ADS 468x60

01 September 2018

மனித மாற்றத்தை ஏற்படுத்துங்கள் மதமாற்றத்தினை தடுக்கலாம்.


Image result for religious convert
தலைப்புக்கு வருவதற்கு முன் ஒரு சிறிய விளக்கத்தினை தரலாம் என நினைக்கின்றேன். இந்துக்கள் எல்லோரும் கையில் ஆயுதம் வைத்திருப்பதில்லை. ஆனால் இந்து மத கடவுள்களின் கையில் ஆயுதங்கள் வைத்திருக்கின்றன. மற்ற மதக் கடவுள்களின் ஆயுதங்கள் இல்லை. ஆனால் ஆயுதத்தினை மற்ற மதத்தினர் கையில் வைத்துள்ளனர். மனிதர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று இந்துக்கள் நினைப்பதாலேயே இந்து மதக் கடவுளின் கைகளில் ஆயுதம் உள்ளது. கடவுளை நாம்தான் காப்பாற்ற வேண்டும என்று நினைப்பதாலேலே மற்ற மதத்தவர் கையில் ஆயுதங்கள் உள்ளது. என கண்ணதாசன் கூறியிருப்பது இன்றய நிலையுடன் ஒப்பிட்டு பார்க்க வைத்துள்ளது.



இன்று நாம் அதிகம் அதிகம் கேள்விப்படுகின்ற கசப்பான விடயம் மதமாற்றம். அது கட்டாயத்தின் பேரிலும், விருப்பத்தின் பேரிலும் குறிப்பாக இந்து மதத்தில் உள்ளவர்கள் ஏனைய மதங்களுக்கு மாற்றப்படுகின்றமையும் மாறுகின்றமையும் தான். இங்கு நான் கண்டு அனுபவித்த சில குறைபாடுகளையும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கு என்னால் இயன்ற வழிமுறைகளையுமே இங்கு முன்வைக்க விரும்புகின்றேன். இது யாரையும் காயப்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை என்பதனை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

பல நாளாக எனக்குள் இருக்கின்ற ஒரு கேள்வி காலை வேளைகளில் வானொலி தொலைக்காட்சிகளை திறந்தால் சமயப் பெரியார்களின் ஆண்மீக உரை ஒலி ஒளிபரப்பாகும். நான் இந்து மதத்தவன், அதனால் எமது மதம் சார்பில் வருபவர்கள் என்ன அறிவுரையினை இன்றய நாளில் சுமந்து செல்லவெனச் சொல்லப்போகிறார்கள் என ஆவலுடன் எதிர்பாத்து காத்திருப்பேன். ஆனால் தொடங்கும் போது ஏதோ புரியாத பாஷையை பேசி தொடங்கி அவ்வாறே முடிப்பார். அதற்கிடையில் இன்று வியாழக்கிழமை குருவுக்குரிய நாள், குரு தரிசனம் கோடி புண்ணியம். இந்தக்கோயிலில் அபிஷேகம், அந்தக்கோயில் திருவிழா, இன்று சஷ்டி அப்பிடி இப்பிடி என்று ஏதோ ஏதோ எல்லாம் பேசி அந்த நாளையே சூனியமாக்கிவிடுகின்றனர். இவர்களைப் பார்த்தாலே கோபம் கோபமாக வருகின்றது. இது அவர் அவர் கலந்துகொள்ளும் நிகழ்வை விளம்பரப்படுத்துவதுமாதிரி இருக்கிறதே தவிர கொண்டு செல்ல ஆண்மீக அறிவுரை ஒன்றுமே இல்லை.

அதே நேரம் பௌத்த துறவி ஒருவர் வந்தார் அவர் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான, மன்னிப்பதற்கான, வெற்றிபெறுவதற்கான வழிகள் பற்றி அவர்களது பௌத்த நூல்கள் என்ன சொல்லுகின்றது எனச் சொல்லும் போது ஒரு கணம் இருந்து கேட்க்கத் தோனுகின்றது. அதுவும் தமிழ்  மொழி அவரது தாய் மொழிகூடக் கிடையாது ஆனால் அருமையாக எமது மொழியில் ஒப்புவிக்கின்றார்.

அதன் பின் ஒரு பாதிரியார் வந்தார், ஆகா ஆகா என்ன அருமையா விடயங்களை உதாரணத்துடன், நாளாந்த வாழ்வில் வரும் கதையுடன் ஒப்பிட்டு வைபிளில் உள்ள ஒரு விடயத்தினை சொல்லியது மறக்க முடியாமல் இருக்கும் அளவுக்கு அவர்களின் அறிவுரை பெறுமதியானதாக தேவையானதாக இருக்கின்றது. 

உங்களுக்கு தெரியும் இந்து மதத்தில் இல்லாத நூல்கள் இல்லை, தோன்றாத பெரியவர்கள் கிடையாது, அறிவியல் சிந்தனைகள், தத்துவங்கள், வரலாறுகள் என்பனவற்றுடன் சொல்லப்படாத மார்க்கங்கள் கிடையாது ஆனால் அவற்றைப் படித்து அழகாக ஆண்மீக அறிவுரை செய்யும் பக்குவம் எமது இந்துமத குருமாருக்கு தெரியாதா என்பது எனது கேள்வி. அதனால்தான் மதமாற்றம் இடம்பெறுகின்றது, குடித்துவிட்டு ஆலய நிகழ்வுக்கு வருவதை காண்கின்றோம், பாவ காரியங்களில் ஈடுபடுவதனைக் காண்கின்றோம், எமது வழமைகளை, பண்பாட்டை வழுவவிடுவதனைக் பார்க்கின்றோம், தனது வாழ்க்கையை செம்மையாக நெறிப்படுத்த முடியாமல் தடுமாறுவதனையெல்லாம் காண்கின்றோம்.

யுத்தம், அனர்த்தம், வறுமை, வேலையின்மை, விரக்தி, கடன்தொல்லை, தடங்கல் போன்ற பல பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் எமது மக்களின் மனக்கிலேஷத்துக்கு மருந்தாக எமது குருமாரின் வழிகாட்டல் இருக்கவேண்டும், உறுதுணையாக, ஆற்றுப்படுத்தலாக, தெழிவுறுத்தலாக இருக்கவேண்டுமே தவிர பயித்தியகாரத்தனமான வகையில் தேவையற்ற உரைகளை அனுமதிக்கக்கூடாது அல்லது அவர்களை நேர்முகம் நெய்து அனுமதிக்க வேண்டும். இவ்வாறானவர்களை ஏனைய மதத்தலைவர்களுடன் ஒப்பிட்டு நோக்குகின்றபொழுது வெட்கித்தலைகுனிய வேண்டியிருக்கின்றது.

'வாழ்க்கை எதிலே ஓடிக்கொண்டிருக்கிறது?  ஆசையிலும் நம்பிக்கயிலுமே ஓடிக்கொண்டிருக்கிறது. சராசரி மனிதனை ஆசைதான் இழுத்துச் செல்கிறது. துக்கத்துக்கெல்லாம் அதுவே காரணமாகிறது. 'வேண்டும் என்றகிற உள்ளம் விரிவடைந்து கொண்டே போகிறது. 'போதும்' என்ற மனம் சாகும்வரை வருவதில்லை. ஐம்பது காசு நாணயம் பூமியில் கிடந்து, ஒருவன் கைக்கு அது கிடைத்துவிட்டால், வழியெடுக நாணயம் கிடைக்கும் என்று தேடிக்கொண்டே போகிறான். 

ஒரு விஷயம் கைக்குக் கிடைத்துவிட்டால் நூறு விஷயங்களை மனது வளர்த்துக்கொள்கிறது. ஆசை எந்தக் கட்டத்தில் நின்றுவிடுகிறதோ, அந்தக் கட்டத்தில் சுயதரிசன் ஆரம்பமாகிறது. சுயதரிசனம் பூர்த்தியானவுடன், ஆண்டவன் தரிசன் கண்ணுக்கு தெரிகிறது' என்று கண்ணதாசன் சொல்லும் அந்தச் சுயதரிசனத்துக்கான வழியினை இந்தப்பெரியவர்கள் தொலைக்காட்சி வானொலிகளில் மாத்திரமல்ல ஆலயம், சமய நிகழ்வுகளில் கூட அவற்றை சொல்லித்தர முடியாதவர்களாகவே இருப்பதனை அவதானிக்கலாம். அதனால்தான் ஏனைய மதங்களில் குருமாருக்கு கொடுக்கும் அந்த மதிப்பினை எமது மதத்தில் உள்ளவர்கள் பெரும்பாலும் கொடுக்காமல், ஆலய தர்மகர்த்தாக்கள், வண்ணக்குமார்க்கு அடிபணிந்து வேலைபுரியும் ஒரு ஊழியராக இருப்பதனைப் பார்த்து வேதனைப்பட வேண்டியுள்ளது.

என்ன வழிகளை இதற்கு கையாளலாம்

உண்மையில் இந்து மத அமைப்புக்கள் மதமாற்றத்தை ஏற்படுத்தும் வேலையை ஒருபோதும் செய்யவில்லை, அதே நேரம் எமது மொழிலை மதத்தை நன்கு கற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தினை எமது ஆலய குருமாருக்கு ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும். 

திருமண நிகழ்வு, திருவிழாக்காலங்கள், கும்பாபிஷேக நிகழ்வுகளில் அளவுக்கு அதிகமாக பணம் வசூலிக்கும் நிலையினால் எமது நல்ல நிகழ்வை ஆலயத்தில் சென்று எல்லோராலும் நிறைவேற்ற முடியாத வியாபாரக் கூடமாக மாறிவிட்டதா என வருந்தத்தோன்றுகின்றது. அவற்றுக்கு ஆலயத்தில் பொது நடைமுறையினை அமைத்து அனைவரும் சமமாக ஆலயத்துக்கு வந்து பெரும் செலவுகளைத் தவிர்த்து தமது நிகழ்வுகளை செய்ய வழிசமைக்க ஆலய பரிபாலன சபையினரால் வசதிகள் செய்யப்படவேண்டும்.

லெட்சக்கணக்கில் செலவழித்து திருவிழா செய்வதை தவித்து ஒவ்வொரு ஆலயத்திலும் மக்களும், ஆலய குருமாரும் நன்கு கற்றுக்கொள்வதற்கான ஒரு ஆன்மீக புத்தக சாலையை அமைத்து அவற்றை படிப்பதற்கான வசதியினை செய்யவேண்டும். இதனால் மற்றவரும் வந்து எமது மதத்தினை புரியும் ஒரு சூழலை உருவாக்கலாம்.

ஒரு குருவானவர் ஒரு ஆலயத்துக்கு என அமர்த்தப்பட வேண்டும். அப்போதுதான அந்தக் கோயிலில் அவர் தங்கி இருந்து அந்த மக்களை நாளும் பொழுதும் கவனிக்கலாம்.

ஆலயத்தில் முக்கிய ஆன்மீக விடயம் சார்ந்த சிறிய பெரிய மாநாடுகளை, கலந்துரையாடல்களை, மாதாந்த வருடாந்த ஆண்மீகச் சஞ்சிகைகளை வெளியிட்டு ஒழுங்கு செய்வதனூடாகவும்,  மக்கள் மத்தியில் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான ஆன்மீக அனுபவத்தை பெறுவதற்கான வழியினை அமைத்துக் கொடுக்கலாம். இவை அந்தந்த ஆலய குருவின் வழிகாட்டலில் நடைபெறும் வண்ணம் இருக்கவேண்டும்.

இவ்வாறு நல்ல பல விடயங்களை செய்யும் போதுதான் ஆன்மீகம் சார்ந்த முழு ஆனந்தத்தினை எம்மவர்கள், எமது முனிவர்களும், சித்தர்களும், ரிஷிகளும், மகான்களும் சொல்லி அனுபவித்துச் சென்ற நெறியினை அனுபவிக்க முடியும். இல்லாவிடின் எமக்கே எமது மார்க்கம்மீது வெறுப்பேற்படும் காலம் தொலைவில் இல்லை.

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்!

0 comments:

Post a Comment