ADS 468x60

06 August 2022

நாம் உணவினை உற்பத்தி செய்தே ஆகணும்: நாலில் ஒருவர் ஒரு நேர உணவினை இழந்துள்ளோம்!

நாம் இந்தநாட்டில் இப்போது பன்முக நெருக்கடியினை எதிர்கொண்டு இருக்கிறோம். இது பார்ப்பதற்கு ஒரு பொருளாதார நெருக்கடி போல் தெரிகிறது, ஆனால் அதனுடன் தொடர்புடைய அரசியல் நெருக்கடி உள்ளது. தொற்றுநோயுடன், பல ஆண்டுகளாக நடந்து வரும் சுகாதார நெருக்கடியும், அதிகம் விவாதிக்கப்படாத சுற்றுச்சூழல் நெருக்கடியும் உள்ளது. சமூக கட்டமைப்புகளிலும் ஒரு நெருக்கடி உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப, சமூகத்தின் கீழ்மட்டத்தில் சில உடைவுகள் நடக்கின்றன. இந்த விவகாரங்களைப் போலவே, கவனம் செலுத்த வேண்டிய மற்றொரு முக்கியமான பகுதி, நம் நாட்டின் வெளிநாட்டு உறவுகள் துறையில் உருவாக்கப்பட்ட நெருக்கடியாகும். ஸ்லாவோய் ஷிசெக் தனது 'எபிடெமிக்' புத்தகத்தில் இந்த நிலைமையை 'முழுமையான புயல்' என்று விவரித்துள்ளார். பல சிறிய புயல்களால் உருவான ஒரு பெரிய புயல் என்று பொருள். இலங்கையில் நாமும் இப்போது அத்தகைய முழுமையான புயலை எதிர்கொண்டுள்ளோம்.

ஆகவே இதனை இலங்கை அதன் வராலாற்றில் சுதந்திரத்தின் பின்னர் எதிர்கொண்டுள்ள மோசமான பொருளாதாரநெருக்கடியானது தீவிரமான உணவு நெருக்கடியாக மாறிவருகின்றது என உலக உணவு திட்டத்தின் WFP இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அப்துல் ரஹீம் சித்தீக் தெரிவித்துள்ளார்.

இவற்றுக்கு மேலாக, WFP மற்றும் FAO சமீபத்தில் இணைந்து முன்னெடுத்த ஆய்வுகளின் போது 30 வீதமான மக்கள் உணவுப்பாதுகாப்பற்ற நிலையில் உள்ளமை தெரியவந்தது.

இவற்றின் காரணமாக, இலங்கை இன்று என்றுமில்லாதவாறு 90 வீத உணவு பணவீக்கத்தை எட்டியுள்ளது, இதனால் இன்று அரிசி போன்ற போதிய போசாக்கு மிக்க உணவுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதுடன், அவற்றை பெறுவதற்கு கூட முடியாத நிலையில் மில்லியன் கணக்கான குடும்பங்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். இக்கொடிய நிலை உருவானதால், மக்கள் தாங்கள் நாளாந்தம் உண்ணும் உணவின் அளவை குறைத்து வருகின்றனர். அந்தவகையில்,  எமது நாட்டில் நாலில் ஒருவர் ஒருநேர உணவை தவிர்க்கின்றனர் என WFP தெரிவித்துள்ளது.

உரம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு, அதனால் குறைவடையும் விளைச்சல்கள், உக்ரைன் யுத்தம், இவற்றால் தொடர்சியாக அதிகரிக்கும் விலைகள், முக்கிய இறக்குமதிக்கான அரசாங்கத்திடம் போதிய நிதியின்மை போன்றன இவற்றிற்கு நேரடியான காரணங்களாக இருக்கின்றன.

இவையனைத்தும் சேர்ந்து இன்றய பொருளாதாரத்தினை வீழ்ச்சியடைய வைத்துவிட்டது. இந்த நிலையில் நாட்டிற்கு மிக அத்தியாவசியமான பொருட்களை இறக்குமதி செய்தவற்கான நிதி நாட்டிடம் கிடையாது போயுள்ளது. இவ்வாறான நிலையில், எமக்கு உதவ உலக உணவுதிட்டத்திற்கும் ஏனைய மனிதாபிமான அமைப்புகளிற்கும் நிதிஉதவி வழங்கும் சமூகத்தின் ஆதரவு மேலும் தேவை என்பதனை நாம் நினைக்கின்றோம்;.

இவ்வாறான நெருக்கடியை தற்காலிகமாக சமாளிக்க, மக்கள் தங்களின் பெறுமதி மிக்க சேமிப்புகளை உயிர்வாழ்வதற்காக பயன்படுத்துகின்றனர், இருக்கும் நகை மற்றும் பொருட்களைவ விற்றுவருகின்றனர், மற்றும் கடன்பெற்றும் வருகின்றனர்.

இன்னும் பல்வேறு காரணிகள் இலங்கையின் உணவு நெருக்கடியை உருவாக்குகின்றன. அதில் விவசாயத்தை மேலும் பேண்தகுதன்மை மிக்கதாக மாற்றுவதற்காக அரசாங்கம் கடந்த வருடம் இரசாயன உரங்களை தடை செய்தது, ஆனால் அந்த நடவடிக்கை விளைச்சலை பெருமளவிற்கு குறைத்துள்ளது, இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள போதிலும் - உரங்களால் உண்டான பாதிப்பின் தாக்கம் இன்னும் தொடர்கின்றது.

இவையனைத்துக்கும் மேலாக உக்ரைன் யுத்தத்தின் எதிர்விளைவுகளையும் இலங்கை எதிர்கொள்கின்றது, உக்ரைன் யுத்தம் முக்கிய தானிய ஏற்றுமதியை பாதித்;துள்ளதுடன் உலக உணவு, எரிபொருள் போன்றவற்றின் விலையை அதிகரித்துள்ளதுடன் இலங்கைக்கு அதிகளவு சுற்றுலாப்பயணிகளை வழங்கிய இந்த இரண்டு முக்கிய சந்தைகளையும் பாதித்துள்ளது.

இது இலங்கைக்கான டொலரை பெறுவதில் எதிர்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதுடன் இறககுமதிசெய்வதற்கான இலங்கையின் திறiனையும் மோசமாக பாதித்துள்ளது. இதற்கு அப்பால் எரிபொருள் இறக்குமதிக்கான கட்டுப்பாட்டை தொடர்ந்து எரிபொருள் இல்லாததால் 200,000 மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.

இவையெல்லாம் சேர்ந்து, வறுமை, பசி, வன்முறை, அராஜகம் மற்றும் உலகளாவிய அவநம்பிக்கை ஆகியவற்றின் எதிர்காலத்தை நாம் எதிர்கொள்கிறோம். அத்தகைய எதிர்காலத்தின் ஆபத்தைத் தவிர்க்க, கட்சி உயரடுக்கினரின் ஒருமித்த கருத்துக்கு அப்பாற்பட்ட பரந்த சமூக ஒருமித்த கருத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

எனவே இந்த நிலையில், அரசியல் சாக்குப்போக்குச் சொல்லி நாட்களைக் கடத்தி உடனடி தலையீடுகள் இல்லாவிட்டால் இலங்கையின் எதிர்காலம் சூனியமாக மாறிவிடும். எனவே இங்குள்ள 22 மில்லியன் மக்களிற்கு உணவு வழங்க கூடிய அளவிற்கு எமது நாடு எல்லாவிதத்திலும் வளர்ச்சியடையவேண்டும்.

அதுபோல் சிறிய விவசாயிகளிற்கு நாங்கள் ஆதரவை வழங்கவேண்டும், அதற்காக் உலக உணவு திட்டம்  போன்ற சர்வதேச அமைப்புகள் தலையிட்டு இலங்கையின் நலிவடைந்த நிலையில் உள்ள மக்களிற்கு உதவியை வழங்குவற்கான முன்னாயத்தங்களை அரசு மக்கள் பிரதிநிதிகள் இணைந்து ஏற்படுத்தவேண்டும்.

பொருளாதார மீட்சியின் சுமையை பணக்காரர்கள் மீது சுமத்தி ஏழைகளை காப்பாற்ற வரி உச்சவரம்பை உயர்த்த வேண்டும். மேலும், 'வற்' போன்ற மறைமுக வரிகளை வசூலிக்காமல் ஏழை மக்களை காப்பாற்ற அவற்றை குறைக்கவேண்டும். அதுபோல் மறைமுக வரியினை அதிக வருமானம் பெறும் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டவேண்டும். அரசாங்கமானது, உற்பத்தியாளர் கூட்டுறவு மற்றும் நுகர்வோர் கூட்டுறவு ஆகிய இரண்டையும் ஊக்குவிக்கவேண்டும், இந்த மக்கள் கூட்டுறவு இயக்கம் திறமையாகவும், சுயாதீனமாகவும் மற்றும் ஊழலின்றியும் இயங்குவதை உறுதி செய்யவேண்டும். இன்று, இடைத்தரகர்கள் மற்றும் வணிகர்களுக்கு இடையேயான நேரடி தொடர்பு காரணமாக உற்பத்தியாளர்களின்; மகத்தான லாபம் இழக்கப்படுகிறது. கூடுதலாக சந்தைப்படுத்தல் மற்றும் உணவு கட்டுப்பாடு துறைகள் செயல்படுத்தப்பட்டு உற்பத்தியாளர் மற்றும் வாடிக்கையாளரை இணைக்க மொபைல் சேவையை வழங்கலாம். இவற்றின் காரணமாக உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது, அதனால் உணவுப் பஞ்சம் கணிசமாகக் குறைவடையலாம் அதனால் இறக்குமதிக்குச் செலவிடும் டொலரை மீதப்படுத்தலாம், மீதப்படுத்திய பணத்தினை வைத்து கையிருப்பினை அதிகரிக்கலாம்.


0 comments:

Post a Comment