என் சிறு வயதில் மட்டக்களப்பு கிராமங்களில் பசுமை கொண்ட வயல்களுக்கு நடுவே வளர்ந்தேன். அறுவடை முடிந்தவுடன், அந்த நிலத்தின் மண்வாசனை, அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்களின் மணம், எல்லாமே எனக்கென்றே ஒரு உலகமாக இருந்தது.
இந்த அனுபவம் எனக்கு எனது அப்பா தந்துள்ளார், நான் சிறுவனாக ,ருந்தபோது எமது சிறு குளத்து வளவுக்குள் ஒரு 5 மரைக்கார் நெல்விதைப்பதுண்டு. அப்போது அதனை சூடுபோட ராக்டர்களை அழைத்தால் வரமாட்டார்கள் அதனால் காலபோகம் வயல் மிதிக்க நல்லர் எனும் தாத்தாவிடம் மாட்டுப்புணையல்கள் எடுத்து வேலை செய்த நேரம் அதனை எமது வீட்டுக்கு கொண்டு வந்து சூடுபோட்ட அந்த நினைவுகள் அழகானது
அன்று மாலையிலிருந்து நாம் எல்லோரும் சேர்ந்து வேலை செய்யத் தொடங்குவோம். நெல் கதிர்களை வயலில் இருந்து எடுத்து வந்து ஒரு இடத்தில் அழகாக சூடுவைப்போம். அந்த நேரம் முழுவதும் வயலில் இருந்து வந்த அசைவுகளும் விவசாயிகளின் உற்சாக குரலும் பசுமையாக நெஞ்சில் பதிந்தவை.
இரவாகும்போது தான் சூடுபோடுதல் ஆரம்பிக்கப்படும். நாம் குழந்தைகள் கூட, பாட்டும் பாடிக்கொண்டு, எருமைகளை சுற்றி சுற்றி நடக்க வழிநடத்துவோம். எருமைகளின் கால் எடுத்து வைக்கும் ஒலி, அவற்றின் மெதுவான நடையோடு சேர்ந்து, ஒரு இயற்கையான இசைபோல் ஒலித்தது. “ஓஹோஹோ… ஏய்யா…” என்று மெல்லிசையாக கூச்சலிட்டு, அவற்றை வழிநடத்தும் உற்சாகத்தோடு, ஒருவித திருவிழா போலவே இருக்கும்.
எருமைகள் தங்கள் வலுவான கால்களில் கதிர்களை மிதிக்க, மெதுவாக நெல்லை பிரித்தெடுக்கும் அழகான செயல் நடந்தது. நாங்கள் மாலையிலிருந்தே வேலை பார்த்து வந்ததால், அந்தச் சுழற்சி நேரத்தில் மேகத்தளிரும் நிலவொளியில் தூக்கமும் வந்துவிடும். ஆனால் அப்போது எனது தந்தையும் கிராமத்து பெரியவர்களும் ஓர் அற்புதமான கதை சொல்லிவிடுவார்கள் – விவசாயத்தையும், இதன் பின்னணியில் உள்ள பாரம்பரியத்தையும் நம் உள்ளத்தில் பதியச் செய்வார்கள்.
அந்த நாளில் இயற்கையின் ஓசை, எருமைகளின் மெதுவான நடை, விவசாயிகளின் பாடல், எல்லாமே இன்று வரை என் மனதில் அழியாத ஓர் இனிமையான நினைவாகவே உள்ளது. இன்று இயந்திரங்கள் அதை மாற்றிவிட்டாலும், அந்த அனுபவம் வாழ்ந்த நாட்கள் எப்போதும் ஒரு புதுமையான கனாக்களாகவே இருக்கும்!
0 comments:
Post a Comment