ADS 468x60

23 October 2022

அரசியலமைப்பு ஒரு நாட்டின் ஆட்சி மற்றும் நிர்வாகக் கட்டமைப்பின் அவுட்லைன்

நாம் காலாகாலமாக பல அரசியல்வாதிகளை எம்போன்ற மூன்றாம் உலகநாடுகளில் இருந்து பலம்வாய்ந்த நாடுகளையும், அமைப்புக்களையும் பயமில்லாமல் எதிர்த்து அரசியல் செய்து வந்துள்ளமையை நாம் அவதானித்துள்ளோம். இதனால் பல இழப்புக்களை நாம் அவர்களின் உலகமயமாக்கல் கொள்ளையில் இருந்து சந்தித்து வருகின்றோம்.

ஜனநாயகம், சமத்துவம், நல்லிணக்கம் மற்றும் மனித சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு சக்திவாய்ந்த அரசுகளும் சர்வதேச அமைப்புகளும் மூன்றாம் உலக நாடுகளுக்கு தொடர்ந்து ஆலோசனைகளை வழங்குகின்றன. இது ஒரு அறிவுறுத்தல் மட்டுமல்ல, ஒரு வகையான எச்சரிக்கையும் கூட. ஜனநாயகத்தை இழந்த சர்வாதிகார அரசாங்கங்களைக் கொண்ட ஏழை நாடுகள் சர்வதேச ஆதரவைப் பெறுவதில்லை. இந்த நாடுகள் ஆட்சிக் கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்து ஆதாரங்களுடன் உறுதிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் பலம்வாய்ந்த நாடுகளும் அவர்களைத் தலைமை தாங்கும் சர்வதேச நிறுவனங்களும் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, ஐக்கிய நாடுகள் சபை பல்வேறு சாசனங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஜனநாயகம் மற்றும் மனித சுதந்திரத்திற்கு வழி வகுத்துள்ளது.

அரசியலமைப்பு ஒரு நாட்டின் ஆட்சி மற்றும் நிர்வாகக் கட்டமைப்பின் அவுட்லைன் என்று கருதலாம். அரசியலமைப்பு என்பது ஒரு நாட்டின் அடிப்படைச் சட்டமாகும், அதன் படியே நாட்டின் ஆட்சி நடைபெறுகிறது. 1978ஆம் ஆண்டு இலங்கையில் அமுலில் உள்ள திரு.ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் அரசியலமைப்பு, அரச தலைவருக்கு வரம்பற்ற அதிகாரம் வழங்கும் ஆவணமாக விமர்சிக்கப்படுகிறது. ஜயவர்தன அவர்கள் அந்த அரசியலமைப்பை உருவாக்குவதற்கு பிரான்சின் முன்னாள் ஆட்சியாளர் டி கோலின் அரசியலமைப்பிலிருந்து உதாரணங்களை எடுத்துள்ளார் என்பது அனைவரும் அறிந்த உண்மை. டி கோல் ஒரு இராணுவ வீரர் மற்றும் வரம்பற்ற சக்தி இல்லாமல் ஒரு நாடு முன்னேற முடியாது என்பது அவரது நம்பிக்கை. இந்த எண்ணம் இன்றும் சிலரிடம் உள்ளது எமது நாட்டில்.

சர்வதேச சமூகம் எங்களின் ஆட்சியை பாராட்டுவது இல்லை. அதேபோன்று உள்நாட்டிலேயே அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும் என்ற கருத்து வலுவாக உள்ளது. இது மீண்டும் மீண்டும் அரசியல் அரங்கில் வந்து இதுவரை இருபத்தி இரண்டு திருத்தங்கள் அரசியலமைப்பில் முன்மொழியப்பட்டுள்ளன. இருபத்தியோராம் திருத்தத்தை சமீபத்திய திருத்தமாகக் குறிப்பிடலாம். இது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இரண்டாவது வாசிப்பின் போதும், மூன்றாம் வாசிப்பின் போதும், சட்டமூலத்திற்கு எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்படவில்லை. இது ஒரு வரலாற்று தருணம் என்றும் வாதிடலாம். நாட்டில் அரசியல் மாற்றம் தேவை என்பதை இது காட்டுகிறது.

இருபத்தியோராம் திருத்தத்தின் அடிப்படை மாற்றம் ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவதும் பாராளுமன்றம் அல்லது அரசியலமைப்பு சபையை பலப்படுத்துவதுமாகும். நாட்டின் அரச தலைவர் மற்றும் நாடாளுமன்றம் மாகாணசபை ஆட்சியில் பொதுவான உடன்பாடுகளை எட்ட வேண்டும். இந்த மாற்றத்திற்கு அமைய, தன்னிச்சையான முடிவுகளை எடுக்கும் வாய்ப்பை அரச தலைவர் இழக்கிறார். அரச நிறுவனங்களுக்கு உயர் அதிகாரிகளை நியமிப்பதற்கும் நீக்குவதற்கும் ஜனாதிபதிக்கு பிரத்தியேக உரிமை இருந்தாலும் மேற்படி சட்டம் அமுல்படுத்தப்படுவதன் மூலம் அந்த நிலைமை இல்லாது போகும். நூட்டின் ஆட்சிக்காக ஒரு சட்டமன்றம் நிறுவப்பட்டு அதில் சுதந்திரமான அறிவுஜீவிகள் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. இது ஆட்சியில் தெளிவான மாற்றம் எனப் பார்க்கப்படுகின்றது.

இந்த திருத்தத்தின் கீழ் இரட்டை குடியுரிமை பிரச்சினை ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினையாக மாறியது. இரட்டைக் குடியுரிமை விவகாரத்தில் மசோதா தோற்கடிக்கப்படலாம் என்று ஒருவர் கருதினார். ஆனால் அது நடக்கவில்லை. இரட்டைக் குடியுரிமை கொண்ட ஒருவர், நாடாளுமன்றத்திற்கு மக்கள் பிரதிநிதியாகச் செல்லும் தகுதியைப் பெற்றுள்ளார். அதேபோல், அத்தகைய நபர் அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகிக்க முடியாது. இதைத்தான் பொதுமக்கள் எதிர்பார்த்தனர் என்றே கூற வேண்டும். மூன்றில் இரண்டு பங்கு மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம், பல தேசிய பிரச்சனைகளை தீர்க்க நமது அரசியல் கட்சிகள் இணைந்து செயல்பட முடியும் என்பதை காட்டுகிறது.

இந்தச் சட்டங்களின் திருத்தம் குறித்து அறிஞர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் தெழிவினை வழங்கியுள்ளனர். இன்று ஓரளவு ஒருமித்த கருத்தின்படி, மேம்பட்ட ஜனநாயகத்தை நோக்கி இலங்கை தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. இப்படியே தொடருமானால் அது உலகில் அங்கீகரிக்கப்படும். மற்றொரு கருத்தின்படி, இந்த திருத்தமானது வெளிநாட்டு உதவி, வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் எந்த விதமான பொருளாதார ஆதரவையும் பற்றிய ஒரு நம்பிக்கையான பின்னணியை உருவாக்கும். சர்வதேச நாணய நிதியம் அல்லது ஐ நா ச நிறுவனம் இருபத்தி ஓராவது திருத்தத்தில் கவனம் செலுத்தியது என்பது இரகசியமல்ல. 

21வது திருத்தச் சட்டத்துடன் நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளும் முடிந்துவிடாது. சரியான மாற்றத்திற்கு வழி வகுக்கவும் இல்லை. ஆனால் இது ஒரு வெற்றிகரமான தொடக்கமாகும். இனிமேலாவது இன்னும் நம்பிக்கையான முறையில் ஆட்சியை தொடர முடியும். நாட்டு மக்கள் கோரும் ஒரு மாற்றத்தின் தொடக்க விழாவாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம்.


0 comments:

Post a Comment