இந்தப் பிரச்சினையின் மையத்தில் இரண்டு முக்கியமான அம்சங்கள் உள்ளன. ஒன்று, தண்டனை பெற்ற கைதிகள் அல்லது விசாரணையில் உள்ள சந்தேகநபர்கள் கூட மனித உரிமைகளைப் பெற்றுள்ளனர் என்பதும், அவர்களின் மீள்வாழ்விற்கான வாய்ப்புகளை உருவாக்குவதும். மற்றொன்று, சிறைச்சாலைகளுக்குள் பாதாள உலகக் கும்பல்கள் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி மற்ற கைதிகளையும் சிறை அதிகாரிகளையும் அச்சுறுத்துவதும், சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதும் ஆகும்.
சிறையில் அடைக்கப்பட்ட ஒவ்வொரு கைதிக்கும் மனித உரிமைகள் உண்டு என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. உணவு, மருத்துவம், தங்குமிடம், மத மற்றும் கலாசார உரிமைகள் போன்ற அடிப்படைத் தேவைகள் அவர்களுக்கு உண்டு. இவை சர்வதேச மனித உரிமைச் சட்டங்களின் கீழும், இலங்கையின் அரசியலமைப்பின் கீழும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
எனினும், சிலர் கைதிகளின் மனித உரிமைகள் பற்றிய பேச்சை முன்னெடுத்து, சிறைக்குள் குற்றவாளிகள் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் செயல்படுவதை நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர். சிறைச் சூழலில் கைதிகள் எதிர்கொள்ளும் சவால்களைச் சுட்டிக்காட்டி, அவர்களின் குற்றச் செயல்களுக்கான பொறுப்பைக் குறைத்துக் காட்ட முயற்சிப்பதும் உண்டு. சில செய்தி ஊடகங்கள் இந்தச் சம்பவங்களை அறிக்கையிடும் போது, பாதாள உலகக் குற்றவாளிகளை நாயகர்களாகச் சித்தரிக்கும் போக்கையும் காணமுடிகிறது.
இந்தக் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் விதமாக, கைதிகளின் மனித உரிமைகள் என்பது அவர்கள் சட்டத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பால் செயல்படுவதற்கான அங்கீகாரம் அல்ல என்பதை தெளிவுபடுத்த வேண்டும். சிறைக்குள் வன்முறையில் ஈடுபடுவதோ, பிற கைதிகளை அச்சுறுத்துவதோ அல்லது சிறை அதிகாரிகளைத் தாக்குவதோ ஒரு மனித உரிமை அல்ல. மாறாக, அது கடுமையான சட்ட மீறலாகும்.
சிறைச்சாலைகள் தண்டனை பெற்ற கைதிகள் தமது குற்ற உணர்வுகளை உணர்ந்து, நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ளும் இடங்களாக இருக்க வேண்டும். ஆனால், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் சிறைச் சுவர்களுக்குள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி, தங்களுக்கு விரோதமான குழுக்களை எதிர்த்துப் போரிடுவதற்கான ஒரு களமாகச் சிறைகளை மாற்றும்போது, இந்த நோக்கம் முற்றிலும் தோல்வியடைகிறது.
இதுபோன்ற சூழலில், பாதுகாப்புப் படையினரின் தலையீடு பற்றிய கேள்வியும் எழுகின்றது. சில விமர்சகர்கள், சிறைக்குள் பாதுகாப்புப் படையினர் நுழைந்து நடவடிக்கை எடுப்பது அதிகப்படியான வன்முறைக்கு வழிவகுக்கும் என்றும், கைதிகளின் உரிமைகளை மீறுவதாகவும் கூறுகின்றனர். ஆனால், இந்தக் கருத்து முழுமையான உண்மையைப் பிரதிபலிக்கவில்லை.
ஒரு சிறையில் இத்தகைய திட்டமிட்ட மோதல் ஏற்படும்போது, அதைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் எடுக்கும் நடவடிக்கைகளை எந்த வகையிலும் தவறாகப் புரிந்துகொள்ள முடியாது. சிறைப் பாதுகாப்பு என்பது நாட்டின் தேசியப் பாதுகாப்பின் ஒரு நீட்சியாகும். பாதுகாப்புப் படையினர் உடனடியாகத் தலையிடாமல் இருந்திருந்தால், இந்த வன்முறைகள் இன்னும் பரவலாகி அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருக்கும். எனவே, சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட அவர்கள் எடுக்கும் முடிவுகள், பொதுமக்களின் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட அவசியமான மற்றும் நியாயமான நடவடிக்கைகளாகவே பார்க்கப்பட வேண்டும்.
பாதாள உலகக் கும்பல்களின் வன்முறைக்கு முன்னால் பாதுகாப்புப் படையினர் மௌனமாக இருக்கவோ அல்லது செயலற்ற அணுகுமுறையைக் கையாளவோ முடியாது. அத்தகைய செயலற்ற தன்மை, குற்றவாளிகளின் செயல்களுக்கு ஊக்குவிப்பாக அமைந்து, எதிர்காலத்தில் இன்னும் பெரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண, பல மட்டங்களில் நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. முதலாவதாக, சிறைகளுக்குள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் தகவல் தொடர்பு இணைப்புகளை உடைக்க மேம்பட்ட உளவு மற்றும் தொழில்நுட்ப வசதிகள் தேவைப்படுகின்றன. குற்றவாளிகள் சிறைக்குள் இருந்தே தங்கள் கும்பல்களை இயக்கவும், புதிய குற்றங்களைத் திட்டமிடவும், வெளியில் உள்ள உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ளவும் தடை செய்யப்பட வேண்டும். வெளி உலகத்தோடு தொடர்பை ஏற்படுத்தும் கைபேசிகள், இணைய சாதனங்கள் மற்றும் பிற தொடர்பு வழிமுறைகளை முற்றிலுமாக ஒழிக்க புதிய தொழில்நுட்பத் தீர்வுகள் அமுல்படுத்தப்படல் அவசியம்.
இரண்டாவதாக, சிறை ஊழியர்களின் திறன் மேம்பாடு மற்றும் நேர்மையான நிர்வாகம் உறுதி செய்யப்பட வேண்டும். ஊழியர்களுக்கு தொடர் பயிற்சி, மன அழுத்த முகாமைத்துவம் மற்றும் நெறிமுறைக் கல்வி ஆகியவற்றை வலுப்படுத்தல் வேண்டும். கைதிகள் மற்றும் ஊழியர்களிடையே ஏற்படும் முறைகேடுகளை உடனடியாக அறிக்கை செய்வதற்கான பொறிமுறைகளை உருவாக்குவதும், அந்த அறிக்கைகள் சார்பான நடவடிக்கைகளை விரைவாக எடுப்பதும் முக்கியமாகும்.
மூன்றாவதாக, கைதிகளுக்கான மறுவாழ்வு மற்றும் மீள்வாழ்வுத் திட்டங்களை மேம்படுத்துதல் அவசியம். தொழிற்பயிற்சி, கல்வி, உளவியல் ஆலோசனை மற்றும் அடிமையாதல் நிவாரணத் திட்டங்கள் போன்றவற்றை விரிவுபடுத்துவதன் மூலம், கைதிகள் தமது வாழ்க்கையை சீரமைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். சீர்திருத்தத்திற்கான உண்மையான வாய்ப்புகள் கைதிகளுக்கு வழங்கப்படும்போது, அவர்கள் பாதாள உலக நடவடிக்கைகளில் இருந்து விலகி நேர்மறையான செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது.
நான்காவதாக, சிறை ஒழுங்குமுறையில் தனியார் துறை மற்றும் சமூக அமைப்புகளின் பங்களிப்பு ஊக்குவிக்கப்பட வேண்டும். கைதிகளுக்கான சட்ட உதவி, வேலைவாய்ப்பு ஆதரவு மற்றும் சமூக மறுவாழ்வு திட்டங்களில் இவர்கள் ஈடுபடுத்தப்படலாம். இது சிறை நிர்வாகத்தின் சுமையைக் குறைக்கும் அதே வேளையில், கைதிகள் சமூகத்துடனான தொடர்புகளைப் பேணி, விடுதலைக்குப் பின்னர் சமூகத்தில் மீள இணைவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
ஐந்தாவதாக, சிறைகளில் சிறப்பு பாதுகாப்பு அலகுகள் நிறுவப்படல் வேண்டும். உயர் அபாய கைதிகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்களுக்கான தனிப் பிரிவுகள், அவர்கள் மற்ற கைதிகளை பாதிக்காத வகையில் வடிவமைக்கப்பட வேண்டும். இந்தப் பிரிவுகளில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளும், கட்டுப்படுத்தப்பட்ட இயக்கங்களும் இருக்க வேண்டும்.
ஆறாவதாக, சமூக விழிப்புணர்வு மற்றும் கல்வியும் இந்தப் பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வின் ஒரு பகுதியாகும். போதைப்பொருள் உள்ளிட்ட குற்றங்களின் தீய விளைவுகள் பற்றி இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும்.
இதற்கிடையில், பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகள் குறித்தும் தெளிவான வழிகாட்டுதல் மற்றும் பொறுப்புக்கூறும் முறைமை இருக்க வேண்டும். ஒவ்வொரு தலையீட்டிலும், விகிதாசாரத்தன்மை கொண்ட பலத்தைப் பயன்படுத்துவது, குறைந்தபட்ச சேதத்தை உறுதி செய்வது மற்றும் கைதிகளின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பது ஆகியவை உறுதி செய்யப்படல் அவசியம். எவ்வாறாயினும், சட்டத்தை தங்கள் கையில் எடுக்கும் குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படையினருக்கு முழு ஆதரவு வழங்கப்படுதல் வேண்டும்.
குற்றவாளிகளின் மனித உரிமைகள் பற்றிய பேச்சு, சிறைக்குள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்பாடுகளுக்கான திரையாக மாறிவிடக் கூடாது. கைதிகளும் மனிதர்களே என்ற முழக்கம், அவர்களை முழுமையாக மதித்தல் மற்றும் மீள்வாழ்விற்கான வாய்ப்புகளை வழங்குதல் ஆகியவற்றைக் குறிக்கிறது. அதே சமயம், சட்டத்தின் மீதான மதிப்பு, ஒழுக்கம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வதும் இதன் ஒரு பகுதியாகும். இந்த இரண்டையும் ஒன்றோடொன்று முரண்படாத வகையில், சீரான முறையில் செயல்படுத்துவதே நாகரிக சமூகத்தின் அடையாளமாகும்.
நீர்கொழும்பு சம்பவம், முன்னர் வெலிக்கடை மற்றும் மஹாரா சிறைகளில் இடம்பெற்ற வன்முறைகளின் தொடர்ச்சியாகும். இந்த ஒவ்வொரு சம்பவத்திற்கும் பின்னர் நியமிக்கப்பட்ட குழுக்களின் பரிந்துரைகள் திறம்படச் செயல்படுத்தப்பட்டதா என்பதை நாம் மறுபரிசீலனை செய்து, அந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் தோல்வி ஏற்பட்ட இடங்களை அடையாளம் காண வேண்டும். ஒரு துயரச் சம்பவத்திற்குப் பிறகு நியமிக்கப்படும் குழுக்களின் அறிக்கைகள் மட்டும் போதாது, அவற்றை செயல்படுத்தும் பொறிமுறையும் வலுப்படுத்தப்படல் வேண்டும். விசாரணைக் குழுக்களில் நிபுணத்துவம் வாய்ந்த சட்ட அதிகாரிகள், உளவியலாளர்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் சிறை நிர்வாக நிபுணர்கள் இடம்பெறுதல் வேண்டும்.
இறுதியாக, இந்தப் பிரச்சினைக்கான தீர்வு அரசாங்கத்தின் ஒரு துறைக்கு மட்டும் உரியதல்ல. நீதித்துறை, சிறைத் திணைக்களம், பொலிஸ், சுகாதாரத் துறை, கல்வித் துறை, சமூக சேவைத் துறை மற்றும் ஊடகங்கள் என அனைத்துத் தரப்பினரின் ஒருங்கிணைந்த முயற்சி இதற்குத் தேவைப்படுகின்றது. சிறைக்குள் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவது, ஒட்டுமொத்த நாட்டின் சட்ட ஒழுங்கு முறைமையில் பொதுமக்களின் நம்பிக்கையைப் பேணுவதற்கு மிக முக்கியமானதாகும்.
சிறைகளில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் தங்கள் ஆதிக்கத்தை விரிவுபடுத்த அனுமதிப்பது, உண்மையாகவே சீர்திருத்தப்பட வேண்டிய மற்ற கைதிகளின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கிறது. மேலும், இது சிறை ஊழியர்களின் பாதுகாப்பையும் பாதிக்கின்றது. எனவே, சட்ட அமைப்பின் ஒவ்வொரு அங்கமும், இந்தச் சவாலை தீவிரமாக எடுத்துக்கொண்டு உடனடி மற்றும் நீண்டகாலத் தீர்வுகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
எந்த ஒரு நாகரிக சமூகமும் தனது சிறைச்சாலைகளை வன்முறை மற்றும் பயத்தின் இடங்களாக மாற்ற அனுமதிக்காது. சிறைச்சாலைகள் மறுவாழ்வின், சீர்திருத்தத்தின் மற்றும் மனிதநேயத்தின் இடங்களாக இருக்க வேண்டும். கைதிகளின் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒழிப்பதும் இன்றைய அவசியமான தேவையாகும்.
"கைதிகளும் மனிதர்களே" என்ற உன்னதமான கொள்கையை உண்மையாகப் பாதுகாக்க, சிறைச்சாலைகளுக்குள் சட்டத்தின் முழுமையான ஆட்சி நிலவுவதை உறுதி செய்ய வேண்டும். அனைவரின் உயிரும், உரிமைகளும், கண்ணியமும் பாதுகாக்கப்படுகின்ற ஒரு சிறைச் சூழலை உருவாக்குவதே, நாம் ஒரு நாகரிக சமூகம் என்பதற்கான சிறந்த அத்தாட்சியாகும்.


0 comments:
Post a Comment