ADS 468x60

30 August 2022

கடினமான சூழலிலும் பரீட்சைகளில் தோற்றிய மாணவர்களின் மனத் தைரியம்!

கடந்த பரீட்சை முடிவுகள், நாட்டின் எதிர்காலம் குறித்து மிகவும் நம்பிக்கையான ஒரு சமிக்ஞையை வெளியிடும் அதிஷ;டம் எங்களுக்கு கிடைத்துள்ளது. எமது எதிர்காலம் நம் குழந்தைகள். குழந்தைகளுக்குக் கொடுக்கக்கூடிய மற்றும் கொடுக்க வேண்டிய மிக மதிப்புமிக்க சொத்து கல்வி என்பதனை நாம் அறிவோம். ஒரு சமுகத்தின் அறிவு என்பது அதன் மூலதனம். ஒரு நாட்டின் வளர்ச்சி, செழிப்பு மற்றும் எதிர்காலத்திற்கான மிக முக்கியமான காரணியாக தேசிய கல்வி அறியப்படுகிறது. கல்வியின் முன்னெடுப்பு தோல்வியுற்றால், எதிர்கால இலக்குகளை அடைவது கடினம். கல்வியின் இடையூறில்லாத செயற்பாடுகள் வெற்றிகரமாக இருந்தால், எதிர்கால இலக்குகளை அடைவது எளிது.

இம்முறை உயர்தர தேர்வு முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டன. மிகவும் கடினமான மற்றும் சவாலான காலகட்டத்திலும், பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகளில் 62.9 வீதம் பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர். நமது தலைமுறை குழந்தைகள் தங்கள் கடமைகளையும் பொறுப்புகளையும் முழுமையாக புரிந்து கொண்டு அர்ப்பணிப்புடன் கற்றல் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது. குழந்தைகள் இந்த முடிவை வழக்கத்தை விட மிகவும் கடினமான சூழலில் பதிவு செய்துள்ளனர். அவர்களின் உறுதியும் அர்ப்பணிப்பும் மூத்த சமுதாயத்தால் கவனிக்கப்பட்டு மதிக்கப்பட வேண்டும். தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அரசபாடசாலைக் கல்வியை மீட்டெடுத்து, பெரும் சிரமங்களுக்கு மத்தியில் மாணவர்களுக்கான பரீட்சைகள் நடத்தப்பட்டன. கோவிட் உலக தொற்றுநோய் காரணமாக பாடசாலைகள் நீண்ட காலமாக மூடப்பட வேண்டியிருந்தது. இதற்கு தீர்வாகப் பயன்படுத்தப்பட்ட ஒன்லைன் கல்வி நாடு முழுவதும் உண்மையில் 100 சதவீதம் வெற்றிபெறவில்லை. அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் போக்குவரத்து இடையூறுகள் காரணமாக பாடசாலைகள் மீண்டும் மீண்டும் மூடப்பட்டன. பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டத்தை முடிக்க பல்வேறு உத்திகளைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. தேர்வுகள் தாமதமாக நடத்தப்பட்டாலும் விடைத்தாள்களை திருத்துவது கேள்விக்குறியாக இருந்தது. எரிபொருள் பிரச்சினை காரணமாக கல்வியில் பல நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் கல்வி அமைச்சும் பரீட்சை திணைக்களமும் மேற்கொண்ட பெரும் முயற்சியின் பலனாக தேசிய மட்டப் பரீட்சைகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

இலங்கையினைப் பொறுத்தமட்டில் கல்வியில் அரசாங்கத்தின் ஆர்வமும் முன்னுரிமையும் எப்போதும் முக்கியம் வாய்ந்தது. சில வளர்ந்த நாடுகள் கோவிட் தொற்றுநோய்களின் போது கூட பாதுகாப்பான அமைப்புகளின் கீழ் பாடசாலைகளை நடத்தின. எமது இலங்கையும் எப்போதும் கல்விக்கு முன்னுரிமை வழங்கும் ஒரு நாடாகும். கோவிட் காலத்தில் கூட, பாடசாலைகளை அவ்வப்போது நடத்தவும், பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டத்தை முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுவரை, ஐந்து நாட்களும் பாடசாலைகளை அரசு நடத்த முடிந்தது. இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி, கடந்த கோவிட் தொற்றுநோய்களின் போது, நூற்று தொண்ணூற்று ஏழு பில்லியன் மாணவர்கள் உலகில் கல்வியை இழந்துள்ளனர். அவர்களின் எதிர்கால இலக்குகள், திட்டங்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் சிதைக்கப்பட்டுள்ளன. இது எதிர்கால உலகம் எதிர்கொள்ளும் ஒரு தீவிர சமூகப் பிரச்சனையாகும்.

பாடசாலைப் பரீட்சைகள் ஒரு குழந்தையின் வாழ்வின் மைல்கற்களாக கருதப்படலாம். நம் நாட்டில் ஐந்தாம் ஆண்டுப் புலமைப்பரிசில் பரீட்சை, ஜி.சி.ஓ.எல் மற்றும் ஜி.சி.ஏ.எல் தேர்வுகள் தனித்துவமானது. இளங்கலைப் பட்டப்படிப்பு படிப்பது, தொழில்முறைக் கல்விக்கு விண்ணப்பிப்பது, வேலைக்கு விண்ணப்பிப்பது எனப் பல விடயங்கள்; இந்தத் தேர்வு முடிவுகளின்படி முடிவு செய்யப்படும். இது மிகவும் போட்டித் தன்மைவாய்ந்த தேர்வுகள் மற்றும் குழந்தையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு முக்கிய திருப்புமுனையாகவும் பார்க்கப்படுகின்றது. இத்தேர்வுகள் தொடர்பாக கடந்த காலங்களில் தீவிரமான சமூக உரையாடல் இடம்பெற்றிருந்த போதிலும், பரீட்சைகளை நடத்துவதற்கு அரசாங்கம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வெற்றிபெற்றுள்ளதனை பாராட்டியாகணும்.

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நாட்டின் கடுமையான யதார்த்தத்துடன் ஒப்பிடும் போது ஒரு சாதனையாகவே கருத முடியும். ஏனைய வருடங்களின் பெறுபேறுகளுடன் ஒப்பிடும் போது ஒட்டுமொத்த பெறுபேறுகள் சற்று சரிவைக் காட்டினாலும், நாட்டின் நெருக்கடியான சூழ்நிலையைக் கேட்கும் போது ஒட்டுமொத்த முடிவுகள் முன்னோக்கியே காணப்படுகின்றன. 2,72,682 பேர் தேர்வெழுதினர், அவர்களில் 1,71,497 பேர் பல்கலைக்கழக நுழைவுக்கு தகுதி பெற்றுள்ளனர். இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். குழந்தைகளின் அர்ப்பணிப்பும் உறுதியும் அதிகம் என்பதுதான் இதில் காட்டும் முக்கியமான விடயம். சவால்களை அச்சமின்றி எதிர்கொள்ளும் மாணவர்களின் சமூகமாக நமது வருங்கால சந்ததி மாறியிருப்பது உண்மையிலேயே முன்னோக்கிய செயற்பாடாகும்.

ஒரு நாட்டில் தேசிய கல்விக்கு இரண்டு முக்கிய நோக்கங்கள் உள்ளன. முதலாவது: அரசுக்குத் தேவையான தொழில் வல்லுநர்கள், புத்திஜீவிகள்; மற்றும் வடிவமைப்பாளர்களை உருவாக்குதல். இரண்டாவது: நல்ல சமூக குடிமக்களை உருவாக்குதல். இந்த இரண்டு காரணிகளையும் நிறைவேற்ற, அரசாங்கம் முறையான தேசிய கல்வி முறையை பராமரிக்க வேண்டும். நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள போதிலும், அரசாங்கம் கல்வியை மீட்டெடுக்க முன்வரவேண்டும். அதற்கு ஆட்சியாளர்கள் ஒத்துழைக்கவேண்டும்;. எனவே இன்று நாட்டின் மாணவர் சமூகமும் சவால்களை வெல்லும் குழுவாக மாறியுள்ளது மகிழ்சியைத் தருகின்றது.

0 comments:

Post a Comment