ADS 468x60

11 August 2019

தேர்தல் கால வாக்குறுதிகளும் தெருவில் நிற்கும் பட்டதாரிகளும்.

இன்று எந்தச் செய்தித் தலைப்பினை எடுத்தாலும் வேலையில்லாப் பட்டதாரிகள் பற்றியே பேசப்படுகின்றன. இவ்வாறான ஒரு சூழலில், ஊழியச் சந்தையில் (Labour Market) என்ன வகையான வேலைவாய்ப்புக்கள் மற்றும் திறன்கள் தேவைப்படுகின்றன? எவ்வாறு கைநிறைய சம்பளம் கிடைக்கின்றன, அத்துடன் எவ்வாறு தொழில்வாய்ப்புக்கு இன்றய இளைஞர் யுவதிகளை நெறிப்படுத்துவது என்பன போன்றவற்றினை சிந்திக்கவேண்டிய நேரமிது.

அண்மையில் இலங்கை ICT ஏஜென்சி ஒன்றினால் நடாத்தப்பட்ட ஒரு ஆய்வின் முடிவாக 12,000 ஊழியர்கள் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு மேலதிகமாக தேவையாக இருப்பது க்டறியப்பட்டுள்ளது. இத்துறையினர் நல்ல தேர்ந்த பட்டதாரிகளே இவற்றுக்கு எதிர்பார்க்கப்படுகின்றனர். ஆகவேதான் இன்று உள்ள இளைஞர் யுவதிகளை இத்துறைக்கு ஈர்த்தெடுக்க என்ன வழி உள்ளது என சிந்திக்க வேண்டும்.

2018 ஆம் ஆண்டின் ICT கம்பனிகளின் ஆய்வறிக்கை கூறுகின்ற விடயம் இலங்கையில் தகவல் தொழில் நுட்பத்துறை தொழில் வழங்குவதில் முன்னணியில் நிற்கின்ற துறைகளுள் ஒன்றாகும். 2013 ஆம் ஆண்டளவில் வெறும் 500 இத்துறை சார்ந்த ஊழியர்கள் இருந்த துறை இன்று 12,000 தொழிலாளர்கள் தேவைப்படும் அளவுக்கு மிக வேகமாக வளர்ந்துள்ளமையினையே இது காட்டி நிற்கின்றது.

ஆகவே குறுகிய காலத்தினுள் பாரிய மாற்றத்தினை, வளர்ச்சியினை இத்துறை கண்டு வந்துள்ளது. இருப்பினும் இத்துறைக்கு பட்டதாரிகளை உருவாக்குகின்ற உயர் கல்வி நிறுவனங்கள் வெறும் 9,076 பட்டதாரிகளையே இத்துறைக்கு வழங்கக்கூடிய ஒரு நிலை இங்குள்ளமை பாரிய பற்றாக்குறை இடைவெளியினைக் காட்டுகின்றது.

இங்கு எவ்வளவு இத்துறை சார் பட்டதாரிகளையோ அல்லது அதற்கு நிகரான கல்வித்தகமையாளர்களை இங்குள்ள கல்வி நிலையங்கள் உருவாக்குவது என்பதற்கு அப்பால், இத்துறையினர் எதிர்பார்க்கும் திறன்களைக் கொண்டுள்ள மிக பொருத்தமான தகுதிகளை உடையவர்களாக இருக்கிறார்களா உருவாக்கப்படுகின்றனரா? என்பதனை நிச்சயித்துக்கொள்ளுதல் அவசியமாகும்.

இன்னொரு பிரச்சினை அல்லது சவால் என்னவெனில், பல்கலைக்கழகங்கள் தங்களது பாடத்திட்டங்களை தொழிலதிபர்களின் வேண்டுதலுக்கு அமைவாக தயாரித்து அவற்றை வழங்க, ஏனை அரச மற்றும் அரச சார்பற்ற பயிற்சி நிறுவனங்களான மூன்றாம் நிலை மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் பல்கலைக்கழகங்களுக்கு சமாந்தரமாக ஈடுபடமுடியாத நிலை காணப்படுகின்றது. இந்த மதிப்பீடு கூறுகின்ற பரிந்துரையாக, இங்கு இவர்களால் வழங்கப்படும் பாடத்திட்டத்தில் NVQ தராதரம் L5 மற்றும் L6 (டிப்ளோமா, உயர் டிப்ளோமா) அத்துடன் இதில் இருந்து பட்டப்படிப்புக்கான NVQ L7 ஆகியவற்றுக்கு முன்னுரிமை தரப்படவேண்டும். அப்பொழுது இங்கு காணப்படும் தொழிலாளர் பற்றாக்குறைக்கான தீர்வாக இவை இருக்கும்.

இவற்றுடன் ஆங்கில அறிவு, தொடர்பாடல்த்திறன் (Communication), குழுவேலை (Team Work), புதிதாக சிந்தித்தல் போன்ற இன்னோரன்ன மென்னறிவு (Soft Skills) இவர்களிடையே விருத்திசெய்வதனையும் உறுதிப்படுத்த வேண்டும். ஏனெனில் இன்று உலகம் கிராமமாச் சுருங்கி கைக்குள் வந்துவிட்ட நிலையில் நல்ல ஆங்கிலப் புலமை இருப்பின் அவற்றினூடாhக தொடர்பாடலினை மேற்கொண்டு வினைத்திறனான உற்பத்திக்கு உந்துசக்தியாக இருக்கும் என்பது இதன் பொருள்.

ஆக இலங்கை அரசு தேர்தல் காலங்களில் மாத்திரம் வளமைபோல் அரசாங்கத்தில் வேலைதருகின்றோம் என பொய்பேசி ஏமாற்றுவதற்கு மாறாக இவர்களை தொழிற்சந்தைக்கு ஏற்ப தயார்படுத்த வழிசமைக்கணும். அதுபோக அரசாங்கம் நமக்கு ஏதாவது வேலை தரத்தானே வேண்டும் என எண்ணிக்கொண்டு கடைசியில் கண்ணீர்விட்டு காலத்தினைக் கடக்காமல் சந்தைக்கேற்ப பொருளை உற்பத்தி செய்ய நாம் கற்றுக்கொள்ளவேண்டும். இதில் பெற்றோர், தொழில் வழிகாட்டும் ஆசிரியர்கள், ஊடகங்கள் ஆகியோருக்கு இவை பற்றிய விழிப்புணர்வையும், புரிதலையும் இளைஞர்களிடையே ஏற்படுத்தும் தார்மீக கடமையும் உண்டு என்பது மறப்பதற்கில்லை.

0 comments:

Post a Comment