ADS 468x60

04 August 2019

சுற்றுச்சூழல் தூய்மை பற்றி எந்த மதம் எடுத்துரைக்கின்றது?

அனைவருக்கும் தெரியும், நாம் வாழும் இந்த பூமியில், எதிர்கால தலைமுறையும் நலமாக வாழ வேண்டுமெனில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது அவசியம். உலக நாடுகளுக்கு சவாலான பிரச்னையாக, சுற்றுச்சூழல் பாதிப்பு உருவெடுத்துள்ளது. உலகின் வெப்பநிலை உயர்கிறது. மழை குறைகிறது. அன்டார்டிகா, இமயமலை பகுதிகளில் பனிகட்டிகள் உருகுவதால், கடல்மட்டம் உயர்ந்து, தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் எழுந்துள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இவை இன்று அனைவருக்கும் பொதுவாக தெரிந்த விடயம்.

ஆனால் இவற்றையெல்லாம் இன்றுதான் புதிதாய் கண்டுபிடித்து நமக்கு சொல்லுவதுபோல இன்றய தொடர்பு சாதனங்கள் படம்பிடித்து காட்டிவருகின்றன. ஆனால் அது உண்மையல்ல, அவைபற்றி பல ஆண்டுகளுக்கு முன்னமே சொல்லப்பட்டு இருக்கின்றது. இவை இன்று பாடப்புத்தகங்களில் புதிதாக அண்மைக் காலமாகத்தான் சேர்க்கப்பட்டு அவை மாணவச் சமுகங்களிடையே பாரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. சுருங்கக்கூறின் பண்டைய காலத்தில் சுற்றுசூழல் பாதுகாப்பு தார்மீக கடமையாக இருந்ததே தவிர தண்டனை சட்டங்களாக இருக்கவில்லை.

இயற்கைக்கும், மனித இனத்திற்கும் உள்ள தொடர்பை வேத இலக்கியங்கள் கூறியிருக்கின்றன. இயற்கை வளங்களை எதிர்கால சந்ததியினருக்கு அளிக்கும் வகையில் அவற்றை பாதுகாக்க முழுப் பொறுப்பையும் தற்போதைய சந்ததியினர் மேற்கொள்ள வேண்டும். பிரச்சினை என்பது தட்பவெட்ப நிலை மாற்றம் குறித்து மட்டுமல்ல அதற்கு நாம் நீதி அளிக்கும் வகையில் நாம் செயல்பட வேண்டும். இதை நான் மீண்டும் கூறுகிறேன். தட்பவெட்பநிலை மாற்றம் ஏழைகளையும், நலிவுற்றோரையும் வெகுவாக பாதிக்கும் என்று நான் நினைக்கிறேன். இயற்கை பேரழிவுகள் வரும்போது, வெகுவாக பாதிப்படைபவர்கள் அவர்கள்தான். வெள்ளநிலைமை ஏற்படும் போது அவர்கள் வீடுகளை இழந்துவிடுகிறார்கள். பூகம்பம் ஏற்படும் போது அவர்களின் வீடுகள் அழிந்துவிடுகின்றன, வறட்சி ஏற்படும் போதும் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். குளிர் அதிகமாக இருக்கும் போது வீடற்றவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இயற்கையை இடறுறச் செய்து மக்கள் பாதிக்கப்படுவதை நாம் அனுமதிக்கக் கூடாது. ஆகவே தான் இவ்வாறான, இயற்கையை நாசமாக்கும் செயற்பாட்டில் இருந்து விடுபட செயல்பட வேண்டும்.

உடல்நலம், மகிழ்ச்சி மற்றும் தரமான வாழ்க்கை ஆகிய மூன்றிற்கும் தூய்மை என்பது அவசியமான ஒன்றாகும். மகாபாரதத்தில் பல இடங்களில் தூய்மையின் அவசியத்தைப் பற்றி விளக்கப்படுகின்றது.

எமது பங்கபளிப்பு

நான் எனது ஊர் மட்டக்களப்பு, தேத்தாத்தீவு கடற்கரைக்கு சென்றிருந்தேன், எனக்கும் எனது மருமகன்மாருக்கும் பிடித்த ஒரு இடமாக இருந்து வருகின்றது. அங்கு சென்று நானும் சிறுபிள்ளைபோல அவர்களுடன் கடலலை தாலாட்ட, காற்று முத்தமிட, செவ்வானம் சிரிக்க, குருத்து மணல் கால்களை வருடிவிட கவலை மறந்து, களைப்பு மறந்து கலகலப்பாக விளையாடி மகிழ்வது வழமை. அதை எப்போதும் ஒரு சுத்தமான அழகான இடமாக பார்க்கவே நாங்கள் ஆசைப்படுவதுண்டு. 

ஆனால் இவை நாளுக்கு நாள் மிக மோசமாக மாறிக்கொண்டு வருவதை அவதானித்து பலரிடம் தனிப்பட்ட முறையிலும் தெரிவித்தேன் ஆனால் யாரும் அதை கணக்கெடுக்கவில்லை. அதனால் இவை பற்றி எனது வெள்ளிச்சரத்தில் விரிவாக எழுதி அவைபற்றி ஏனையோருக்கு தெரியப்படுத்தியும் இருந்தேன். அப்போதும் யாரும் கவனமெடுக்கவில்லை.

அதனால் எனக்கு தெரிந்த பலருக்கும் அழைப்பு விடுத்தேன் அவர்களும் பலர் வராமல் என்னை ஏமாற்றி விட்டார்கள். யாரும் செய்யவும் மாட்டார்கள் செய்ய முன்வருபவருக்கு உதவவும் மாட்டார்கள் இதுதான் இப்போதைய சமுகம் என கவலையுற்றிருந்தேன் ஆனால் ஒரு சில நண்பர்கள் கைகொடுத்தார்கள். ஸ்ரீ ராகவன் கெமிக்கல் சென்ரரினர் இவற்றை பாதுகாப்பாக அகற்றுவதற்கான கையுறைகளையும், வாக்கினையும் தந்துதவினார்.

நாங்கள் ஒரு சில குழுவாக இருந்தாலும் வேலை செய்ய முடியும் என்ற நம்பிக்கை என்னுள் துளிர்விட்டது. ஒரு சிறிய சமுக வலைத்தள பதாதையொன்றை தயாரித்து அவற்றை முகப்புத்தகத்திலும் பதிவிட்டும் வெறும் லைக்கும் வாழ்த்துக்களும் மாத்திரமே கிடைத்தது. ஆனால் அதுவும் ஒரு உந்துசக்தியாக இருந்தது.

பிற்பகல் 5 மணியளவில் எல்லோருமாக ஒன்று சேர்ந்து ஒவ்வொரு பக்கமாக குவிந்து கிடந்த பிளாஸ்டிக் குப்பைகளை புறக்கி எடுக்கலானோம். வெறும் ஒன்றரை மணிவேலையில் ஓராயிரம் குப்பைகளை அகற்றி இவற்றை கொண்டு செல்ல பிரதேச சபையை அணுகி இருந்தேன் அதன் உறுப்பினர்கள் அவற்றை உரிய இடத்தில் கொண்டு சேர்பதாக உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.

உதவாத பார்வையாளர்கள்

ஒரு பொது வேலை செய்யும் போது அங்கு யாராவது இருந்தால் அவர்களும் சேர்ந்துதான் இவற்றை செய்வது வழக்கம். ஆனால் நாம் இவற்றை செய்யும் போது எம்முடன் இணைந்து தொண்டாற்றிய பிள்ளைகளிடம் 'இது எந்த நிறுவனம், இவங்க எந்த இடத்து ஆக்கள்? யாரு இந்த வேலைக்கு காசு கொடுத்திருக்காங்க? என வீடியடித்துக்கொண்டு வேடிக்கை பார்த்தவர்கள் கேட்டமை எமது ஊரவரின் மனப்பாங்கை காட்டிவிட்டது.

என்னுடன் வந்தவர்கள் சொன்னார்கள் ' அண்ணாச்சி எங்களுக்கும் இப்படி வேலைகள் செய்து எமது சுற்றுச் சூழலை பாதுகாக்க விருப்பம், ஆனால் நாங்களாக தனியச் செய்ய பயம். ஏனென்றால் ஒன்று இவற்றுக்கு விடமாட்டார்கள், அல்லது ஏதாவது நொட்டை கதைப்பார்கள் அதனால் எங்களுக்கு வேறு யாரும் ஏதும் கதைத்துவிடுவார்களோ என்ற பயம்' எனக் குமறினர்.

அதற்கு நான் சொன்னேன் 'தம்பி உங்களுக்கு ஒன்று தெரியுமா 'பிறரது பழிக்கும் பாராட்டுக்கும் செவி சாய்த்தால் மகத்தான காரியம் ஒன்றையும் செய்ய முடியாது' என நான் சொல்லவில்லை சுவாமி விவேகானந்தர் கூறியமையை மனதில் வைத்து நாம் நல்ல காரியங்களை செய்ய வேண்டும் எனக்கூறினேன்.

உலகம் ஆயிரம் சொல்லும் என்பதற்காக நாம் நல்லதை செய்யாமல் இருக்கமுடியாது. கெட்டவேலை செய்கிற, நக்கலடிக்கிற கும்பலுக்கே இவ்வளவு திமிர் என்றால் எமக்கு எவ்வளவு இருக்கணும்டா என அவர்களை தைரியம் ஊட்டினேன். பாருங்கள் எமது நிலமையை.

மதங்கள் தூய்மைபற்றி என்ன சொல்லுகின்றன.

உலகில் இந்து மதம் மட்டுமல்ல புத்தம் இஸ்லாம், ஜைனம், கிருஸ்துவம் ஆகிய மதங்களும் உயிருள்ள மற்றும் உயிரற்ற விலங்கு நீரின் சுத்தம், தாவரம் மற்றும் விலங்களிடம் அன்பு, மரம் நடுதல் ஆகியவற்றால் சுற்றுசூழலைப் பாதுகாப்பது அவசியம் என்று கூறுகிறது. சுருக்கமாக சொல்லபோனால் பண்டைய காலத்தில் சுற்றுசூழல் பாதுகாப்பு தார்மீக கடமையாக இருந்ததே தவிர தண்டனை சட்டங்களாக இருக்கவில்லை.

மண்ணில் தோன்றிய மதங்கள் எல்லாம் அகப்புற தூய்மை பற்றியே அதிகம் கூறியிருக்கின்றது. ஆனால் இந்த மதவாதிகளிடம் இவை இரண்டும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அதை சொல்லிக்கொடுக்கும் பக்குவமும் அறிவும் கூட இல்லை என்பதே எனது கவலை.

லெட்சோப லெட்சம் சேமித்து ஆண்மீகம், அலங்காரம் என்ற வகையில் மக்களை ஒன்றுகூட்டி செய்யும் சாதனை என்னவென இன்று எண்ணத்தோன்றுகின்றது. இவற்றுக்கெல்லாம் அப்பால் நல்ல மனிதர்களை, மற்றவர்களின் துன்ப துயரங்களில் பங்குகொள்ளும், இயற்கையை நேசிக்கும், உலகை உயிருள்ள ஒன்றாக பாதுகாக்கும் பல விடயங்களை ஒரு மனிதனுக்கு பரிபூரணமாக ஊட்டவேண்டும் என எமது நமயங்கள் எடுத்துரைத்துள்ளவற்றை உதாரணங்களுடன் நோக்கலாம்.

இந்து மதம் கூறும் கருத்து

ஒருவர் வசிக்கும் பகுதி தான் சுற்றுச்சூழல் எனப்படுகின்றது. இந்துதர்மத்தைப் பொறுத்தவரை ஒருவனின் சுற்றுச்சூழல் சுத்தமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். தூய்மையான சுற்றுச்சூழல் தான் ஒருவனுக்கு மனநிம்மதியையும் ஆரோக்கியத்தையும் அளிக்கின்றது. ஒருவன் தன்னுடைய வீடு, தெரு, வசிப்பிடம், ஊர் போன்றவற்றை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். இந்துதர்மத்தைப் பொறுத்தவரை உலகம் உயிருடையது. இந்த உலகத்தின் ஒவ்வொரு அங்கமும் உயிரோட்டம் உடையது. இயற்கையால் வாய்திறந்து பேசமுடியாவிட்டாலும் அதற்கு உயிர் உள்ளது. உயிரோட்டம் இருப்பதால் தான் மனிதர்கள் உட்பட இதர ஜீவராசிகளும் இந்த புவியில் நிலைபெற்று வாழ்கின்றனர். 

ஆதலால் இந்த பூமியை தூய்மையாக பராமரிக்க வேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும். ஒவ்வொரு மனிதனும் குப்பைகளை முறையான வழியில் நீக்கவேண்டும். ஆற்றில் வீசுதல், தெருவில் வீசுதல், கண்ட இடங்களில் வீசுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போடுவதால் அவை முறையான வழியில் நீக்கப்படுகின்றன. இதனால் நாம் இயற்கைக்கு எந்தவொரு இம்சையும் விளைவிப்பதில்லை. இயற்கைக்கு இம்சை விளைவித்தல் இந்துதர்மம் குறிப்பிடும் மிக கொடிய தீவினைகளில் ஒன்றாகும். இயற்கைக்கு நாம் இம்சை விளைவித்தால் அதன் விளைவு மோசமாக இருக்கும். எனவே நம்முடைய சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது நமது கடமையாகும்.

உண்ண உணவு, சுவாசிக்க காற்று, குடிக்க நீர் இந்த மூன்றும் மனிதன் சுகாதாரமாக உயிர் வாழ்வதற்கு இன்றியமையாதவை. இந்த மூன்றையும் பெற்றபின் நாகரீகமாக அதாவது விலங்குகள் மற்றும் பிற உயிர்களிலிருந்து மாறுபட்டு வாழ உடுக்க உடை, இருக்க இருப்பிடத்தைத் தேடி அலைந்தான் மனிதன். இயற்கையோடு இணைந்து வாழ்ந்தபோது நண்பனாக பாவித்து வந்த இயற்கை, நாகரீகமாக வாழ தொடங்கியபோது எதிரியாக மாறிவிட்டது. அதாவது ஆடம்பரமாக வாழ காடுகளிலிருந்து மரங்களை வெட்டி அடுப்பெரிக்கவும், வீடுகள் கட்ட கதவு, சன்னல், மேசை, நாற்காலிக்காகவும் வீடுகளைக் கட்டிக் கொள்ளவும், விவசாயத்திற்காகவும் வனங்களை அழித்தான். அத்தோடு நின்று விடாமல் மாமிசத் திற்காகவும், அதன் தோலிலிருந்து ஆடம்பர பொருட்கள் தயாரிக்கவும் மிருகங்களை வேட்டையாடத் தொடங்கினான். விளைவு காடுகள் பாலைவனமாகவும் அறிய வகை விலங்குகள் படிப்படியாக மறையவும் தொடங்கின.

இப்படி அழிந்துவரும் காடுகளையும் விலங்குகளையும் மனிதன் நாகரீகமாக வாழத்தொடங்கிய நாள் முதலே நாட்டை ஆண்டவர்கள் சிலர் கட்டுபாடுகளை விதித்ததிற்கான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. உதா: கி.மு.321 மற்றும் 300 ஆண்டுகளிலிருந்து காணப்படுகிறது. கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம் இது குறித்து விளக்குகிறது. ஒவ்வொரு மனிதனும் இயற்கையைப் பாதுகாப்பது அவனது தார்மீக கடமை என்று கூறுகிறது. மேலும் முக்கிய மரங்களை வெட்டினால் என்ன தண்டனை கிடைக்கும் என்றும் மரமே கடவுளின் அவதாரம் என்றும் கூறுகிறது.  

இந்து மதத்தை பொறுத்த மட்டில் இந்தியாவின் பண்பாடு, மதம் சார்ந்த எழுத்துக்கள், வேதங்கள் மற்றும் பஞ்ச பூதங்களை வணங்க வேண்டும் என்று சொல்கிறது. மேலும் மனிதன் தாவரங்களையும் விலங்குகளையும் தனக்கென எடுப்பது அனைத்தையும் பூமிக்கே திருப்பிக் கொடுக்கவேண்டும். 

பசு மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு குறித்தும் வேதங்கள் கூறுகின்றன. காடுகளை பாதுகாப்பது மனித குலத்தின் சட்டக் கடமையாக்கும் என்று மனுநீதி கூறுகிறது. அப்படி காடுகளை அழித்தால் அதை அழிப்பவன் தண்டிக்கப்படுவான். 

பௌத்த மதக் கருத்து

புத்த மத பாரம்பரியத்தின்படி, இயற்கைக்கு அதன் கலாச்சாரம் மற்றும் வரலாறு முக்கியத்துவம் அளித்துள்ளது. புத்த மதக் கொள்கையின்படி, எந்தப் பொருளும் தனி நிலையில் இல்லாது ஒன்றோடொன்று இணைந்தே உள்ளன. சுற்றுப்புறச் சூழலில் காணப்படும் அசுத்தங்கள் நமது மனதை பாதிக்கின்றன. அதேபோல் மனது அசுத்தம் அடைந்தால், அதுவும் சுற்றுச்சூழலை பாதிக்கிறது, ஆகவே, சுற்றுச்சூழலை தூய்மையாக வைக்க வேண்டும் எனில் நமது மனமும் தூய்மையாக இருக்க வேண்டும்.

நமது மனதில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. ஆகவே தான், பகவான் புத்தர் இயற்கை வளங்களை பாதுகாக்க முக்கியத்துவம் அளித்தார். புத்த பிட்சுக்களிடம் நீராதாரங்கள் தூய்மையாக இருக்க வேண்டும் என்றும், அதேபோல் நீர்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். பகவான் புத்தரின் போதனைப்படி, இயற்கை, காடுகள், மரங்கள், மற்ற உயிரினங்கள் அனைத்துமே இதில் பங்குபெற வேண்டும்.

கிருஸ்தவ மதக்கருத்து

இறைவன் இம்மண்ணுலகத்திற்கு அளித்த மாபொரும் கொடை இயற்கை. விவிலியத்தின் தொடக்க நூலில், இறைவன் மூன்றாம் நாளில் நீரையும் நிலத்தையும் பிரித்து அவற்றில் உயிரினங்கள் தோன்றுமாறு கட்டளையிட்டார் என்று சொல்லப்பட்டுள்ளது. நிலம், அதன் தன்மைக்கேற்ப உயிரினங்களை உருவாக்கட்டும் என இறைவன் உரைத்தார். இதன் மூலம் இறைவனின் படைப்புத் தொழிலில் இயற்கையும் பங்கு கொண்டது என்பதை அறியலாம்.

மனிதனைப் படைக்கும் முன்பே இயற்கையைப் படைத்து அதனை மனிதனுக்கு கொடையாகக் கொடுத்து தன்னிச்சையாக செயல்படவும் செய்கிறார் இறைவன். ஆனால் கொடையாகப் பெற்ற அவ் வளங்களை மனிதன் தன் சுயநலன்களுக்காக அழித்தொழிக்க நினைக்கிறான். இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழவே இறைவன் நம்மை அழைக்கிறார் எனக் கூறப்படுகின்றது.

அதற்குமேலும், யெகோவா இந்தப் பூமியையும் அதில் உள்ள எல்லாவற்றையும் படைத்தபோது, இயேசு 'அவர் அருகே கைதேர்ந்த வேலையாளாய்' (Nறு) இருந்தார். (நீதி. 8:22, 30, 31; கொலோ. 1:15-17) அதனால், இந்தப் பூமியின் சுற்றுச்சூழலைப் பற்றி அவர் அத்துப்படியாக தெரிந்து வைத்திருக்கிறார். அதோடு, பூமியின் வளங்களை சிறப்பாக பயன்படுத்தவும், இயற்கை சக்திகளைக் கட்டுப்படுத்தவும் அவர் தெரிந்து வைத்திருக்கிறார்.

சுற்றுச்சூழல் மாசுபடுதல் இன்று கடவுளின் படைப்பை பொருளற்றதாக்கியுள்ள நிலையில், மலைபோல் குவிந்துள்ள பிளொஸ்டிக் கழிவுகள் இன்று மனுக்குலத்துக்கே சவாலாகியுள்ளது. இந்நிலை நீடிக்குமாயின், கிறிஸ்த்துவுடன் பயணம் செய்த சீடர்கள் போலவே நாமும் 'ஐயோ' நாங்கள் மடிந்து போகின்றோம்' என்று கூக்குரலிட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என்பது மறுக்க முடியாத உண்மை.

இஸ்லாம் மதக்கருத்து

இஸ்லாத்தைப் பொருத்தவரை தாம் இருக்கும் சூழலை சுத்தமாக வைத்திருப்பது மார்க்கக் கடமையாகும். இதனை உணர்வுபூர்வமாக உணர்ந்து எமது சுற்றுப்புறச் சூழலின் இயற்கையைப் பேணி அவற்றைப் பாதுகாத்து எதிர்கால சந்ததிகளும் இந்த பூமியின் ஜீவராசிகளும் நிம்மதியாக வாழக் கூடிய இடமாக அதைக் கையளிப்பது எமது தலையாய கடமையாகும். என அது வலியுறுத்துகின்றது.

அல்குர்ஆன் கூறுகிறது, 'மனிதர்கள் தமது கரங்களாலேயே செய்து கொண்ட அநியாயங்களால் கடலிலும் தரையிலும் நாசம் ஏற்பட்டுவிட்டது, அவர்கள் தாம் செய்தவற்றின் பிரதிபலனை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக, சிலசமயம் அவர்கள் தமது சுயநிலைக்கு மீண்டு வருவார்கள்' (ரூம்-41).

இந்தவசனம் மனித நடத்தைகளில் ஏற்படும் சீர்குழைவுகளை மாத்திரமன்றி பௌதீக சூழலில் ஏற்படும் பாதிப்புகளையும் இணைத்தே பேசுகிறது. ஏனெனில் இமாரதுல் அர்ழ் எனும் பூமியை அபிவிருத்தி செய்தல், மனிதனது அடிப்படைப் பணி. அந்தப் பணியில் நடைபெறும் அத்துமீறல்கள், தவறுகள் என்பன பூமியில் மனிதவாழ்வை நிச்சயமற்றதாக்கி விடவல்லன. அத்தகைய ஒரு அத்துமீறல்தான் தற்போது நடைபெற்றுள்ளது. எனவே மனிதன் மீண்டும் சுயநிலைக்கு திரும்பும் வகையில் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறான். அதன் முக்கியத்துவத்தினை எடுத்தியம்புகின்றது.

சுருக்கம்

குறிப்பாக 18 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் இயந்திரங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றினூடாக எமது சுற்றுப் புறச் சூழல் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகின்றது. நாம் வாழும் எமது பூமியின் இயற்கைத் தன்மையைப் பாதுகாத்து எதிர்கால சந்ததிகளுக்கு பக்குவமாக வழங்குவது எமது தார்மீகப் பொறுப்பாகும்.

இன்றைய அரசுகள் சுற்றுப் புறச் சூழல் பாதுகாப்பு பற்றி அதிகம் பேசினாலும், பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்தாலும், ஒவ்வொரு குடிமகனும் மாறாத பட்சத்தில் இது வெற்றியளிக்காது. அத்துடன் சில சர்வதேச கம்பனிகள், பண முதலைகளின் பொருளாதாரத்தை வளப்படுத்தும் பல்வேறுபட்ட திட்டங்கள் சுற்றுப் புறச் சூழலையும் புவியின் எதிர்காலத்தையும் பாதிக்கும் என்பதை அறிந்திருந்தாலும், கீழைத்தேய அரசியல் தலைமைகள் பணத்தை வாங்கிக் கொண்டு அவற்றுக்கு அனுமதியளிக்கின்றனர். அரசியல் தலைமைகளுக்கு பணம் பரிமாறப்பட்ட பின்னர், முறையான கழிவகற்றும் வழிமுறை இல்லாமல் கம்பனிகள் கழிவுகளை ஆற்று நீரிலும் குளங்களிலும் கலக்கும் வண்ணம் வெளியேற்றி எமது பூமித் தாயை மாசுபடுத்தி வருகின்றனர்.

இன்னும், பணக்கார நாடுகள் ஏழை நாடுகளைத் தமது குப்பைத் தொட்டிகளாகப் பயன்படுத்தி வருகின்றன. அத்துடன் தமது தாய்நாட்டின் சுற்றுப் புறச் சூழல் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது, தமது நீர் வளம் குன்றிக் குறைந்துவிடக் கூடாது என்பதற்காக ஏழை நாடுகளில் தமது உற்பத்திச்சாலைகளை அமைத்து அங்குள்ள குறிப்பிட்ட சில வீதமானவர்களுக்கு தொழில்வாய்ப்பை வழங்கி ஏழை நாட்டை சுரண்டி வருகின்றனர். இதற்கு ஊழல் அரசியல்வாதிகளின் ஒத்துழைப்புக்களும் உள்ளன. எனவே, சூழல் பற்றிய விழிப்புணர்வு இல்லாவிட்டால் சுயநலவாதிகளால் எமது சூழல் சீர்குலைக்கப்பட்டு எமது எதிர்கால சந்ததிகள் பலத்த சவால்களைச் சந்திக்க நேரிடும்.

ஆகவே மதங்கள் அனைத்தும் பல ஆண்டுகளுக்கு முன்னமே ஏதோ ஒரு வகையில் எமது சூழலை பேணிப்பாதுகாக்கவேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. ஆனால் நாம் அவற்றையெல்லாம் உதறித்தள்ளிவிட்டு வெறும் கோயிலுக்கும், பள்ளிவாசலுக்கும் பன்சாலைக்கும் சென்று எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை.

முடியும்.சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுப்பதற்கு, ஒருவர் நினைத்தால் முடியாது. கோடிக்கணக்கான மக்கள் நினைத்தால் சாத்தியமாக்கலாம்.






உஷாத்துணைகள்

0 comments:

Post a Comment