ADS 468x60

02 April 2024

பாதாளத்தில் செல்லும் நாட்டின் நிலமை: பொருளாதார எழுச்சிக்கு வழியாகுமா?

வாழ்வினை கொண்டு நடாத்த முடியாமல் இன்று எமது நாட்டின் பெரும்பான்மையான மக்கள் துன்பப்பட வேண்டியுள்ளது. மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மக்களின் வருமானம் போதாது. சொந்தப் பணத்தைக் கூடக் கொண்டு வாழ்க்கைப் போரில் கடைசி ஆட்டத்தை ஆடும் மக்கள், இனி வரும் காலங்களில் எப்படி சுகம் காணப்போகின்றார்கள். திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் தந்தையொருவர் தனது இரண்டு பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் உணவு வழங்க முடியாத காரணத்தினால் விஷம் அருந்தியதாக பத்திரிகை செய்தியொன்று அண்மையில் வெளியாகியுள்ளதனைப் பார்த்தேன்.

பல நாட்களாக தனது குடும்பம் தினமும் மரவள்ளிக்கிழங்கை சாப்பிட்டு வருவதாக இந்த தந்தை கூறுகிறார். மேலும் தனது குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாது என்பதால், தனக்குத் தானே விஷம் கொடுத்து இறக்க முடிவு செய்ததாகவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். இந்தச் செய்தியின் மூலம் நமது நாடு விழுந்துள்ள பொருளாதாரக் குழியின் மிகவும் சோகமான நிலை நன்கு விளக்கப்பட்டுள்ளது. இந்த நிலை திஸ்ஸமஹாராம தந்தைக்கு மட்டுமல்ல. இப்படிப்பட்ட பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றார்கள் நம் நாட்டில் என்பதனையே காட்டுகின்றது.

இந்த சம்பவத்தை எதிர்கொண்ட தந்தை ஒரு வருடத்திற்கு முன்னர் அரசாங்கத்தினால் வழங்கப்படுமு; நலத்திட்டத்தில் இருந்து துண்டிக்கப்பட்டிருந்தார். காப்பீடு தொகை; தருவதாக கூறப்பட்டு, அதுவும் கிடைக்கவில்லை. அரச வெகுமானம் சிறிதாகக் கூட கிடைத்திருந்தால் வரும் சொற்ப தொகையில் இந்தக் குடும்பம் மகிழ்ச்சியாகவும் வசதியாகவும் இருக்கும் என்று நாங்கள் கூறவில்லை. ஆனால், பெற வேண்டிய மானியத்தைக் கூட வழங்காமல் இருப்பதில் முக்கிய விஷயம் என்னவென்றால், நம் நாட்டில் வறுமையில் வாடும் மக்களைப் பற்றிய துல்லியமான தரவுகளோ, தெளிவான கணக்கீடுகளோ அதிகாரிகளிடம் இல்லை என்பதுதான் அல்லவா? நம் நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் செல்கிறது என்று சிலர் பெருமை பேசினாலும் இந்த குடும்பம் சந்திக்கும் அவலங்கள் நாட்டின் யதார்த்தத்தை புரிந்து கொள்ள போதுமானது.

இலங்கையில் தொடர்ந்து நான்கு வருடங்களாக வறுமை அதிகரித்துள்ளதாக உலக வங்கியின் பிரதம பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் வோக்கர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு (2023) இலங்கையில் வறுமை 25.9 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறுகிறார். ரிச்சர்ட் வோக்கர் கூறுகையில், தொழிலாளர் சந்தையில் உள்ள பிரச்சனைகளும் வருமான சமத்துவமின்மையும் இந்த நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடியால், நம் நாட்டில் சிறு, குறு தொழில்கள் கடந்த காலங்களில் பாரியளவில் சரிந்தன. இந்நிலையால், நகர்ப்புறங்களில் வசிக்கும் பெண்களும், மக்களும் தங்களது வருமான ஆதாரங்களை இழந்துள்ளனர். இந்நிலைமை வறுமையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைத் தொழிலாளர்களின் வருமான அதிகரிப்பு கடந்த காலத்தை விட குறைந்தபட்ச மட்டத்தில் இருந்தது. அரசு ஊழியர்களுக்கு சிறிதளவு நிவாரணம் கிடைத்தாலும், மீதமுள்ள ஊழியர்களுக்கு அது கிடைக்கவில்லை. ஆனால் பொருட்களின் விலைகள் வேகமாக உயர்ந்தன. இதன் விளைவாக, நமது நாட்டின் நுகர்வோர் அதிக பணவீக்கத்தை எதிர்கொண்டு ஆதரவற்றவர்களாக இருந்தனர். 

நாட்டு மக்கள் நாளுக்கு நாள் வறுமையில் வாடுவதைத் தடுக்கும் வகையில், அதிகரித்து வரும் பொருட்களின் விலைவாசியைக் கட்டுப்படுத்தி, அவர்களின் உழைப்புப் பலத்தை உடனடியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லவா. 

ஒருவரின் சம்பளம் வாழ்வதற்குப் போதுமானதாக இல்லாவிட்டால் அவருக்கு மாற்று வருமான ஆதாரங்களைத் திறப்பது அதிகாரிகளின் பொறுப்பு. எட்டு மணிநேர சேவைக்குப் பிறகு நான்கு மணிநேரம் அல்லது அதற்கும் அதிகமான சொந்த உழைப்பை வழங்கக்கூடிய தொழிற்சாலை அமைப்புகளை நாம் உருவாக்கினால், அது நாட்டிற்கும் தனிநபர்களுக்கும் அவர்களின் தனிநபர் வருமானத்தை அதிகரிக்கவும் உதவும்.

இது தவிர வீட்டில் இருக்கும் பெண்கள் வீட்டுத் தொழில்கள் மூலம் உழைப்புக்கு விலை கிடைக்கும் என்ற சூழலை உருவாக்குவது முடியாத காரியம் அல்ல. பொருளாதாரம் தாழ்ந்த நிலையில் இருந்த பல நாடுகள் இத்தகைய மாற்று நடவடிக்கைகளால் பொருளாதார ரீதியாக வலுப்பெற்றன. இவை அனைத்தும் ஒரு நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தின் நிலையை அடிப்படையாகக் கொண்டது. எனவே, இருளில் மூழ்கி சாபமிடாமல் உற்பத்தி பொருளாதாரம் கொண்ட நாடாக நமது நாட்டை மாற்ற வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பாகும்.

மறுபுறம், ஒரு நாடு பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைவதற்கு, நாட்டின் பொருளாதாரம் மற்றும் பிற துறைகளில் வெளிப்படைத்தன்மை மிகவும் முக்கியமானது. ஆனால் நீண்ட காலமாக நம் நாட்டில் இத்தகைய வெளிப்படைத்தன்மையைக் காணவில்லை. மோசடி, ஊழல், லஞ்சம் மற்றும் பிற கைமாறு பரிவர்த்தனைகளால் நமது நாடு ஊழல் நிறைந்ததாக மாறியுள்ளது. அரசியல் என்பது மக்கள் நலனுக்காக செய்ய வேண்டிய உன்னத சேவை. ஆனால், காலம் காலமாக நமது நாட்டின் அரசியல் என்பது பொதுச் சொத்தை அபகரிக்கும் தொழிலாக மாறிவிட்டது. வறுமையை இரட்டிப்பாக்குவதற்கு ஊழல் அரசியலும் காரணம். எனவே, நாட்டை வறுமையில் இருந்து விடுவிக்க, தவறுகளை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

0 comments:

Post a Comment