முதலில் நாங்கள் தெரிசிக்கச் சென்ற அந்த ஆலயத்தின் பெயரை சொல்லி விடுகின்றேன், அது தேன்பொந்து என அழைக்கப்படும் திருக்கேதீச்சரம் ஆலயம். அது இலங்கையிலேயே மன்னார் எனும் புராதர தமிழர்கள், சிவ பக்தர்கள் வாழுகின்ற ஒரு பாடல்பெற்ற ஈச்சரங்களில் ஒன்றான மாதோட்டம் என அழகான பெயரையுடைய இடம்.
அங்கு இலங்கை முழுவதும் உள்ள தமிழ் மற்றும் ஏனைய இன மக்களும் அன்றய தினம் மக்கள் தமிழ்க்கடவுளை வணங்க வருவதுண்டு. அதனால் அங்குள்ள கொடடேல்களில் திடீர் என தங்க இடம் எடுப்பது இந்த நாட்களில் நினைத்துப் பார்க்கமுடியாத ஒன்று, அதுவும் அந்த இடம்பற்றிய அடிப்படை தெரியாதவர்கள்.
ஆனால், தொடர்புகொண்ட அந்த நபராக நான் இருந்திருந்தால் முதலில் அந்த உதவி கேட்டவருடன் ஒரு அழைப்பை எடுத்து, 'வரவிருப்பது சந்தோஷம், எதில் வருகின்றீர்கள், எத்தனைபேர் வருகின்றீர்கள், சிறிய குழந்தையினையும் கூட்டி வருகின்றீர்களா, சரி நீங்கள் மத்தியானம் வருவதென்றால், வரும் வழியில் இந்த இடத்தில் நல்ல சைவ உணவு கொடுக்கும் கடையிருக்கின்றது, சாப்பிடலாம் அதோடு சுத்தமான வொஸ் ரூம் உண்டு, அதோடு வந்ததும் எனக்கு கோள் எடுங்க, முடியுமானால் அழைத்துச் சென்று இடத்தைக்காட்டுகின்றேன், அவர்களது தொலைபேசி இலக்கத்தினை அனுப்புகிறேன், தொடர்பு கொள்ளுங்க, நான் கேட்டதற்கிணங்க அவர்களிடம் ஏசி நொன் ஏசி இருக்கின்றது தங்கலாம் எனக்கு தெரிந்த பாதுகாப்பான இடம், நாளை மதியம் உங்கள் வழிபாடு முடிந்ததுத் கட்டாயம் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டுத்தான் போகனும்' என சாதாரணமாக மட்டக்களப்பில் உள்ளவர்கள்போல நானும் இப்படி சொல்லி இருப்பேன். அப்படித்தான் பெரிய விசி என்றாலும் மேலுள்ளவற்றில் ஒன்றிரண்டையாவது செய்திருக்கலாம்.
இவற்றில் ஒன்றுமே அவர் செய்யாததனால் அவரை தெரியாமல் தொடர்புகொண்டு கவலைப்பட்டேன், ஏனெனில் அவர் எம்மை வரவேற்க விரும்பவில்லை என்பதை இதைவிட சொல்ல முடியாது.
நிற்க அவர் தந்த கொட்டேலில் தங்க இடமில்லை முழுவதும் நிரம்பிவிட்டதாக சொன்னார்கள். அந்த கொட்டேலில் உள்ளவர்களிடம் 'உங்களுக்குத் தெரிந்த ஒரு இடத்தினைச் சொல்லுங்களேன்' என்றதும் அவர்கள் ஒன்றை பரிந்துரைத்தனர்.
உடனே அங்கு சென்றேன் வாகனம் போட மாத்திரமல்ல, கொண்டுபோன குடும்பத்தினரை இறக்கவும் முடியவில்லை. என்ன பண்ணுவது என நடுரோட்டில் நிற்கும்போது. இன்னுமொரு கொட்டலை ஒரு மாதிரி பல மணி நேரத்தில் தேடி அங்கு இடமிருப்பதனை உறுதிசெய்யும் போது, அது ஆலயத்தில் இருந்து சற்று தூரமாக இருந்தது, இருந்தும் வேறு வழிகிடையாது, நடுரோட்டில் நிற்கின்றோம் அல்லவா.
என்ன செய்வது என என்னுடன் படித்த பலருடன் தொடர்பு அவ்வளவு இல்லாததால் அவர்களை இலகுவில் கண்டுபிடிக்க முடியவில்லை, இத்தனையும் முடிந்து நாங்கள் வேறு ஒரு கொட்டலை ; ஒரு மாதிரியாக வுக்பண்ணிவிட்ட நிலையில், வவுனியாவில் உள்ள நண்பன் திருமகனுக்கு அழைத்து எனது நண்பனின் தொலைபேசி எண்ணை பெற்று அந்த நண்பனுக்கு அழைக்கின்றேன்.
'சரி முதலில் அவருடைய வீட்டுக்குப் போய் அதன் பின்னர் கொட்டலில் தங்கலாம்' என நீண்ட பயணம் செய்து நிலைகுலைந்து சோர்வாய் இருந்தவர்களை ஓரளவு சமாதானப்படுத்திக்கொண்டு அங்கு சென்றேன்.
அங்கே நிலத்தில் நிற்கமுடியாமல் சிரித்துக்கொண்டே நடந்து நடந்து எங்கள் ஒவ்வொருவராய் வர வர உள்ளே அழைத்தான். அங்கே மூன்று மல்லிகை மலர்கள்; பூத்துக் குலுங்குவது போல மனைவி சர்மி மற்றும் இரு அழகிய மகள் மார் அத்தனை அன்போடு அழைக்க தயாராக நின்றனர். எமக்கு வந்த சோர்பு, களைப்பு, கவலை எங்கே போனதெனத் தெரியவில்லை. சின்ன மகள்மாரை எல்லாம் ஒவ்வொருவராய் தூக்கி மகிழ்சிப்படுத்தினார்கள், அவர்களுடன் சேர்ந்து சின்னவர்களும் விளையாடினர் தொந்தரவு இல்லாமல் அங்கே அவர்களும் இணங்கிவிட்டதனை கண்டேன்.
என்ன ஒரு இன்முகம், அன்பு, பரிவு, விருப்பம். இது விருந்தோம்பலின் முதற்படியாகப் பார்த்தேன். அது சரி அதென் எடுத்ததுக்கெல்லாம் விருந்தோம்பல் என்று சொல்லுரீங்க என நீங்கள் முணுமுணுப்பது கேட்குதுங்க வாரன்.
விருந்தோம்பல் தமிழர் மத்தியில் சங்க காலத்தில் பெரிதும் போற்றப்பட்ட பேரறமாக விளங்கியது. எந்நாட்டவராயினும், எம்மொழியினராயினும் நட்புக் கொள்ளும் நல்லெண்ணத்துடன் வீடு தேடி வருவார்களாயின் அவர்களை வரவேற்று புதியவராக கொண்டனர். தொல்காப்பியர் இதனை, 'விருந்தே தானும் புகுவது கிளந்த யாப்பின் மேற்றே' என்ற நூற்பாவால் குறிப்பிடுகிறார். மேலும் அக்கால மக்கள் விருந்தோம்பலைக் கடமையாக கொண்டனர் என்பதை, ' விருந்து புறந்தருதலும் சுற்றம் ஒம்பலும் பிறவும் அன்ன' என்ற நூற்பா அடிகள் குறிப்பிடுகின்றன. இதற்கும் மேலாக இவர்கள் இருக்கின்றனர்.
இதில் இன்னொரு ஸ்பெசல் என்னென்றால் 'விருந்தினரைப் புறம் தருதல்' என்று பரிமேலழகரும'; உண்ணும் காலத்துப் புதியார் வந்தால் பகுத்துண்ண வேண்டும்' என்று மணக்குடவரும், தம் புதல்வரிடத்து வைக்கும் அன்பைப் போலப் பிறரிடத்தும் அன்பு வைத்து ஒம்பல் என்று பரிதியும் விளக்குவர். இதில் பரிதி அவர்கள் சொன்னதற்கு சற்றும் பிசகாமல் இருப்பதற்கு எடுத்துக்காட்டு எமில்தான்.
சரி வந்தாச்சி, இதற்குள் இன்னொரு சுவாரசியம் எமிலின் மனைவியும் மன்னார்தான், அவரும் எம்முடன் ஒன்றாகப் படித்தவர் என்பது டபுள் சிறப்பு. எனக்கு அவர்களது குடும்பத்தைப பார்த்து பொறாமை கொள்ளும் அளவுக்கு அந்த அன்பு எம்மைக் கட்டிப்போட, அந்த வெகிருக்கு பாருங்கள் முதலில் குளிர்பானம் பரிமாற முதல் குழந்தை வந்து சிரித்து சிரித்து இன்முகத்துடன் அதை பரிமாறினாள். அதற்குள் 'மகள் கேக் எங்கே' என எமில் மகளைக் கேட்க, அதற்கு மனைவி சர்மி 'அவர்கள் கோயிலுக்கு போறாங்கப்பா சாப்பிட மாட்டாங்க' என விளக்கம் சொல்ல. அத்தோடு மனமகிழ்தோம்.
நோரம் போய்க்கொண்டிருக்க பழய கதைகளெல்லாம் இடையிடையே கதைத்து மகிழ்தோம். அதன் பின்னர் 'சரி மச்சான் கொட்டேல் போய் ரெடியாகனும், மிக்க மகிழ்சி உன்னைப் பார்த்தது' என சொல்லி முடிக்கல்ல 'பயித்தியமா இஞ்ச நின்று ரெடியாகலாம் கொட்டேல் வுக்கிங்க கான்சல் பண்ணு, சாப்பாடு ரெடி பண்ணுரோம் வந்து சாப்பிடலாம்' என விட்டபாடில்லை, வேறுவழியில்லாமல் அதனை செய்து அங்கேயே நிற்க சம்மதித்தோம்.
இப்படி நின்று எல்லாம் முடித்து 'ஆலயம் சென்று திரும்ப நேரம் எடுக்கும் எமக்கு சாப்பாடு ஒன்றும் செய்து சிரமப்படவேண்டாம்' என நாம் அனைவரும் சொன்னோம் ம்கிம் எடுபடல்ல, அதற்று சர்மி 'இது என்ன பெரிய கஷ்டம் ரெண்டு கறியும் இடியப்பமும் செய்து வைக்கிறம் வாங்க எத்தனை மணியானாலும் பறவாயில்லை' என அன்புக்கட்டளை. சரி என அரைமனதுடன் சம்மதித்து ஆலயம் சென்று திரும்ப நல்லா நேரமாச்சி.
12.30 அதிகாலை வந்து சேர்தோம், அப்போது அவர்களும் ஆலயம் சென்று திரும்பி தூங்கிவிட்டார்கள், ஆனால் நான் அழைத்ததும் டக்கண்டு எழுந்து வந்து எம்மை அழைத்தான். அதன் பின் உண்மையில் சரியான பசி எல்லோருக்கும், போய் அமர்ந்தோம் தக்காளிப்பழம் உலுவாரிசு போட்ட பால் சொதி, உருளைக் கிழங்குக் குழம்பு, தேங்காய் சம்பல், அது தவிர இன்னும் இரண்டு கறிகள். நன்றாகப் பசியாறினோம்,
ஏத்தனை அன்பான உபசரிப்பு, 'அன்பு' அது ஒரு 'தாயைப் பிரிந்த குழந்தை' வந்ததும் எவ்வாறு ஒரு தாய் தன் குழந்தையை அரவணைக்குமோ அப்படியே அவர்களது உபசரிப்பு விருந்தோம்பல் இருந்தது. இன்னும் பல சுவாரசியங்கள் அதற்குள் இன்னுமொரு முறை சொல்லுகின்றேன்.
நான் இதை ஏன் எழுதுகின்றேன் எனில், அடுத்த நாள் நான் முதல் உதவி கேட்ட நபரை காலை உணவருந்தச் சென்ற இடத்தில் கண்டேன், அவர் என்னைக் காணும் முன்னே இவர் கண்ணில் நான் படுவதனை விரும்பவில்லை, அப்போ எனது மனைவி கேட்டார் ஏன் அவரைக்காணக்கூடாது எனக் கேட்க 'தெரியவில்லை இவர்களது நேரத்தை நாம் ஏன் வீணாக்க வேண்டும்' என பதில்கூறிச் சென்றேன். நாம் ஏன் சிலரை பார்க்க விரும்புகின்றோம் ஏன் பார்க்க விரும்பவில்லை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. உங்களில் பலரில் பலருக்கு இந்த அனுபவம் இருக்கலாம்.
இதற்குள் எமில் ஒரு விசியான மற்றும் எடுத்துக்காட்டான பாடசாலை முதல்வர், வழிகாட்டி, வெளிநாடுகள் பலவற்றுக்குச் சென்று அந்த கல்வியை மாணவர்கள், ஆசிரியர் வளம்பெற வலுவூட்டும் நேர்மையான ஒரு தலைமகன், கண்ணியமானவன், கடமையை தனது கொடுக்கப்பட்ட நேரம் கடந்து அர்பணிப்பவன். பல புலமைவாய்ந்த மாணவச் செல்வங்களை மாவட்ட, மாகாண மற்றும் தேசிய அளவில் முதலிடம் பெறச் செய்த பெருமைக்குரியவன், சிறந்த பெறுபேறுகளை கல்வி, விளையாட்டு மற்றும் ஒழுக்கம் சார்ந்து முன்னேற்ற அயராது பாடுபடுபவன், இவரை இன்னும் எம்மக்கள் உற்சாகப்படுத்த வேண்டும, பாதுகாக்கவேண்டும், உறுதுணையாக இருக்கவேண்டும். மனிதத் தன்மைக்கும் ஒரு அரச அதிகாரியார் இருப்பதற்கும் ஒருவரை சொல்லவேண்டுமானால் நண்பன் எமிலை பட்டென சொல்லிவிடுவேன்.
அதற்கு ஓர் உதாரணம், அண்மையில், அகில இலங்கை தேசியமட்ட பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டியில் இவரின் பாடசாலை மாணவி முதலாம் இடம் பெற்றுள்ளார். நடைபெற்றுககொண்டிருந்த 2024 ம் ஆண்டிற்கான அகில இலங்கை தேசியமட்ட பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டியில் 18 வயதின் கீழ் பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இவரின் பாடசாலையை மாணவி செல்வி யு. யதுர்சிகா அவர்கள் தனது திறமையை வெளிப்படுத்தி 37.39 மீற்றர் தூரம் ஏறிந்து தேசிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றது எத்தனை பெருமை. அப்படி பல தேசியமட்ட முதலிடத்துக்கு நீ வழிகாட்டியாக இருக்கணும் நண்பா உனக்கு நாம் எந்த வழியிலும் உதவ தயாராக இருக்கின்றோம்.
ஆக, ஒரு பானைச் சோத்துக்கு ஒரு சோறு என்றால் அது மன்னார் எமில்தான் 'மன்னார் மண்' உன்னால் பெருமையடைகின்றது நண்பா. தனது குழந்தைகளையும் நன்றாக வளர்த்து வைத்திருக்கின்றனர். பிள்ளைகள் நல்ல பெறுபேறுகளை ஈட்டியிருக்கின்றனர். தாய் தகப்பனுக்கு கீழ்படிந்து நடக்கின்றனர். ஒட்டு மொத்தமாக இவர் 'மன்னார் சூப்பர்ஸ்ரார்' என்றால் மிகையில்லை நண்பா வாழ்த்துக்களும் நன்றிகளும் டா!
இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பார்க்கப்போனால், நாங்கள் 6 பேர்கள் ஆலயம் சென்றிருந்தோம், எப்படி இன்னொருவரை கஸ்ட்டப்படுத்துவது என்ற மன உழசை;சல் எமக்கு, ஆனால் விருந்தோம்பல் அதிகாரத்தின் இறுதித் திருக்குறளில், 'மெல்லிய அனிச்ச மலரானது, மோந்து பார்த்த அளவில் வாடும்; விருந்தினர், முகம் வேறுபட்டுப் பார்த்த அளவிலேயே வாடி விடுவர்' என்பதை அறிவுறுத்த,
'மோப்பக் குழையும் அனிச்சம், முகம் திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.'
விருந்தினராக வருபவர்களை தூரத்தில் கண்டபோதே முகம் மலர வேண்டுமாம். அண்மையில் காணும்போது இனிய சொற்களைக் கூறி மகிழவேண்டும். பின்பு விருந்தினரை அவரது பசி தீருமாறு உபசரிக்க வேண்டும். எமில் குடும்பத்தினரிடம் இந்த மூன்றும் இருந்ததைப் பார்த்தேன்.
அதாவது விருந்தினரை தூரத்தில் கண்டதுமே இன்முகம் காட்டவில்லையானால், விருந்தினரின் முகம் வாட்டம் அடையும். தீண்டியதும் வாடுகின்ற அனிச்சம் மலரிலும் மென்மையானவர் விருந்தினர் என்கின்றார். எனவே, விருந்தோம்புதலுக்கு இன்றியமையாத பண்பு முகமலர்ச்சியும், அக மலர்ச்சியும் ஆகும் இவை எல்லாம் உங்களிடம் கண்டேன். மிகக் குறுகிய நேரத்தில் அகமுக மலர்ந்து எம்மை மகிழ்வித்த நண்பனுக்கும் நண்பிக்கும் எப்படித்தான் நன்றிகூறுவதோ தெரியவில்லை.
“முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு”
0 comments:
Post a Comment