அந்தக் காலங்களில் பொழுதுபோக்கு என்றால் விளையாட்டு மாத்திரமே இருந்தது. எமது ஊரின் மேற்குப் புறத்தில் ஒரு பெரிய குளம் இருக்கிறது. அது எமது அழகான சொத்தாக இருந்தது. எங்கும் பச்சைப்புல்வெளி அங்கு ஒரு குப்பைகூடக் கிடையாது. உருண்டு பிரண்டு விளையாடி மகிழ்வோம். பாடசாலை விட்டதும் அந்த குளம்தான் தஞ்சம். இப்போதுபோல அந்தக்காலத்தில் நிறைய பிரத்தியேக வகுப்புக்களும் இருந்ததில்லை. இன்று அந்தக் குளத்தையே நாசமாக்கி விட்டார்கள். அதைப்பற்றி நான் சொல்ல வரவில்லை.
நாங்கள் சின்னவர்கள் என்பதனால் ரவுண்டப்புக்களில் பிடிபடவில்லை. ஆனால் கேம்களில் சென்றி அடிக்க களியேற்றுவதற்கு எங்களையெல்லாம் செட்டிபாளையம் கேம்புக்கு புடிச்சிக்கொண்டு போய் வேலைவாங்கியது ஞாபகம் வருகின்றது. ஆக இவர்கள் பிடித்துக்கொண்டு போகும் அளவுக்கு நாங்கள் பெரியவர்கள் இல்லை. அதனால் கொஞ்சம் பயம் இல்லாமல் விளையாடினோம்.
எங்களுடைய காலத்தில், உச்சிப்பந்து (பேய்பந்து), உத்திக்கம்பு, கன்னை, ஒளிச்சுப்புடிச்சி, நொண்டி, கள்ளன் பொலிஸ் மற்றும் கிரிக்கெட் இவைதான் எமக்குத் தெரிந்த விளையாட்டுக்கள். இதில் ஆண் பெண் பால் வேறுபாடுகூட கிடையாது. அனைவரும் ஒன்றாகவே விளையாடினோம்.
எப்படியும் ஒரு 50, 100 சிறுவர்கள் இந்தக் குளத்தில் பின்னேரமாகினால் கூடிவிடுவர். கூட்டம் கூட்டமாக வேறு வேறு விளையாட்டுக்களை விளையாடுவர். இங்கு பயிர்த்தோட்டம் செய்கிறவர்கள், மாடுகளை மேய்க்க வருபவர்கள் என பலரும் ஒன்று கூடுவர். அதனால் எல்லாப் பிள்ளைகளுடனும் ஒன்றாக விளையாடும் சந்தர்ப்பம் அமையப் பெற்றிருந்தோம்.
இதில் கிறிக்கெட், அது ஒருவர் வற்றிங் பண்ண, மற்றவர் பந்து எறிய ஏனைவர்கள் பீல்ட்டில் நிப்பாங்க. இப்படித்தான் எமக்குத் தெரியும். அப்படி ஓடி ஆடி திரிந்த காலம் இன்று தலைகீழாக மாறிவிட்டது. பிள்ளைகளுக்கு எக்கச்சக்கமான என்டட்டைமென்ட். ஒரு பிள்ளை தான் மட்டும் விளையாடும் கேம்ஸ், சினிமா என்றெல்லாம் குறுகிவிட்டது குழந்தைகளின் வாழ்க்கை.
ஒரு பிள்ளைக்கும் இன்னொரு பிள்ளைக்கும் உள்ள அன்நியோன்யம் இன்று அறுந்துபோய் பொறாமையும் போட்டியும் நிறைந்து விட்டது. பகிர்து உண்ணுதல், கொடுத்துதவுதல், ஒரு வீட்டில் நல்லது கெட்டது என்றால் ஒன்றாக நின்று உதவுதல் எல்லாம் ஏலத்தில் போய் காசுகொடுத்து கயர் பண்ணும் ஒரு அந்நியப்படுத்தப்பட்ட வாழ்க்கைமுறைக்குள் வளைந்து கிடக்கின்றது எமது சமுகம்.
ஆனால் இன்று ஒரு வேலை தேடி வருபவரிடம் நேர்முகத்தேர்வில் வேலை கொடுப்பவர் ஆங்கிலத்தில் கேட்கின்ற கேள்வி ரீம் வேர்க் (Team work), கோர்டினேசன் (Coordination), செயாரிங் இன்போமேஷன் (Sharing Information) இதெல்லாம் இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா என்றுதான். இவை ஒன்றுமே இன்றய பிள்ளைகளுக்கு பிறக்டிக்கலா என்னெண்டு தெரியாம முளிப்பதனையே காணுகின்றோம். ஆனால் எமக்கு அவை நிறையவே இருக்கின்றது. அதனால்தான் இன்றும் எம்மால் நட்புடன் நாலு நல்ல வேலை செய்ய முடிகின்றது எம்மால்.
ஆக எமது சமுகத்தில் சின்னம்மாக் காரிட மகள் படிச்சா பெரியம்மாக்கு பொறாமை, அண்ணண்ட பிள்ள பரீட்சையில தேறினா தங்கச்சிட குடும்பத்துக்கு கோபம். சொத்து, பணம் என்று அடிபட்டு தனித்தனியே வாழும் ஒரு முழுமூச்சில்லாத மக்களாக மாறி ஏனைய சமுகத்துடன் ஒப்பிடும் போது மிக மிகப் பின்னிற்கும் இனமாக மாறி விட்டது எமது சமுகம். இது எமக்கெல்லாம் வெட்கம் கவலை.
எனவேதான் விளையாட்டுக்கள் பல அனுகூலங்களை எமக்கு அன்று பெற்றுத்தந்தது. அதுவே இன்று வேறுவேறாகப் பிரிந்து வினையாகவும் உருவாகி இருக்கின்றது. ஊருக்கொரு கழகம், ஊருக்கொரு ஆலயம், ஊருக்கொரு சங்கம் என்றிருந்த நிலை மாறி. தெருவுக்குத் தெரு, குடும்பத்துக்குக் குடும்பம் என குறுகிவிட்டது. அதனால் அண்ணன் தம்பி, மாமன் மச்சான் என்றிருந்த மிச்சம்கூட முழுகிப்போச்சி.
நாம் இன்னும் தூரத்தில் இல்லை, அவற்றை மீள் கட்டமைக்கலாம். உருவாக்கலாம். அதற்கு எமக்குள் புரிந்துணர்வை, ஒற்றுமையை வளர்த்துக்கொள்ளுவது மிக மிக முக்கியமானதாகும்.
0 comments:
Post a Comment