ADS 468x60

18 October 2022

சமத்துவமற்ற வரிக்கொள்கையில் வாடப்போகும் பொதுமக்கள்

மாத வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் ஒவ்வொருவரும் இனி வருமான வரி செலுத்த வேண்டும். தனிநபர் வருமான வரி வரம்புகளை அரசு திருத்தியமைத்துள்ளதால், இந்த புதிய வருமான வரி வரம்பு அக்டோபர் 1ம் தேதி முதல் அமூலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உரிய திருத்தத்தின்படி, ஆண்டுக்கு 30 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுபவர் வருமான வரி செலுத்தும் வரம்பை 12 லட்சம் ரூபாயாகக் குறைப்பதன் மூலம், இனிமேல் சுறா மீன்கள் மட்டுமின்றி, நெத்தலிகளும் வரி வலையில் சிக்கிவிடும் அபாயம் காத்திருக்கின்றது.

பெரிய சுறாக்களால் மாட்டுவதனால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நெத்தலி குறித்து கவலையடைகின்றோம். வருமானத்தைப் பொறுத்தமட்டில், வியாபாரிகள் என்ற வகைக்குள் வருபவர்கள் இன்றைய காலத்தில் கடினமான வாழ்க்கை வாழ்கின்றனர். ரொட்டி ஒன்று 200 ரூபாவுக்குப் விற்கும் இந்த நேரத்தில் ஒரு இலட்சம் ரூபா வருமானத்திற்கு 6 வீத வரி விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விதிக்கப்பட்ட தொகை 2500 ரூபாய். 

183,333 ஆக அதிகரிக்கும் போது 7500 ரூபாயும், 225,000 ரூபாயை எட்டும்போது 15,000 ரூபாயும் கழிக்கப்படும். வருமான வரிச் சட்டத் திருத்தத்தால் மாத ஊதியத்தில் வாழும் மக்கள் பாதிக்கப்படும் பொருளாதாரச் சிக்கல்கள் குறித்து ஒரு பார்வையில் யோசனை கூறவே இந்தச் சிறு புள்ளி விவரக் குறிப்பை மேற்கோள் காட்டியுள்ளேன்;.

மாத வருமானம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் மக்கள் அதிக வருமான வரி செலுத்துவதில் சிக்கல் இல்லை. அது அப்படியே நடக்க வேண்டும். ஆனால் மாதம் 1 லட்சத்து 41 சம்பாதிப்பவருக்கு 2500 ரூபாயை இழப்பது நிச்சயம் அவர்களால் தாங்கிக் கொள்ள கடினமாக இருக்கும். பல குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தை நடத்துவதற்கு மாத வருமானம் உள்ள ஒருவர், இரண்டரை லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் போது 25,000 ரூபாய் வெட்டுவதும் குடும்பத்தையே பெரும் குழப்பத்தில் ஆழ்த்திவிடும்.

திடீர் என அனைத்து செலவுகளும் அதிகரித்து, வருமானம் அதிகரிக்கப்படாத நிலையில் கூடுதல் வருமானம் கூட துண்டிக்கப்படும் இந்த நேரத்தில், பெறும் சம்பளத்தில் இருந்து ஆயிரக்கணக்கான ரூபாய்களை வெட்டுவது நாட்டின் பெரும்பான்மையினருக்கு பெரும் பிரச்சினையாக இருக்கும்.

மாத வருமானத்திலிருந்து வரி எடுப்பது தவறு என்று நாங்கள் கூறவில்லை. ஏனெனில் வரி இல்லாமல் ஒரு நாடு முன்னேற முடியாது. ஆனால் வரி செலுத்துவோர் தாங்கும் அளவில் வரிவிதிப்பு இருக்க வேண்டும்.

மாத வருமானம் பெறும் நபர் நேரடி வரியாக வருமான வரி செலுத்துவதாகக் கருதப்படுகிறார். எனவே, நேரடி வரிகளின் விலக்கு அவர்களின் வேறு வரி செலுத்துதலை நிறுத்தப்போவதல்ல. உருளைக்கிழங்கு முதல் உலுவாரிசி வரை அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் வாங்குவதற்கு மற்றொரு மறைமுக வரி செலுத்த வேண்டும். மின்சாரம், எரிபொருள், மருத்துவம், உள்கட்டமைப்பு எனப் பணத்தைச் செலவழிக்கும் போது அனைவரும் மறைமுக வரிகளால் பாதிக்கப்படுகின்றனர். முடிவில்லா இந்த தொடர் வரிகளுக்கு மத்தியில், வெறும் ஒன்றரை லட்சம் சம்பாதிப்பவர் மீது இன்னொரு நேரடி வரி விதிப்பது நியாயமற்றதாகத் தெரிகிறது.

இப்பொழுதெல்லாம் எவ்வளவு மாத வருமானம் கிடைத்தாலும், அதை வைத்துக்கொண்டு சமாளிப்பது கூட மிகவும் கடினம். இருந்த போதிலும், வரிச்சுமையின் அழுத்தம் மேலும் அதிகரிப்பது ஒட்டுமொத்த சமூகத்திலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். இது பின்னர் ஒரு வலுவான சமூக மற்றும் பொருளாதார அசௌகரியமாக உருவாக வாய்ப்புள்ளது.

நாட்டில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியினால் இன்னும் இன்னும் மக்கள் இவ்வாறான சிரமங்களை அனுபவிக்க நேரிடும் என நாட்டின் புத்திஜீவிகள் பலர் தெரிவிக்கின்றனர். ஆனால் நாட்டின் பொருளாதார அழுத்தத்தின் அனைத்து சுமைகளையும் சுமக்கும் பொது மக்கள் மட்டுமே சிரமங்களை அனுபவிக்க வேண்டுமா? நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அமைச்சரின் உறுதிமொழிகள் நடந்தேறுகின்றனவா? இந்தக் கேள்விகளுக்கும் விடை காண வேண்டும்.

வருமான வரி வரம்பை இவ்வளவு பெரிய அளவில் கூட்டுவது நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்கு பெரும் பிரச்சனையைக் கொண்டுவருவதனை தவிர்க்க முடியாதது. நாட்டின் நலனுக்காக மக்கள் அனைத்தையும் அமைதியாக சகித்துக் கொள்வார்கள் என்ற எண்ணம் நாட்டின் தலைவர்களுக்கு இருக்குமானால் அது மாயை என்பதை சுட்டிக்காட்ட வேண்டும்.

மக்களின் வரி செலுத்தும் திறனுக்கு ஏற்ப அரசானது வரி விதிக்க வேண்டும். ஏழை அல்லது நடுத்தர வர்க்கத்தினரை ஒப்பிடும் போது செல்வந்தர் அதிக வரி செலுத்தும் வகையில் இருக்க வேண்டும்.

வரி வீதம் அல்லது செலுத்தும் காலம் குறித்து நிச்சயமற்ற தன்மை இல்லாத வகையில் அரசு வரியினை விதிக்க வேண்டும். அரசு தன் போக்கிற்கு வரிகளை விதித்தால் அது மக்களின் செலுத்தும் திறன் மற்றும் வேலை செய்யும் திறனையும் பாதிக்கும்.

நேர்முக வரிகளின் தீமைகள்

1. உற்பத்தித்திறன் பாதிக்கப்படுகிறது

பல்வேறு பொருளாதார வல்லுனர்கள் கருத்துப்படி நேர்முக வரி உற்பத்தித்திறனை பாதிக்கிறது. குடிமக்கள் அதிக வரித் தொகையை செலுத்த வேண்டியதால், வருமானம் அதிகம் ஈட்ட வேண்டும் என்ற விருப்பம் இல்லாமல் உள்ளனர்.

2. வரி ஏய்த்தல்

நேர்முக வரியின் சுமை அதிகமாக இருப்பதால் வரி செலுத்துபவர்கள் வரியை ஏய்ப்பதற்கு முயல்கின்றனர். இது கறுப்புப் பணம் உருவாவதற்கு வாய்ப்பாவதால் அது பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மறைமுக வரி

மறைமுக வரி எனப்படுவது பொருட்களையோ அல்லது பணிகளையோ வாங்கும் நபர் மீது விதிக்கப்படுகிற வரியாகும் மேலும் இது அரசுக்கு மறைமுகமாக செலுத்தப்படுகிறது. இவ்வரிச்சுமை எளிதாக மற்றொரு நபர் மீது மாற்ற முடியும். ஏழை அல்லது பணக்காரர் என யாராக இருந்தாலும் அந்நபர்கள் மீது சமமாக சுமத்தப்படும்.

எனவே அதிக வருமானம் ஈட்டும் குறிப்பிட்ட சில பாரிய வர்த்தகர்கள் அரசியல் அதிகார உறவுகளின் ஊடாக வருமான வரி செலுத்துவதைத் தவிர்ப்பது இந்த நாட்டில் தெரிந்த இரகசியம். இவ்வாறு கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்யும் சிலர் தண்டிக்கப்படாத நிலையில், ஆயிரக்கணக்கான குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு வரி விதிப்பது நம் நாட்டின் வரிக் கொள்கையில் சமத்துவம் இல்லை என்பதையே காட்டுகிறது.


0 comments:

Post a Comment