ADS 468x60

31 July 2022

எமது மக்கள் சுதந்திரமாக சுவாசிக்கக்கூடிய சூழலை உடனடியாக உருவாக்க வேண்டும்.

இன்று பயங்கரமான ஒரு ஆபத்தில் சிக்கியுள்ளோம். வெளிநாட்டுக் கடனைப் பெற்ற வரலாறு நமது நாட்டுக்கு ஒன்றும் புதிதல்ல. தற்போது நமது வெளிநாட்டுக் கடன் 57 பில்லியன் டொலர்களாக உள்ளது. இதில் 47 வீதம் சர்வதேச நாணய நிதியத்திடம்; இருந்து பெறப்பட்டது. சர்வதேச இறையாண்மை பத்திரங்கள் மூலம். சீனா மற்றும் ஜப்பானில் இருந்து பெற்ற கடன் தொகை 20 வீதமாக உள்ளது. ஆனால் இயலாமை காரணமாக நாடு தற்போது, கடனை திருப்பச் செலுத்தத் தவறிவிட்டது, அதனால் இந்த ஆண்டு செலுத்த வேண்டிய கடன் தொகை 7 பில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. 2026ஆம் ஆண்டுக்குள் 30 பில்லியன் டொலர் கடனை திரும்ப அடைக்க வேண்டும். இந்தியாவிடமிருந்து 4 பில்லியன் டொலர் கடன் தொகையும் பெறப்பட்டு ஏற்கனவே செலவிடப்பட்டுள்ளது. சீனாவிடமிருந்து குறுகிய கால கடன் வசதிகளும் பெறப்பட்டுள்ளன. இந்தக் கடன்கள் எதுவும் இந்த நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் செயல்பாட்டிற்கு பங்களித்ததாகத் தெரியவில்லை.

நமக்கு கிடைத்த பாரம்பரிய ரீதியான நட்பைப் பொருட்படுத்தாமல், திட்டவட்டமான பெரிய பொருளாதார ஏற்பாடு ஒன்றுமே இல்லாத ஒரு நாட்டிற்கு சர்வதேச ஆதரவு இன்று நிச்சயமற்றது. ஜூன் மாத தொடக்கத்தில் 54.6 சதவீதமாக இருந்த பணவீக்கம் ஜூலை தொடக்கத்தில் 58.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாட்டின் பொது மக்கள் தற்போதைய வாழ்க்கைச் செலவைத் தாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். லெபனானுக்கு அடுத்தபடியாக இலங்கையில் பணவீக்கம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

நெருக்கடியில் உடைந்த நாட்டைக் மீளவும் கட்டியெழுப்புவது எளிதான காரியம் அல்ல. ஆனால் நாட்டை மீட்பதற்கு இன்று குறிப்பிட்ட வேலைத்திட்டம் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த அரசாங்கம் இன்னும் வெளிநாட்டுக் கடனுக்காகக் காத்திருக்கிறது. இது எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளும்;? அதன்போது நாம் எவ்வளவு கடன் பெற முடியும்? அதற்கு நாம் எந்த மாதிரியான நிபந்தனைகளுக்கு அடிபணிய வேண்டும்? இவை இன்னும் விடை தெரியாத கேள்விகள்.

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க பணியகத்தின் தலைவர் சமந்தா பவர், இந்தியாவில் ஆற்றிய உரையில், இலங்கையின் திவால்நிலையை அல்லது வங்குரோத்து நிலையைப் பாதிக்கும் காரணங்களில், சீனாவின் உற்பத்திக்கு உதவாத திட்டங்களும், கடன் ஒப்பந்தங்களும் முக்கிய காரணமாகும் எனத் தெரிவித்துள்ளார். எமது நாட்டில் வெளிநாட்டு மானியங்களின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட பெரும்பாலான திட்டங்கள் நாட்டுக்கு வருமானம் ஈட்டித் தருவதாகத் தெரியவில்லை என்பதால் இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி குறித்து அவர்; கூறிய யோசனையை நிராகரிக்க முடியவில்லை.

2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் தொடர்புடைய மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அந்த காலகட்டத்தில் நாட்டின் பொருளாதாரம் 1.6 வீதமாகச் குறைவடைந்துள்ளது. உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி கணிப்பீட்டின்படி, நாட்டின் பொருளாதாரம் 6 முதல் 8 வீதம்வரை குறைந்துசெல்ல வாய்ப்புள்ளது. இது உண்மையில் ஒரு தீவிரமான விடயமாகப் பார்க்கவேண்டும்.

இந்த நாட்டில், தற்போதைய அரசியல் நெருக்கடியும் பொருளாதார நெருக்கடியின் நேரடி விளைவாகும். சந்தேகத்திற்கு இடமின்றி, மக்கள் போராட்டத்தால் தூண்டப்பட்ட அரசியல் எழுச்சிக்கு தற்போதைய பொருளாதாரச் சிக்கல்கள் முக்கிய காரணமாகும். நெருக்கடியை சமாளிக்க நீண்ட கால தீர்வுகள் மற்றும் குறுகிய கால தீர்வுகள் செயல்படுத்தப்பட வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் 'அனைத்து கட்சி அரசாங்கம்' என்ற கருத்து மக்களிடையே முன்வைக்கப்படுகிறது. இந்த பிரேரணை தற்போதய ஜனாதிபதியினால் மீண்டும் மீண்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்துக் கட்சி அரசாங்கக் கருத்து விரைவான அரசியலமைப்புத் திருத்தத்தை விட நடைமுறைக்குரியது என்பது தெளிவாகிறது.

உலகின் பல சர்வதேச அறிக்கைகளின்படி, 19 லத்தீன் அமெரிக்க நாடுகள், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் 25 நாடுகள், ஆப்பிரிக்க பிராந்தியத்தில் 25 நாடுகள் உட்பட 69 நாடுகள் உணவு மற்றும் எரிபொருள் கடன் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. இந்த நாட்களில் லெபனானில் உணவுப் பொருட்களின் விலை பதினொரு மடங்கு உயர்ந்துள்ளது. உக்ரைனில் கோதுமை மாவை இறக்குமதி செய்வதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக ரொட்டி உற்பத்தி முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. லெபனான் இப்போது உலக வங்கியிடம் இருந்து கடன் பெற்றுள்ளது. இலங்கையில் மட்டுமல்ல இந்த நாடுகளிலும் கடும் அடக்குமுறைக்கு உள்ளான மக்கள் வீதியில் இறங்க ஆரம்பித்துள்ளனர். ஒரு நாட்டில் உருவாகும் பல்வேறு நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பது அரச நிர்வாகத்தின் முக்கிய பொறுப்பு என்பதை குடிமக்கள் நன்கு அறிந்துள்ளனர். ஆவசர காலச் சட்டம் போன்ற சில சட்டத் தடைகள் மூலம் மக்கள் போராட்டங்களை நசுக்கி அவர்களை அடக்கிவிட்டு ஜனநாயக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது நல்லது.

இவையனைத்துக்கும் அப்பால், வருமானத்தை விட அதிகமாக செலவு செய்யும் நாடாக இலங்கை மாறியுள்ளது. 2018ஆம் ஆண்டில் மட்டும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு 2,100 மில்லியன் டாலர்களுக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது. 8,356 உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கு இன்னும் ஒரு வருடத்திற்கு பதவிக்காலம் நீடிக்கப்பட்டதன் காரணமாக அவர்களுக்கு மாதாந்தம் பதினான்கு கோடியே பதின்மூன்று இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபா வீதம் வழங்கப்படுகிறது. இந்த கொடுப்பனவுகள் 2010 இல் அமைச்சரவை முடிவுக்கிணங்க எடுக்கப்பட்டது. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு இதுவரை உரிய தீர்வுகள் முன்வைக்கப்படாவிட்டாலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளின் எரிபொருள் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒரு இலட்சம் எரிபொருள் கொடுப்பனவு இரண்டு இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 18 இலட்சம் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு பணம் அச்சடிக்க நேரிடும் என ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் இருந்த போது தெரிவித்திருந்தார். ஆகவே நாட்டின் பொருளாதாரத்தின் தற்போதைய தன்மைக்கு விளக்கம் தேவையில்லை.

அதுதவிர 800க்கும் மேற்பட்ட வயது முதிர்ந்தவர்கள் உயர் பதவியில் அமர்த்தப்பட்டு, அவர்க்கு அதிக பணம் செலவிடப்படுவது குறிப்பிடத்தக்கது. அதுபோல பதவிகளை விட்டு விலகிய தலைவர்களும் அந்தத் தலைவர்களின் எண்ணங்களையும் விருப்பங்களையும் உயிர்ப்பித்த அதிகாரிகளும் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியின் உண்மைத் தன்மையை மக்களுக்கு விளக்கவில்லை. அவர்கள் கூட்டிணைந்து உருவாக்கிய நெருக்கடி தங்களால் உண்டானதல்ல என்று ஒருவரையொருவர் அவதூறாகப் பேசுவதுதான் இன்று நடப்பது. ஓட்டுமொத்தத்தில் என்ன நடந்தது என்றால் இதுவரை எந்த தீர்வும் கண்ணில் தெரியாத நிலைதான்.

ஆகவே ஒன்றே ஒன்று நன்கு புரிகின்றது, அது தாமதமாக அல்லது இப்போது அதிகமான மக்கள் யதார்த்தத்தை உணர்ந்துள்ளனர். ஆகவே இவற்றுக்கு உடனடி தீர்வுகள் தேவை. எமது குடிமக்கள் சுதந்திரமாக சுவாசிக்கக்கூடிய சூழலை உடனடியாக உருவாக்க வேண்டும்.


0 comments:

Post a Comment