ADS 468x60

01 August 2022

பொருளாதார நெருக்கடி சிரேஸ்ட மாணவர்களின் இடைவிலகலை அதிகரித்து வருகின்றது.

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியானது நீண்டகாலத்தில் நாட்டைப் பாதிக்கும் பாரிய அபாயத்தைக் கொண்டுள்ளது என்பதும், இந்தப் பாதிப்புகளைத் தணிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், மக்கள் தாம் வாழ்ந்த வாழ்க்கைத்தரத்தை குறுகிய காலத்தில் மீண்டும் எதிர்பார்க்க முடியாது என்பதும் அனைவரும் அறிந்ததே. இந்த நடவடிக்கைகள் நடைமுறைக்கு வருவதற்கு கணிசமான நேரம் கடக்கும் வரை இவற்றை நாம் அனுபவிக்க நேரும்.

இன்று நாட்டிற்கு தேவையான புதிய பொருளாதார மறுமலர்ச்சியின் ஒரு பகுதியாக, ஒட்டுமொத்த பொருளாதார நெருக்கடியிலிருந்தான மீட்சி இருந்தபோதிலும், விஷேசமாக சில துறைகள் தொடர்சியாக இயங்குவதை எந்த வகையிலும் உறுதி செய்ய வேண்டும். நாம் எதிர்காலத்தில் எவ்வாறான பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல், நாடு விட்டுக்கொடுக்க முடியாத தொடர்ந்து கொண்டுசெல்லவேண்டிய ஒரு துறை கல்வியாகும்.

இந்த நெருக்கடிக்குள் குடும்பங்கள் எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளை சரியான முறையில் மேற்கொள்ளாத காரணத்தினால், சிரேஷ்ட தர மாணவர்கள் தொடர்ந்து கல்வியில் ஈடுபடுவதற்குப் பதிலாக தமது கல்வியை இடைநிறுத்தும் போக்கு காணப்படுவதாக அண்மையில் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறு பாடசாலைகளில்; இருந்து வெளியேறும் மாணவர்களில் பெரும்பாலானோர் வருமானம் நாடி வேலை வாய்ப்புக்காக பல்வேறு தினக்கூலி வேலைகள் அல்லது மணல் அகழ்வு, கட்டிடத்துறை போன்ற முறைசாரா தொழில்களில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஒட்டுமொத்த கல்வித் துறையும் எரிபொருள் பற்றாக்குறையால் முடங்கியுள்ள சூழலில் மாணவர்களும் ஆசிரியர்களும் பாடசாலைக்குச் செல்ல முடியாத சூழ்நிலையில் இந்த ஆபத்தான செய்தி நமக்கு வந்துள்ளது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண எல்லாவகையிலும் அரசாங்கம் திட்டங்களை வகுத்துக்கொண்டிருக்கும் வேளையில், பாடசாலைப்; படிப்பை இடைநிறுத்துபவர்கள் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தேசிய அளவிலான அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. இன்று குடும்பங்களின் சீரழிந்த பொருளாதார நிலைமைகள் குழந்தைகளின் கல்வியை எதிர்மறையாக பாதித்து வருகின்ற நிலயில், அவற்றை குறைப்பதற்கும் இன்று அவசர நடவடிக்கைகள் தேவைப்படுகின்றது.

இந்த நிலைமைக்கான முக்கிய காரணங்களில் ஒன்று பின்தங்கிய குடும்பங்களின் குழந்தைகள் தமது பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஏதாவது வருமானத்தினை ஈட்டி தங்கள் குடும்பங்களை பராமரிக்கவேண்டிய ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்கு பண உதவிசெய்யும் திறன் குறைந்து வருவது இந்த நிலைக்கு மற்றுமொரு காரணம். தனிப்பட்ட குடும்பப் பொருளாதார அம்சங்களுடன் மாணவர்கள் நேரடியாக இணைக்கப்படாவிட்டாலும், நாட்டின் பொருளாதார நெருக்கடியால் குழந்தைகளின் மனநலப் பாதிப்பு போன்ற விஷயங்களிலும் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. சமீபத்திய சேவ் த சில்ட்ரன் அறிக்கையின்படி, பொருளாதார நெருக்கடியால் குடும்பங்களில் ஏற்படும் பாதிப்புகள், பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பொருளாதார நெருக்கடியின் போது குழந்தைகளிடையே பல சந்தர்ப்பங்களில் மன அழுத்தம் தொடர்பான நடத்தை மாற்றங்களைப் பற்றி முறையிட்டடுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தற்போது பாடசாலைகளில்; படிக்கும் குழந்தைகளை மட்டும் பாதிக்கும் பிரச்சினை அல்ல. இது நாட்டின் பொருளாதாரம் உட்பட இதைவிட எதிர்காலத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு விடயமாகும், ஏனெனில் பொருளாதாரத்தின் பெரும்பகுதி அடுத்த தலைமுறையை உருவாக்கும் இந்தக் குழந்தைகளையே சார்ந்துள்ளது. இவற்றுக்குமேலாக, இந்த குறைந்த வாழ்க்கைத் தரத்திற்குத் உடனடி தீர்வு காண வேண்டும். குறிப்பாக அவர்களில் பெரும்பாலோர் முறைசாரா துறையில் பணிபுரிவதால், வேலைப் பாதுகாப்பு குறைவாகவும், தொழிலாளர் சுரண்டல் அதிகமாகவும் உள்ளது. இந்த பிரச்சினை ஒன்றுக்கு மேற்பட்ட தலைமுறைகளை பாதிக்கும் என அஞ்சப்படுகின்றது.

நமது பாடசாலை மாணவர்களின் நலனுக்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த நமது நாட்டின் எதிர்காலத்திற்காகவும், இந்த பிரச்சினையை திறம்பட மற்றும் உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. 

எனவே, பாடசாலை மாணவர்களின் குடும்பப் பொருளாதாரம் குறித்து ஆய்வு செய்து, அவர்களின் கல்வியைப் பாதிக்கும் பொருளாதாரப் பிரச்னைகள் என்ன, எந்த வகையில் பாதிக்கின்றன என்பதைக் கண்டறிய அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க பாடசாலை அல்லது தேசிய அளவிலான குறுங்கால மற்றும் நீண்டகால திட்டங்கள் தொடங்கப்பட வேண்டும், மேலும் பின்தங்கிய குடும்பங்களின் பாடசாலைக் குழந்தைகளுக்கு ஆதரவளிக்க ஒரு ஆதரவு அமைப்பு நிறுவப்பட வேண்டும். தேவைப்படும் குழந்தைகளுக்கு நிலையான அல்லது சிறப்பு உதவித்தொகை திட்டத்தை நிறுவுவது போன்ற பாடசாலை அளவிலான அமைப்பைக் கொண்டிருப்பது போன்ற எளிமையானதாகவும் இருக்கலாம். மேலும், பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களினால் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குடும்பப் பொருளாதாரத்தின் மீது பாடசாலை மாணவர்கள் எதிர்கொள்ளும் மனநலம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தாமதமின்றி உரிய நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் இலங்கையில் அதிகமான பாடசாலை இடைநிற்றலை தடுக்க முடியும். 


0 comments:

Post a Comment