1. உச்சாணி அறமும், ஒழுக்கமும், நீதியும்
கண்ணகி வழிபாடு
என்பது வெறும் கொண்டாட்டம் அல்ல; அது நீதி, ஒழுக்கம் மற்றும் அறத்தின் உச்சத்தைக் குறிக்கும் ஒரு வாழ்வியல்
பாடம்.
- நீதி: அரசன் தவறு செய்தபோது, "அரசியல் பிழைத்தோர்க்கு அறம்
கூற்றாவதூஉம்" என்ற சிலப்பதிகார நெறிப்படி, அநீதிக்கு எதிராகத் தன் ஒற்றைச்
சிலம்பைக் கொண்டு மதுரையை எரித்து நீதியை நிலைநாட்டியவள் கண்ணகி.
- அறம்: பூசைகள் மற்றும் சடங்குகளைப்
பொறுத்தமட்டில், கட்டாடியாரின் தோற்றத்திற்கெனவும்
கிரியை நெறிகளுக்கெனவும் தெளிவான விதிமுறைகள் பத்ததிகளில் வகுக்கப்பட்டுள்ளன.
பூசகர்கள் உத்தரியம் அணிந்து, தலைப்பாகை கட்டி, ஏகாவடம் பூண்டு, கடும் விரதமிருந்து தூய்மையோடு கிரியைகளை ஆற்ற
வேண்டும். இதுவே வழிபாட்டின் உச்சக்கட்ட ஒழுக்கத்தை நமக்குக் காட்டுகிறது.
2. கலாசாரத்தினைக் கட்டிக்காத்தலும் தனித்துவ அடையாளமும்
எமது சடங்கு
முறைகள் பிற இனத்தவரும் மதத்தவரும் பார்த்து வியக்கும் வண்ணம் எமது தனித்துவமான
அடையாளத்தையும், பண்பாட்டினையும் கட்டிக்காக்கும் அரணாகத்
திகழ்கின்றன.
- இச்சடங்குகளில் பயன்படுத்தப்படும்
உடுக்கடி, சிலம்போசை, பறைமுழக்கம் போன்ற பாரம்பரிய
வாத்தியங்களும், வசந்தன், கரகம், கும்மி, கூத்து போன்ற கலைவடிவங்களும் எமது
மண்ணின் தொன்மையான கலைப் பாரம்பரியத்தை உலகிற்குப் பறைசாற்றுபவை.
- படுவான்கரையின் கன்னன்குடா போன்ற
கிராமங்கள் இன்றும் தென்மோடிக் கூத்து மரபினையும், சடங்கு முறைகளையும் சிதையாமல்
கட்டிக்காத்து வருவதனால்தான், தன் பண்பாட்டுத் தனித்துவங்களை அதிகளவில் தக்கவைத்த
கிராமமாகத் திகழ்கிறது. பிற சமூகத்தவர் மத்தியில் எமது தாயக மக்கள்
தனித்துவமான பண்பாட்டுப் பாரம்பரியத்தைக் கொண்டவர்களாக மதிக்கப்பட இத்தகைய
பாரம்பரிய வழிபாட்டு முறைகளே காரணமாகின்றன.
3. கோபம் தணித்த வரலாறும் சிறுவர் வழிபாடும்
சிறுவர்கள்
சுத்தமாக, விரதமிருந்து, காவடி, வசந்தன், கரகம், கும்மி ஆடி அம்மனின் கோபத்தைத் தணித்த
வரலாறு இச்சடங்குகளின் அடிப்படையாகும்.
- மதுரையை எரித்த பின், ஆயர் குல மக்கள் (இடைச்சேரி மக்கள்)
அம்மனின் கோபம் தணிக்க நெய் (அல்லது வெண்ணெய்) அள்ளி அப்பி, அம்மானை ஆடி, அரும்பூசனை செய்து அம்மனைக்
குளிரப்பண்ணினார்கள்.
- இதன் எச்சமாகவே இன்றும் சடங்கின்
இறுதி நாளில் "குளுர்த்தி" சடங்கு நடத்தப்படுகிறது. அம்மனின்
கோபம் தணிவித்து, மக்கள் நலம் பெறச் செய்யப்படுவதே
குளுர்த்தி ஆகும்.
குளுர்த்திப்
பாடல் வரி ஆதாரம்: "பாண்டியன் செய்த பழி பாவத்தால் பார்மே லெழுந்த பழித்த மதுரை மூண்ட வடவனல் தன்னை மூட்டி முழங்க எரித்தாளே மொய் குழலாள்."
"ஆயர் குலக்கொடிப் பாவையர் வந்து
ஆயிழை தன்னை யடி
பணிந்து
தூயறு நெய்தன்னை
வாங்கி வந்து
சுடர் முலை
கொங்கையி லப்பினாரே."
"ஆறிய சிந்தை யரிவையர் தன்பால்...
வைகாசித் திங்கள்
வருவோ மென்று
வரிசைக் கிசைந்து
விடைகொடுத் தாளே."
இந்த உன்னத வரலாறு
தெரியாமல், சடங்கின் நோக்கம் புரியாமல், வெறும் களியாட்டமாக மட்டும் இதனை
அணுகுவதில் எந்த அர்த்தமும் இல்லை.
கோயிலுக்கு வெளியே
நடக்கும் மடைபெட்டி நிகழ்வுகளில் இளைஞர்களை ஈர்ப்பதற்காக நவீன துள்ளல் இசையையும், சினிமாப் பாடல்களையும், தாறுமாறான ஆட்டங்களையும் அனுமதிப்பதில்
தவறில்லை என்ற வாதம் முற்றிலும் நிராகரிக்கத்தக்கது. அதற்கான காரணங்கள் இதோ:
களியாட்டமா பக்தி வழிபாடா?
திருவிழாவின்
நோக்கம் "மக்கள் மகிழ்ந்து இருப்பது" மட்டுமல்ல; அது ஆன்மீக அமைதியையும், சமூக ஒருமைப்பாட்டையும், கலாசார ஒழுக்கத்தையும் பேணுவதாகும்.
"இளம் சமுதாயம் வராது" என்பதற்காக வழிபாட்டுத் தலங்களில் சினிமா கலாசார
புகுத்தல்களை அனுமதிப்பது, ஆலயங்களின் புனிதத்தன்மையையும், தனித்துவ அடையாளத்தையும் முற்றிலும்
அழித்துவிடும்.
தாண்டவக் கூத்தும் இந்திர சபையும் தவறாகச் சித்தரிக்கப்படக்
கூடாது!
சிவபெருமான் ஆடும்
தாண்டவக் கூத்து என்பது பிரபஞ்ச இயக்கத்தைக் குறிக்கும் உன்னதமான, ஆன்மீகத் தத்துவங்கள் நிறைந்த நடனக்
கலையே அன்றி, வெறும் களியாட்டத் துள்ளல் ஆட்டம் அல்ல.
அதேபோல, இந்திர சபையின் நடனங்களைச் சான்றுகாட்டி, பக்தி சார்ந்த சடங்கு முறைகளில் ஆபாசமான
அல்லது ஒழுக்கமற்ற ஆட்டங்களை நியாயப்படுத்துவது பக்தி இலக்கிய மரபையும், பத்ததி நெறிமுறைகளையும்
கொச்சைப்படுத்தும் செயலாகும்.
கால மாற்றத்திற்கு ஏற்ப மாறுதல் என்பது கலாசாரச் சீரழிவாகக்
கூடாது
கால மாற்றத்திற்கு
ஏற்ப நாம் மாற வேண்டும் என்பதற்காக, பக்திப் பாடல்களைத் துள்ளல் இசையில் போட்டு ஆபாச சினிமாப்
பாணி ஆட்டங்களை ஊக்குவிப்பது, எமது எதிர்காலச்
சந்ததியைத் தவறான வழிக்குத்தான் கொண்டு சேர்க்கும். "போதைக்கு அடிமையாகாமல்
இப்படியாவது கொண்டாடட்டும்" என்று கூறுவது, ஒரு சீரழிவை மறைக்க இன்னொரு சீரழிவை நியாயப்படுத்துவது
போன்றதாகும்.
எமது ஆதி குடிகள்
பறை மேளம் மற்றும் உடுக்கொலிகளைப் பயன்படுத்தியது வெறும் பொழுதுபோக்கிற்கு அல்ல; அவை குறிப்பிட்ட சடங்கு முறைகளுக்கான ஓசை
நயங்களையும், ஒத்திசை நயங்களையும் கொண்ட ஆன்மீக
அதிர்வுகளை உருவாக்குபவை. காப்புக்கு ஓர் ஓசை, அம்மனின் தோற்றத்திற்கு ஓர் ஓசை, கோபத்துடன் மதுரை வீதிகளில் வருவதற்கு
ஓர் ஓசை, அவளைக் குளிரப்பண்ண மற்றுமோர் ஓசை எனப் பல்வேறு
ஓசை நயங்கள் பாரம்பரியமாகப் பேணப்பட்டு வருகின்றன. நவீன இசைக்கருவிகளைப்
பயன்படுத்தினாலும், அந்தப் பாரம்பரிய ஓசை நயமும் பக்திப்
பாவகமும் சிதையாமல் இருப்பதே எமது அடையாளத்தைப் பாதுகாக்கும்.
கண்ணகை அம்மன்
வழிபாடு என்பது பக்தி இலக்கிய மரபும், செந்நெறித் தன்மையும் கொண்ட உயர் ஒழுக்க நெறியாகும். எனவே, அநாசியமான, சடங்கிற்குச் சற்றும் தொடர்பில்லாத தேவையற்ற செயல்பாடுகளைக்
கட்டுப்படுத்தி, எமது பாரம்பரிய கலை வடிவங்களான வசந்தன், கூத்து, கும்மி மற்றும் குளுர்த்திப் பாடல்களின் வழி நின்று, தூய்மையோடும் ஒழுக்கத்தோடும் இப்புனித
வழிபாட்டினை முன்னெடுப்பதே எமது தாயக மக்களின் தனித்துவத்தையும் அடையாளத்தையும்
காலம்கடந்து நிலைநிறுத்தும்.


0 comments:
Post a Comment