ADS 468x60

09 October 2022

ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நாம் நிராகரிக்கலாமா?

இன்று ஆர்பாட்டங்கள், எதிர்புகளை தெரிவித்து இலங்கைக்குள் இருந்துகொண்டு ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நாம் நிராகரித்தாலும், அவற்றை முழுமையாக புறக்கணிக்க முடியாது. குறிப்பாக சர்வதேச ஆதரவை எதிர்பார்க்கும் இலங்கைக்கு அதனை எப்படியும் செய்ய முடியாது. அத்துடன்  இன்று சர்வதேசத்தின் நம்பிக்கையைப் பெறுவதுடன், சக்தி வாய்ந்த வல்லரசுகளுடன் நட்புறவுடன் செயற்பட வேண்டியது அவசியமாகும். இங்கே, பலம்கொண்ட நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் கொள்கைகள் மற்றும் நோக்கங்களுக்கு நாம் அதிக கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயம். இல்லை என்றால் சர்வதேச சமூகத்தின் முன் அவமானப்படுத்தப்பட்டு விமர்சிக்கப்படுவோம் மற்றும் புறக்கணிக்கப்படுவோம்.

அதன் ஒரு பகுதியாக இம்முறை இலங்கைக்கான தேர்தலில் பெரும் தோல்வியையும் பின்னடைவையும் சந்தித்துள்ளோம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். அது இந்த நெருக்கடியான சூழலில் தற்போது பெரும் இழப்பு என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். அவற்றை மறைப்பதில் அர்த்தமில்லை. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இலங்கை தொடர்பான தீர்மானங்களுக்கு ஆதரவாக இருபது நாடுகள் வாக்களித்தன. ஏழு நாடுகள் மட்டுமே எதிராக வாக்களித்தன. ஆதில் இருபது பிற நாடுகள் வாக்களிக்கவில்லை. ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளன. இது கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

ஜப்பான் இலங்கையின் நீண்டகால நட்பு நாடாகும். ஜப்பானின் பொருளாதார ஆதரவு தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு இன்றியமையாத காரணியாக உள்ளது. அடுத்து வளர்ந்துவரும் அண்மை நாடான பூர்வீக இந்தியாவின் முடிவுகள் மற்றும் செல்வாக்கு இன்னும் நமக்கு முக்கியமானதாக கருதப்பட வேண்டும். ஜெனிவா தீர்மானங்களுக்கு எதிராக இலங்கை சார்பாக நிற்க இந்த இரண்டு அரசுகளும் தயக்கம் காட்டியது ஏன் என்பதை மீண்டும் மீண்டும் சிந்திக்க வேண்டியுள்ளது. இதற்கு முன்பும் இந்தியாவும் ஜப்பானும் இதேபோன்ற பதிலைக் காட்டி நமக்கு பாடம் கற்பித்துள்ளன. உண்மையில் இங்கு இரண்டு விடயங்கள் நடக்க வேண்டும். ஒன்று பொறுப்புக்கூறலின் நேர்மறையான திட்டத்தை செயல்படுத்துவது. மற்றையது எமது வேலைத்திட்டங்களை சர்வதேச சமூகத்திற்கு தெரிவிப்பது.

இலங்கை இந்தத்தருணத்தில் குறைந்தது பத்து அல்லது பன்னிரெண்டு நாடுகளின் ஆதரவைப் பெற்றிருக்க வேண்டும். இலங்கை இப்போதிருந்தோ அல்லது இது சம்பந்தமாகவோ செயற்பட்டால் எதிர்காலத்தில் ஓரளவு நிவாரணம் பெறலாம். ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் நாடுகளின் எண்ணிக்கை நாற்பத்தேழு என்பதாலும் அதில் பாதியளவுக்கு ஒத்துழைக்கும் வகையில் நாட்டின் வேலைத்திட்டங்கள் மாற்றப்பட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதற்று மாறாக ஜெனிவா தீர்மானங்களை கடுமையாக நிராகரிப்பதால் நாட்டுக்கு நல்லது எதுவும் நடக்காது.

சர்வதேச ஒத்துழைப்பு இந்தச் சந்தர்பத்தில் அதிகம் தேவைப்படுவதை வீரகேசரி பின்வருமாறு கோடிட்டுக்காட்டுகின்றது. அதாவது 'நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில், ஐ.நாவின் கடுமையான பிடிக்குள் சிக்கியிருந்த இலங்கையை மீட்பதற்கு, அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவும், அவரது அரசாங்கமும், கலப்பு விசாரணைப் பொறிமுறைக்கு இணக்கம் தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

பொதுநலவாய நீதிபதிகள், சட்டவாளர்கள், வழக்குத்தொடுநர்களை உள்ளடக்கிய கலப்பு விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்கி, போர்க்கால மீறல்களை விசாரிக்க, அப்போது ஜெனிவா கூட்டத்தொடரில் அரசாங்கம் இணக்கம் தெரிவித்தது.

ஆனால், அந்தப் பொறிமுறையை செயற்படுத்துவதாக வாக்குறுதி கொடுத்து விட்டு வந்த இலங்கை குழு, கொழும்பில் கலப்பு விசாரணைப் பொறிமுறை என்பது அரசியலமைப்புக்கு முரணானது என்றுகுத்துக்கரணம் அடித்தது.

எவ்வாறாயினும், நல்லாட்சி அரசாங்கம் இழுத்தடித்து இழுத்தடித்து, தனது ஆட்சிக்காலப் பகுதிக்குள் ஐ.நாவின் அழுத்தங்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல், காலத்தை ஓட்டி விட்டது.

பின்னர் வந்த கோட்டா அரசாங்கம், ஜெனிவாவில் அந்த தீர்மானத்தை அமுல்படுத்த முடியாதென அறிவித்தது. இப்போது, ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம், வெளியகப் பொறிமுறைகளுக்கு இணங்க மாட்டோம் என்றும், அரசியலமைப்புக்கு விரோதமான எதையும் செய்யமாட்டோம் என்றும் கூறுகிறது.

அதாவது, 2015இல் ஜெனிவாவில் ஒப்புக்கொண்ட நிலைப்பாட்டுக்கு இது நேர்மாறானது.'

அதாவது ஆட்சிகள் மாறுகின்ற போது இது சார்ந்த கொள்கைகள் மாறுகின்றன. பொறுப்புக்கூறலை ஒரு தரப்பு கடப்பாடாக கருதினால் மற்றொரு தரப்பு காட்டிக் கொடுப்பாக கருதுகிறது. 

ஜெனிவா பிரேரணைகளில் பத்தொன்பது விடயங்கள் உள்ளடங்கி இருப்பதுடன் சில புதிய பொருளாதார தரவுகளும் சேர்க்கப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. அரசு எடுக்கும் பொருளாதார முடிவுகளாலும் வறுமை பெருகியுள்ளது என்பது ஆணையத்தின் வாதங்களில் ஒன்று. எனவே, வறுமை மேலோங்காமல் தடுக்கும் வகையில், ஏழை குடும்பங்களுக்கு பொருளாதார நிவாரணம் வழங்க அரசும் தலையிட வேண்டும். உண்மையில், அது இப்போது ஓரளவு நடக்க ஆரம்பித்துள்ளது. இவை அனைத்திற்கும் விடையளிக்கும் வகையில் புதிய பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது மனித உரிமைகளை கையாள்வதற்கென தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் அப்படி நிறுவுவதற்கு எந்தத் தடையும் இல்லை.

மனித உரிமைகளை கையாளும் போது நேர்மையாக செயல்பட்டு சர்வதேச நம்பிக்கையை வென்றெடுப்பது மிகவும் முக்கியம். இதற்கு, மீண்டும் ஒரு ஆய்வுக்கு செல்ல வேண்டியது அவசியம். ஜப்பானும் இந்தியாவும் எங்களுக்காக நிற்கவில்லை என்பது புரிகிறது. எனவே இதில் இருந்து விலக நேர்மையான செயற்பாடுகளை, முன்னெடுப்புக்களை அரசு காட்டவேண்டும், அது எந்தக்கட்சியாக இருந்தாலும் பரவாயில்லை என்பதே பொதுவான வேண்டுகோள்.


0 comments:

Post a Comment