ADS 468x60

12 November 2026

சம்பள உயர்வுக்கு அப்பால் - மக்களின் வாழ்க்கையை மாற்றுமா 2027 வரவுசெலவுத் திட்டம்?

இலங்கையின் 2027ஆம் ஆண்டுக்கான தேசிய வரவுசெலவுத் திட்டம் நவம்பர் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பொருளாதார எதிர்காலம் தொடர்பான எதிர்பார்ப்புகளும் விவாதங்களும் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. 2022ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடியிலிருந்து படிப்படியாக மீண்டுவரும் இலங்கை, தற்போது பொருளாதார உறுதிப்படுத்தல், மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைத்தல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், முதலீடுகளை ஊக்குவித்தல் மற்றும் உற்பத்திப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல் போன்ற பல்வேறு சவால்களை ஒரே நேரத்தில் எதிர்கொண்டுள்ளது.

இந்தப் பின்னணியில், அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்த எதிர்பார்ப்புகள் வரவுசெலவுத் திட்ட விவாதங்களில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்த வாழ்க்கைச் செலவு, வரிச்சுமை, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டுள்ள அரச ஊழியர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டியது அவசியமானதாகும். இருப்பினும், ஒரு நாட்டின் பொருளாதார மீட்சியை அரச ஊழியர்களின் சம்பள உயர்வினால் மாத்திரம் அளவிட முடியுமா? என்பதே இன்றைய முக்கியமான கேள்வியாகும்.

2022ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து இலங்கை சில முக்கியமான முன்னேற்றங்களைப் பதிவு செய்துள்ளது. வெளிநாட்டு நாணயக் கையிருப்பு மேம்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி மீண்டும் ஆரம்பித்துள்ளது. அரச நிதி முகாமைத்துவத்திலும் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உலக வங்கியின் மதிப்பீட்டின்படி, 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கைப் பொருளாதாரம் 4.7 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த முன்னேற்றம் வரவேற்கத்தக்கது. ஆனால், தேசியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் சாதாரண குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்படும் முன்னேற்றத்திற்கும் இடையில் இன்னமும் குறிப்பிடத்தக்க இடைவெளி காணப்படுகின்றது.

பொருளாதார வளர்ச்சி விகிதம் உயர்ந்தாலும், ஒரு குடும்பத்தின் மாதாந்த உணவுச் செலவு, மின்சாரக் கட்டணம், போக்குவரத்துச் செலவு, பிள்ளைகளின் கல்விச் செலவு மற்றும் மருத்துவச் செலவு குறையவில்லை என்றால் அந்த வளர்ச்சியின் பயனை மக்கள் எவ்வாறு உணர முடியும்? பொருளாதார மீட்சி என்பது புள்ளிவிபரங்களில் மாத்திரம் பிரதிபலிக்கும் நிகழ்வாக இருக்க முடியாது. அது மக்களின் அன்றாட வாழ்க்கையில் வெளிப்பட வேண்டும்.

அரச ஊழியர்களுக்கான 2027ஆம் ஆண்டின் எதிர்பார்க்கப்படும் சம்பள உயர்வை இந்தச் சூழலில் சரியான முறையில் புரிந்துகொள்ள வேண்டும். 2025ஆம் ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட சம்பளத் திருத்தம் மூன்று கட்டங்களாக நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டது. முதலாவது கட்டம் 2025ஆம் ஆண்டிலும், இரண்டாவது கட்டம் 2026ஆம் ஆண்டிலும் அமுல்படுத்தப்பட்ட நிலையில், இறுதிக்கட்டம் 2027ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது. எனவே, எதிர்பார்க்கப்படும் சம்பள அதிகரிப்பு முற்றிலும் புதியதொரு சலுகை என்பதற்குப் பதிலாக, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அரசாங்கத்தின் பொறுப்புறுதியை நிறைவு செய்யும் நடவடிக்கையாகவும் பார்க்கப்பட வேண்டும்.

சம்பள உயர்வு அவசியமானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எனினும், பெயரளவிலான சம்பள உயர்வுக்கும் உண்மையான கொள்வனவுச் சக்தியின் உயர்வுக்கும் இடையில் வேறுபாடு உள்ளது. உதாரணமாக, மாதம் 60,000 ரூபா சம்பளம் பெறும் ஒருவருக்கு 5,000 ரூபா அதிகரிப்பு வழங்கப்பட்டால் அது சுமார் 8.3 சதவீத உயர்வாகும். ஆனால், அதே காலப்பகுதியில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளும் சுமார் 8 சதவீதம் அதிகரித்திருந்தால், அந்தச் சம்பள உயர்வினால் கிடைக்கும் உண்மையான நன்மை மிகவும் குறைவாகவே இருக்கும். பொருளியலில் இது பெயரளவிலான வருமானம் (Nominal Income) மற்றும் உண்மையான வருமானம் (Real Income) ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாடாக விளக்கப்படுகின்றது.

ஒரு குடும்பம் சம்பளப் பட்டியலில் காணப்படும் தொகையை மட்டும் கணக்கிடுவதில்லை. அந்த வருமானத்தைக் கொண்டு மாதம் முழுவதும் உணவு, மின்சாரம், போக்குவரத்து, கல்வி, சுகாதாரம் மற்றும் ஏனைய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியுமா என்பதையே கணக்கிடுகின்றது. ஆகவே, சம்பள உயர்வுடன் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்துதல், உற்பத்திச் செலவுகளைக் குறைத்தல் மற்றும் குடும்பங்களின் உண்மையான வருமானத்தைப் பாதுகாத்தல் ஆகியவையும் இணைந்திருக்க வேண்டும்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை இந்தத் தேவையை மேலும் வலியுறுத்துகின்றது. 2026 ஒக்டோபர் மாதத்தில் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையிலான வருடாந்த பணவீக்கம் 8.3 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. உலக வங்கியின் மதிப்பீட்டின்படி, 2025ஆம் ஆண்டில் வறுமை நிலை 16.9 சதவீதமாகத் தொடர்ந்துள்ளது. 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மொத்த வேலையின்மை 4 சதவீதமாக இருந்தபோதிலும், 15–24 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் வேலையின்மை 17.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே காலப்பகுதியில் தொழிற்படையில் பங்கேற்பு விகிதம் 50 சதவீதமாகவே இருந்துள்ளது. ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 16.1 சதவீதமானோர் எடை குறைந்தவர்களாக இருப்பதாக 2025ஆம் ஆண்டின் சுகாதார அமைச்சின் போஷாக்கு மாதத் தரவுகள் குறிப்பிடுகின்றன.

இந்தப் புள்ளிவிபரங்கள் பொருளாதார மீட்சியின் பயன்கள் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் சமமாகச் சென்றடையவில்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றன. குறிப்பாக, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள், ஓய்வூதியதாரர்கள், சுயதொழில் புரிவோர், பாதுகாப்பற்ற தொழில்களில் ஈடுபடுவோர் மற்றும் வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கும் இளைஞர்கள் இன்னமும் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர்.

பணவீக்கம் குறைவது என்பது பொருட்களின் விலைகள் குறைவதைக் குறிக்காது என்பதையும் கொள்கை வகுப்பாளர்கள் தெளிவுபடுத்த வேண்டும். ஒரு பொருளின் விலை 100 ரூபாவிலிருந்து 200 ரூபாவாக அதிகரித்த பின்னர் பணவீக்கம் குறைந்தாலும், அந்தப் பொருளின் விலை மீண்டும் 100 ரூபாவாகக் குறைந்துவிடுவதில்லை. விலைகள் அதிகரிக்கும் வேகம் குறைவதே பணவீக்க வீழ்ச்சியின் பொருளாகும். எனவே, பணவீக்க விகிதம் குறைந்துவிட்டது என்ற காரணத்தைக் காட்டி மக்களின் வாழ்க்கைச் சுமை குறைந்துவிட்டதாகக் கருத முடியாது.

இலங்கையின் நீண்டகாலப் பொருளாதாரப் பிரச்சினையின் அடிப்படை, குறைந்த சம்பளம் மாத்திரமல்ல. போதியளவு போட்டித்தன்மை கொண்ட, பல்வகைப்படுத்தப்பட்ட உற்பத்திப் பொருளாதாரத்தை உருவாக்குவதில் காணப்படும் குறைபாடுகளுமாகும். ஒரு நாடு தனது மக்களுக்கு உயர்ந்த வருமானத்தையும் சிறந்த வாழ்க்கைத் தரத்தையும் வழங்க வேண்டுமானால், அது அதிகளவிலான பொருட்களையும் சேவைகளையும் உற்பத்தி செய்ய வேண்டும். உற்பத்தித்திறன் (Productivity) அதிகரிக்க வேண்டும். புதிய வேலைவாய்ப்புகள் உருவாக வேண்டும். சர்வதேசச் சந்தைகளில் போட்டியிடக்கூடிய பொருளாதாரத் துறைகள் விரிவடைய வேண்டும்.

இதற்காக விவசாயம், உற்பத்திக் கைத்தொழில், சுற்றுலாத்துறை, தகவல் தொழில்நுட்பம், ஏற்றுமதி சார்ந்த சேவைகள் மற்றும் சிறிய, நடுத்தரத் தொழில்முயற்சிகள் ஆகியவற்றுக்கு வரவுசெலவுத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். குறிப்பாக, சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்முயற்சிகள் (SMEs) நாட்டின் பிரதேசப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இருப்பினும், அதிக வட்டி விகிதங்கள், தொழில்நுட்பப் பற்றாக்குறை, சந்தை அணுகல் குறைபாடு, நிர்வாகத் தடைகள் மற்றும் நிதி வசதிகளுக்கான மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்புகள் ஆகியவற்றால் அவை பாதிக்கப்படுகின்றன.

எனவே, இத்தொழில்முயற்சிகளுக்கு குறைந்த செலவிலான நிதி வசதிகள், தொழில்நுட்ப மேம்பாடு, சந்தைப்படுத்தல் உதவி, ஏற்றுமதி வழிகாட்டல் மற்றும் திறன் விருத்தித் திட்டங்கள் வழங்கப்பட வேண்டும். கிராமியப் பொருளாதாரத்திலும் இதேபோன்ற அணுகுமுறை அவசியமாகும். விவசாயிகளுக்கு நீர்ப்பாசனம், களஞ்சிய வசதிகள், போக்குவரத்து, நவீன தொழில்நுட்பம் மற்றும் நேரடி சந்தை அணுகல் ஆகியவற்றை உறுதிப்படுத்துவது உற்பத்தியை அதிகரிக்கும். விவசாயப் பொருட்களை மூலப்பொருட்களாக விற்பனை செய்வதற்குப் பதிலாக பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளாக மாற்றுவதற்கான தொழில்முயற்சிகளும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

இதனுடன் இலங்கை எதிர்கொள்ளும் மற்றுமொரு அடிப்படைக் கேள்வி வெளிநாட்டு நாணய வருமானத்தை எவ்வாறு அதிகரிப்பது என்பதாகும். கடனாகப் பெறப்படும் டொடாலரும் உற்பத்தி மற்றும் சேவைகள் மூலம் ஈட்டப்படும் டொடாலரும் ஒன்றல்ல. கடன் உடனடித் தேவைகளை நிறைவேற்ற உதவலாம். ஆனால் அது எதிர்காலத்தில் மீளச் செலுத்த வேண்டிய பொறுப்பையும் உருவாக்குகின்றது. ஏற்றுமதி, சுற்றுலாத்துறை, தகவல் தொழில்நுட்பம், தொழில்சார் சேவைகள், அறிவுசார் தொழில்கள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் உத்தியோகபூர்வ பண அனுப்பல்கள் ஆகியவற்றின் மூலம் வெளிநாட்டு நாணய வருமானத்தை அதிகரிப்பதே நீண்டகாலத் தீர்வாகும்.

இத்தகைய உற்பத்திப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் அவசியம். முதலீட்டாளர்களுக்கு அழைப்புகளை விடுப்பதும், மாநாடுகளில் வாய்ப்புகளை எடுத்துரைப்பதும் மாத்திரம் போதுமானதல்ல. நிலையான கொள்கைகள், தெளிவான சட்டவிதிகள், நியாயமான வரி முறை, வினைத்திறனான அரச நிர்வாகம் மற்றும் ஒப்பந்தங்களுக்கான சட்டப் பாதுகாப்பு ஆகியவை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

ஊழல் ஒழிப்பு, மோசடிகளைக் கண்டறிதல் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துதல் ஆகியவை நல்லாட்சியின் அடிப்படைகளாகும். அவை எந்தவொரு சூழலிலும் பலவீனப்படுத்தப்படக் கூடாது. அதேவேளை, கடந்தகாலத் தவறுகளை விசாரிப்பதுடன் எதிர்கால முதலீடுகளுக்கான நம்பிக்கையையும் கட்டியெழுப்ப வேண்டும். ஏற்கனவே முதலீடு செய்துள்ளவர்களின் நியாயமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் புதிய முதலீடுகளை எதிர்பார்ப்பது நடைமுறைக்கு ஏற்ற அணுகுமுறையாக இருக்காது. பொறுப்புக்கூறலும் முதலீட்டாளர் நம்பிக்கையும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல; இரண்டுமே பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமானவை.

இங்கு அரச நிர்வாகத்தின் செயற்பாட்டுத் திறனும் முக்கியமானதாகும். அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவலாம். ஆனால், அதனால் அரச சேவையின் தரம் தானாகவே உயர்ந்துவிடாது. தொழில்முறைத் திறன்கள், நவீன தொழில்நுட்பம், தெளிவான பொறுப்புகள் மற்றும் சட்டபூர்வமான தீர்மானங்களை எடுப்பதற்கான நம்பிக்கை ஆகியவையும் அவசியமாகும்.

குறிப்பாக, கொள்முதல், ஒப்பந்த அனுமதி மற்றும் அபிவிருத்தித் திட்ட அமுலாக்கம் போன்ற விடயங்களில் சில அதிகாரிகள் எதிர்கால விசாரணைகள் குறித்த அச்சத்தினால் சட்டபூர்வமான தீர்மானங்களைக்கூட எடுப்பதில் தயக்கம் காட்டக்கூடிய சூழல் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இதனால் திட்டங்கள் தாமதமடையலாம்; முதலீட்டாளர்கள் நம்பிக்கையை இழக்கலாம்; பொதுமக்களுக்கான சேவைகள் பாதிக்கப்படலாம். இதற்கான தீர்வு விசாரணை நிறுவனங்களின் அதிகாரத்தைக் குறைப்பதல்ல. மாறாக, நேர்மையாகவும் சட்ட வரம்புகளுக்குள்ளும் செயற்படும் அதிகாரிகளுக்கு நியாயமான தொழில்முறைப் பாதுகாப்பை வழங்குவதுடன், தவறிழைப்பவர்களைப் பொறுப்புக்கூறச் செய்யும் வெளிப்படையான நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதாகும்.

அதேபோன்று, அரச முதலீடுகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதும் முக்கியமான கேள்வியாகும். வீதிகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், நீர்ப்பாசனம் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்வது மட்டும் அபிவிருத்தியல்ல. ஒதுக்கப்பட்ட நிதி உரிய காலத்தில் பயன்படுத்தப்பட்டு, திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டு, மக்கள் அதன் பயனை அனுபவிக்கும்போதே உண்மையான அபிவிருத்தி நிகழ்கின்றது.

2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கான அரச செலவினத் தரவுகள் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டிய தேவையை வெளிப்படுத்துகின்றன. முழு ஆண்டிற்காக மூலதனச் செலவினம் மற்றும் நிகரக் கடனளிப்புக்காக சுமார் 1,719 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், ஜூன் மாத இறுதிவரை சுமார் 280 பில்லியன் ரூபா மாத்திரமே செலவிடப்பட்டுள்ளது. இது வருடாந்த ஒதுக்கீட்டில் சுமார் 16.3 சதவீதமாகும். இதே காலப்பகுதியில் மொத்த அரச செலவினம் வருடாந்த ஒதுக்கீட்டில் 39.2 சதவீதமாகவும், மீண்டெழும் செலவினம் 45.9 சதவீதமாகவும் இருந்துள்ளது. 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் மூலதனச் செலவினம் மற்றும் நிகரக் கடனளிப்புக்கான செலவின விகிதம் 17.5 சதவீதமாக இருந்தது.

ஆண்டின் முதல் ஆறு மாதங்களின் செலவினத்தை மட்டும் கொண்டு முழு ஆண்டின் செயல்திறனைத் தீர்மானிக்க முடியாது. பெரிய கட்டுமானத் திட்டங்களுக்கான கொடுப்பனவுகள் ஆண்டின் பிற்பகுதியில் இடம்பெறலாம். இருப்பினும், இவ்வளவு குறைந்த செலவின விகிதம் தீவிரமாக ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். திட்டமிடல் குறைபாடுகள், கொள்முதல் நடைமுறைகளில் தாமதம், காணி கையகப்படுத்தல் பிரச்சினைகள், சுற்றாடல் அனுமதிகள், திணைக்களங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பின்மை, தொழில்நுட்ப நிபுணத்துவப் பற்றாக்குறை மற்றும் திறமையான பணியாளர்களின் குறைபாடு போன்ற பல காரணிகள் இதற்குப் பின்னணியில் இருக்கலாம்.

இதன் தாக்கம் அரச கணக்குகளில் மாத்திரம் முடிவடைவதில்லை. வைத்தியசாலை அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கப்பட்டும் கட்டுமானம் தாமதமானால் நோயாளிகள் எதிர்பார்த்த வசதிகளைப் பெற முடியாது. பாடசாலைக் கட்டடத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டும் வேலைகள் ஆரம்பிக்கப்படாவிட்டால் மாணவர்களின் கல்விச் சூழல் மேம்படாது. நீர்ப்பாசனத் திட்டங்கள் நிறைவடையாவிட்டால் விவசாயிகளின் உற்பத்தி வாய்ப்புகள் பாதிக்கப்படும். கிராமிய வீதிகள் புனரமைக்கப்படாவிட்டால் சந்தைகளை அடைவதற்கான போக்குவரத்துச் செலவுகள் அதிகமாகவே இருக்கும்.

மேலும், அபிவிருத்தித் திட்டங்கள் தாமதமடைவதால் கட்டுமானப் பொருட்கள், போக்குவரத்து, பொறியியல் சேவைகள், இயந்திரங்கள் மற்றும் தொழிலாளர் வேலைவாய்ப்புகள் போன்றவற்றின் ஊடாக உருவாக வேண்டிய பொருளாதாரச் செயற்பாடுகளும் பாதிக்கப்படுகின்றன. எனவே, நிதி ஒதுக்கீட்டின் அளவைவிட, ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு உருவாக்கப்படும் பெறுபேறுகளே அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயல்திறனைத் தீர்மானிக்க வேண்டும்.

இதற்கான மாற்று அணுகுமுறையாக, ஒவ்வொரு அமைச்சுக்கும் திணைக்களத்திற்கும் அளிக்கப்படும் நிதி ஒதுக்கீடுகளுடன் அளவிடக்கூடிய பெறுபேற்று இலக்குகளும் இணைக்கப்பட வேண்டும். திட்டங்களின் முன்னேற்றம், செலவின நிலை, நிறைவு காலம் மற்றும் மக்களுக்கு கிடைத்த நன்மைகள் ஆகியவை காலாண்டு அடிப்படையில் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். திட்டங்களைத் தயாரிக்கும் கட்டத்திலேயே தொழில்நுட்ப, நிதி மற்றும் சுற்றாடல் மதிப்பீடுகள் நிறைவு செய்யப்பட வேண்டும். இதன் மூலம் நிதி ஒதுக்கீடு, செயற்படுத்தல் மற்றும் பெறுபேறு ஆகியவற்றுக்கிடையில் தெளிவான பொறுப்புக்கூறல் உருவாக்கப்படலாம்.

உட்கட்டமைப்பு முதலீடுகளுடன் பணவீக்கக் கட்டுப்பாடு, வரி முகாமைத்துவம் மற்றும் நிதி ஒழுக்கமும் இணைந்து செயற்பட வேண்டும். வரிகளைக் குறைப்பதற்கான மக்களின் எதிர்பார்ப்பு நியாயமானது. ஆனால், போதிய மாற்று வருமானமின்றி வரிகளைக் குறைப்பது அரச நிதியை மீண்டும் நெருக்கடிக்குள் தள்ளக்கூடும். வரி ஏய்ப்பைக் கட்டுப்படுத்துதல், வரி அடித்தளத்தை விரிவுபடுத்துதல், வரி நிர்வாகத்தை வினைத்திறனாக்குதல் மற்றும் வீண் அரச செலவுகளைக் குறைத்தல் ஆகியவற்றின் மூலம் நியாயமான வரிச்சுமையை உருவாக்க வேண்டும். குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்குத் தேவையான இலக்கிடப்பட்ட நிவாரணங்களும் வழங்கப்பட வேண்டும்.

2027ஆம் ஆண்டின் வரவுசெலவுத் திட்டம் இந்தப் பல்வேறு சவால்களையும் ஒருங்கிணைந்த பொருளாதார அணுகுமுறையின் கீழ் கையாள வேண்டியுள்ளது. சம்பள உயர்வு, சமூகப் பாதுகாப்பு, உற்பத்தித்திறன், திறன் விருத்தி, தொழில்முயற்சி மேம்பாடு, ஏற்றுமதி வளர்ச்சி, முதலீட்டு நம்பிக்கை மற்றும் அரச நிர்வாகச் சீர்திருத்தம் ஆகியவை தனித்தனியான விடயங்களல்ல. அவை ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட பொருளாதாரக் கட்டமைப்பின் கூறுகளாகும்.

இலங்கைக்கு இப்போது தேவைப்படுவது செலவினங்களை அதிகரிக்கும் வரவுசெலவுத் திட்டம் மாத்திரமல்ல; செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாவும் எத்தகைய பொருளாதார மற்றும் சமூகப் பெறுபேற்றை உருவாக்குகின்றது என்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பான வரவுசெலவுத் திட்டமாகும். அரச ஊழியர்களின் வருமானம் உயர வேண்டும்; தனியார் துறையில் சிறந்த வேலைவாய்ப்புகள் உருவாக வேண்டும்; இளைஞர்களுக்கு திறனுக்கேற்ற தொழில்கள் கிடைக்க வேண்டும்; விவசாயிகளின் உற்பத்தி வருமானம் அதிகரிக்க வேண்டும்; சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்முயற்சிகள் வளர வேண்டும்; முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் நீண்டகாலத் தீர்மானங்களை எடுக்கக்கூடிய சூழல் உருவாக வேண்டும்.

ஒரு நாட்டின் பொருளாதார வெற்றி, அரசாங்கம் எவ்வளவு நிதியை ஒதுக்கியது என்பதில் இல்லை; அந்த நிதியின் மூலம் எத்தனை குடும்பங்களின் வாழ்க்கை மேம்பட்டது, எத்தனை புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன, எவ்வளவு உற்பத்தி அதிகரித்தது, எதிர்காலத் தலைமுறைக்கு எத்தகைய பொருளாதார அடித்தளம் அமைக்கப்பட்டது என்பதிலேயே தங்கியுள்ளது.

எனவே, 2027ஆம் ஆண்டின் வரவுசெலவுத் திட்டம் சம்பள உயர்வுகளையும் நிவாரண அறிவிப்புகளையும் தாண்டி, இலங்கையின் உற்பத்திப் பொருளாதாரத்தை மறுசீரமைக்கும் நடைமுறைச் செயற்திட்டமாக அமைய வேண்டும். மக்களுக்கு வெறும் பொருளாதார வளர்ச்சியின் புள்ளிவிபரங்கள் தேவையில்லை; அந்த வளர்ச்சியின் பயனைத் தமது வீடுகளிலும் தொழில்களிலும் உணரக்கூடிய வாய்ப்புகளே தேவை. சம்பள உயர்வு மக்களுக்கு இன்றைய நிவாரணத்தை வழங்கலாம்; ஆனால் உற்பத்தித்திறன், முதலீடு, வேலைவாய்ப்பு மற்றும் வினைத்திறனான அரச நிர்வாகம் ஆகியவையே நாளைய செழிப்பை உருவாக்கும். இலங்கையின் 2027 வரவுசெலவுத் திட்டம் நிரூபிக்க வேண்டிய உண்மையான வெற்றியும் இதுவே.

அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்ட முகாமைத்துவத்தை மதிப்பிடும்போது, ஒதுக்கப்பட்ட நிதி முழுவதையும் செலவிடுவது மட்டுமே சிறந்த நிதி நிர்வாகத்தின் அடையாளம் எனக் கருதக்கூடாது. நிதியாண்டு முடிவடைகின்றது என்பதற்காக எஞ்சியுள்ள நிதியை அவசரமாகச் செலவிடுவது தேவையற்ற கொள்வனவுகள், தரமற்ற நிர்மாணப் பணிகள் மற்றும் வீணான அரச செலவுகளுக்கு வழிவகுக்கலாம். அதேபோன்று, ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாகச் செலவிடப்படவில்லை என்பதற்காக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அது நிர்வாகத் தோல்வியாகவும் கருதப்பட முடியாது. சில நேரங்களில் கொள்வனவுச் செலவுகள் குறைந்திருப்பதாலும், தேவையற்ற செயற்பாடுகள் தவிர்க்கப்பட்டிருப்பதாலும் செலவினம் குறைவாக இருக்கலாம். எனவே, முக்கியமான கேள்வி எவ்வளவு நிதி செலவிடப்பட்டது என்பதல்ல; செலவிடப்பட்ட பொதுநிதி எந்தளவுக்கு எதிர்பார்க்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றியுள்ளது என்பதாகும்.

இதுவே பெறுபேறு அடிப்படையிலான வரவுசெலவுத் திட்டமிடல் (Performance-Based Budgeting) என்ற அணுகுமுறையின் அடிப்படையாகும். இம்முறையில் அரசாங்கத்தின் செயற்பாட்டுத் திறன் செலவிடப்பட்ட தொகையின் அடிப்படையில் மாத்திரம் மதிப்பிடப்படுவதில்லை. மாறாக, அந்த நிதியின் மூலம் உருவாக்கப்பட்ட சேவைகள், நிறைவு செய்யப்பட்ட பணிகள் மற்றும் மக்களுக்குக் கிடைத்த நன்மைகள் ஆகியவையும் மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படுகின்றன.

உதாரணமாக, ஒரு வீதி அபிவிருத்தித் திட்டத்தை எடுத்துக்கொண்டால், அதன் வெற்றியை நிர்மாணப் பணிகளுக்குச் செலவிடப்பட்ட நிதியின் அடிப்படையில் மாத்திரம் தீர்மானிக்க முடியாது. அந்த வீதியின் மூலம் பயண நேரம் குறைந்துள்ளதா? போக்குவரத்துச் செலவுகள் வீழ்ச்சியடைந்துள்ளனவா? விவசாயிகள் தமது உற்பத்திகளைச் சந்தைகளுக்குக் கொண்டு செல்வதற்கான வாய்ப்புகள் மேம்பட்டுள்ளனவா? அப்பிரதேச மக்களின் பொருளாதார நடவடிக்கைகள் விரிவடைந்துள்ளனவா? என்பனவும் ஆராயப்பட வேண்டும்.

இதே அணுகுமுறை கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயம் போன்ற துறைகளுக்கும் பொருந்த வேண்டும். கல்வித்துறையில் கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டனவா என்பதுடன் மாணவர்களின் கற்றல் வசதிகளும் கல்விப் பெறுபேறுகளும் மேம்பட்டுள்ளனவா என்பது மதிப்பிடப்பட வேண்டும். சுகாதாரத்துறையில் மருத்துவமனைகளுக்கான நிதி ஒதுக்கீட்டுடன் நோயாளிகளுக்கான சேவைகள், மருத்துவ வசதிகளுக்கான அணுகல் மற்றும் சிகிச்சையின் தரம் ஆகியவை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். விவசாயத்தில் உற்பத்தித்திறன் அதிகரித்துள்ளதா, அறுவடைக்குப் பின்னரான இழப்புகள் குறைந்துள்ளனவா, விவசாயிகளின் வருமானம் மேம்பட்டுள்ளதா என்பதே முக்கியமான அளவீடுகளாக அமைய வேண்டும்.

பொதுநிதியின் நோக்கம் நிதியைச் செலவிடுவது அல்ல; மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதாகும்.

எனவே, 2027ஆம் ஆண்டில் அரசாங்கம் அபிவிருத்திச் செலவினங்களைக் கண்காணிப்பதற்கும் அவற்றின் உண்மையான பெறுபேறுகளை மதிப்பிடுவதற்கும் வலுவான பொறிமுறையை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு முக்கியமான திட்டத்திற்கும் நடைமுறைச் சாத்தியமான கால அட்டவணை, பொறுப்பான நிறுவனம், நிதி இலக்கு மற்றும் நிறைவு செய்யப்பட வேண்டிய பௌதீக இலக்கு ஆகியவை தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும். அமைச்சுகள் மற்றும் திணைக்களங்கள் காலாண்டு அடிப்படையில் முன்னேற்ற அறிக்கைகளைப் பகிரங்கப்படுத்த வேண்டும். அவற்றில் செலவிடப்பட்ட நிதி மாத்திரமன்றி, உண்மையில் நிறைவு செய்யப்பட்ட பணிகளும் மக்களுக்குக் கிடைத்த நன்மைகளும் குறிப்பிடப்பட வேண்டும்.

கால அட்டவணையில் பின்னடைவை எதிர்கொள்ளும் திட்டங்கள் ஆரம்பத்திலேயே அடையாளம் காணப்பட்டு, தாமதத்திற்கான காரணங்கள் ஆராயப்பட வேண்டும். அதற்கேற்ப திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். திட்டங்களின் செயற்பாட்டுத் திறன் தொடர்பாகப் பொறுப்பான உயர் அதிகாரிகளிடம் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதேவேளை, தமது பொறுப்புகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான தொழில்முறை ஆதரவும் நிர்வாகப் பாதுகாப்பும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். செலவினம் குறைவாக உள்ளது என்ற ஒரே காரணத்திற்காக அதிகாரிகளைத் தண்டிப்பது இந்தப் பிரச்சினைக்கான தீர்வாக அமையாது. மாறாக, உண்மையான தடைகளை அடையாளம் கண்டு, தேவையற்ற தாமதங்களை நீக்கி, அபிவிருத்திப் பயன்களை வினைத்திறனுடன் மக்களிடம் கொண்டு சேர்ப்பதே நோக்கமாக இருக்க வேண்டும்.

மேலும், ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவு செய்யப்படுவதற்கு முன்னர் புதிய திட்டங்களை அறிவிப்பதில் அரசாங்கம் கவனமாக இருக்க வேண்டும். ஏற்கனவே ஒதுக்கப்பட்ட பில்லியன் கணக்கான ரூபா நிதியின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறுகள் கிடைக்காத நிலையில், மேலும் புதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் எத்தகைய பயனை வழங்கும் என்ற கேள்வி எழுகின்றது. ஆண்டின் ஆரம்பத்தில் அபிவிருத்திக்காகப் பெருந்தொகையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால், அந்த ஆண்டின் இறுதியில் மக்களிடம் காண்பிக்கக்கூடிய அளவிடத்தக்க பெறுபேறுகள் என்ன என்பதற்கு அரசாங்கம் தெளிவான பதிலை வழங்க வேண்டும். அத்தகைய பதில் இல்லாதபோது வரவுசெலவுத் திட்ட உரையில் அறிவிக்கப்படும் பெரிய தொகைகளுக்கு சாதாரண மக்களின் வாழ்க்கையில் அர்த்தமிருக்காது.

2027ஆம் ஆண்டின் வரவுசெலவுத் திட்டம் இலங்கையின் பொருளாதாரக் கொள்கையில் குறுகியகால நிவாரண அணுகுமுறையிலிருந்து நீண்டகால அபிவிருத்தி அணுகுமுறைக்கு நகர்வதற்கான வாய்ப்பாக அமைய வேண்டும். பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிதிச் சுமைகளைக் குறைப்பது அரசாங்கத்தின் உடனடிப் பொறுப்பாகும். சம்பள உயர்வு, இலக்கிடப்பட்ட சமூகப் பாதுகாப்பு மற்றும் அத்தியாவசியப் பொதுச் சேவைகளின் மேம்பாடு ஆகியவை இதற்கு உதவக்கூடியவை. ஆனால், இவை தனித்தனி நிவாரண நடவடிக்கைகளாக இல்லாமல் விரிவான பொருளாதார மூலோபாயத்தின் ஒரு பகுதியாக அமைய வேண்டும்.

உற்பத்தியை எவ்வாறு அதிகரிப்பது, வேலைவாய்ப்புகளை எவ்வாறு உருவாக்குவது, ஏற்றுமதியை எவ்வாறு விரிவுபடுத்துவது, முதலீடுகளை எவ்வாறு ஈர்ப்பது, மக்களின் உண்மையான வருமானத்தை எவ்வாறு உயர்த்துவது என்பன தொடர்பாக வரவுசெலவுத் திட்டம் தெளிவான செயற்திட்டங்களை முன்வைக்க வேண்டும். வெறுமனே இலக்குகளை அறிவிப்பதற்குப் பதிலாக, அவற்றை அடைவதற்கான நடைமுறை நடவடிக்கைகள், கால எல்லைகள் மற்றும் பொறுப்பான நிறுவனங்கள் அடையாளம் காணப்பட வேண்டும். இலங்கைக்கு அளவிடக்கூடிய பொருளாதார இலக்குகளும், நடைமுறைச் சாத்தியமான அபிவிருத்தி முன்னுரிமைகளும், தெளிவான அமுலாக்க ஏற்பாடுகளும் அவசியமாகின்றன.

பெரிய அபிவிருத்தித் திட்டங்கள் ஒவ்வொன்றினதும் செலவு, எதிர்பார்க்கப்படும் பொருளாதார மற்றும் சமூகப் பயன்கள், பொறுப்பான நிறுவனங்கள், நிறைவு செய்யப்பட வேண்டிய காலம் ஆகியவை பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும். அவற்றின் முன்னேற்றம் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படுவதுடன், அடையப்பட்ட பெறுபேறுகளும் வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும்.

அதேவேளை, அரச கடன் சுமை மற்றும் கிடைக்கக்கூடிய அரச வருமானம் ஆகியவற்றினால் ஏற்படும் நிதிக் கட்டுப்பாடுகளையும் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும். பொருளாதார அபிவிருத்தியும் சமூகப் பாதுகாப்பும் பொறுப்பான நிதி முகாமைத்துவத்தின் அடிப்படையில் நிதியளிக்கப்பட வேண்டும். இல்லையெனில், கடந்த கால நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட பொருளாதார உறுதிப்படுத்தல் மீண்டும் பாதிக்கப்படும் அபாயம் உருவாகலாம்.

முக்கியமாக, பொருளாதார மீட்சியின் பயன்கள் அரச சேவையில் உள்ளவர்களுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்படக் கூடாது. விவசாயிகள், தனியார் துறை ஊழியர்கள், சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்முயற்சியாளர்கள், சுயதொழில் புரிவோர், ஓய்வூதியதாரர்கள், வேலையற்ற இளைஞர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் ஆகிய அனைத்துப் பிரிவினருக்கும் தமது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்.

குறிப்பாக, இளைஞர்கள் தமது சொந்த நாட்டிலேயே வெற்றிகரமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கையைப் பெற வேண்டும். அதற்குத் தொழில்சார் திறன் விருத்தி, தொழில்நுட்பக் கல்வி, தொழில்முனைவோர் பயிற்சி மற்றும் தனியார் துறையுடன் இணைந்த வேலைவாய்ப்புத் திட்டங்கள் விரிவுபடுத்தப்பட வேண்டும். நிறுவனங்கள் முதலீடு செய்து தமது தொழில்களை விரிவாக்குவதற்கும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் நம்பிக்கையான சூழல் அவசியம். விவசாயிகள் உற்பத்தித்திறனை உயர்த்தி நியாயமான வருமானத்தைப் பெறுவதற்கான சந்தை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். குடும்பங்கள் தமது வருமானம் அத்தியாவசியச் செலவுகளைச் சமாளிக்கப் போதுமானதாக இருக்கும் என்ற நம்பிக்கையைப் பெற வேண்டும். அரச நிறுவனங்கள் மேலும் வினைத்திறனுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் மக்களுக்குப் பொறுப்புக்கூறும் வகையிலும் செயற்பட வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, பொதுமக்களின் பணம் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது என்பதை அரசாங்கம் நிரூபிக்க வேண்டும். ஒரு வரவுசெலவுத் திட்டம் அரசாங்கம் என்ன செய்ய விரும்புகின்றது என்பதை அறிவிப்பதுடன் முடிவடைந்துவிடக் கூடாது. அந்த வாக்குறுதிகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும், யார் பொறுப்பேற்பார்கள், எப்போது பெறுபேறுகள் கிடைக்கும், வெற்றி எவ்வாறு அளவிடப்படும் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். வாக்குறுதிகளின் வரவுசெலவுத் திட்டத்திற்கும் பெறுபேறுகளின் வரவுசெலவுத் திட்டத்திற்கும் இடையிலான அடிப்படை வேறுபாடு இதுவே.

2022ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைப் பதிவு செய்துள்ளது. பொருளாதார உறுதிப்படுத்தல், மீண்டும் ஆரம்பித்த வளர்ச்சி மற்றும் அரச நிதி நிலைமையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் முக்கியமானவை. இருப்பினும், பொருளாதார உறுதிப்படுத்தல் என்பது மீட்சியின் ஆரம்பப் படி மாத்திரமேயாகும். வாழ்க்கைச் செலவினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள், சிறந்த வேலைவாய்ப்புகளை எதிர்பார்க்கும் இளைஞர்கள், முதலீட்டு நம்பிக்கையை எதிர்பார்க்கும் தொழில்முயற்சியாளர்கள், பொருளாதார வாய்ப்புகளை எதிர்பார்க்கும் விவசாயிகள் மற்றும் கிராமிய மக்கள் எனப் பல்வேறு தரப்பினரின் சவால்கள் இன்னமும் தீர்க்கப்பட வேண்டியுள்ளன.

இந்தச் சவால்களைச் சம்பள உயர்வுகளால் மாத்திரம் தீர்க்க முடியாது. அதேபோன்று, பெரிய அபிவிருத்தி நிதி ஒதுக்கீடுகளை அறிவிப்பதன் மூலமும் அவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியாது. இலங்கைக்குத் தேவைப்படுவது நடைமுறை நடவடிக்கைகளால் வலுப்படுத்தப்படும் நீண்டகாலப் பொருளாதார மூலோபாயமாகும். அதிகமாக உற்பத்தி செய்யும், அதிகமாக ஏற்றுமதி செய்யும், பொறுப்பான முதலீடுகளை ஈர்க்கும், சிறந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கும், மக்களின் உண்மையான வருமானத்தைப் படிப்படியாக உயர்த்தும் பொருளாதாரக் கட்டமைப்பே நாட்டின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும்.

அத்துடன், சட்ட வரம்புகளுக்குள் காலதாமதமின்றி தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய, வெளிப்படைத்தன்மையும் பொறுப்புக்கூறலும் கொண்ட வினைத்திறனான அரச நிறுவனங்களும் அவசியமாகின்றன. அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதி உரிய முறையில் பயன்படுத்தப்படுவதையும், திட்டங்கள் நிறைவு செய்யப்படுவதையும், பொதுமுதலீடுகள் அளவிடக்கூடிய நன்மைகளை மக்களுக்கு வழங்குவதையும் அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.

எனவே, 2027ஆம் ஆண்டின் வரவுசெலவுத் திட்டம் இலங்கையின் பொருளாதார முகாமைத்துவத்தில் ஒரு புதிய அணுகுமுறையை முன்னிறுத்த வேண்டும். வாக்குறுதிகளிலிருந்து நடைமுறைக்கு; நிதி ஒதுக்கீடுகளிலிருந்து பெறுபேறுகளுக்கு; தற்காலிக நிவாரணத்திலிருந்து நிலையான பொருளாதார முன்னேற்றத்திற்கு என்ற மாற்றமே அதன் அடிப்படை நோக்கமாக அமைய வேண்டும்.

இவை அரசியல் விமர்சனங்களாக மாத்திரம் பார்க்கப்பட வேண்டியவை அல்ல. நாட்டின் பொருளாதார எதிர்காலத்தையும் அரச நிர்வாகத்தின் வினைத்திறனையும் தீர்மானிக்கும் முக்கியமான விடயங்களாக ஆக்கபூர்வமான முறையில் பரிசீலிக்கப்பட வேண்டியவை. பொருளாதாரக் கொள்கையின் இறுதி நோக்கம் சாதகமான புள்ளிவிபரங்களை உருவாக்குவதோ அல்லது கவர்ச்சிகரமான வரவுசெலவுத் திட்ட அறிவிப்புகளை வெளியிடுவதோ அல்ல. அர்த்தமுள்ள வேலைவாய்ப்புகளைப் பெறக்கூடிய, நியாயமான வருமானத்தை ஈட்டக்கூடிய, அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றக்கூடிய, கண்ணியத்துடன் வாழக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குவதே அதன் உண்மையான நோக்கமாகும்.

2027ஆம் ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தின் வெற்றி, அரசாங்கம் என்ன வாக்குறுதி அளித்தது என்பதில் அல்ல; அந்த வாக்குறுதிகளில் எத்தனை மக்களின் வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தின என்பதிலேயே தீர்மானிக்கப்படும்.

0 comments:

Post a Comment