ADS 468x60

01 August 2022

அரசியல் அமைப்பில் இருக்கும் இரண்டு சாத்தியமான தீர்வுகள்.

தலைக்குமேலே வெள்ளம் போனால் சாண் என்ன முழம் என்ன! ஆகவே இருந்த ஒரே ஒரு நம்பிக்கையும் மெதுமெதுவாகக் குறையத் துவங்கியுள்ளது. அதே நேரம் நம் நாடு பல நெருக்கடிக்குள் சிக்குண்டு சின்னாபின்னமாகியுள்ளது. ஆகவே இந்த நாட்டிற்கு இந்தத் தருணத்தில் தேவைப்படுவது, கட்சிகள், தனிநபர்கள் என வேறு வேறு குழுக்களாகப் பிரிந்து நிற்காமல் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து இந்த நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும். இந்த நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் பிரதிநிதிகளால் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். தினேஷ் குணவர்தன பிரதமரானார். பொது மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இப்போது அமைச்சரவை உருவாகி வருகின்றது. இந்த நிலையில், இப்போது செய்ய வேண்டியது, நாடு விழுந்துள்ள பொருளாதாரப் படுகுழியில் இருந்து விரைவாக மீள்வதற்கு உடனடியாக வழிவகை செய்வதுதான். இது தொடர்பில் சர்வகட்சி அரசாங்கத்திற்கான பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. 

அந்த நிலையில், தற்போதைய நெருக்கடிக்கு இரண்டு சாத்தியமான தீர்வுகள் உள்ளன. ஒன்று; தற்போதுள்ள நாடாளுமன்றத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் மத்தியில் கட்சிக் குழுக்கள் எதுவாக இருந்தாலும் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து தற்காலிக ஆட்சியை அமைக்க வேண்டும். மற்றைய தீர்வு அரசாங்கத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு வழி செய்யலாம். தற்போதுள்ள ஜனநாயக கட்டமைப்பிற்குள் செயல்படுத்தப்படக்கூடிய இரண்டு முறைகளும் இவைதான். இந்த இரண்டு முறைகளிலும் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் கலைக்கப்பட வேண்டும். அதற்கான உரிய அதிகாரம் இன்னும் ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டு இல்லை.

இன்னும் சில மாதங்களில் ஜனாதிபதியிடம் அதற்கான அதிகாரம் வழங்கப்படும். அதற்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் சம்மதம் தெரிவிக்கப்பட வேண்டும். இல்லையெனில், பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இந்த அரசியலமைப்புச் சிக்கல்களைத் தீர்ப்பது உண்மையில் எளிதல்ல. இவ்வாறானதொரு பின்னணியில், அனைத்துக் கட்சி ஆட்சிக்கான களத்தை அமைப்பதே இப்போது இலகுவான பணியாகும். எனவே இத்தருணத்தில் செய்யக்கூடியது பொதுத் தேர்தல் அல்லது பாராளுமன்ற தராதர அரசாங்கத்திற்கு பொருத்தமான சூழலை உருவாக்குவதேயாகும். இந்நாட்டு ஜனாதிபதியின் முன்மொழிவும் அதுதான். 

அனைத்துக் கட்சி அரசு என்பது பலகட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டணி அரசு. அத்தகைய அரசாங்கத்தில் எதிர்க்கட்சி என்பது கிடையாது. இந்த நிலையில் ஆளுங்கட்சியின் சில பொறுப்புகளை எதிர்க்கட்சியும் நிறைவேற்ற முடியும். நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் இவ்வேளையில் இவ்வாறான நல்லிணக்க உடன்படிக்கை ஏற்பட்டால் அதில் தவறில்லை. நாடு துயரத்தில் இருக்கும் இவ்வேளையில் ஒருவரையொருவர் பழிகூறுவதை அல்லது பொறுப்புக்கூறுவதனை விடுத்து அனைவரும் இணக்கமாக செயற்பட்டால் இருக்கின்ற அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது இலகுவாகும்.

1953 ஆம் ஆண்டு ஹர்த்தாலுக்குப் பிறகு, இந்த ஆண்டுதான் முதல் முறையாக இந்த நாட்டில் ஒரு வலுவான மக்கள் எதிர்ப்பு எழுந்துள்ளது. இப்போராட்டத்தின் மூலம் தற்போதைய அரசியல் மாற்றம் தேவைப்பட்டது. அரச அதிகாரத்தை வைத்திருக்கும் கட்சி இந்த நேரத்தில் நாட்டின் பொதுச் சட்டத்தைப் பாதுகாக்கக் கடமைப்பட்டிருக்க வேண்டும், ஆனால் போராட்டத்தின் தோற்றுப் போன தொடக்கப்புள்ளிகளைத் தேடி காட்டு வேட்டையைத் தொடங்குவது பொருத்தமற்றது. மக்கள் போராட்டத்தில் இரு தரப்பிலும் சில தவறுகள் நடக்கலாம். இதில் சட்டமும் நீதியும் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது தெளிவாகிறது. ஆனால் போராளிகளை விரட்டி விரட்டி கைது செய்து நெருக்கடியை நீடிப்பதன் மூலம் இந்த நாட்டை அமைதியான சூழலுக்கு கொண்டு வரும் பணி தாமதமாகும். அனைத்துக் கட்சி அரசு, இதுபோன்ற பிரச்னைகளை அமைதியான முறையில் தீர்க்க விரும்புகிறது.

இன்று 69 லட்சம் பேரின் விருப்பத்தின் பேரில் நாட்டிற்கு தலைமைதாங்கி ஆட்சி நடாத்திய காலம் இப்போது முடிந்துவிட்டது. ஆனால், மக்களின் விருப்பப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் இன்னும் முடிவடையவில்லை. அதுபற்றி எந்த விவாதமும் இன்னும் இடம்பெறவில்லை. நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி உள்ளூராட்சி உறுப்பினர்களின் பதவிக் காலம் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. அந்த வேலையினால் மக்களுக்கு நல்ல பயன்கள் ஏதும் இல்லையென்றாலும். ஆனால் இந்த நாட்டின் தற்போதைய அரசியலமைப்பு இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளுக்கு இடம் கொடுத்துள்ளதே அதில்தான் தவறு இருக்கிறது.

எத்தகைய தவறுகள் இருந்தாலும் இந்த நாட்டின் அரசியலமைப்பிற்கு துரோகம் செய்ய முடியாது. நாட்டுக்கு ஏற்ற புதிய அரசியலமைப்பை உருவாக்குதல் வேண்டும். அதற்கும் சர்வகட்சி ஆட்சி பெரும் வாய்ப்பாக அமையும். அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டால், புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெறுவது கடினம் அல்ல. இந்த பொன்னான வாய்ப்பை தவறவிடாமல் இருப்பது பொறுப்புள்ள அனைத்து தரப்பினரின் கடமையாகும்.

அனைத்துக் கட்சி ஆட்சியைப் பற்றிப் பேசி இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு இதுவே சிறந்த சந்தர்ப்பமாகும். இந்தத் தருணத்தை வீணாகக் கடந்து செல்ல விடாமல், வீழ்ந்துள்ள இழிநிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க அனைத்துத் தரப்பினரும் கைகோர்க்க வேண்டிய தருணம் இது. விடிந்துள்ள இந்த பொன்னான தருணம் வரலாற்றில் தனித்துவமான தருணம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.


0 comments:

Post a Comment