ADS 468x60

30 October 2022

இன்று போதைப் பாவனையில் இருந்து மாணவ சமுகத்தைக் காப்பாற்றும் பொறுப்பு பாடசாலை சமுகத்திடமே உள்ளது

ஒரு நாடு இப்படியெல்லாம் வரக்கூடாது என்பதற்கு உதாரணமாக நமது நாடும் இருப்பது கவலை. இன்று சில குழந்தைகள் மற்றும் சில இளம் பெண்கள் எதிர்கொள்ளும் துரதிஷ;டமான நிகழ்வுகளை நாம் திரும்பிப் பார்க்கும்போது, நமது மூத்த சமூகம் அவர்கள் மீது குறைவான கவனம் செலுத்துகிறது என்று தோன்றுகிறது. 

நமது குழந்தைகளுக்கு சிறந்தவற்றை செய்துகொடுப்போம், என்று தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், குழந்தைகளின் உள ஆரோக்கியத்திற்குத் தேவையான காரணிகள் நிறைவேறவில்லை. இளைஞர்களே முதுகெலும்பு, எதிர்காலம் என்று பெற்றோர்கள் பெருமை பேசுகிறார்கள், ஆனால் அவர்களை வழிநடத்த பெற்றோருக்கு எந்த திட்டமும் பெரும்பாலானோரிடம் இருப்பதாகத் தெரியவில்லை. ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டால், இது ஒரு சமூக நெருக்கடியின் முன்னோடியாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும். இதற்கான தீர்வுகளை வழங்குவது அரசாங்கத்தின் மாத்திரமல்ல, மூத்தோர் சமூகத்தினதும் கடமை என சுட்டிக்காட்டப்பட வேண்டும்.

இன்று குழந்தைகள் வேகமாக போதைக்கு அடிமையாகி வருவதாக சமூகத்தில் பலர் பேச்சு நிலவுகிறது. இதேவேளை, எய்ட்ஸ் தொடர்பான கணக்கெடுப்பில் பல பாடசாலை மாணவர்களும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது ஒரு தீவிரமான நிலை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். போதைப்பொருள் மற்றும் பாலியல் செயல்பாடுகளுக்கு இடையே தொடர்பு உள்ளது. போதைக்கு அடிமையானவர்கள் குழுக்களாக பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. எமது மூத்த சமுதாயம் அதில் கவனம் செலுத்தவில்லை என்பதை மீண்டும் கூற வேண்டும். கண்கெட்ட பின்னர் சூரியனைத் துதிப்பதில் அர்த்தமில்லை. ஆனால் நாம் ஒவ்வொரு நாளும் அதையே செய்கிறோம்;.

அண்மைய தகவலின்படி சில அழகு நிலையங்கள் மூலம் பாடசாலை மாணவிகள் போதைக்கு அடிமையாகி வருவது தெரியவந்துள்ளது. அபாயகரமான போதைப்பொருள் கட்டுப்பாட்டுக்கான தேசிய சபையின் உத்தியோகத்தர் திருமதி நீலங்கா இது பற்றிய தகவல்களைத் தெரிவிக்கிறார். குருநாகல் மாவட்டத்தில் இந்த நிலைமையை நன்றாகவே காணமுடியும் என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் போதைப்பொருள் பாவனையில் ஏற்பட்டுள்ள புதிய போக்காக இதனைச் சுட்டிக்காட்டலாம். அழகு நிலையங்கள் பிரபலமான இடங்களாக உள்ளன. அவற்றைப் பராமரிக்க எந்த சட்டத் தடையும் இல்லை என்பது சிந்திக்கவேண்டும்.

இது தொடர்பில் மேலதிகத் தகவல்களை வழங்கும் திருமதி நீலங்கா, குழந்தைகளின் வாழ்க்கைத் திறனை மேம்படுத்துவதற்கும் அவர்களின் புரிதலை மேம்படுத்துவதற்கும் மூத்தோர் சமூகத்திடம் போதுமான திட்டம் இல்லை என்று கூறுகிறார். சில விஷயங்களை நிராகரித்து, சிலவற்றை ஏற்றுக்கொள்ளும் புரிதலை குழந்தைக்கு ஏற்படுத்த வேண்டும். குழந்தை கெட்ட விடயங்களை வேண்டாம் என்று சொல்ல வேண்டும். ஆனால் பெரும்பாலும் அது நடப்பதில்லை. அதனால்தான் குழந்தைகள் இவ்வாறான ஆபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர். அழகு நிலையத்திற்குச் சென்றாலும் போதைப்பொருளை மறுக்கும் தைரியத்தை ஒரு குழந்தை வளர்க்க வேண்டும். அது தானாகவே அநடதக் குழந்தைக்கு தோன்றாது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

தேவையற்ற கெட்ட விடயங்களை வேண்டாம் என்று சொல்லவும், நிராகரிக்கவும் ஒரு ஆளுமை குழந்தையில் உருவாக வேண்டும். கெட்ட விடயங்களை நிராகரிப்பது தனது நண்பர்களால் தூற்றப்பட்டாலும், அதைத் தாங்கிக் கொள்ளவும், பிறழ்ந்த சமூகத்திலிருந்து விலகி இருக்கவும் குழந்தைக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். இது குடும்பத்தில் இருந்து தொடங்க வேண்டும். ஆனால் குடும்பத்தின் நிலை சரியில்லை என்றால் குழந்தைகளின் மனநிலையம் சரியில்லாமற் போய்விடும். மனநல கோளாறுகளை எதிர்கொள்ளும் ஒரு குழந்தை விரைவில் போதைப்பொருளுக்கு அடிமையாகிவிடுவது தவிர்க்க முடியாதது. அதனால் ஆறுதல் தேடுவது குழந்தையின் பழக்கமாகிறது. குழந்தையின் முதன்மையான இடம் வீட்டின் நல்ல சூழல் அவ்வாறு இல்லாமற் போனால் அவர்கள் போதைக்கு அடிமையாவதில் ஆச்சரியமில்லை.

இன்றய எமது நாட்டின் குழந்தைகளின் அவலங்களைத் திரும்பிப் பார்க்கும்போது, அதற்கு பெற்றோர்களே நேரடியாகக் காரணம் என்று தோன்றுகிறது. சில வீடுகளில் குழந்தைக்குத் தேவையான ஆறுதலான சூழல் இல்லை. சில அப்பாக்கள் குடித்துவிட்டு வீட்டுக்குள் புகுந்து தாய்மார்களுடன் சண்டையிடுகிறார்கள். வேறு சில குடும்பங்களில் தாய்மார்கள் தகாத உறவுகளில் ஈடுபடுகின்றனர். அவர்களின் உலகம் வேறு. அத்தகையவர்களுக்கு குழந்தைகளைக் கருத்தில் கொள்ள நேரமிருப்பதில்லை. அத்தகைய சூழலில் வாழும் குழந்தை, வசதிக்காக எதையும் செய்யத் தூண்டும். போதைக்கு அடிமையான பல குழந்தைகளின் வீட்டுச் சூழல் நன்றாக அமையப்பெறாமல் இருக்கின்றது. எனவே வீட்டில் அமைதியான நல்ல சூழலை உருவாக்குவது பெற்றோரின் கடமை என்பதே எனது கருத்தாகும்.

நாட்டில் ஒன்பதாயிரத்துக்கும் மேலான அரச பாடசாலைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த பாடசாலைகளில் விழிப்புணர்வு கருத்தரங்குகளை; குறைந்தது 50 வீதமாவது நடத்த முடிந்தால் பாடசாலைக் குழந்தைகளை போதை அரக்கனின் பிடியில் இருந்து காப்பாற்ற நல்ல அடித்தளம் அமைக்கப்படும். எனவே இதற்கான முழுப்பொறுப்பும் இப்போதைக்கு பாடசாலை நிருவாகத்தினரிடம் இருப்பது வெளிப்படை உண்மை.


0 comments:

Post a Comment