவேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது. மேலும் ஈழத்துப் பூராடனார் தமிழழகிய காப்பியம் என்ற பெயரில் தமிழ் நுர்ல்களின் வரலாற்றை ஒன்பது காண்டங்களாக உருவாக்கியுள்ளார்.

ஈழத்துப் பூராடனார் மொழிபெயர்புப் பணி
இவர் பன்மொழி அழுமை மிக்கவர் அதனால் இவர் பல மொழிபெயர்ப்பு நூல்களை உருவாக்கியிருப்பதனையும் குறிப்பிட்டாகணும். கிரேக்கத்தின் ஆதி கவிஞரான ஓமரின் இலியட், ஒடிசி காப்பியங்களைத் தமிழில் பாட்டுவடிவில் மொழிபெயர்த்துள்ளார். மேலும் கிரேக்க நாடகங்கள் பலவற்றையும் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். 2089 (8355 பாடலடிகள்) செய்யுள் விருத்தங்களால் அமைந்தது ஈழத்துப்பூராடனாரின் ஒடிசி மொழிபயர்ப்பு நூலாகும்.

ஈழத்துப் பூராடனார் இலியட் என்ற ஓமரின் காப்பியத்தை 1990 இல் தமிழாக்கம் செய்து வெளியிட்டுள்ளார். 11100 பாடல்வரிகளில் இந்த நூல் தமிழாக்கம் செய்யப்பட்டுளது.

ஈழத்துப் பூராடனார் ஆய்வுப் பணி
இவர் முன்பு குறிபிட்டதுபோல் ஒரு ஆய்வாளர், கண்டுபிடிப்பாளர் அதனால் ஆய்வு நூல்கள் பலவற்றைச் சுட்டிக்காட்டவேண்டும். 
ஐங்குறுநூற்று அரங்கம்,
சூளாமணித் தெளிவு,
கல்லாடம் கற்போம் சொல்லாடுவோம்,
நைடதம் யாருக்கும் ஒரு ஒளடதம் ஆய்வுக்கண்ணோட்டம்,
சீவகசிந்தாமணி ஆய்வுச் சிந்தனைகள்,
பெருங்கதை ஆய்வுநோக்கு,
வல்வெட்டித்துறைக் கடலோடிகள்
போன்ற ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார்.

தமிழ் எழுத்துச் சீர்திருத்தமும் கணணி தமிழ் தட்டச்சு கண்டுபிடிப்பும்
தமிழ் கணிப்பொறித்துறையில் இவர் குடும்பத்தார் மிகப்பெரிய பங்களிப்பு செய்துள்ளனர். முதன் முதலாக தமிழுரு ஒன்றைத் தானாகவே உருவாக்கி கணினியில் தமிழின் பாவனையை அறிமுகப் படுத்திய பெருமை இவரையே சாரும். தான் உருவாக்கிய தமிழ் எழுத்துருவிலேயே தனது ஆக்கங்களை வெளியிட்ட பெருமையும் இவரையே சாரும். இவர் கணணியில் தமிழ் தட்டச்சு முறையை அறிமுகப்படுத்தி முதல் புத்தகத்தினை வெளியிட்டதோடல்லாமல் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தினை முன்னெடுத்த பெருமகன். 

ஈழத்துப் பூராடனார் கனடாவில் தாமே அச்சுக்கூடம் ஒன்று நிறுவி அதன் மூலம் பல நூல்களை எழுதி உடனுக்குடன் வெளியிட்டு வந்தார் என்பது அவரது பணிகளில் சில.

ஈழத்துப் பூராடனார் கிறித்தவ சமயத்தைப் பின்பற்றுபவர். இச்சமயம் சார்ந்து பல நூல்களை இயற்றியுள்ளார். இவர்தம் வாழ்க்கை முறை என்பது அனைத்துச் சமயத்தாரையும் ஆரத் தழுவிப் போற்றும் வகையினது. இவர் கணிப்பொறி வழி அச்சிட்ட முதல்நூல் பெத்லேகம் கலம்பகம்(1986) கிறித்தவ சமயம் சார்ந்த நூலாக இருப்பினும் சைவ சமயம் சார்ந்த பல நூல்களுக்கு உரை வரைந்துள்ளார்.

ஈழத்துப் பூராடனார் உரைநடை எழுதுவதில் வல்லவர் என்பதுபோல் பிற நூல்களுக்கு உரை வரைவதிலும் வல்லவர். அவ்வகையில் இவர் சீமந்தனி புராணம் (வித்துவான் பூபாலபிள்ளை), கதிர்காம சதகம் (இ.வ.கணபதிப்பிள்ளை) முதலான நூல்களுக்கு உரை எழுதியுள்ளார்.

முடிவுரை
எனவே இவ்வாறு பல ஆயிரக்கணக்கான சொற்களைக் கொண்டு 200 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி வெளியிட்டு செந்தமிழுக்கு வந்தனை செய்தவர். இவரை நாம் எப்படிக்கொண்டாடவேண்டும்! மட்டக்களப்பில் இருந்துகொண்டே இலங்கையின் தமிழ் சமுகத்துக்கு அதிக பங்களிப்பு செய்த ஒருவர் ஏன் எடுத்தேத்தப்படவில்லை என்ற ஏக்கம் இன்று படிப்படியாக நீங்கத் துவங்கியுள்ளது. இவரது வரலாறு பாடப்புத்தகங்களில் கொண்டுவர ஆவண செய்யவேண்டும். இவர் ஆண்டு தோறும் பல்கலைக்கழக மற்றுமட பாடசாலை மட்டத்தில் கொண்டாடப்பட்டு இவரது படைப்புக்கள் பயன்படுத்தப்படவேண்டும். இவர் எழுதிய நூல்கள் மின் இதழ்களாக அலங்கரிக்கும் அந்த நாளை எதிர்பார்த்து காத்தி நிற்கின்றோம். ஆக மொத்தத்தில் இவர் ஈழத்துக்கு மாத்திரம் ஒரு தமிழ் பூராடனார் அல்ல இவர் உலகத் தமிழ் பூராடனார் எனக் கொண்டாடப்படவேண்டும்.

உசாத்துணை
1. வல்லமை இணையம்
2. கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து (ஈழத்துப் பூராடனார்).

2.      3.  http://muelangovan.blogspot.com/2010/02/13121928.html

3.    4.  http://tamilaram.blogspot.com/2011/06/eelathu-pooradanar.html

4.       5. https://www.wikiwand.com/ta/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D














0 comments:

Post a Comment